உன்னத தலைவன் பிரபாகரன்..! - எட்டப்பன் முதல் மகிந்த வரை?? அழிக்கப்படும் தமிழ் இனம்

Report Print Mawali Analan in கட்டுரை

மரணிப்பது ஒன்றும் புதிதல்ல தமிழனுக்கு. அன்று வீரத்திற்காக போட்டிக்காக போரிட்டனர். ஜல்லிக்கட்டில் உயிர் வேண்டுமானாலும் போகலாம் எனத் தெரிந்தும் களமிறங்கும் வீர மரபு தமிழனுக்கு இயல்பாகவே உண்டு.

போர்களில் மட்டுமல்ல அடுத்து காட்டிக்கொடுப்பினால் கொல்லப்பட்டான். எட்டப்பன் காலத்திற்கு முன்னரும் சரி மகிந்த காலத்திற்கு பின்னரும் சரி இன்றும் தொடருகின்றது அந்த மரணங்கள்.

அடக்கி ஆளும் நினைப்போடு சுயநலத்தை விடும் வரை இதற்கு தீர்வு கிடைக்காது. தமிழ்தலைமைகளும் சரி சிங்கள தலைமைகளும் சரி வேடிக்கைப்பார்க்கும் நிலை தொடருகின்றது.

இன்று உறவுகளுக்காக சாகக்கிடக்கின்றது பல உயிர்கள் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்பது வேதனை.

ஓர் எலி வீதியில் செத்துக்கிடக்கின்றது. மூக்கை மூடிக்கொண்டு செல்வர் பலர், நாற்றம் தாங்காமல் செத்த எலியை திட்டுகின்றவர்கள் இன்னும் பலர்.

இங்கு வீதியில் உயிரை விட்டது எலி செய்த பிழையா? ஒரு நாய் அதுவும் தெரு நாய் அடிபட்டு உயிருக்கு போராடுகின்றது மனித கூட்டத்திற்கு நடுவே.

வலி தாங்கமுடியாத மரண வேதனையில் கத்துகின்றது. அந்த குரல் கருணைக் கொலை செய்து விடுங்கள் என அனைவர் காதிலும் எதிரொலிக்கின்றது.

இங்கு அதனை மேலும் அடித்து விரட்டுகின்றார்கள் சிலர். அது படும் மரண வேதனையை ரதித்து சிரிக்கின்றார்கள் இன்னும் பலர். “அய்யோ பாவம்” என பல பெயருக்கு பரிதாபப்பட பலரது காதுகளில் அது விழவே இல்லை.

அதே சயமம் ஒரு நாய் அவசர அவசரமாக அம்பியீலன்ஸ் வண்டியில் ஏற்றிப்படுகின்றது காரணம் நாய்க்கு காய்ச்சலாம் அது வெளிநாட்டு நாய்.

அந்த நாய் உரிமையாளரிடம் ஒரு பிச்சைக்கார சிறுவன் அய்யா பசிக்குது என்கின்றான் “போடா... நாயே ... மனுசன் இருக்கின்ற அவசரம் தெரியாமல் தொல்லை பண்ணுர பிச்சைக்காரப் பயலே...”

திருத்தம் இங்கு அவர் நாய் எனத் திட்டியது நாயை அல்ல மனிதனை வயிற்றுப்பசிக்காக உதவி, உணவு கேட்ட ஓர் உயிரை.

எலி, தெருநாய், வெளிநாட்டு நாய், சிறுவன் எல்லோருக்கும் இருப்பது உயிர் என்பதை மனிதம் இப்போது ஏன் உணரவில்லை. கேட்டால் கலிகாலம் அப்படித்தான் எனக் கிடைக்கின்றது பொறுப்பற்ற ஓர் பதில்.

இதே நிலைதான் இன்று இலங்கைத் தமிழர்ளுக்கும் ஏற்பட்டுள்ளது. 14 உயிர்கள் சாகும் வரை உண்ணா விரதம் இருக்கின்றார்கள். கண்டும் காணாத அரசியல் வாதிகள்.

போராடுகின்றவர்கள் கேட்பது நாட்டின் ஜனாதிபதி பதவியோ அல்லது பிரதமர் பதவியோ அல்ல காணாமல் போன தன் உறவுகள் எங்கே? அரசியல் கைதிகள் என்றீர்கள் இருகின்றார்களா? கொன்று விட்டீர்களா? யுத்தம் இல்லையே இப்போது எதற்கு பயங்கர வாதச் சட்டம்? என்பதே.

ஆனால் பதில் இங்கு மேலே வந்த உயிர்களை வேடிக்கை பார்த்த இரக்கமற்ற மனிதர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் வேறுபாடு என்ன? உயிர்களுக்கும் வேறுபாடு இருக்கின்றதா? அரசு தலைவர்கள் பார்வையில் இல்லை என்றே கூற வேண்டும்.

அந்த அளவிற்கு தமிழர்களின் நிலை இன்று கேள்விக்குறியாகி விட்டது. இது வேதனைப்பட வேண்டிய விடயம் அல்ல வெட்கப்பட வேண்டியது.

போகட்டும் அவை இன்று தம் உறவுக்காக உண்ணாவிரதம் இருக்கும் உயிர்களை கண்டு கொள்ளாமல் குளிரூட்டப்பட்ட வண்டியில் வந்து “கூடிய விரைவில் பதில் கிடைக்கும் எனக் கூறிவிட்டு பழச்சாற்றோடு பயணம் செல்லும் தலைவர்களே அதிகம்.

அப்படி என்றால் 14 உயிர்கள் நிலை? அனைத்தும் சென்ற பின்னர் மலர் வலயத்தோடு வருகைத் தந்து மேடைப்பேச்சு பேசக் காத்திருக்கின்றார்களா? எனத் தெரியவில்லை.

வாயில்லா ஜீவனை துன்புறுத்துகின்றார்களாம் தடை செய் ஜல்லிக்கட்டை என மார் தட்டிக் கொண்ட பீற்றாவா? எங்கே போனது தெரியவில்லை பாவம் மாடுகளும், விலங்குகள் மட்டும் தான் அவை கண்னுக்கு தென்படும் போல.

மனித உரிமைச் செயலகமாம்? அதற்கே பேச உரிமையில்லை அப்போது எங்கே கிடைக்கப்போகின்றது நியாயம்.

அங்கு ஒன்றுமில்லை பொறுமையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதால் கிடைக்கப்போவது பதவியும் வாக்குகளும் அதனை மட்டுமே நம்பி பிழைப்பது தான் உங்கள் அரசியல் ராஜதந்திரங்கள் என்றால் மகிழ்ச்சி கொண்டாடுங்கள் ஆனால் நிச்சயம் சபிக்கப்படுகின்றீர்கள் என்பதை மட்டும் மறவாதீர் அரசு தலைவர்களே.

வடக்கின் நிலை அன்று யுத்தத்தால் அழிக்கப்பட்ட உயிர்கள் இன்று உறவுக்காக மரணிக்கப்போகின்றது இல்லை கொல்லப்படுகின்றார்கள் என்பதே உண்மை.

வடக்கின் தாயார்கள் இன்றும் சொல்லும் ஒர வார்த்தை “விடுதலைப்புலிகள் இருக்கும் போது இப்படி நாங்கள் துயர் அடைய வில்லை” “புலிகள் கட்டுப்பாட்டுக்கு கீழ் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்” “உங்களுக்கு தீவிரவாதம் எமக்கு அது உரிமைப்போராட்டம்”

தென்னிலங்கையும் சரி சர்வதேசமும் சரி இன்றும் பிரபாகரனை ஓர் உன்னதத் தலைவனாகவே பார்த்து வருகின்றது. ஆனால் வெளிப்படையாக சொல்ல முடியாது.

சொன்னால் அரசியல் செய்ய முடியாதே, ஆட்சி நடத்த முடியாதே, அதிகாரம் செய்ய முடியாதே இவை அனைத்தும் மூளைக்குள் குடைய தீவிரவாதியாக சித்தரிக்கின்றார்கள் என்பதும் உண்மைதான்.

இவை வடக்கு மக்களின் கூற்று. தியாக தீபம் திலீபன் ஆரம்பித்தார் நியாயம் கிடைக்க வில்லை 12 நாட்களின் பின்னர் மரணிக்கவில்லை அவர் கொல்லப்பட்டார்.

அன்று தடுத்து நிறுத்தி இருக்கலாம் ஆனால் இன்றும் தொடருகின்றது. பொறுத்தது போதும் என இன்று பல உயிர்கள் எமனின் பாசக்கயிற்றுக்காக காத்திருக்கின்றன.

தமிழர்களின் உரிமைகள் அழிக்கப்பட்டது, எதிர்ப்புகள் முடக்கப்பட்டது, மௌனிக்கப்பட்டது இப்படி அடுத்தடுத்து தொடர் தோல்விகளைக் கண்ட தமிழினம் இன்று விழிப்படைய வேண்டும்.

செத்தபின்னர் அழுது எந்தவித இலாபமும் தீர்வும் இல்லை ஜல்லிக்கட்டு எனும் பாரம் பரியத்தில் கை வைக்கும் போது பொங்கி கடலாக திரண்ட தமிழினம் மீண்டும் எழுந்தால் ஒரு வேளை தீர்வு கிடைக்கலாம்.

திர்வைத் தாண்டி மரணவாயிலில் காத்திருக்கும் உயிர்களைக் காக்கலாம். போராட்டத்தையும், புரட்சியையும், தீவிரவாதத்தையும் ஆதரிக்க வில்லை இங்கு என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

கேட்டுக்கொள்வது மனிதாபிமானம் மரணிக்க கூடாது என்பதையே. தமிழினம் முற்றாக அழிய வேண்டும் என அரசுகள் காத்திருக்கின்றதா என்பது தெரியவில்லை.

இல்லை இது உண்மையான நல்லாட்சி மனிதாபிமானம் இன்னும் மரணிக்க வில்லை என்பதை அரசு நிலைநாட்டி தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அதனையும் தாண்டி உயிர்கள் மரணித்தால் தமிழர்கள் பொறுக்கமாட்டார்கள், ஒட்டு மொத்த தமிழனமும் இணைந்தால் இலங்கை கதி என்னவாவது? இந்தியாவையே ஆட்டங்கான வைத்தது தமிழினம்.

நிச்சயமாக அரசு நல்லதோர் தீர்வை கொடுத்து சாகக்காத்திருக்கும் உயிர்களை காக்க வேண்டியது முக்கிய கடமை இப்போது ஏற்பட்டுள்ளது, பார்ப்போம். தமிழர்களின் நிலை என்னவாவது என்பதை?

அது அரசு எடுக்கும் தீர்மானம் என்ன ? வேடிக்கை பார்க்கும் தமிழ் தலைமைகள் வெட்கப்பட வேண்டும். இனத்தை தாண்டி மதங்களைத் தாண்டி மனிதத்தை பாருங்கள்.

மேடைப்பேச்சுகளில் வீரத்தை காட்ட வேண்டாம், சொத்துக் குவிப்பில் உங்கள் சாணக்கியத்தனம் வேண்டாம் மக்களுக்காக குரல் கொடுங்கள்.

ஆர்ப்பாட்டங்கள் தொடரலாம் உயிர்கள் சென்ற பின்னர் பயன் இல்லை. பிணங்களுக்கு மேல் அமர்ந்து ஆட்சி செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டு நிலை நாட்ட வேண்டும் நீதியை.

உங்கள் காதுகள் செவிடில்லை, கண்பார்வைகளும் மழுங்கவில்லை என்ன மனம் மட்டும் பித்தாகி விட்டது. மனிதாபிமானம் மரணித்து விட்டது என்ற கூற்றை மாற்றியமையுங்கள்.

Comments