புலிகள் சுமந்திரனைக் கொல்ல திட்டமா? இந்திய இலங்கை அரசுகளின் நாடக மேடை ஆரம்பம்

Report Print S.P. Thas S.P. Thas in கட்டுரை

இலங்கை, இந்திய அரசாங்கங்கள் மீண்டும் கூட்டு நடவடிக்கையில் இறங்கியிருப்பதனை மிகத் தெளிவாக அவதானிக்க முடிகின்றது.

2009ம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும், புலிகளை இலங்கையில் இருந்து தாம் முற்றாக அழித்துவிட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார்.

தவிரவும், இனிமேல் புலிகள் மீண்டும் உருவாக வாய்ப்பில்லை என்றும், அதற்கான அனைத்து வழிகளையும் தாம் அடைத்துவிட்டதாகவும், அன்று ஆட்சியிலிருக்கும் பொழுது, உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு உரக்கச் சொன்னார்.

ஆனால், இன்று மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இல்லாத பொழுதும், அவர் ஆட்சிக்கு வருவதற்கான சகல வழிகளையும் அடைத்துக் கொண்டிருக்கும் நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் புலிப் பூச்சாண்டி காட்டத் தொடங்கியிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

பொதுக்கூட்டக்கங்கள், கலந்துரையாடல்கள், மக்கள் சந்திப்புக்களை என்று அவர் அடுத்தடுத்த நகர்வுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனாலும் அவரின் அத்தனை முயற்சிகளையும் மைத்திரி, ரணில் தலைமையிலான அரசாங்கம் முறியடித்துக் கொண்டிருக்கிறது.

மகிந்த ராஜபக்சவின் குடைச்சலையும், அவர் கொடுக்கும் தலை வலிகளையும் திருப்பி அவருக்கே கொடுக்கும் ஆட்சியாளர்கள், தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரங்களை வழங்காமல் இருக்க, அல்லது காலத்தை இழுத்தடிப்புச் செய்வதற்கான சூழ்ச்சிகளை மேற்கொண்டுவருகிறார்களோ என்னும் அச்சத்தைத் தோற்றிவிக்கிறது.

நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் அரசியல் பிரச்சினைக்காக அரசியல் அமைப்பு மாற்றுவது குறித்தும், அது தொடர்பான மக்கள் கருத்துக்கள் அறிந்து கொள்வது குறித்தும் அண்மைய நாட்களாக ஆணைக்குழு ஒன்று செயற்பட்டது.

அந்த ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அறிக்கையினை கையளித்ததும் விட்டது. எனினும் அது தொடர்பில் எந்தக் கருத்தும் இன்றளவும் ஜனாதிபதியினால் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் வடக்கில் எழுக தமிழர் பேரணியை தமிழ் மக்கள் பேரவை மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது.

இதற்கிடையில் அடுத்து கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழர் பேரணையை நடத்தத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

நிற்க, கடந்த ஆண்டு வடக்கு கிழக்கில் மக்கள் தன்னெழுச்சியாக மாவீரர் நினைவு நாளை அனுஷ்டித்திருந்தார். அதேவேளை, மாவீரர்கள் துயிலும் இல்லத்தை புனரமைப்புச் செய்தார்கள் இளைஞர்கள்.

அடுத்து மாவீரர் துயிலும் இல்லம் மீண்டும் அமைக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இது மகிந்த தரப்பிற்கும் பெரும் வரப்பிரசாதமாக இருந்தது. ஆட்சியிழந்தவர்களுக்கு, புலிக்கூச்சல் போட்டு மைத்திரி ஆட்சியை குழப்பலாம் என்று நினைத்தார்கள். அதைப் பயன்படுத்தவும் தொடங்கினார்கள்.

மீண்டும் புலிகள் உருவாகின்றார்கள் என்று கூச்சலும் போட்டார்கள்.

இவையொருபுறமிருக்க, எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக செய்திகளைப் பரப்பினார்கள்.

இது எந்தளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை. ஆனால், சம்பந்தனின் உயிருக்கு ஆபத்து என்று சொன்னவர்கள் யார் மூலமாக ஆபத்து என்பதை சொல்லவில்லை.

இந்நிலையில் தான் தமிழ் நாட்டில் மிகப்பெரியதொரு எழுச்சி ஏற்பட்டிருந்தது.

நீண்ட காலமாக தமிழகத்தில் தமிழ் மக்களின் அடையாளங்கள் அழிந்து கொண்டிருப்பதையும், தாங்கள் திட்டமிடப்பட்டே புறக்கணிக்கப்படுகின்றோம் என்பதை உணர்ந்த இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் குதித்தனர்.

2017ம் ஆண்டின் முதல் மாதத்தில் ஏற்பட்ட அகிம்மைப் புரட்சியாக வரலாற்றில் பதிவாகியிருக்கிறது ஜல்லிக்கட்டுப் போராட்டம்.

இந்திய மத்திய அரசாங்கத்திற்கு பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் தோற்றிவித்திருக்கிறது இந்தப் போராட்டம்.

இந்நிலையில் தான் இலங்கையில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் ஒருமித்த கருத்து ஒன்று வெளியாகியிருக்கிறது.

2009ம் ஆண்டு ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்ட புலிகள் மீண்டும் மீள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்று புலனாய்வுத் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

தற்போது விடுதலைப் புலிகள் சர்வதேச மட்டத்தில் ஒன்றிணைவதற்காக இலங்கை மற்றும் தமிழ் நாட்டில் இயங்குவதாக Siasat Daily என்ற ஊடகம் தகவல் வெளியட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் உள்நாட்டலுவல்கள் அமைச்சின், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் இரகசிய அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த செய்தியை ஆசிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் செயற்படும் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இவர்கள் மூலம் விடுதலைப் புலிகள் புத்துயிர் பெறுவதுடன், ஆயுத மற்றும் வெடிமருந்தினால் பயங்கரவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படலாம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற மாவீரர் தினத்தில் தாயகத்தில், மக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி இந்திய அரசாங்கத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறலாம் என அந்நாட்டு பாதுகாப்பு தரப்பு அச்சம் கொண்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு பிரிவுகள் மீது இலக்கு வைத்துள்ள ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளவர்களே விடுதலை புலிகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரமுயற்சிப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

உலக பயங்கரவாத அமைப்பாக மாறியுள்ள ஐ.எஸ், இந்தியா மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக பல்வேறு உளவு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் அவ்வாறு ஐ.எஸ் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மீது திசை திருப்பி விடும் நோக்கில் இந்திய அரசாங்கம் உள்ளதாக தெரியவருகிறது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இந்த இரகசிய ஆவணம், இந்திய அரசாங்கத்தினால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது இந்தியாவில் எழுந்திருக்கும் எழுச்சியையும் சேர்த்தே இந்திய அரசாங்கம் இவ்வாறான கணிப்பை மேற்கொண்டிருக்கிறது.

ஏனெனில், இலங்கையில் இதேபோன்று தான் மாணவர்கள் தன்னெழுச்சியாக எழுந்து, பின்னர், ஆயுதம் ஏந்தினர். ஆரம்பத்திலேயே புலிகள் மீள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுவதன் ஊடாக, தமிழகத்தில் புலிகள் ஊடுறுவி விட்டார்கள் என்று அவர்களை அடக்க முடியும் என்று திட்டம் வகுத்திருக்கிறார்கள் இவர்கள்.

இதேவேளை, மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் மனிதவுரிமைகளுக்கான கூட்டத் தொடர் ஆரம்பிக்கிறது.

இன்னமும் இலங்கை அரசாங்கம் அரசியல் அமைப்பிற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கான ஆவணங்களையும் வெளியிடவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சிகள் குறித்து தெளிவுபடுத்தவில்லை.

இந்நிலையில் தான் அடக்கப்பட்ட புலிகள் மீண்டும் புத்துயிர் பெறுகிறார்கள் என்னும் கதையை கட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரனை புலிகள் கொலை செய்ய முயற்சித்துவருகின்றார்கள் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஒருபுறம், புனர்வாழ்வு கொடுத்து சமூக நீரோட்டத்தில் முன்னாள் போராளிகளை இணைத்துவிட்டோம் என்று கூறிவிட்டு, இப்பொழுது அவர்களினால் தான் உயிராபத்து உள்ளதாக கூறுவதன் நோக்கம் என்னவென்று சிறு குழந்தைக்கும் தெரியும்.

ஏற்கனவே சிறையில் இருப்பவர்களை தாங்கள் விடுதலை செய்வோம் என்றும், வவுனியாவில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களின் போராட்டத்தை உறுதி மொழி வழங்கி நிறுத்திவிட்டு, இப்பொழுது புதுக்கதை ஒன்றைத் தயார் செய்துவிட்டார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே நன்றாகத் தான் இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் தமிழ் மக்களின் காதில் பூச் சுற்றப்போகின்றார்கள் என்பது உறுதியாகிவிட்டது.

அதற்கு தமிழ் அரசியல்வாதியை கொலை செய்யப்புலிகள் சதி என்று வேறு புலனாய்வுத்தகவல்கள்.

தமிழர்கள் ஜனநாயக வழியில் மீண்டும் எழுந்தால், இவர்கள் அவர்களை வன்முறை மூலமாக அடக்குவோம் என்பதற்கான அறிவிப்புத் தான் புலிகளின் மீள் உருவாக்கம், அரசியல்வாதிகளுக்கான உயிர் அச்சுறுத்தல் போன்ற நாடகங்கள்.

Comments