வட கொரியா மீது கை வைத்தால் அமெரிக்கா அழிக்கப்படும்! மூன்றாம் உலகப்போர் நடக்குமா?

Report Print Mawali Analan in கட்டுரை

மூன்றாம் உலகப்போர் என்ற வார்த்தைகள் இப்போதைக்கு அமைதியற்ற சூழலையும், ஒரு வித பதற்றத்தையும் தோற்றுவித்துள்ளது.

உண்மையில் மூன்றாம் உலகப்போர் ஏற்படுமா? என்ற விவாதம் ஏற்படும் போது, அதிகமானவர்கள் தெரிவிக்கும் கருத்து அவ்வாறானதொரு நிலை ஏற்படாது, அப்படியே ஏற்பட்டாலும் அது முற்றுப் பெறாது உலக அழிவிலேயே முடியும் என்பதே.

நிலைமை இவ்வாறு இருக்க, மூன்றாம் உலகப்போருக்கு வித்திடும் நாடாக வட கொரியா சித்தரிக்கப்பட்டுக் கொண்டு வரப்படுகின்றது. சீனாவும் அமெரிக்காவை எதிர்க்க ஆயத்தமாகி விட்டதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

இந்த இடத்தில் பலநாடுகள் இந்த போர் விளையாட்டில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வந்தாலும் கூட பிரதான குற்றவாளியாக சித்தரிக்கப்படுவது வட கொரியாவே.

உண்மையில் வட கொரியா அணு ஆயுதம் வைத்திருந்தால் அதனால் அமெரிக்காவிற்கு என்ன? ஒரு விடயம் அமெரிக்காவை வட கொரியா ஓர் பரம எதிரியாகவே சித்தரிக்கின்றது.

இப்போதைய செய்திகளின் படி வட கொரியா சர்ச்சைக்குரிய நாடு என்பதே அதிகமாக வெளிவரும் செய்திகள். ஆனாலும் அமெரிக்கா உத்தமமான நாடா?

இந்த விடயத்தில் வடகொரியாவை விமர்சனம் செய்யும் எவரும் அமெரிக்கா செய்த, பயங்கர சதியை(களை) வெளிப்படையாக விமர்சிப்பது இல்லை.

வட கொரியாவை சிதைத்து, இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று அழித்து ஓர் மறைமுக இன அழிப்பை செய்தது அமெரிக்கா, ஆனாலும் இது மறைக்கப்பட்டுவிட்டது.

உலகில் எந்த இன அழிப்புக்கும் இன்றுவரை தீர்ப்புகள் கிடைக்கப்பெறவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்த விடயமே என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

ஆனாலும் அனைத்திலும் பங்கு பற்றும் அமெரிக்கா, தன்னை ஓர் சமாதான நீதிவானாக பாவனை செய்து கொள்ளும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை.

1950 தொடக்கம் 1953 வரை வட கொரியாவில் அமெரிக்காவின் அமைதிப்படை, ஆக்கிரமிப்புப் படை செய்த தாக்குதலால் அந்த நாட்டில் 20 சதவீதமாக மக்கள் அழிக்கப்பட்டனர்.

உண்மையில் வடகொரியாவிற்கும், தென்கொரியாவிற்குமிடையில் இடம்பெற்ற பனிப்போரில் அமெரிக்காவின் தலையீடு வடகொரியாவிற்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது.

இந்த முக்கியமான போர் மறைக்கப்பட்ட ஓர் போராகவே வர்ணிக்கப்படுகின்றது. அப்போதைய காலப்பகுதியில் சுமார் 635000 டொன் குண்டுகளும், 320000 டொன் இரசாயனக் குண்டுகளும் வட கொரியா மீது போடப்பட்டுள்ளன.

இதில் மிக மிக வேடிக்கையான விடயம் எதுவெனில், அப்போது கொரியா நாட்டுப் போரில் அணுகுண்டுகளை போட்டு யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர அமெரிக்க அரசிடம் அனுமதி கேட்டவர் படைத்தளபதி மெக்ஆர்தர். (MacArthur)

இவர் அப்போது கொரிய நாடுகளுக்கு இடையேயான யுத்தத்தில் நுழைந்தது சமாதானப் படையின் தளபதியாக, ஆனால் செய்தது என்னவோ கொலைகளை.

இவ்வாறு வட மற்றும் தென் கொரியாவில் அட்டூழியம் செய்த அமெரிக்கா, அன்று தான் செய்த கொலைகளை மூடி மறைத்தது. எந்த மனித உரிமை அமைப்பும் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை.

ஒரு வகையில் கொரிய நாடுகளுக்கு இடையேயான யுத்தம் பாரிய அழிவில் நிறைவு பெற்றதற்கு காரணம் அமெரிக்கா.

அது மட்டுமல்ல தென்கொரியாவில் தனது அதிகாரத்தை அப்போது பரப்பிய அமெரிக்கா தனது இராணுவ ஆக்கிரமிப்போடு சர்வாதிகார ஆட்சியைக் கொண்டு வந்தது.

அதன் பின்னர் சில காலத்திற்கு தென் கொரியாவில் இராணுவ ஆட்சியே நடைபெற்றதோடு, சுதந்திரங்களும் பறிக்கப்பட்டன. அந்நாட்டு கம்மியூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது, பயங்கர இராணுவ ஆட்சியை அங்கு அமைக்க உதவி செய்தது அமெரிக்கா.

வட கொரியாவிலும் தென் கொரியாவிலும் சேர்த்து மொத்தமாக சுமார் மூன்று மில்லியன்கள் மக்கள் கொல்லப்பட்டமைக்கு பிரதான காரணம் அமெரிக்காவே. இதற்கு பல ஆதாரங்கள் வெளிப்படுத்தப்பட்டாலும் அவை மூடி மறைக்கப்பட்டன.

இவ்வாறு ஓர் யுத்தத்தை அரங்கேற்றி தனது காலணித்துவத்தை நிலை நாட்டிய அமெரிக்கா அதன் பின்னர் தென் கொரியாவில் இராணுவ ஆட்சியை நிலைநிறுத்தி கம்மியூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் என்ற பெயரில்.,

பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என கணக்கற்றவர்கள் கொல்லப்படுவதற்கும் உதவி செய்ததோடு, சமாதானப் படை எனும் பெயரில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தது.

காரணம் அமெரிக்காவின் அதிகாரம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகவே. இங்கு ஓர் விடயம் சுட்டிக்காட்டப்பட வேண்டியது, வட மற்றும் தென் கொரிய நாடுகளின் வரைபடம் இணைந்ததாகவே இன்றும் அமைந்திருக்கும்.

கொரிய தீபகற்பம் முழுவதும் ஒரே தாய் நாடு என்ற வகை எண்ணத்திலேயே இரு நாட்டு மக்களும் இருக்கின்றனர். அத்தோடு வட கொரிய ஆட்சியாளர்கள் இன்றும் தென் கொரிய இணைப்பை விரும்பும் தேசிய வாதிகளாகவே இருக்கின்றனர்.

அப்போதைய காலகட்டத்தில் வட மற்றும் தென் வியட்நாம் நாடுகளுக்கு இடையேயான போரின் முடிவில் இரு நாடுகளும் இணைந்தமை போன்று கொரிய நாடுகளும் இணைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் அதற்கான சாதகத் தன்மைகளை ஏற்படுத்தப்படவில்லை அல்லது அது திட்டமிட்டு தடுக்கப்பட்டதாகவே மேலைத்தேய ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் வட கொரியா மீதான அமெரிக்காவின் போர்ப் பார்வைக்கு தென் கொரிய மக்களும் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலேயே நடந்து கொண்டு வருகின்றனர் என்ற விடயம் பெரிதாக கூறப்படுவதில்லை.

உதாரணமாக வட கொரியா தாக்கினால் அதில் இருந்து தப்பிக் கொள்ள அமெரிக்கா தென் கொரியாவில் பாதுகாப்பு அரண் அமைத்த போது தென் கொரிய மக்கள் அதற்கு முற்று முழுதாக எதிர்ப்பை தெரிவித்தனர். இவை பெரிதாக பேசப்படவில்லை.

ஆயினும் தென் கொரிய ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் கைப்பாவையாகவே இருந்து வருகின்றனர் என்பதே உண்மை நிலை.

முக்கியமாக இப்போதைய மூன்றாம் உலகப்போர், அணுத் தாக்குதல் பதற்றம் போன்ற அனைத்தையும் நடத்துவது அமெரிக்கா வட கொரியாவை அழித்து விடும் ஒரே நோக்கத்திற்காகவே.

வட கொரியா போருக்கு அறைகூவல் விடவில்லை மாறாக அமெரிக்காவிற்கு கட்டுப்படுவதனை எதிர்த்துக் கொண்டே வருகின்றது என்ற நிலைப்பாடே தற்போது உள்ளது. ஆனால் வெளிப்படையில் ஓர் அடங்காத நாடாக வட கொரியா சித்தரிக்கப்படுகின்றது.

இன்று நேற்று அல்ல 1990கள் தொடக்கம் இதே நிலையே. அப்போது கொரிய நாடுகளின் போர் முடிவுக்கு வந்த பின்னர் வடகொரியா ஓர் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக மாறிப்போனது.

அதனால் தன் நாட்டு எரிபொருள் தேவைக்காக அப்போது அணு உலை ஒன்றினை ஆரம்பித்தது. ஆனால் வட கொரியாவின் அந்த அணுத்திட்டத்தை கைவிட சர்வதேச நாடுகளும் பாரிய அழுத்தத்தை கொடுத்தன.

சர்வதேசம் என்பதனைவிடவும் அமெரிக்கா என்பதே சிறந்தது. அதன் படி அமெரிக்காவின் ஐ. நா தலையீட்டில் அணுத் திட்டத்தை கைவிட்டது வட கொரியா.

இதில் வட கொரியா அப்போதே அணு ஆயுதங்களை தயார் செய்திருக்க முடியும் என்பது ஒரு சிலரின் கருத்து. ஆனாலும் தன் நாட்டில் அழிவுகள் ஏற்படக் கூடாது என்பதற்காக வட கொரியா அன்று அணுத் திட்டத்தை கைவிட்டது.

இவ்வாறான ஆரம்பம் முதலாகவே வட கொரியாவை கட்டுப்படுத்த, அடிமைப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகின்றது என்பதே உண்மை.

இதனை அப்போதைய கால கட்டச் செய்திகள் தெளிவாக காட்டியது. அதாவது அணு குண்டுகளைப் போட்டு வட கொரியாவை முற்றாக அழித்து விடவும் அமெரிக்கா திட்டமிட்டு இருந்தது.

இந்தத் தகவல் 1950 களில் அமெரிக்காவின் இராணுவத் தளபதி மெக்ஆர்தர் என்பவர் மூலம் கசிந்தன. ஆனாலும் எதிர்க் கேள்வியை எவரும் கேட்கவில்லை.

கொரிய யுத்தங்கள் நடைபெற்ற காலம் முதலாக வட கொரியா, அமெரிக்காவிற்கு எதிரியாக மாறியது. அதன் பின்னர் அமெரிக்காவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் சில வட கொரியாவுடன் இணையத் தொடங்கின.

வட கொரியா லிபியாவிற்கு ஆயுதங்களை விற்றது, ஈரான் வட கொரியாவின் பொருளாதாரத்திற்கு உதவி செய்தது. இவ்வாறான ஓர் ஒன்று கூடல் அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை.

அதன் விளைவு சதாம்ஹுசைனும், கடாபியும் குற்றவாளிகளாக மாறினர், தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டனர். அப்போதைய கால கட்டத்தில் ஆரம்பத்தில் அணு ஆயுதம் போன்று பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டே இவர்கள் இருவர் மீதும் திணிக்கப்பட்டன.

அதன் பின்னர் ஈராக் மற்றும் லிபியாவில் அமெரிக்கா தன் போர் விளையாட்டைக் காட்டி இரு நாடுகளையும் அழித்தது.

இந்த இடத்தில் அமெரிக்கா நகர்த்திய சரியான காய் நகர்த்தலில், வடகொரியாவிற்கு சீனா, ஜப்பான் போன்றவை ஆதரவு அளிக்கவே வட கொரியா சிக்கிக் கொள்ளவில்லை. இங்கு சீனாவிற்கு வட கொரியாவிற்கு ஆதரவு தெரிவிப்பது அமைதிக்காகவோ அல்லது வட கொரியா மீது கொண்ட நேசத்திற்காகவோ அல்ல.

வடகொரியா தாக்கப்பட்டால், சீனாவும் பொருளாதார ரீதியில் சரிவை சந்திக்கும், அதேபோன்று ஏகாதிபத்திய கனவோடு இருக்கும் சீனா, வட கொரியாவை முன்னே விட்டு தனது இலாபங்களை சம்பாதித்துக் கொள்வதே திட்டம்.

இந்த நிலையில் அமெரிக்கா நினைக்கும் பட்சத்தில் எப்போதோ வட கொரியாவை தகர்த்து எறிந்திருக்க முடியும். ஆனால் வட கொரியா மீது கை வைப்பது அமெரிக்காவிற்கும் ஆபத்தாகவே முடியும்.

இதனை நன்றாக அறிந்து கொண்ட காரணத்தினாலேயே அமெரிக்கா, ஆரம்ப காலத்தில் இருந்து அணு ஆயுதத்தை அழிக்கின்றோம் என்று திட்டமிட்டு தனது ஏகாதிபத்தியத்தை ஒவ்வோர் நாட்டிலும் நிலை நாட்டியது போன்ற ஓர் நிலையை ஏற்படுத்தி வட கொரியாவை சின்னா பின்னமாக்கவே திட்டமிட்டு வருகின்றது.

இந்தத் திட்டம் வட கொரியா பக்கம் இருக்கும் ஆதரவுகள் நீங்கும் வரை அமெரிக்காவிற்கு சாத்தியமற்றதே என்பதே உண்மை நிலை.

அதனால் மூன்றாம் உலகப் போரை காரணம் காட்டி அமெரிக்கா வட கொரியாவை அடக்க திட்டமிட்டு வருகின்றது என்பதும் இப்போதைய நிலையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதமே.

இவ்வாறு அமெரிக்கா செய்த இன அழிப்பு பற்றி எவரும் பேசுவது இல்லை. அதற்கு தண்டனை கொடுக்க முனையவும் இல்லை. காரணம் ஒவ்வோர் நாட்டுக்கும் அமெரிக்காவின் பங்களிப்பு முக்கியம்.

இதனை அனைத்து நாடுகளும் அறிந்த நிலையிலேயே இருக்கின்றன. ஒரு வகையில் அமெரிக்காவின் இடத்தை கைப்பற்றவே பல நாடுகள் முயன்று வருகின்றன.

இந்த நேரத்தில் அமெரிக்கா வட கொரியா மீது கை வைக்குமானால் அது உலகப்போராக வெடிக்கும் சாத்தியக் கூறே அதிகம். அவ்வாறு போர் ஏற்படுமாயின் அதற்கு முற்று முழுதான காரணம் அமெரிக்காவே.

ஒரு வகையில் அது அமெரிக்காவிற்கு பாரிய இழப்பாகவே அமையும், அதனால் அமெரிக்கா பக்கம் சாதகமான தன்மை ஏற்படும் வரை யுத்தம் ஏற்படாது. அப்படி வட கொரியாவை தாக்க அமெரிக்கா முடிவு செய்து விட்டால்.,

அதற்கு முன்னர் வட கொரியாவிற்கு இருக்கும் ஆதரவுகளை நகர்த்தி விட்டே போரை நடத்தும். அது வரை அமெரிக்கா அவசரப்படாது. என்பதே இப்போதைய நிலை அதனால் உலகப்போர் சாத்தியக் கூறு மிகக் குறைவு.

இந்த இடத்தில் பிரித்தானியாவின் அமைதி ஒரு பக்கம் ஆபத்தானதே . எவ்வாறு இருப்பினும் நடைபெற்ற யுத்தங்கள் அனைத்திற்கும் அமெரிக்காவே காரணம். ஆயினும் குற்றவாளிகளாக்கப்படுவது வேறு நபர்களே என்பதே உண்மை. இவை அனைத்துமே அமெரிக்கா திட்டமிட்டு செய்து வரும் ஏகாதிபத்திய நடவடிக்கைகளே.

Comments