அடக்கப்படும் தமிழினம் என்பதால் இந்த நிலையா..? ஒரே ஒருநாள் உங்களால் முடியுமா? அரசுக்கு பகிரங்க சவால்

Report Print Shalini in கட்டுரை

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த மூன்று நாட்களாக கொட்டும் மழையிலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.

இவர்கள் பணம் கேட்கவில்லை, உடைகளை கேட்கவில்லை, எந்த வசதிவாய்ப்பையும் கேட்கவில்லை. கேட்பதெல்லாம் ஒன்று. காணாமல் போன எமது உறவுகளுக்கு ஒரு பதில் தாருங்கள் என்பது மட்டுமே.

சிறு குழந்தைகளிலிருந்து முதியவர்கள் வரை வவுனியாவில் கடந்த மூன்று நாட்களாக படும்பாடு அரசியல்வாதிகளே உங்கள் கண்களுக்கு தெரியவில்லை? அவர்களின் குரல் உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?

பிள்ளைகளை பெற்ற பெற்றோரின் கதறல்கள், சகோதரர்களை தொலைத்து விட்டு தேடும் உடன்பிறந்த உறவுகள், கணவனை இழந்துவிட்டு நிர்க்கதியாக நிற்கும் பெண்கள், பெற்றோரை தேடும் குழந்தைகளின் அழுகுரல்கள் இந்த உலகில் யாருடைய காதுகளுக்கும் கேட்கவில்லையா?

நாட்டின் சட்டத்தையும், பொருளாதாரத்தையும், அபிவிருத்திகளில் மட்டும் அக்கறை கொண்டுள்ள அரசியல் தலைமைகளே இந்த மக்கள் பற்றி என்றேனும் சிந்தித்ததுண்டா? இவர்களும் இந்த நாட்டில்தான் வாழ்கின்றார்கள், இவர்களை தெரிந்தும் தெரியாததைப்பொல் இருக்கும் இந்த நாடகங்கள் மூலம் எதை அடையப்போகின்றீர்கள்.

ஒன்றல்ல இரண்டல்ல தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணாமல் இருக்கின்றார்கள் இந்த பாவப்பட்ட மக்கள். பொறுப்பு கூற வேண்டிய அரசியல்வாதிகள்தான் இவர்களை கண்டுகொள்ளாமலிருக்கின்றார்கள். ஆனால் இயற்கைகூட இவர்களை சோதிக்கின்றது.

இரவு பகலாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மழை பெய்து இவர்களது கஷ்டத்தை கூட்டுகின்றதா? அல்லது இவர்களது துயர்கண்டு வானம் கண்ணீர் சிந்துகின்றதா என்ற சந்தேகம் கூட எழத்தான் செய்கின்றது.

இவர்கள் சாகும் வரையான உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்கள். இவர்கள் செத்தாலும் அரசியல்வாதிகள் திரும்பிப்பார்ப்பார்களா என்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவர்கள் உடம்பில் உண்ணாவிரதம் இருக்கும் அளவிற்கு சக்தி இல்லை. எத்னையோ கஷ்டங்களை தாண்டி வந்து, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சக்தியை இழந்துள்ளார்கள். நிச்சயம் மடிந்து விடுவார்கள். இவர்களை காப்பாற்றுங்கள்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாளை முதல் தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் களமிறங்கவுள்ளனர். கடந்த வருடம் நாட்டிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவருமே ஒட்டுமொத்தமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் சிலருக்கு உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நாட்டில் பலருக்கும் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்படவே சில அரசியல்வாதிகள் விடுதலை பெற்றுத்தரப்படும் என்று வாக்குறுதிகளை வழங்கி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்கள்.

அந்த நிலைமை மீண்டும் உருவாக வேண்டும் என்பதற்காகவா அரசியல்வாதிகளின் இந்த மௌனம்?

ஒன்றல்ல இரண்டல்ல தொடர்ந்து 3 நாட்கள் உண்ணாமல் இருக்கின்றார்கள் எமது தமிழ் உறவுகள்.

குளிரூட்டப்பட்ட அறையில் மூன்று வேளையும் நல்ல உணவுகளை உண்டு, குடும்பங்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு ஓர் பகிரங்க சவால்..!

உங்களால் ஒருநாள் இவ்வாறு உண்ணாமல் உறங்காமல் கொட்டும் மழையிலும் இருந்து காட்ட முடியுமா?

எத்தனைபேர் இப்படி இருப்பீர்கள். ஒரு நேரம் சாப்பிடவில்லை என்றாலும், உறவுகளைக்காணா விட்டாலும் உங்களுக்கு உறக்கமே வராதே. உங்களுக்கு எப்படி தெரியப்போகின்றது எமது தமிழ் மக்களின் உள்ளக்குமுறல்கள்???

Comments