மகிந்தவின் கனவு நனவாகுமா? மைத்திரி - ரணில் அரசியல் எதிர்காலம் என்ன?

Report Print Steephen Steephen in கட்டுரை
advertisement

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக பதவிக்கு வர முடியாது என்ற காரணத்தினால் எப்படியாவது பிரதமராக பதவிக்கு வந்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டிருக்கின்றார்.

அப்படி அவர் பிரதமராக பதவிக்கு வந்தாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கீழ் அவர் பிரதமராக பதவி வகிக்க வேண்டும்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டில் இருந்து நோக்கினால் மகிந்த ராஜபக்ச காண்பது வெறும் கனவு. மைத்திரிபால ஜனாதிபதியாக இருக்கும் வரை மகிந்தவின் இந்த கனவு நனவாகாது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்காக இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மைத்திரி முதலமைச்சர்களை மகிந்தவிடம் அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். மகிந்தவை சந்தித்த முதலமைச்சர்கள் வெறுங்கையுடன் திரும்பினர்.

தனக்குள்ள பலம் குறித்த விடயத்தில் அதிகமான மதிப்பீட்டில் இருந்து வரும் மகிந்த, ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றினால், மைத்திரி தலைமையிலான கூட்டணியில் இணைய தயாராக இருப்பதாக மகிந்த முதலமைச்சர்களிடம் கூறினார்.

ஆனால், தமிழ், முஸ்லிம் உட்பட சிறிய கட்சிகளின் ஆதவுடன் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்டிருப்பதால் மகிந்த கூறுவதை எந்த வகையிலும் செய்ய முடியாது என்பதான் உண்மை.

இவ்வாறான சூழ்நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணய பணிகள் பூர்த்தியாகி இருப்பதால் இன்னும் நான்கு அல்லது 5 மாதங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படலாம்.

அப்போது தமது பலத்தை நிரூபிக்கும் வாய்ப்பு அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் என்பது மாத்திரமல்ல மகிந்த ராஜபக்சவும் அவரது பலத்தையும் அரசியல் எதிர்காலத்தையும் நிரூபிக்க சந்தர்ப்பம் கிடைக்கும்.

இதனை தவிர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் பயணத்தை அளவிட இந்த தேர்தல் வாய்ப்பாக அமையும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் ஒன்றாக இணைந்து போட்டியிடுவதை மகிந்த மறுத்துள்ளதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மகிந்த தரப்புக்கும் இடையில் தேர்தலில் பலத்த போட்டி ஏற்படும்.

மைத்திரி தரப்பு ராஜபக்சவினரின் ஊழல், மோசடிகளை வெளிகொணரவேண்டும் இல்லையேல் மைத்திரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மகிந்த தரப்புடன் போட்டி போட முடியாமல் போகும்.

எது எப்படி இருந்த போதிலும் மகிந்த தரப்பும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குறிப்பிடத்தக்களவு ஆசனங்களை கைப்பற்றும் என்பதை மறுக்க முடியாது.

மைத்திரி தரப்பும் மகிந்த தரப்பும் தனித்து போட்டியிட்டு மோதிக்கொள்ளும் நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமானதாகவே அமையும்.

மகிந்த தரப்பினரின் இனவாத நிலைப்பாடுகள் தென்னிலங்கையில் வாழும் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி கவர உதவக் கூடும்.

மேலும் மகிந்த தரப்பு போர் வெற்றி, இனவாதம், பௌத்த தேசிய வாத கருத்துக்களை முன்வைத்து வருவதால், சிங்கள வாக்காளர்களில் பெரும்பான்மையான வாக்காளர்களை கவர முடியாது போகும்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இனவாத மற்றும் பௌத்த தேசியவாத போக்குடைய குறிப்பிட்ட சதவீத வாக்கு வங்கியையே மகிந்த தரப்பால் தம் பக்கம் ஈர்க்க கூடியதாக இருக்கும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நடு நிலையான மற்றும் இனவாதமற்ற நிலைப்பாடுகளை முன்வைத்து வரும் ஏனைய கட்சிகளுக்கு வாக்குகள் பிரிந்து செல்லும் என்பதால் மகிந்த ராஜபக்சவின் அரசியல் கணக்கு பிழைத்து போகலாம்.

எது எப்படி இருந்த போதிலும் மகிந்த ராஜபக்சவுக்கு மாத்திரமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய பிரதான தரப்பினருக்கு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் அரசியல் ரீதியான முக்கிய தேர்தல் என்பது நிச்சயம்.

advertisement

Comments