தமிழர்களை பொறுத்த வரை கடவுளும் இறந்து விட்டாரா?

Report Print Mawali Analan in கட்டுரை

இழப்பதற்கு எதுவும் இல்லை, அடைக்கலம் தருவதற்கு நாதியில்லை ஆக மொத்தம் தமிழர்களுக்கு வாழ இடம் இல்லையா என்ற கேள்வியை எழுப்புகின்றது இப்போது சுற்றும் கடிகார முள்.

சமகால உலக சுற்றுகையில் இலங்கையை பற்றியும் குறிப்பாக தமிழர்களின் நிலை பற்றியும் சிந்திக்கும் போது கடவுள் இறந்து விட்டாரா? என நினைக்கத் தோன்றுகின்றது.

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பதும் முது மொழி. இங்கு தண்டிக்கவும் காக்கவும் அரசனும் இல்லை காலம் சென்று வர கடவுளும் கூட இல்லையா?

முத்தசாப்தங்கள் யுத்தம் சரி, பழைய பஞ்சாங்கம் ஏன்? அதனைத் தாண்டி ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு விட்டது ஆனாலும் உரிமைகளுக்கான போராட்டம் மட்டும் இன்றும் தொடர்கின்றது.

இனி ஒன்றும் இல்லை இழப்பதற்கு கூட என நினைக்கும் போது அத்தோடு சேர்ந்தே எண்ணத் தோன்றுகின்றது இந்த அவலம் தீருமா தீராதா என்று.

சொந்த இடத்திற்காக தொடர்ந்து போராடும் தமிழர்களின் நிலை கூட இனவாதமாக சித்தரிக்கப்படும் நிலை இலங்கையில் மட்டுமே காணலாம்.

பெற்ற மகளின் கற்பழிப்பு கோலத்தை நிர்வாணச் சடலமாக பார்க்கக்கூடிய நரகத்திலும் கூட கிடைக்காத தண்டனை வடக்கு வாழ் தமிழ்த் தந்தையர்களுக்கு மட்டும் இலகுவாக கிடைத்தது இலங்கையைப் பொறுத்த வரை.

இன்றும் கூட தனது சொந்த நிலத்திற்காக போராட்டம் தொடருகின்றது வடக்கில். அந்த வகையில் தேச பாதுகாப்பு என்ற சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளது வடக்கு தமிழர்களின் நிலை இதனை மறுக்க முடியாது.

அப்படியே மலையகத்திற்கு சென்று பார்த்தால், உயிரை விட்டு விட்டு முழு உழைப்பும் சுரண்டும் நிலை கூட இல்லாமல் இல்லை. தீர்வு கிடைக்காதா என அவர்கள் ஏங்கும் முன்னரே வாழ்வு முடிந்து போகும் துர்பாக்கியம் அங்கேயும் தொடருகின்றது.

இது மட்டுமா கடல் கடந்து போய் விட்டாலும் அகதி என்ற புனைப்பெயரோடு, புலம் பெயர் தமிழர்கள் மன்னிக்கவும் புலம் பெயர் புலிகள் என்ற ஓர் மாயத் தோற்றம் சிந்திக்காமலேயே உலகெங்கும் பறை சாற்றப்படுகின்றது. செய்பவர் யார் இதனை?

அதனையும் தாண்டி இந்த நிலை ஏற்படுத்தப் பட்டதா? காரணம் தெரியவில்லை. இதனை அரசியலாக பார்ப்பதா அல்லது அநியாயமாக பார்ப்பதா என்றும் கூட தெரியாத கனவு உலகத்தில் சுற்றிக் கொண்டு இருக்கின்றனர் இன்றைய தமிழர்கள் என்றே கூற வேண்டும்.

தமிழர்களுக்கு மட்டும் அல்ல இந்த நிலை இலங்கை வாழ் மக்கள் அனைவருக்குமே இருக்கின்றது. திருத்தம் என்னவெனில் ஒரு தரப்பு தெரிந்து ஏமாற்றப்படுகின்றது, மறு தரப்பு தெரியாமல் ஏமாற்றப்படுகின்றது.

தூய சிந்தை கொண்ட அரசியல் வாதிகள் இருக்கலாம் இருந்தால் நன்று . ஆனால் அரசியல் என்ற கிணற்றில் இருந்து வெளியே வாருங்கள் தயவு செய்து.

அப்பாவி மக்கள் படும் வேதனையை தீர்க்க வேண்டியது உங்கள் கடமை அதற்கான நம்பிக்கையின் வெளிப்பாடே கொடுத்த வாக்குகள்.

ஒட்டு மொத்தமாக உங்களுக்கு கோயில் கட்டி கும்பிட முடியாது ஆனால் அது அத்தனையும் விட பெறுமதி வாய்ந்தது மக்கள் போட்ட வாக்கு என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

வடக்கு மக்களின், தமிழர்களின் நிலையை சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் கூறத் தேவையில்லை கூறியும் பயன் இல்லையா என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது.

காரணம் வடக்கை பொறுத்தவரைக்கும் கடவுள் இறந்து விட்டார் என்ற நிலை இப்போது ஏற்பட்டு விட்டது என்பது தெரியும். அந்த அளவிற்கு காலச்சக்கரம் மாறிச் சுற்றிக் கொண்டு வருகின்றது அப்போது முதல் இப்போது வரை.

இனியும் வேண்டாம் இனவாதம், விடுதலைப்புலிகள், விடுதலைப்புலிகள் எனத் தொங்கிக் கொண்டு இருக்கவேண்டாம் யுத்தத்தை வென்று விட்டோம் என பாற்சோறு பொங்கி கொண்டாடி விட்டீர்களே விட்டு விடுங்கள்.

இவற்றினைப் பார்க்கும் போது கடவுள் கூட எம்மை காக்க மாட்டாரா என்ற பரிதாப நிலை தமிழர்களுக்கு ஏற்பட்டுப் போகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அரசியல் இலாபங்கள், அதிகார மோகங்கள், கருப்புப் பணக் குவிப்பு என்ற அனைத்தையும் விட்டு விட்டு மக்களுக்காக வேவை செய்ய கொஞ்சம் முன்வரலாமே.

பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைவர்கள் என்ற நிலையை உருவாக்குவதோடு மிகப் பெரிய இலங்கை, விலை மதிக்கமுடியாத உயிர்கள் குருகிய உங்கள் அரசியல் கைகளில் இருக்கின்றது இதனையும் மறக்கவேண்டாம். சுயநலத்தோடு சுற்றி வரும் அரசியல் தலைமைகள்.

அதனை மெய்படுத்தி தீர்த்து வையுங்கள் தொடரும் தமிழர்களின் அவல நிலையை. இது கட்டளையோ எச்சரிக்கையோ அல்ல சிக்கலான அரசியலால் திராணியற்றுப் போன ஓர் தமிழ்க் குடி மகனின் வேண்டுகோள்.

Comments