வவுனியா உண்ணாவிரத வேடிக்கையும், வந்து போனவர்களும்!

Report Print Theesan in கட்டுரை

கடந்த திங்கட்கிழமை(23) அன்று காலை 9.30 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலில் இறை வழிபாட்டுடன் ஆரம்பமாகி நடைபவனியாக வவுனியா மத்திய தபால் நிலையத்திற்கு முன்பாக தரைவிரிப்பில் அமர்ந்து சாகும் வரை உண்ணாவிரதம் என்று தலைப்பிட்டு ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

பின்பு மழை தொடர்சியாக பூமியை நனைத்தமையினால் கொட்டகை அமைக்கப்பட்டு போராட்டகாரர்கள் அமர வைக்கப்பட்டனர்.

வழமை போன்று குறிப்பிட்ட சிலரே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். முதல்நாள் ஒரு அரசியல் கட்சி தனது பரிவாரங்களுடன் உண்ணாவிரதம் இருந்தவர்களை பின்னாள் அமர்த்தி தாம் முன்னாள் உள்ள ஆசனங்களில் அமர்ந்து புகைப்படம் எடுக்க ஆரம்பித்தனர்.

அவர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் சில ஊடகங்களும் அவர்களுக்கு ஒலிவாங்கிகளை பிடித்து கருத்துக் கேட்க ஆரம்பித்தது.

இரண்டாம் நாள் மற்றுமொரு அரசியல் கட்சி போராட்டக்களத்தை முற்றுகை இட்டு போராட்டத்தில் பங்குபற்றியோர் அடையாள உண்ணாவிரதம் இருந்தவர்கள் அனைவரையும் மறைக்கும்படி ஆசனங்களை போட்டு அழகாக அமர்ந்து ஊடகங்களுக்கு கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

இதற்கிடையில் “இவர்களாவது வந்து பார்த்தார்கள் அவர்கள் வரவில்லையே” என்றும் சிலர் பேசிக்கொண்டனர்.

இரண்டு நாட்கள் கழிந்தது, சிலவேளை போராட்டம் உண்மையாக இருக்குமோ? என்ற எண்ணம் அப்போது தான் பலருக்கு வரத்தொடங்கியது அதன் பயனாக களத்தில் இறங்கினார்கள்.

இளைஞர்களும், சமூக வலைத்தளவாசிகளும், ஊடகவியலாளர்களும், சமூக ஆர்வலர்களும் இந்தப் போராட்டத்தை தமிழகத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று எழிற்சி அடைய செய்ய வேண்டும் என நேரம் காலம் பார்க்காமல் தமது பரப்புரைகளை ஆரம்பித்து போராட்டத்திற்கு வலுச்சேர்க்க ஆரம்பித்தனர்.

இதற்கிடையில் மூன்றாம் நாள் யாழ்ப்பாணத்தில் இருந்து முதலமைச்சரின் பொதுசன தொடர்பு உத்தியோகத்தர் என ஒருவர் போராட்டக்களத்திற்கு வந்து ஒரு வெளிநாட்டவர் போல் எப்படி காணாமல் போனார்கள்? யார் யார் காணாமல் போனார்கள்? என்றெல்லாம் கேள்வி கேட்டது மட்டுமன்றி உலகமே அறிந்த மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பதாதையில் இருந்த மாணவியின் புகைப்படத்தை புதிதாகவும் வியப்பாகவும் பார்த்து அதுதொடர்பில் கேட்டு அறிந்துகொண்டார்கள்.

இதைப்பார்த்த ஊடகவியலாளர்கள் சிலரும் பொதுமக்களும் அவர்களிடம் முதலமைச்சர் வர மாட்டாரோ? என்றும் இந்த விபரம் எல்லாம் இப்பத்தான் எடுக்கிறிங்களோ? என்றும் கேட்க,

அவர்களும் சற்றே குழப்பமடைய போராட்ட ஏற்பாட்டாளர்களில் ஒருவர் “வாற ஆக்கள குழப்பக்கூடாது”, “கேள்வி கேக்க கூடாது” என்றெல்லாம் கடும் தொனியில் கூற பாவம் ஊடகவியலாளர்கள் சற்று ஒதுங்கிக் கொண்டார்கள் குழப்ப வேணாம் என்று சொன்னவருக்கு தெரியாது.

ஒருவரையும் கேள்வி கேக்காமல் இருந்ததால் தான் இந்த தாய்மார் சாகும் வரை உண்ணாவிரதத்துக்கு வர காரணம் என்று, சிலவேளை அவர் அடுத்த தேர்தலின் வேட்பாளராக இருக்கலாம் விடுங்கள்.

இது இவ்வாறு இங்கு நடந்து கொண்டிருக்கும் போது தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர் சிலரும் முல்லைத்தீவில் ஜனாதிபதி வராத ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்து சிறப்பித்துக் கொண்டிருந்தனர்.

போராட்ட களத்திற்கு திடீரென இரண்டு மூன்று அதி சொகுசு வாகனங்கள் வந்து நிற்க மக்கள் வியப்பாய் பார்க்க வந்திறங்கினார்.

வடமாகாண சபையின் போக்குவரத்து, மீன்பிடி, வீதி அபிவிருத்தி, கிராமிய அபிவிருத்தி, மற்றும் பலவற்றுக்கான அமைச்சர் டெனீஸ்வரன், அவருடன் போராட்டம் நடக்கும் இடத்திலிருந்து குறுக்காக 500 மீற்றர் தூரத்தில் இருக்கும் வவுனியா மாவட்ட அதிபரையும் அழைத்து வந்து அவர்களும் புதியவர்கள் போன்று விபரங்களை கேட்டு தெரிந்துகொண்டு புகைப்படத்திற்கு நின்றுவிட்டு போய்விட்டார்கள்.

இதில் அமைச்சர் பெரிய ஆளா அரசாங்க அதிபர் பெரியா ஆளா என்ற சந்தேகம் அங்கிருந்தவர்களுக்கு வந்துவிட்டது.

ஒருவாறாக ஒருசில பொதுமக்களினதும் இளைஞர்களினது பங்கு பற்றுதலுடனும் மூன்றாம் நாள் கழிகிறது. நான்காம் நாளுக்கான மாபெரும் பேரணியை நடாத்தும் வேலைத்திட்டங்கள், எதிர் பார்ப்புக்கள், சமூக வலைத்தள பிரச்சாரங்கள் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

போராட்ட ஏற்பாட்டாளர்கள் தவிர்ந்த ஏனையோர். ஆனால் ஏற்பாட்டாளர்கள் தங்கள் ஆறு, ஏழு நபர்கள் மட்டும் தங்களுக்குள் அடிக்கடி கூடி மந்திராலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அவர்கள் என்ன பேசியிருப்பார்கள் என்பது போராட்டம் முடியும் போதுதான் பலருக்கு புரிந்திருக்கும்.

நான்காம் நாள் விடிந்தது. அதுதான் ஒரு திருப்புமுனையான நாள் என்று ஒருவரும் அறிந்திருக்கவில்லை காலை 9.00 மணியளவில் திட்டமிட்டபடி வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் பல நூற்றுக்கணக்கான சேவையாளர்கள் பதாதைகளை ஏந்தியவாறு அவர்களது அலுவகத்தில் இருந்து நகரின் ஊடாக அமைதிப் பேரணியாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் சங்கமிக்கும் போது வானம் மழை பொழிந்தது அதில் நனைந்தபடியே உணர்வு ததும்ப அவர்களும் ஏற்கனவே கூடியிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களுமாக போராட்ட களம் பேரெழிற்சி பெற்றிருந்தது.

அப்போதுதான் பலருக்கு இந்த போராட்டம் குறைந்தபட்ச வெற்றியையாவது பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியது.

அனைவரும் அடுத்தகட்ட நகர்வுகளுக்காக தங்களை தயார்படுத்திக் கொண்டு இருக்கும் போது யார் இந்த பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என்று நம்பினார்களோ அவர்கள் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தர், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள்) யாழ்ப்பாணத்திலே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் உபகாரியாலய திறப்பு விழாவை மகிழ்ச்சியாக சிறப்பித்துக் கொண்டிருந்தனர்.

நான்காம் நாளின் மாலைப்பொழுது நெருங்கியது நகர சிறு வியாபாரிகள் சங்கம் இளைஞர் அமைப்புக்கள் என்பன பல்வேறு திசைகளில் இருந்து பேரணியாக வந்து போராட்டகளத்தை நிரப்பிக்கொண்டிருந்தன.

உண்ணாவிரத போராட்டம் சூடு பிடிப்பதை உணர்ந்த ஊடகங்களும் பொது அமைப்புக்களும் நாளை களத்திற்கு வருகைதர இருக்கும் மக்களை அதிகப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்கள்.

போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் நினைத்தது ஏதோ, நடந்து கொண்டிருக்கிறது ஏதோ, போராட்டம் அவர்களிடம் இருந்து பறிபோய் மக்கள் புரட்சியாக மாறிவருவதை உணர்ந்த அவர்கள் போராட்டத்தை நிறுத்தி மக்கள் புரட்சியை கட்டுப்படுத்த சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருந்தது மட்டுமன்றி சந்தர்ப்பத்தை உருவாக்க காய்களை நகர்த்தியிருக்கிறார்கள்.

அதன் பயனாக மலை 5.40 மணியிருக்கும் சகோதரமொழி ஊடகங்களும் பாதுகாப்பும் குவிக்கப்பட்டது அங்கு வந்திறங்கினார். ஏற்பாடு செய்யப்பட்ட தூதுவராக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன.

அவர் வந்து இறங்கியதும் ஏற்பாட்டாளர்கள் மத்தியில் அவ்வளவு புன்னகையும் உற்சாகமும், ஒரு இறை தூதரை பார்த்தது போல பார்த்தார்கள், பொதுமக்கள் வெறுப்புடன் பார்த்தார்கள்.

எந்த அமைச்சு எங்களை அழித்து, காணாமல் ஆக்கி, சிறைப்பிடித்ததோ அதே அமைச்சின் புதிய பாத்திரமாகவே கூடியிருந்தவர்கள் அமைச்சரை பார்த்தார்கள்.

வந்தவர் சிங்களத்தில் பேச ஒருவர் மொழிபெயர்க்க சமாதானமானார்கள் ஏற்பாட்டாளர்கள். அவர்களிடம் ஒரு உறுதிமொழிக் கடிதம் வழங்கப்பட்டது.

அதுதான் இலங்கை வரலாற்றில் ஒரு போராட்டத்துக்கு வழங்கப்பட்ட முதலாவது மிக பலவீனமானதும், நகைச்சுவையானதுமான கடிதம்.

அதில் குறிப்பிடப்பட்டிருந்தது “எதிர்வரும் 09/02/2017 அன்று காலை

11.00 மணியளவில் அலரிமாளிகையில் சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர், நீதி அமைச்சர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாட ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது” என்பதுதான்.

அத்துடன் அமைச்சர் நீரை கொடுக்க வாங்கிப்பருகி நன்றி சொல்லி அமைச்சரின் கைகளை பற்றி அனுப்பி வைத்தது ஏற்பாட்டுக் குழு.

அப்போதுதான் அங்கு கூடியிருந்தவர்கள் தாம் முறையாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்கள். அத்துடன் முடிவுக்கு வந்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த போராட்டம். தோல்வி அடைந்த மன நிலையுடனும், ஏமாற்றப்பட்ட உணர்வுடனும் அங்கிருந்த கூட்டம் மெல்ல நகர்ந்தது.

யுத்தத்திற்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்காக, பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரம் போராடிவந்த நிலை மாறி பாதிக்கப்பட்டவர்களுக்காக பொதுமக்கள் போராடும் சந்தர்பத்தை தடுத்திநிறுத்தி இனியொரு போராட்டத்திற்கு யாரையும் வர வேண்டாம் எனும் செய்தியை சொல்லிச் சென்றது அவர்களது நடவடிக்கைகள்.

இதில் அரசியல் கைதிகளை சிறையில் இருந்து மீட்போம், காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருவோம், நிரந்தரதீர்வை பெற்றுத் தருவோம் என வீர வசனம் கூறி வாக்குகளை பெற்று எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளை அனுபவிப்போர் இதை கண்டுகொள்ளவே இல்லை.

ஏதோ வெளிநாட்டில் நடக்கும் நிகழ்வு போல பாராமுகமாக இருந்தனர் என்பது இதற்கு முதலும் தமிழ் மக்களின் தலைவர் என தற்போது கூறிக்கொள்ளும் இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் முள்ளிவாய்க்கால் நினைவு நாள், மாவீரர் தினம், எழுகதமிழ் போன்ற நிகழ்வுகளுடன் இவ்வாறான தமிழர் போராட்டங்களையும் கண்டுகொள்வதில்லை என்பதும், திறப்பு விழாக்களிலும் அரச

தலைவர்கள் பங்குபற்றும் நிகழ்வுகளில் மட்டும் கலந்து சிறப்பிப்பதும் விடயமறிந்த சிலர் விளங்கி கொண்டாலும், அதை தேர்தல்களில் பிரதிபலிக்காமல் விடுவதன் பயனை இன்று அனுபவித்திருப்பார்கள்.

இந்த போராட்டத்தை ஒழுங்கு படுத்தியவர்கள் கடும் விமர்சனத்துக்குரியவர்கள் என்ற போதிலும் நோக்கம் நல்லதாக இருந்ததனால் இவர்களால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் கூட அவற்றை மறந்து இந்த போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டு இறுதியில் மூக்குடைபட்டு திரும்பியுள்ளார்கள்.

எது எப்படி இருப்பினும் தமிழ் மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி நாடகமாடுபவர்களை இனங்கண்டு நடப்பதே அடுத்த தலைமுறையை சரியான பாதையில் இட்டுச் செல்லும். “உடையவன் இல்லாட்டி ஒருமுழம் கட்டை” என்பதை மீண்டுமொருமுறை தமிழ் சமூகம் உணர்ந்திருயிருக்கிறது.

Comments