பிரபாகரனா? மகிந்தவா? நுகேகொடையில் கருணா

Report Print S.P. Thas S.P. Thas in கட்டுரை
காலம் மாறினாலும் வந்தவழி மறப்பவன் மனிதனல்ல. தன்னுடைய கடந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களையும், நிகழ்வுகளையும் எண்ணிப்பார்ப்பவன் தான் புத்திசாலி.

இன்றைய தினம் நுகேகொடையில் பேசிய கருணா, விடுதலைப்புலிகளை அழித்து நாட்டுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்த வெற்றி நாயகன் மகிந்த ராஜபக்சவே என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த வெற்றியை மகிந்த ராஜபக்ச தனித்து வென்றாரா? அல்லது, நேர்மையான வழியில் சென்று பிரபாகரனைத் தோற்கடித்தாரா என்று கருணா அம்மான் சொல்ல வேண்டும்.

நேர்மையான முறையில், தனித்து நின்று பிரபாகரனோடு போரிட்டு இருந்தால் மகிந்த ராஜபக்சவினால் 2009ம் ஆண்டு யுத்தத்தில் வெற்றி பெற்று இருக்க முடியாது என்பதை உலகம் அறியும்.

தொடர்ந்து அங்கு பேசிய கருணா, புலிகளைத் தோற்கடித்த ஓர் தலைவனை இன்று கேவலப்படுத்துவது நாகரிகம் அற்ற செயலாகும்.

இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்றார் கருணாஇன்றைய தினம் அவர் பேசியதை இங்கே நோக்கினால்,மகிந்தவைக் கண்டு சர்வதேசமே பயந்து வியந்து நின்றது.

அதன்காரணமாக அவரது ஆட்சியை கவிழ்க்க சர்வதேசம் சதித்திட்டம் தீட்டி வெற்றி பெற்றது.ஆனால் இன்று அது மாற்றமடைந்து விட்டது மக்கள் எழுச்சி பெற்று விட்டார்கள்.

மகிந்த வடக்கு கிழக்கிற்கு அளப்பரிய சேவைகளை செய்துள்ளார். ஆனால் அந்தத் தலைவனை இன்று தூற்றுகின்றார்கள்.அவர் செய்த சேவையினை மறந்து விட்டார்கள்.

உலகத்திலே அழிக்க முடியாத புலிகளை குறுகிய காலத்தில் அடித்து நொறுக்கியவர் மகிந்த ராஜபக்சவே.அவரை இன்று குற்றவாளியாக்க முனைகின்றார்கள்.

இராணுவத் தலைவர்களை மட்டுமல்லாது மகிந்தவையும் விசாரணை செய்கின்றார்கள்.உலகில் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான கேவலமான செயல் இடம்பெறுவது இல்லை.

அதனால் இந்த முறைகேடான ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.வாழ்க மக்கள் தலைவன், மகிந்தவுடன் இணைந்த மக்கள் போராட்டம் வெற்றியடைய வேண்டும்.

ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும், நிச்சயமாக கவிழ்க்கப்படும்.இங்கு கூடியிருக்கும் கூட்டம் ஆட்சி மாற்றத்தை அண்மைக்காலத்திலேயே நிச்சயம் ஏற்படுத்தும் என்பதை நிரூபித்து விட்டது.

மகிந்தவின் பின்னால் செல்ல வேண்டியது எம் கடமை அதனையே உங்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன்.தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன எனத் தெரிந்தும் அவரின் இந்தப் பேச்சு ஒரு நகைப்பிற்குரியதாக இருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் தலைவர் எப்படிப்பட்டவர் என்பதை சிங்கள இராணுவ அதிகாரிகளே வியந்து பேசும் பொழுது ஒரு தமிழனாக இருந்து கொண்டு, சிங்களத் தலைமைகளுக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் ஒருவர் நாகரிகத்தைப் பற்றியும், பண்பாட்டைப்பற்றியும் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

இன்றைய கூட்டத்தைப் பார்த்து, மக்கள் அணி திரள்கிறார்கள், மீண்டும் ஆட்சி்யைப்பிடிப்போம் என்று பேசும், கருணாவிற்கு ஒருவிடையம் தெளிவாக புரியவேண்டும்.

ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளும் மக்கள் தொகையை வைத்து ஆதரவுகளையும் வெற்றி வாய்ப்புக்களையும் தீர்மானிக்க முடியாது என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களின் அதிகளவான மக்கள் கலந்து கொண்டனர். என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

Comments