பிரான்ஸ், துருக்கி சந்தித்த துயரம்...!

Report Print Murali Murali in கட்டுரை
பிரான்ஸ், துருக்கி சந்தித்த துயரம்...!

சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றை, அதிகமாக உணர்வுபூர்வ கருத்தாக ஏற்ற நாடு பிரான்ஸ்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கமாக உள்ள இந்த நாடு, பணக்கார நாடுகள் பட்டியலில், நீண்ட நாட்களாக நிலைபெற்றிருப்பதாகும்.

அந்நாட்டின் நீஸ் நகரத்தில், சுதந்திரம் பேண விரும்பி, பாஸ்டில் என்ற இடத்தில், சிறையைத் தகர்த்து, அப்பாவிகளை விடுவித்த புகழ்பெற்ற வரலாற்றுக் கொண்டாட்ட நாள் விழாவில், பயங்கரவாதச் செயல் அரங்கேறி விட்டது.

ஏற்கனவே, தலைநகர் பாரீசில் தாக்குதல் நடந்தாலும், களிப்புமிக்க கொண்டாட்டத்தின் போது, இங்கு மக்கள் மீது, லொறி புகுந்து குழந்தைகள், பெண்கள் என்று பலரையும் பலி வாங்கியது.

இந்த அக்கிரமச் செயலை செய்தவர், ஐ.எஸ்., எனப்படும் பயங்கரவாதக் கருத்தைக் கொண்டவர்.

அவரை சுட்டு வீழ்த்திய போதும், பல்வேறு நகரங்களில், பல பகுதிகளில் இந்த பயங்கரவாதச் செயல் நிகழ்வது உலக சமுதாயத்தை அச்சமுறச் செய்திருப்பது நிதர்சனம்.

பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே அதிக கெடுபிடிகளை ஏற்படுத்திய போதும், சிரியா போர் விவகாரம் பெரிதாக உருவெடுத்தபின், அந்த பாதிப்பில் வெளியேறிய அகதிகள், ஐரோப்பிய நாடுகளில் குவிந்திருக்கின்றனர்.

இவர்களை ஏற்பதில் பிரித்தானியா தயக்கம் காட்டியது. இன்று இந்த பயங்கரவாதம், நாடுகள் பலவற்றில், தனி மனித இயக்கம் போல செயல்படுகிறது.

மதச்சார்பற்ற, ஜனநாயக நெறிகளைப் போற்றும் பிரான்சுக்கு ஏற்பட்ட சம்பவம் போலன்றி, சற்று வித்தியாசமாக துருக்கியில், ராணுவப்புரட்சி அமலாகாமல், மக்கள் ஆதரவால் முறியடிக்கப்பட்டிருக்கிறது.

துருக்கி பெரிய பணக்கார நாடு அல்ல ஆனால், அமெரிக்க ஆதரவு நாடு. ஈராக்கில் சதாம் வீழ்ச்சியில் இருந்து, அந்த நாடு அமெரிக்காவின் நட்பில் இருக்கிறது.

ஆகவே, அங்கு அதிபர் எர்டோகன் சற்று அசட்டையாக இருந்த நேரத்தில், திடீரென ராணுவம் ஆட்சியை கைப்பற்ற முயன்றது.

ஆனால், எர்டோகன், சாமர்த்தியமாக சமூக வலைத்தளங்கள், வானொலி மூலம் விடுத்த கடைசி நேர அழைப்பு, அங்குள்ள மக்களை செயல்பட வைத்திருக்கிறது.

ஆயுதப்படை கவச வாகனங்கள் முன், நுாற்றுக்கணக்கில் ராணுவத்தினர் தெருக்களில் படுத்து, தங்கள் எதிர்ப்பைக் காட்டியது வரலாறு ஆகும்.

இதில் இறந்தவர்கள் ஜனநாயகத்தை காத்ததுடன், ஐ.எஸ்., பயங்கரவாதத்தின் மற்றொரு முகத்தை தோற்கடிக்க வைத்துள்ளனர்.

சுதந்திரமான ஊடகம், கல்வியாளர்கள், சமூக அக்கறை அமைப்புகள் ஆகியவற்றிற்கும், அதிபர் எர்டோகனுக்கும் ஆகாது என்பது வெளிப்படை என்றாலும், தலைநகர் இஸ்தான்புல்லில், மக்கள் காட்டிய அபார அக்கறை, ஜனநாயக உணர்வை பிரதிபலிப்பதாகும்.

இந்த நாட்டில், ராணுவம் சுயேச்சை அந்தஸ்து பெற்றது; அதனால் தான், அதன் முக்கிய தளபதிகள், ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் ஆதரவுடன், அதைவிட நீதிபதிகள் ஆதரவுடன் நடத்திய புரட்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது.

மதத்தலைவர் ஒருவர் வெளிநாட்டில் இருந்தபடி, இப்புரட்சியை துாண்டியிருக்கிறார். ஆகவே, அல்-குவைதா, முடிந்து, ஐ.எஸ் வந்திருக்கிறது என்பதன் அடையாளம் இவை.

இந்தியாவில் இதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்ற கேள்வி அதிகம் பேசப்படுகிறது. ஒரு சில இளைஞர்கள், இம்மாதிரி கருத்துக்களின் தாக்கத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சக்திகளை, அரசு தனது புலனாய்வு அமைப்புகள், மற்ற காவல்துறை உட்பட பல்வேறு அமைப்புகள் மூலம் கண்டறிந்து தடுக்க வேண்டும் என்பது, பொதுவான கருத்து.

தவிரவும், பல்வேறு பெரிய ஆறுகள் பயணிக்கும் புனித இடங்களில் நடக்கும் கும்பமேளா போன்ற விழாக்கள், தமிழகத்தில், அழகர் ஆற்றில் இறங்கும் விழா, மேல்மலையனுார் திருவிழா ஆகியவற்றில் செயின் பறிப்பு, சிறு திருட்டு நடப்பது வழக்கம்.

ஆனால், சமூகம் இன்னும் பணக்கார நடைமுறைகளின் தாக்கம் அல்லது 'ஒயிட் காலர்' வாழ்வு நடைமுறைகளுக்கு முழுவீச்சில் வரவில்லை.

வெளியாட்கள் எளிதாக இம்மாதிரி விழாக்களில் புகுந்து, அக்கிரமம் செய்ய அனுமதிக்காத வகையில், நடைமுறைகள் இயல்பாக உள்ளன.

இருந்தாலும், வள்ளுவர் சொன்னபடி, "இளைதாக முள்மரம் கொல்க" என்ற திருக்குறள் ஆட்சியாளர்களுக்கு இன்றும் பொருத்தமாகும்.

- Dina Malar

Comments