ஐ.நா.மனித உரிமை சபையின் 34 ஆவது கூட்டத் தொடருக்கான மனுவும், சித்திரமும்

Report Print S.V Kirubaharan S.V Kirubaharan in கட்டுரை

எதிர்வரும் 27ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 34வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இக்கூட்டத்தொடர் மார்ச் மாதம் 24ம் திகதி நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தொடரில், 22ம் திகதி புதன்கிழமை அன்று, ஐ.நா மனித உரிமையாணையாளர் அல் குசேயினின் சிறிலங்கா பற்றிய விபரமான அறிக்கை, சபையில் விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளது.

இவரது சிறிலங்கா பற்றிய விபரமான அறிக்கை எவ்வேளையிலும் வெளியிடப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இவ் வேளையிலே, பிரான்சை தளமாக கொண்டு கடந்த 25 வருடங்களாக மனித உரிமை செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் தமிழர் மனிதர் உரிமைகள் மையம் ஐ.நாவிற்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளையோ, ஐ.நாவின் தீர்மனங்களையோ, பரிந்துரைகளையோ இலங்கை மிக நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தாது அலட்சியம் செய்து வருவதாக, இலங்கை மீது பாரிய குற்றச்சாட்டுகளை பல ஆதாரங்களுடன் அறிக்கையாகவும், சித்திரமாகவும் வெளியிட்டுள்ளது.

இவ் அறிக்கை கடந்த வாரம் ஐ.நா மனித உரிமை சபையின் 34 ஆவது கூட்டதொடரின் தலைவர், ஐ.நா மனித உரிமை ஆணையாளர், ஐ.நா செயலாளர் நாயகம் ஆகியோருக்கும் வேறு பல முக்கிய புள்ளிகள், ராஜதந்திரிகளிற்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

மனுவின் உள்ளடக்கம்,

தமிழர் மனித உரிமைகள் மையத்தின் அறிக்கையுடன், மனுவில் அதனது பொதுச்செயலாளர் ச.வி.கிருபாகரனினால் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு:

“இலங்கை அரசு தனது ஐ.நா அங்கத்துவம் பெற்று கொண்ட 1955ம் ஆண்டிலிருந்து, பலவிதப்பட்ட சர்வதேச தண்டனைகளிலிருந்து தொடர்ந்து தப்பி வருவது உங்களுக்கு ஆச்சரியம் தரமாட்டாது என்பது எமது நம்பிக்கை.

இலங்கை அரசு தனது பௌத்தமயம், சிங்களமயம், சிங்கள குடியேற்றம், இராணுவமயம் ஆகியவற்றை தமிழர்களது தாயக பூமியான வடக்கு கிழக்கில் வெற்றிகரமாக முற்று முழுதாக நிறைவேற்றி முடிக்கும் வரை, சர்வதேசத்தின் வேண்டுகோள்கள் எவற்றையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது, கடந்த நவம்பர் 27ம் திகதி நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை சபையின் 30வது கூட்டத் தொடர், 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற வேளையில், மனித உரிமை சபை அங்கத்தவர்களினால் இலங்கை மீது கொண்டுவரப்பட்ட கண்டனப் பிரேரணையை, சிறிலங்கா மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதுடன், இப்பிரேரணையின் முன்னெடுப்பாளராக தம்மையும் இணைத்து கொண்டனர். உண்மையில் இதை கண்டு மனித உரிமை சமுதாயம் மிகவும் வியப்படைந்தது.

ஆனால் இதனது உண்மை தன்மையை, கடந்த ஆண்டு நவம்பர் 27ம் திகதியே யாவரும் உணர கூடியதாகவிருந்தது! காரணம், அமெரிக்க ஜனதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதும், இலங்கையில் நல்லாட்சி என கூறப்படும் அரசாங்கத்தின் ஜனதிபதியான சிறிசேன, ஐ.நா மனித உரிமை சபையினால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திலிருந்து தப்புவதற்காக அமெரிக்க ஜனதிபதியின் உதவியை நாடியுள்ளார்.

வடக்கு கிழக்கில் பௌத்தமயம், சிங்களமயம், சிங்கள குடியேற்றம், இராணுவமயம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு நேர அவகாசம் தேவைப்பட்ட காரணத்தினால், முன்பு மனப்பூர்வமாக ஏற்று கொண்ட ஐ.நா மனித உரிமை சபையின் கண்டனப் பிரேரணையிலிருந்து காப்பாற்றுமாறு இலங்கையின் ஜனதிபதி குத்துக்கரணம் அடித்துள்ளார்.

சர்வதேச சமுதாயத்தை பொறுத்தவரையில் இலங்கை ஜனதிபதியின் வேண்டுகோள் என்பது மிகவும் வெட்ககேடானது மட்டுமல்லாது மிகவும் சந்தர்பவாதமானது என பல ராஜதந்திரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மனித உரிமை சமுதாயத்தை பொறுத்தவரையில் இது ஓர் அதிர்ச்சி தரும் செய்தியல்ல. காரணம், 2015ம் செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், போர்குற்றத்தை சர்வதேச நீதிபதிகள், சர்வதேச வழக்கு தொடுனர்கள், சர்வதேச வழங்கறிஞர்களை கொண்டு இலங்கை விசாரிக்க வேண்டும் என்பதை, இலங்கை தாமாக முன்வந்து ஆதரித்த அன்றே அங்கு பல கபட நாடகங்கள் நடக்கவுள்ளது என்பதை உணர்ந்து கொண்டனர்.

எது என்னவானாலும், இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல், இன்று வரை ஈழத்தமிழர்களை மட்டுமல்லாது, தற்பொழுது சர்வதேசத்தையும் இலங்கை அரசுகள் ஏமாற்ற தொடங்கியுள்ளார்கள்.

ஆனால் வடக்கு, கிழக்கின் நிலைமை இராணுவமயம், பௌத்தமயம், சிங்களமயம், சிங்கள குடியேற்றம் போன்றவற்றினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

1950ம் ஆண்டு முதல், தமிழ் மக்கள் நாடு முழுவதிலும் பல தடவைகள் தாக்கப்பட்டனர். இதேவேளை, தெற்கில் வாழும் சிங்கள இளைஞர்கள் புரட்சி மூலம் அரசை கைப்பற்றுவதற்கு இரு தடவைகள் முயற்சித்தனர்.

இவ்வேளைகளில், ஆயிரக்கணக்கனோர் காணாமல் போயும், படுகொலை செய்யப்பட்டும், கைது, சித்தரவதை, இடப்பெயர்வு, தமிழ் பெண்கள் மீதான வன்முறைகள் என பல கொடூர சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்றன, இன்றும் இடம் பெறுகின்றன. இவைபற்றிய விபரங்கள் யாவும், ஐ.நாவின் மனித உரிமை பிரிவுகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கையின் வேறுபட்ட அரசாங்கங்கள் ஒன்று மாறி ஒன்றாக, தமிழ் மக்களிற்கு வெறும் வெற்று வார்தைகளை கொடுத்து, தமது திட்டங்கள் நாசுக்காக நிறைவேற்றி வந்துள்ளனர்.

இவ்வேளையில் இலங்கை அரசு மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்த காரணத்தினால், சர்வதேசத்திற்கு தமது வெற்று வார்த்தைகள் மூலம் காலங்களை கடத்தி, வடக்கு கிழக்கில், தமது திட்டங்களான பௌத்தமயம், சிங்களமயம், குடியேற்றங்கள், இராணுவமயம் ஆகியவற்றை மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றுகின்றனர்.

இலங்கைத்தீவில் இனப்பிரச்சினைக்கான எந்தவிதமான உருப்படியான அரசியல் தீர்வையும், ஆட்சியிலிருந்த எந்த அரசும் ஒருபொழுதும் முன்வைத்தது கிடையாது.

இவ் சந்தர்ப்பத்தில், இலங்கையின் பிரதமர்களினால் கிழித்து எறியப்பட்ட இரு உடன்படிக்கைகள் பற்றி நாம் ஞாபகப்படுத்தி கொள்ள விரும்புகிறோம்.

இனப்பிரச்சினையை தீர்க்கும் நோக்குடன், 1957ம் ஆண்டும், 1965ம் ஆண்டும் இலங்கையின் வேறுபட்ட இரு பிரதமர்களினால், அவ்வேளையில் தமிழ்த் தலைமையுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் யாவும், தெற்கில் உள்ள சிங்கள அரசியல் கட்சிகள், மக்கள், பௌத்த மதகுருமாரின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, இரு உடன்படிக்கைகளும் ஏதேச்சையாக கிழித்து எறியப்பட்டன என்பது சரித்திரம்.

அன்றிலிருந்து இன்றுவரை வடக்கு கிழக்கில் பௌத்தமயம், சிங்களமயம், குடியேற்றங்கள், இராணுவமயம் ஆகியவற்றினால் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை வெளிப்டையாக யாரும் காணக்கூடியதாகவுள்ளது.

இன்று வடக்கு கிழக்கு வடக்காகவும், வடக்கு யாழ்ப்பாணமாகவும், யாழ்பாணம் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் தமிழ் மாணவர்கள், சிங்கள மாணவர்களினால் தாக்கப்படுகின்றனர்.

இலங்கை சுதந்திரம் பெற்ற 1948ம் ஆண்டு முதல் இன்று வரை, தமிழ் மக்கள் அரச படைகளினதும், சிங்கள கூலிப்படைகளினதும் வன்முறைகளையே தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.

மறுபக்கம், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னெடுப்புகளையும், ஐ.நா செயலாளர் நாயகம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர், ஐ.நா வின் முக்கிய புள்ளிகளினால் முன்மொழியப்பட்ட விதிமுறைகள், செயல்முறைகள், ஆலோசனைகள் யாவற்றையும் நடைமுறைப்படுத்தாது, அலட்சியம் செய்து காலம் கடத்தி வருகின்றனர்.

இவ் அடிப்படையில் சில அண்மைகால ஐ.நா முன்னெடுப்புகளை எமது அறிக்கையுடன் இணைத்துள்ளதுடன், இவை தவிர்ந்த வேறு நூற்றுக்கணக்கான ஐ.நா அறிக்கைகள் முன்னெடுப்புக்கள் உள்ளன என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

மிக நீண்டகாலமாக, அதாவது கடந்த இரு தசாப்தங்களிற்கு மேலாக ஐ.நா வுடனும், வேறு சர்வதேச நிறுவனங்களுடன் மிக நெருக்கமாக வேலை திட்டங்களை முன்னெடுக்கும் “தமிழர் மனித உரிமைகள் மையம்” ஆகிய நாம், மிக தாழ்மையுடன் மனித உரிமைகளை மதிக்கும் ஒவ்வொரு நாட்டின் தலைவர்களையும், ஐ.நா மனித உரிமை சபையின் அங்கத்துவ நாடுகளையும், இலங்கை மீதான ஐ.நா மனித உரிமை சபையின் கண்காணிப்பிலிருந்து நழுவ விடாது, பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதியை பெற்று கொடுக்குமாறு வேண்டுகின்றோம்.

மாறுபட்ட இலங்கை அரசுகள், ஆசைவார்த்தைகளிற்கும், வேற்று வார்த்தைகளும் மிகவும் பிரபலியானமானவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நல்லாட்சி என கூறும் தற்போதைய சிறிலங்கா அரசாங்கம், சர்வதேசத்தை திருப்திபடுத்துவதற்காக, சில முக்கிய மனித உரிமை ஆர்வலர்களது படுகொலைகளுடன் சம்பந்தப்பட்ட சிலரை, கைது செய்து பல கபட நாடகங்களை ஆடி வருகின்றனர்.

கண்துடைப்பு காரணங்களிற்காக கைது செய்யப்பட்ட பலர், சிறையில் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதுடன், சிலர் கண்துடைப்பு நீதி விசாரணை மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மனித உரிமை மீறல், போர் குற்றம், மனிதாபிமானம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள், ஐ.நா மனித உரிமை பிரிவிடமிருந்து நீதி பெற்றுகொள்ள முடியாவிடில், அவர்கள் வேறு எங்கு நீதியை தேடுவது?

இலங்கையில் வடக்கு கிழக்கில் இலங்கையினால் மேற்கொள்ளப்படுபவை யாவும், இன அழிப்பை அடிப்படையாக கொண்டவையே என்பது பல தடவை சர்வதேச சட்டவாளர்களினால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று தசாப்பதங்களிற்கு மேலாக இலங்கையில் இடம்பெற்று வரும் அபாண்டமான அரசியல் பிரச்சினைகள் இன்று உலகின் கண்களை கவர்ந்துள்ளன.

ஆனால் இலங்கையில் நடைபெறுபவையை விட உலகில் மிக குறைந்தளவு அழிவுகள் துன்பங்களை அனுபவித்த வேறு சில இனப்பிரச்சினைகள், இதே ஐ.நா வினால் தீர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் தலைவர்கள், நாட்டின் தலைவர்கள் யாவும் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சோககதைகளை கேட்பதற்கும், நீதி வழங்குவதற்கும் முன்வரவேண்டும்.

இலங்ககை வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சர்வதேச சமுதாயம் முன்வரவேண்டும். காலம் மிக விரைவாக கழிந்து கொண்டிருக்கிறது.

Comments