திரும்பிய பக்கம் எங்கும் பிணங்கள் ! குருதியால் வரையப்பட்ட தமிழீழ அழிப்பு

Report Print Mawali Analan in கட்டுரை
advertisement

திரும்பிய பக்கம் எங்கும் மனிதர்கள் பிணங்களாக, அவற்றினில் பாதி சிதறியும் மீதி சிதைந்தும் கிடந்தன. அந்த நிலையிலும் அவலப்பட்டு சிதறி ஓடிய சனங்களின் தலைகளில் கச்சிதமாய் வந்திறங்கின பாலாய்ப் போன குண்டுகள்.

அதனால் சாதாரணமாய் எப்போதும் பார்க்கக் கிடைக்காத நரகமெனும் கொடூரத்தையும் கூட கண்முன்னே காட்ட வைத்தது ஓர் யுத்தம். காலம் அதற்கு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் எனப் பெயர் பொறித்துப்போனது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இரத்தச் சரித்திரமான அந்த இன அழிப்புப் படலம், இன்றுரை இரத்தம் கசிந்து கொண்டிருக்கும் காயமாக மாறாத வடுவை ஏற்படுத்தியது 2009 மே 18 இல்.

குருதியால் வரையப்பட்ட அந்த நாளை தமிழர்கள் மட்டுமல்ல அத்தனை எளிதில் எவருமே மறந்து விடமாட்டார்கள் என்பது திண்ணம்.

நாட்டில் தீவிரவாதத்தை அழிக்கின்றோம், அதற்காக விடுதலைப்புலிகளைக் கொல்கின்றோம் என்ற பெயரில், திட்டமிட்டு தமிழர்கள் தலைகளில் அள்ளி வீசிய குண்டுகளால் கண் திரும்பிய பக்கம் அனைத்திலும் புதைக்கப்படாத உடல்கள்...

அத்தோடு சிதறிப்போன அவையவங்களால் ஏற்பட்ட செங்குருதி ஆறாக மாறி நந்திக்கடல் எனும் சிறப்புக்கடற்கரையை சிவப்பாக்கிய நாற்களை இன்று நினைக்கும் போதும், இரு விழிகளும் சிவப்பாகும் ஒன்று கோபத்தில், மற்றொன்று வேதனையில்.

அத்தகைய கொடூரங்களையும் சுமந்து கொண்டு, வேர் அறுக்கப்பட்டதாக பலர் இன்றும் நினைக்கும் ஓர் விடுதலைப் போரின் வடு இன்று மௌனமாய் காற்றில் இரத்த வாடை கலந்து வீசுகின்றது முள்ளிவாய்க்கால் பகுதியில்.

2009 மே 18 ஆம் திகதிக்கு சில நாட்களுக்கு முன்னர் வரையிலும் ஓர் விடுதலைக் கனவு மெய்படப் போகின்றது என்ற ஆவல் ஈழத் தமிழர்களிடையே மட்டுமல்ல அது உலகத் தமிழர்கள் அனைவரிடமும் இருந்த ஓர் அவா.

ஆனால் திடீரென தலைகீழாகிப் போனது ஓர் சரித்த வரலாறு. தமிழரின் தலைகளில் குண்டுகளும் மனங்களிலும், நம்பிக்கையிலும் மண்ணும், மரணமும் வாரி இரைக்கப்பட்டன.

அதனால் என்ன நடக்கின்றது?, ஏன் நடக்கின்றது? ஏன் கொல்லப்படுகின்றோம்? என்பது கூட தெரியாமல் பதறிய பெண்களுக்கும், புரியாத குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் ஏன் முதியோருக்கும் கூட, என அனைவருக்கும் பாகுபாடுகளும், பாரபட்சமும் இன்றி அவல மரணம் எனும் பரிசுகள் வாரி வழங்கப்பட்டன.

அந்த கொலை (இன) வெறி கொண்ட யுத்தம், இப்போது 8 வருடங்களை விழுங்கி விட்டு சலனமின்றி நிற்கின்றது என்பது தீராத வேதனையே.

ஆனால் யுத்தம் என்று கூற முடியாத அளவு நடைபெற்ற அந்த இன அழிப்பு, கொடூரங்களுக்கு தீர்வுகளோ, தண்டிப்புகளோ இன்று வரை கொடுக்கப்பட வில்லை என்பதற்கு ஆத்திரப்படுவதா அல்லது துயரப்படுவதா என்பதும் புரியாத மனநிலை.

அந்த இன அழிப்பிற்கான தண்டிப்பை பற்றி கேட்கும் போது பதிலமைகின்றது இவ்வாறாக அதாவது.,

“அந்த யுத்தம் இன அழிப்பு இல்லை, இனப்படுகொலை மட்டுமே, தண்டிப்பிற்கு ஆதாரம் வேண்டும், தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தமே அது”.

advertisement

இந்த கேலிக்குரிய வாதத்தினை, மனித உரிமை அமைப்புகளும் தலையாட்டி பொம்மைகளாய் கேட்டுக் கொண்டிருப்பது எத்தகையதோர் மிகப்பெரிய கேலிக் கூத்து. கொடுத்த, கிடைத்த ஆதாரங்களுக்கு என்ன நடந்தது?

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

அதற்கும் மேல் ஆதாரம் வேண்டுமெனில் சுட்டுக் கொன்றதால், சுடுகாடு கூட செல்லாமல் சொர்க்கம் சேர்ந்த உயிர்கள் தான் மீண்டு வந்து சாட்சியமளிக்க வேண்டுமா? என்றும் கேட்கத் தூண்டும்.

கொத்துக் கொத்தாக குண்டுகள் போட்டும், தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகளை கொட்டியும் பல பொதுமக்களை கொன்றழித்தது மட்டுமல்லாமல், அடைக்கலம் அளிக்கின்றோம் எனக் கூறி வெளிப்படையான துரோகத்தனமான அழிப்பு நடந்தேறியது முள்ளிவாய்க்கால் களத்தில்.

வரலாற்றில் இந்த முள்ளிவாய்க்கால் இன அழிப்பும், அழிந்து போகாமல் பதியப்பட வேண்டிய ஒன்றே. 8 வருட பூரணத்தைச் சந்தித்து விட்ட நிலையிலும், இனியும் என்றாவது இந்த கொலைகளுக்கு தண்டிப்புகளும் பதில் கூறல்களும் கிடைக்கும் என எதிர்பார்ப்பதும் ஒரு வகையில் வேடிக்கைத்தனமானது.

அதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கின்றது அதாவது, சர்வதேசமே இணைந்து நடத்தி அப்பாவிகளைக் கொன்றதோர் கோர யுத்தத்திற்கு சர்வதேசமே நீதி பெற்றுத் தரும் என எதிர்ப்பார்ப்பதும் கூட அறியாத்தனமானதோர் முட்டாள் தனம் எனலாம்.

அதுவும் தவிர இன்றுவரை மர்மம் காத்துக் கொண்டிரும் முள்ளிவாய்க்காலில் கொலைகள் மட்டுமா அரங்கேறியது?

அதனையும் தாண்டி கொலை செய்யப்பட்டவர்களை தவிர எஞ்சியவர்கள் முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டனர். அதிலும் பலர் சித்திரவதை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட, கணக்கிலடங்காதோர் பலர் காணாமலும் ஆக்கப்பட்டனர்.

அவ்வாறு தொலைந்து போக வைக்கப்பட்ட உறவுகள் இன்று உயிருடன் இருக்கின்றார்களா? அல்லது கொல்லப்பட்டார்களா? என்று இன்றும் கதறும் பொதுமக்கள் கணக்கற்றவர்கள்.

ஆனால் இதற்கு கூட தீர்ப்போ அல்லது தீர்வோ தர எவரும் இதுவரை மெய்யாக முன் வந்ததாக தெரிய வில்லை. ஆனாலும் ஒன்று அரசியல் இலாபம் இருந்தால் இதுவும் கூட தீர்க்கப்படலாம்.

எவ்வாறெனினும் அழிப்புகளை மீட்டிப்பார்ப்பது வேதனையை மீண்டும் வரவழைப்பதற்கு சமமானது என்பது நன்றாகவே தெளிவான விடயம்.

இருந்தாலும் நடந்த அழிப்புச் சம்பவத்தை மீட்டாவிட்டால் சிலவேளைகளில் அந்த இன அழிப்பை பொய்யாகக் கூட பலர் சித்தரித்து விடலாம் என்பது பின்னோக்கிய காலப் பயணத்தை பார்க்கும் போது தெளிவாகப் புலப்படலாம்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை ராஜபக்ச அதிபராக இருந்த காலப்பகுதியில் ஈழத்தின் விடுதலைப்போர் உச்சத்தை எட்டியது. அதனால் இலங்கையின் முப்படைகளும் இணைந்து வடக்கை தும்சம் செய்து கொண்டிருந்தது.

இதற்கு இலங்கை இராணுவம் மட்டுமல்ல, பலம் மிக்க சில நாடுகளின் பக்க பலமும் இலங்கைக்கும், இலங்கை இராணுவத்திற்கும் தாராளமாக கிடைத்தன.

அதனால், முள்ளிவாய்க்காலினை கடல், வான், தரை மும்புறமாகவும் இராணுவம் (கள்) சிதைக்கத் தொடங்கின. அங்கு பொழிந்து கொண்டிருந்த குண்டுகளுக்கும், எறிகணை வீச்சுகளுக்கு எவரும் தப்பிப் பிழைக்கவில்லை.

அலறியபடி மக்கள் அவலச் சாவினை அடைந்து கொண்டிருந்தனர். அங்கே சிதறிய உடல்களைக் கண்டு சிரித்தபடி வெறி கொண்டு இராணுவங்கள் புலிகள் என்ற போலிப் போர்வையில் அப்பாவிகளை அழித்தன.

advertisement

அந்த கடைசி மூன்று நாள் யுத்தத்தில் மட்டும் சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தமிழராக, அதுவும் வடக்கில் பிறந்த குற்றத்திற்காக கொல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இவ்வாறு முள்ளிவாய்க்கால் திக்கெட்டும் மரண ஓலம் எதிரொலித்துக் கொண்டிருந்த தருணம்..,

செல்களின் தாக்குதலால் படுகாயமடைந்து தப்ப முடியாத காரணத்தால் பரிதாபமாக கிடந்த பல அப்பாவிகளை கொத்தாக அள்ளி உயிருடன் புதைத்தன யுத்தக்கள இராணுவம்.

யுத்தம் என்ற பெயரில் அப்போது நடைபெற்ற இனப்படுகொலைகளை வார்த்தைகளால் விரிவு அல்லது தெளிவு படுத்த முடியாது. வடக்கு தமிழர்களுக்கு எதிராக வெறித்தனங்கள் அவை.

பாதுகாப்பு வலயங்களுக்குள் வந்தவர்கள், சரணடைந்தவர்கள், உட்பட அனைவருக்கும் மரணங்கள் வாரி வழங்கப்பட்டன. யுத்த ஆரம்ப கட்டத்தில் இரசாயன குண்டுகளான பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்த ஜெனிவா அமைப்பு முற்றாக தடை விதித்தது.

ஆனால் முள்ளிவாய்க்காலில் அவை தாராளமாகவே பயன்படுத்தப்பட்டன. பொது மக்கள் தவிர பாடசாலைகள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டன. அப்போது ஜெனிவா ஓய்விற்காக சென்று விட்டதா என்பதும் இன்றுவரை மர்மமே.

அதனால் இவற்றினை இன அழிப்பு எனச் சொல்லாமல் வேறு எப்படி சொல்ல வேண்டும், சொல்ல முடியும் எனத் தெரியவில்லை.

யுத்தம் என்பது அங்கு வெளிக்காட்டப்பட்ட போலியான விடயம் ஆனால் அன்று முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்டது தமிழர்களை அழிக்கும் இன அழிப்பு தான் என்பதனை உண்மையறிந்தவர் எவரும் மறுக்கமாட்டனர்.

இவ்வாறான ஓர் கொடுங்கொலைகளை செய்து, பிணங்களை பார்த்த பின்பும் கூட கொலை வெறி அடங்கவில்லை அப்போது புலிகளுக்கு எதிராக போர் செய்கின்றோம் எனக் கூறிக் கொண்டவர்களுக்கு.

அதனால் போரின் பின்னர் முள்வேலிகளால் அமைக்கப்பட்ட முகாம்களுக்குள் எஞ்சிய மக்கள் அனுப்பப்பட்டனர் திருத்தம் அடைக்கப்பட்டனர். முகாம் என்ற பெயரில் அங்கும் சாவினைவிடக் கொடிய துன்பம் அனைவருக்கும் கிடைத்தன. குறிப்பாக பெண்களுக்கு.,

பிணத்தையும் விட்டுவைக்காத வெறிமிக்கவர்கள் சதைப்பிண்டமாக பெண்களைப் பார்த்தால் என்ன நடக்கும்? தமிழ்ப் பெண்கள் மீது வெறித்தனமான பாலியல் வன் கொடுமைகள் நடாத்தப்பட்டன.

இதனைச் செய்வதனை விடவும் சுட்டுக் கொன்றிருந்தால் மன மகிழ்வுடன் செத்திருப்பார்கள் அங்கு பாதிக்கப்பட்ட அப்பாவிப் பெண்கள்.

மாற்றான் மனைவியாக இருந்தால் என்ன? பிள்ளைக்கு தாயாக இருந்தால் என்ன? சிறுமியாக இருந்தால் என்ன? முள்ளிவாய்க்காலில் யுத்தம் செய்த இராணுவத்தினருக்கு அவர்கள் சதைப் பிண்டமான காமப் பொருள் மட்டுமே.

கூட்டாகச் சேர்ந்து இத்தகைய ரணக் கொடூரத்தை செய்து விட்டு இன்று “இந்திய இராணுவமே தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் கொடுமை புரிந்தது, இலங்கை இராணுவம் ஒழுக்கமானது” என கேவலம் எனும் பட்டம் மாறி மாறி சூட்டப்பட்டு வருகின்றது.

இங்கு குற்றம் செய்தவன் மானம் கெட்டவன் என்றால், அதனை வேடிக்கை பார்த்தவன் கேடு கெட்ட கேவலமானவன் என்பதனையும் அறியாமல் கதை பேசுகின்றவர்களுக்கு என்ன பெயர் என்பது என் அகராதியில் இல்லை.

இவ்வாறு முள்ளிவாய்க்காலில் நடந்த அவலங்களை இன்று மறைக்கப் பார்க்கலாம், மறுக்கவும் கூட பார்க்கலாம் ஆனால் மாற்றியமைக்க முடியாது, என்பதனை குற்றம் செய்தவர் உணரவேண்டிய காலம் எப்படியும் வந்தே தீரும்.

அது அரசன் வடிவில் வந்தாலும் சரி, தெய்வத்தின் வடிவில் வந்தாலும் சரி தீர்ப்புகளும் தண்டனைகளும் கிடைக்கும் என்பதும் திண்ணம். ஆனால் அது யாரால்? எப்போது? எப்படி என்ற கேள்விகளுக்கு மட்டும் இப்போதைக்கு மௌனம் அர்த்தம் மிக்க பதிலாகும்.

இலங்கையில் நடந்த இந்த கொலைகளை, கொடூரங்களை இலங்கை (அப்போதைய) அரசு மறுத்த போது 2010ஆம் ஆண்டு நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற சர்வதேச அமைப்பு விசாரணை செய்து பல போர்க் குற்றச்சாட்டுகளை உறுதி செய்தது.

அதன் பின்னர் அமெரிக்க சட்ட வல்லுநரான பிரான்சிஸ் போய்ல் என்பவர்...,

“1948 ஆம் ஆண்டு இன அழிப்பு தொடர்பாக ஓர் உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் கையெழுத்தினை இட்டுள்ள 140 நாடுகளில் ஏதாவது ஓர் நாடு அல்லது பல, இலங்கை அரசு செய்த இனப்படுகொலைகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் விசாரணை நடத்தப் படும் எனத் தெரிவித்தார்.

ஆனால் அது என்னவாயிற்று அதற்கடுத்து தொடர்ந்து என்ன நடக்கின்றது என்பது இன்றும் மர்மமாகவே இருக்கின்றது.

இங்கு இலங்கை செய்த இனப்படுகொலைகளுக்கும், போர்க்குற்றங்களுக்கும் நேரடி, மறைமுக உதவிகளைச் செய்த நாடுகள் இன்று, இலங்கையுடன் கொண்டுள்ள நட்புறவு அளப்பறியவை என்பதனையும் மறக்கலாகாது.

அதனால் நாளையாவது இதற்கான தீர்ப்புகள் கிடைக்கும் என்பதும் சீச் சீ இந்தப் பழம் புளிக்கும் கதையாகிவிடுமோ என்பதும் இப்போதைக்கு ஐயம் கலந்த அச்சம்.

அதேபோல 1948ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நாடுகளிடம் செய்து கொண்ட இனப்படுகொலைகளை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்பாடு மூலம் இலங்கை மீது போர்க்குற்றம் விசாரிக்கப்படும் எனப்பட்டது. இதுவும் நடந்ததா எனத் தெரியவில்லை.

இவை தவிர சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபை போன்றனவிடம் இன அழிப்புகளுக்கு, இனப்படுகொலைகளுக்கு, போர்க்குற்றங்களுக்கு எதிராக பல உடன்பாடுகள் காணப்படுகின்றன.

அவை அனைத்தும் இலங்கை விடயத்தில் இன்று வரை ஏட்டளவில் மட்டுமே உள்ளன. தப்பித் தவறிக் கூட நடைமுறைப்படுத்தப்பட்டு விடக் கூடாது என்பதில் இலங்கை ஆட்சியாளர்கள் மட்டுமல்ல சர்வதேசமும் மிக உன்னிப்பாக இருக்கின்றன என்பதே மறைக்கப்படும் உண்மை.

உதாரணமாக அயல் நாடான இந்தியாவிற்கு இலங்கைத் தமிழர்கள் தொப்புள் கொடி உறவாம். இருந்தும் என்ன பயன் இலங்கையில் இன அழிப்பிற்கு பங்களிப்பு செய்ததே அந்த தொப்புள் கொடி உறவுதான்.

இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் ஈழத்தமிழர்கள் என்பவர்கள், அவர்களின் அரசியல் இலாபங்களுக்கான பகடைக்காய்கள் என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.

முள்ளிவாய்க்கால் என்பது இறுதியில் செய்யப்பட்ட வெளிப்படையாக தெரிந்ததோர் இன அழிப்பு. இது தவிர தொடர்ந்து முத்தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையில் தமிழர்களுக்கு பாரிய அட்டூழியங்கள் நிகழ்த்தப்பட்டன.

அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை என்றுமே வார்த்தைகளால் வர்ணித்திட முடியாது. அவை உணரவும் கூட முடியாத அளவு கொடூரமானவை.

எது எவ்வாறாயினும் இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பினை ஒட்டுமொத்த சர்வதேசமே வேடிக்கைத் தான் பார்த்தது இன்றும் அதனையே செய்கின்றது.

ஆனால் பெயருக்கு மட்டும் ஏதோ போர்க் குற்றம், விசாரணை, தீர்ப்பு என்ற மாயச் சித்தரிப்பு இன்றும் இருக்கத்தான் செய்கின்றது.

இவ்வகையில் முள்ளிவாய்கால் எனப்படும் குருதிச் சரித்திரம் மறைக்கப்படலாம், ஆனால் அதனால் ஏற்பட்ட வடுவினை தமிழர்கள் மனதில் இருந்து அகற்றிட முடியாது என்பது மட்டும் உண்மை. இவை அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும் என்பதும் ஓர் எதிர்ப்பார்ப்பு...

advertisement

Comments