ஒலுவில் துறைமுகம் மூடப்பட்டு கடற்படைத் தளமாகின்றதா..?

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

ஒலுவில் துறைமுகம் மூடப்பட்டு கடற்படைத் தளமாகின்றதா?

ஒலுவில் துறைமுகத்தில் என்னதான் நடக்கின்றது என்று அறியும் பொருட்டு அம்பாறை மாவட்ட கரையோரம் பேணல் மூலவள முகாமைத்துவ இணைப்பாளர் எம்.ஐ.முகம்மது ஜெஸுரை அவரது கல்முனை காரியாலயத்தில் நேரடியாக சந்தித்து பல விடயங்கள் பற்றி விரிவாக பேசினோம்.

ஒலுவில் மீனவர்களின் பிரச்சினை குறித்து விரிவாகப் பேசினார். அவர்களுக்கான நிரந்தர தீர்வை. இன்னும் யாரும் பெற்றுக் கொடுத்ததாக தெரியவில்லை என்றார்.

ஒலுவில் மக்களின் கடலரிப்புக்கு கரையோரம் பேணல் திணைக்களம் நிரந்தரத் தீர்வாக தடுப்பு வேலி அமைத்துக் கொடுத்துள்ளது.ஆனால் மீனவர்களின் பிரச்சினை என்பது கொஞ்சம் ஆழமானது என்றார்.

துறைமுகத்தின் வடபகுதியில் சேரும் கடல் மணலை அள்ளி தென்பகுதியில் நிரப்ப வேண்டும். அதற்கான இயந்திரம் அங்கு நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும்.

கடலரிப்பு ஏற்படும் இடங்களில் மணல்கள் நிரப்பப்பட வேண்டும் என்ற நிபந்தனையொன்றின் அடிப்படையில்தான் ஒலுவில் துறைமுகத்திற்கான அனுமதியை கரையோரம் பேணல் திணைக்களம் கொடுத்திருந்தது.

இலாபம் கொண்ட துறைமுகமாக மாற்றலாம்

தற்போது நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லப்படும் ஒலுவில் துறைமுகத்தை இலாபமீட்டும் துறைமுகமாக மாற்றலாம். அதற்காக பலமான அரசியல் சக்தி வேண்டும். தென்பகுதியில் சேரும் மணலை வடபகுதியில் கடலரிப்பு ஏற்படும் பகுதிகளில் நிரப்ப வேண்டும்.

இப்படியான திட்டத்தை கரையோரம் பேணல் திணைக்களம் அறிக்கையாக துறைமுக அதிகார சபையிடம் கொடுத்துள்ளது. இங்கு மீனவர்களின் பிரச்சினையாக கருதப்படும் மணல் சேரும் விடயத்தை துறைமுக அதிகார சபைக்கு வருமானம் ஈட்டித்தரும் இலாபம் பெறும் துறைமுகமாக மாற்றலாம்.

அதாவது நாளாந்தம் சேரும் மணலை மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு கொண்ட மெட்ரிக் தொன் மணலை தோண்டி விற்பனை செய்யலாம். மாதந்தோறும் குறிப்பிட்டளவு மணலை தோண்டி விற்பனை செய்வதன் மூலமாக முதலாவது கடலரிப்பைத் தடுக்கலாம்.

இப்படிச் செய்வதன் மூலம் மீனவர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். கடலரிப்பைத் தடுக்கும் தீர்வு மணலைத் தோண்டி விற்பனை செய்வதன் மூலமாக துறைமுகம் நல்ல இலாபமீட்ட முடியும். கடல் மண் கொள்ளையைத் தடுக்கலாம். இப்பகுதி மக்கள் வீடு கட்டுவதற்குத் தேவையான மண் தேவையைப் பூர்த்தி செய்யலாம்.

மீனவர்களின் இயந்திர வள்ளங்கள் போக்குவரத்துச் செய்ய முடியாமலுள்ள பகுதிகளில் சேரும் மணலை துறைமுக அதிகார சபை ஒரு விலை நிர்ணயம் செய்து மணலை விற்பனை செய்யலாம். இந்த மண் விற்பனை மூலமாக மாதாந்தம் இலாபமீட்ட முடியும்.

கடலரிப்பால் 200 ஏக்கர் நெற்காணிகள் நிந்தவூரில் பாதிப்பு

கடலரிப்பு ஏற்படுவதனால் நிந்தவூர் பக்கமாகவுள்ள மாட்டுப்பளை, அட்டப்பளம் பகுதிகளிலுள்ள நெற்காணிகள் உவர் நீர்த் தாக்கத்தினால் பெருமளவு பாதிக்கப்ட்டு வருகின்றன.

சேரும் மணலை நிரந்தரமாக அகற்றாமல் விட்டால் நிலமை இன்னும் மோசமாகும் என்றார். அதாவது சேரும் மணல் அகற்றப்படாமல் விடப்படுமானால் இன்னும் மணல் சேர்ந்து பெரும் அணைக்கட்டாக மாறி மீனவர்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாக பாதிப்படைந்து விடும்.

அதனால் அட்டாளைச்சேனை பிரதேசம் மீன் இல்லாத பிரதேசமாக மாறி விடும் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.

பாரிய நேவித் தளம்

அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் துறைமுகம் பாரிய நேவித் தளமாக மாறுகின்ற போது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் ஆபத்தான நிலைதான் ஏற்படும்.

இந்த விடயத்தில் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அரசியலை மட்டும் நம்பி ஏமாந்து போகாமல் தமிழர் தரப்போடு ஒரு அணி இணைந்து காய் நகர்த்த வேண்டும்.

தாமதமாகும் ஒவ்வொரு நாளும் மணல் மூடிக் கொண்டு செல்வதால் துறைமுகம் இயங்காமல் போய்விடும் அப்படியான ஒரு நிலைமை நேவித் தளம் அமைப்பதற்கு மிகவும் வசதியாக அமைந்துவிடும்.

இறக்காமத்தில் அமைந்துள்ள புத்தர் சிலை போன்று ஒலுவில் பாலமுனை பகுதிகளில் புத்தர் சிலை அமைந்து விடும்.

இத்துறைமுகத்தை இலாபமீட்டும் துறைமுகமாக மாற்றவில்லை என்றால் நேவித் தளம் அமைவதை யாராலும் தடுக்க முடியாது. பலமான அரசியல் சக்தி கொண்டு இதில் தலையீடு செய்யவில்லை என்றால் நேவித் தளம் அமைந்து சிங்கள குடியேற்றம் செய்வதையும் ஆங்காங்கு புத்தர் சிலை அமைவதையும் யாராலும் தடுக்க முடியாது.

ஒலுவில் பாலமுனை மக்களின் இருப்பிடத்தை பாதுகாக்க வேண்டிய தேவை வாக்குப் பெறும் அரசியல்வாதிகளது பாரிய பொறுப்பாகவுள்ளது. இந்த விடயம் எதிர்வரும் கிழக்கு மாகாணத் தேர்தலில் பாரிய தாக்கம் செலுத்த வேண்டும்.

Comments