இந்தியாவின் துரோகத்திற்கு பட்டுக்குஞ்சமாகும் தமிழக போராட்டங்கள்! : இரா.மயூதரன்

Report Print R. Mayooran in கட்டுரை

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வில் வரும் நாட்களில் நடக்கப்போவது இதுவே.

இனப்படுகொலை அரசாகிய சிங்கள பேரினவாத சிறிலங்கா அரசிற்கு கால நீடிப்பை வழங்கும் தீர்மானம் இனப்படுகொலை நாட்டின் இணை அனுசரணையுடன் கொண்டு வரப்பட்டுள்ளது.

வரும் 23ஆம் திகதி விவாதத்திற்கு வரவிருக்கும் இத்தீர்மானம் அமோக ஆதரவுடன் வெற்றி பெறுவது உறுதி. இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்காது புறக்கணிக்கும்.

கால நீடிப்பு வழங்குவதற்கான அத்தனை முண்டுகொடுப்புக்களையும் செய்தாகிவிட்டது. வெற்றி பெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் சிரத்தையுடன் முடித்தாகிவிட்டது, இந்த பின்னணியில் தான் இந்தியாவின் புறக்கணிப்பு நடக்க உள்ளது.

மாபெரும் இனப்படுகொலை செய்த சிங்கள அரசை அனைத்துலக மாமன்றத்தில் வைத்து பிணையெடுக்கும் சர்வதேசத்திற்கு தலைமையே இந்தியா தானே. இந்தியாவின் நேரடி முன்முயற்சிகளில் தான் அனைத்துமே நடக்கிறது.

இதை தடுக்கவோ தட்டிக் கேட்கவோ முடியாதவர்கள் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத்தூதரகத்தை முற்றுகையிடுவதும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட அனைத்துலக நாடுகளை கண்டித்து வருவதும் தம்மைத்தாமே ஏமாற்றும் செயலாகும்.

தாம் வாழும் தேசமான இந்தியாவை நிர்பந்திக்காது குதிரை வெளியேறிய பின் லயத்தை மூடிய கதையாக இப்போது வெற்றிபெறப் போவது உறுதியாகி விட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று ஆவேசக்குரல் எழுப்பி வருகிறார்கள்.

சிங்களத்தை பிணையெடுக்க இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகள் தீவிரமாக வேலை செய்து வருகையில் அந்த துரோகத்தில் இருந்து இந்தியாவை பிணையெடுக்கவே இவ்வாறான போராட்டங்கள் வழி வகுக்கும்.

இந்த அயோக்கியத்தனம் தான் கடந்த காலங்களில் நடந்தேறி வருகிறது. சிங்களத்தை பாதுகாப்பதன் மூலம் தமிழினப் படுகொலையில் தமது திரைமறைவு பங்கேற்புகள் சபையேறாது பார்த்து வருகின்றன.

இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகள். அதை தடுக்க முடியாதவர்கள் தமது கையாலாகத் தனத்தினை மறைத்து இந்தியாவை வாக்கெடுப்பில் பங்கேற்காது புறக்கணிக்க வைத்தமையே பெரும் சாதனையாக காட்டும் வகையிலான போராட்டங்களே கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போதும் அதுவே நடக்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடக்கும் அயோக்கியத்தனத்தை தமிழ்நாட்டில் இருந்து பேசுபவர்கள் ஏன் இந்தியாவின் பங்கேற்பை பேச மறுக்கிறார்கள்...? இந்திய மத்திய அரசிற்கு எதிரான போராட்டங்களை தவிர்த்து இலங்கைக்கு எதிராக போராடுவது ஏன்...?

இது தெரியாமல் நடக்கும் விடயம் என்று நாம் வேண்டுமானால் எம்மை ஆற்றுப்படுத்திக் கொள்ளலாம். சர்வ நிச்சயமாக இதெல்லாம் தெரிந்தே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவர்களால் முடிந்தது அவ்வளவுதான்.

ஆனால் அதற்காக மாபெரும் துரோகத்தனத்திற்கு பட்டுக்குஞ்சம் கட்டும் வகையிலான போராட்டங்களை நாம் எப்படி ஏற்பது...?

'வீரத் தமிழ் மகன்' முத்துக்குமார் உள்ளிட்ட தியாகிகள் தமது உயிர்த்தியாகத்தால் ஏற்படுத்திய ஆத்மார்த்த ஆதரவுத்தளத்தை ஈழத் தமிழ் மக்களாகிய நாம் என்றென்றும் நன்றியுடன் நெஞ்சில் நிறுத்துவோம். அந்த தியாகத்தை கவசமாக்கி உள்ளதை உள்ளபடி உரைக்கும் எம்மை கேள்விக்குள்ளாக்குவது ஏற்புடையதல்ல.

'எதையாவது செய்தாக வேண்டுமே என்று அவர்களும்.... இதையாவது செய்கிறார்களே என்று நாங்களும்...' இந்த வார்த்தைகளுக்குள்ளாகவே அனைத்தும் அடக்கமாகியுள்ளது. உண்மை கசக்கத்தான் செய்யும். அதை ஏற்பதும் விடுவதும் அவரவர் விருப்பம். அதற்காக நாம் உள்ளதை கூறாது ஓய்ந்துவிட முடியாது.

Comments