இலங்கையில் இனிக்கப் பேசிய மோடி! தமிழக மீனவர்கள் பிரச்சனை மிஸ்ஸிங்

Report Print Murali Murali in கட்டுரை

“பேச்சு மட்டும் இனிப்பாக இருந்து என்ன பிரயோஜனம்? ஆசை காட்டி வஞ்சிப்பவரை எப்படி அழைப்பது? நரேந்திர மோடி என்றே அழைக்கலாம்” தமிழக மீனவர்கள் இந்தியப் பிரதமர் குறித்து இப்படி விமர்சிக்கிறார்கள்.

அதற்கான காரணங்களையும் வலுவாகச் சொல்கின்றனர். ‘பித்தலாட்டம்தான்.. சந்தேகமே வேண்டாம்’ என்று குமுறுகிறார்கள்.

இலங்கையில் புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்ற மோடி, அங்கே தமிழக மீனவர்களின் பிரச்சனைக்காக, ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்ற ஆத்திரமே, அவர்களை இப்படி புலம்ப வைத்திருக்கிறது.

பேச்சில் அப்படி என்ன இனிப்பு!

2013-இல் மோடி பிரதமர் கிடையாது. குஜராத் முதல்வராக இருந்தார். திருச்சியில் நடைபெற்ற இளந்தாமரை மாநாட்டில் பேசியபோது “மணி நகர் தமிழ் வாக்காளர்கள்தான் என்னை வெற்றிபெற வைத்தனர்.

அந்த மணிநகர்தான் எனது சட்டசபை தொகுதி. பாலில் சர்க்கரை இரண்டறக் கலந்து இருப்பதைப் போல, தமிழர்களும் குஜராத்திகளும் வாழ்கின்றனர். இரண்டு மாநிலங்களுமே கடற்கரை மாநிலங்கள்.

இரு மாநிலங்களுக்கும் சில முக்கியமான பிரச்சனைகள் இருக்கின்றன. குஜராத் மீனவர்கள் எப்படி பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனரோ, அதேபோல், இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.

குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் ஏன் தூக்கிச் செல்கிறது? தமிழக மீனவர்களை இலங்கை ஏன் தூக்கிச் செல்கிறது? இதற்கான தைரியம் இந்த நாடுகளுக்கு எப்படி வந்தது?

பிரச்சனை கடல் மத்தியில் அல்ல! மத்தியில் இருக்கிற பலமற்ற (காங்கிரஸ்) அரசால்தான். சொந்த நாட்டு மீனவர்களை அண்டை நாட்டுப் படையினர் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்டை நாடுகளால், சொந்த நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய அளவில் இன்னல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில், அதே அண்டை நாட்டின் பிரதமருடன் வெளிநாட்டிலே இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உணவருந்திக் கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்?” என்று கேட்டார். இந்திய மீனவர்கள் மீது இத்தனை கரிசனத்தோடு மோடி பேசியது, அப்போது இனிக்கத்தான் செய்தது.

இந்த இலங்கை விசிட்டிலும் கூட, “தமிழர்களும் நானும் ஒரு விஷயத்தில் பொதுவாக இணைந்திருக்கிறோம். டீ மூலம் இது நடந்திருக்கிறது. சிலோன் டீ உலகம் முழுவதும் பிரபலமானது. நானும் டீக்கடையில் வேலை பார்த்திருக்கிறேன்.

அந்த வகையில் உங்களுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. உலகின் மிகப் பழமையான தமிழ் மொழியைப் பேசுகின்றீர்கள். உங்களுக்கு சிங்களமும் தெரியும்.

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற தமிழ் பழமொழிக்கு ஏற்ப நீங்கள் வாழ்கின்றீர்கள்.” என்று பேசி இலங்கைத் தமிழர்களையும் குளிர்வித்திருக்கிறார்.

மேலும், “இந்தியாவின் தேசிய தலைவர்களில் ஒருவரான எம்.ஜி.ஆர். பிறந்தது இந்த இலங்கை மண்ணில்தான்” என்று அந்த நாட்டின் பெருமையைப் பறைசாற்றி இருக்கிறார்.

அனைத்தையும் மறந்த மோடி!

சர்வதேச விசாக் தின உரையில், “இந்தியாவும் இலங்கையும் புத்தரின் தத்துவங்களால் இணைந்துள்ளன. நம்முடைய அரசு நிர்வாகத்திலும் கலாச்சாரத்திலும் புத்தரின் போதனைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

வெறுப்பு மற்றும் அதனுடன் இணைந்த பயங்கரவாதம், வன்முறையை மட்டுமே, தன் கொள்கையாகக் கொண்டு, அதைப் பரப்பி வரும் நாடு அது.

அந்த ஒரு நாட்டின் இந்த மனப்போக்கினால், இந்த பிராந்தியத்தில், பயங்கரவாதம் என்பது ஒரு கொடூர வியாதி போல பரவி வருகிறது” என்று பாகிஸ்தானை மட்டுமே மனதில் நிறுத்திப் பேசியிருக்கிறார் மோடி.

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை இலங்கையில் பேசிய மோடி, தனக்கு வசதியாக மறந்து போன விஷயங்களைப் பட்டியலிடுகிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்:

“2009-இல் விடுதலைப் புலிகளுடன் நடந்த சண்டையின் போது போர்க் குற்றம் நடந்ததாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் அமைத்த மூவர் குழு, போரின் கடைசி நாட்களில் 40 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்றும், சிங்கள இராணுவம் செய்த போர்க்குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்றும் கூறியுள்ளது.

பெண்களை மட்டுமல்ல. சிறுமிகளையும் விட்டு வைக்கவில்லை. அந்த அளவுக்கு அங்கே பாலியல் வன்கொடுமைகள் தமிழ்ப் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன.

போரின் ஒரு ஆயுதமாக மருந்து, உணவு, அத்தியாவசியப் பொருட்கள் தமிழர்களுக்கு கிடைக்காதவாறு செய்தனர். தீவிரவாதிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில், சொந்த நாட்டு மக்கள் மீதே விமான தாக்குதல் நடத்தினர்.

இதுவரையிலும் சுமார் 3 லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். நாம் வாழ்வதற்கு தகுதியான நாடு இல்லை என, இலங்கையிலிருந்து சுமார் 10 லட்சம் தமிழர்கள் புலம் பெயர்ந்துள்ளனர்” என்கிறார்கள்.

புத்தர் சொன்னபடியா நடக்கிறார்கள்?

“புத்தரின் கொள்கைகள் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கின்றன” என்று மோடி சொல்கிறார். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே “இன்றைய உலகத்திற்கு புத்தரின் கொள்கைகள் தேவை.

சமூக நீதியை பெறவும், நவீன வழிகளில் செல்லவும் புத்த மதம் தேவை” என்கிறார். மோடியும், ரணில் விக்கிரமசிங்கேவும் சொல்வது இருக்கட்டும். புத்தர் என்ன சொல்கிறார் தெரியுமா?

“உங்களின் கோபத்தால் அதிகமான தண்டனை பெறப் போகிறவர் நீங்கள்தான்!” என்கிறார். சொந்த நாட்டு மக்களான தமிழர்கள் மீது இலங்கை வெளிப்படுத்திய கோபத்தைத்தான் நாம் பார்த்திருக்கிறோமே!

அதற்கான தண்டனை, புத்த கொள்கையின்படி, சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுமா? மோடி போன்றவர்களுக்கும் கூட, புத்தர் ஒன்றைக் கூறியிருக்கிறார்.

“ஒரு சொட்டு கூட ரத்தம் வராமல் ஒருவரைக் கொன்றுவிடும் ஆற்றல்மிக்க கூர்மையான ஆயுதம் மனிதனின் நாக்குதான்” என்கிறார். எழும்பில்லாத நாக்காயிற்றே! மோடியும் என்னமாய் புரண்டு பேசுகிறார்.

தமிழக மீனவர்களுக்காக அன்றைய காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சாடிய மோடியின் வாய், இன்று ஏன் திறக்க மறுக்கிறது.

மோடி இலங்கை செல்வதற்கு முன்பாகவே, அவரது வாய்ஸாக, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் “பிரதமரின் இலங்கைப் பயணத்தின் போது தமிழக மீனவர்களின் பிரச்சனை குறித்து எந்தப் பேச்சு வார்த்தையும் நடத்தப் போவது இல்லை” என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டார்.

இதே சுஷ்மா சுவராஜ் 2014-இல் தங்கச்சிமடத்தில் பேசியபோது “தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நிரந்தரத் தீர்வு காணப்படும்” என்று வாக்குறுதி அளித்தார். இன்றோ, வேறுவிதமாகப் பேசுகிறார்.

வெறும் வார்த்தை ஜாலம்! மோசம் போனோம்!

40 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை கடற்படையின் கொடூர தாக்குதல்களை சந்தித்து வருகிறார்கள் தமிழக மீனவர்கள். இன்று வரையிலும், பிரிட்ஜோ போன்ற மீனவ இளைஞர்களின் உயிரைப் பறித்த வண்ணம் இருக்கின்றனர்.

800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக புள்ளிவிபரம் சொல்கிறது. “130 இந்திய மீனவர்களின் படகுகள் எங்கள் வசம் உள்ளன. அவற்றை விடுவிக்க மாட்டோம்!” என்று மார் தட்டுகிறார் அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர்.

மோடி பிரதமரான பிறகு, இலங்கை அரசிடமிருந்து ஒரு படகு கூட மீட்கப்படவில்லை. மீனவர்களுக்காக பா.ஜ.க. தலைவர்கள் பேசி வருவதெல்லாம் வார்த்தை ஜாலமாகவே இருக்கிறது. செயல்பாட்டில் எதுவும் இல்லை.

மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்றால், இரண்டு நாட்டு மீனவர்களும் அனைத்துப் பகுதியிலும் மீன் பிடித்துக் கொள்ளலாம் என, இந்தியாவும் இலங்கையும் சுதந்திரமான ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கிட வேண்டும்.

இன்னும் சொல்லப் போனால், இலங்கைக் கடல் எல்லையில் நாமும், இந்தியக் கடல் எல்லையில் அவர்களும் மீன் பிடித்துக் கொள்ளலாம் என்று 1974-லிலேயே ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

அதை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு முன் வந்தாலே போதும். இதனை இலங்கையிடம் வலியுறுத்துவதற்கு இந்தியப் பிரதமருக்கு என்ன தயக்கமோ?

தமிழக மீனவர்களும் இந்தியர்கள்தான். இலங்கைத் தமிழர்களும் இந்திய வம்சாவளியினர்தான். இவர்களைக் கொடுந்துயருக்கு ஆளாக்கி வருகிறது இந்தியாவின் நட்பு நாடு என்று சொல்லிக் கொள்ளும் இலங்கை.

“இலங்கையின் வளர்ச்சிக்கான திட்டங்களில் இந்தியா எப்போதும் பங்கேற்க தயாராக உள்ளது” என்கிறார் பிரதமர் மோடி. தமிழக மீனவர்களோ, “அன்று நீங்கள் பேசியது என்ன? இப்போது நடப்பது என்ன? உங்கள் பேச்சை நம்பி மோசம் போய்விட்டோம்” என்று பரிதவிக்கின்றனர்.

- Nakkheeran

Comments