உண்ணாவிரதம் இருந்த காணாமல் போனோரின் உறவுகள் தமது கோரிக்கையை கைவிட்டனரா..?

Report Print Thileepan Thileepan in கட்டுரை

கடந்த திங்கள் கிழமை முதல் நான்கு நாட்களாக சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள் 14 பேரும் இருவர்களுக்கு ஆதரவாக கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்ட அரசியல் கைதி ஒருவரின் தாயாரும் இறுதி நேரத்தில் தமது கோரிக்கையை கைவிட்டனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

'காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் கூறு, சகல அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனே இரத்துச் செய்' ஆகிய மூன்று அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

முதல் இருதினங்கள் இப்போராட்டத்திற்கான ஆதரவுகள் பெரியளவில் காணப்படாத போதும் மூன்றாம் நாளில் இருந்து இது ஒரு மக்கள் எழுச்சியாக மாற்றம் பெறத் தொடங்கியது.

முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், வர்த்தக சங்கத்தினர், ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் போனவர்களின் உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் அரசியல் கட்சிகள், இளைஞர்கள் எனப் பலரும் ஆதரைவப் பெற்று நாளுக்கு நாள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இவ் உண்ணாவிரதத்திற்கும், அவர்கள் முன்வைத்த

கோரிக்கைக்கும் ஆதரவுப்போராட்டங்கள் விரிவடைந்தன.

தமக்கும் விடுதலை கிடைக்கும் இந்த போராட்டம் மூலம் என்ற ஏக்கத்துடன் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் அடையாள உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர்.

ஆனால் நான்காம் நாள் மாலை அந்த எதிர்பார்ப்புக்களை தலைகீழாக மாற்றியிருந்தது.

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வருவதற்கு ஒரு சில மணித்தியாலம் முன்னதாக பேசிய போது தமது

கோரிக்கைளில் உறுதியாக இருந்த உண்ணாவிரதிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் தமது கோரிக்கைகளை முழுமையாக ஏன் முன்வைக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

காணாமல் போனோர் தொடர்பில் தமது கோரிக்கைகளை முன்வைத்து அது தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி அலரி மாளிகையில் அரச தரப்புடன் பேசவும் இணங்கினர்.

ஆனால் தமிழ் அரசியல் கைதிகள், பயங்கரவாத சட்டத்தை இரத்துச் செய்தல் தொடர்பில் அழுத்தமாக எவையும் அங்கு பேசப்படவில்லை. பயங்கரவாத சட்டம் என்ற ஒரு வார்த்தை கூட அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் பேசவில்லை.

ஆக, தமது போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட ஏனைய விடயங்களை கோரிக்கைகளாக இணைந்துக் கொண்டார்களா என்ற ஐயத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

Comments