ஏமாற்றிய மூனும் ஏமாறாத மோடியும்!

Report Print Subathra in கட்டுரை

2009ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி பின்னிரவு போர் முடிவுக்கு வந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்து மூன்றாவது நாள் போர் நடந்த பகுதிகளைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகவும் ஐநாவின் அவசர உதவித் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவும் ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஐநா பொதுச் செயலரின் பயணங்கள், சந்திப்புகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ்தான் வைத்திருந்தது.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலைமைகளை எடுத்துக் கூறுவதற்காக ஐநா பொதுச் செயலரைச் சந்திப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐநாவிடம் அனுமதி கோரியிருந்தது.

கூட்டமைப்புடனான சந்திப்புக்கு நேரம் ஒதுக்க விடாமல் இழுபறிக்கு உள்ளாக்கிய மகிந்த அரசாங்கம் பயணத்தின் முடிவில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஐநா பொதுச் செயலர் பான் கீ மூனைச் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகக் கூறியது.

அதன்படி ஐநா பொதுச் செயலரைச் சந்திக்க இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் காத்திருந்தனர்.

ஆனால் கடைசி வரையில் ஐநா பொதுச் செயலரை அவர்களால் கண்ணால் கூட காண முடியவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க விடாமல் ஐநா பொதுச் செயலரை கட்டுநாயக்கவில் இருந்து மிகச் சாதுரியமாக அனுப்பி வைத்திருந்தது மகிந்த ராஜபக்ச அரசாங்கம்.

பான் கீ மூன் இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு டென்மார்க் தலைநகர் கொப்பன்கேகனுக்கு பயணமாக வேண்டியிருந்தது.

கடைசி நேரத்தில் ஐநா பொதுச் செயலரை விமானப்படையின் ஹெலிகொப்டர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கொண்டு போய் இறக்கியதும் அவர் விமானத்தில் ஏறிக்கொண்டார். விமானம் புறப்பட நேரமாகி விட்டது என்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை ஐநா பொதுச் செயலரால் சந்திக்க முடியவில்லை.

ஆனால் அந்தச் சம்பவம் த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்படுத்திய ஏமாற்றத்தையும் கோபத்தையும் விட தமிழ் மக்களுக்கே அதிக ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

ஐநா பொதுச் செயலரின் நிகழ்ச்சி நிரல் இலங்கை அரசாங்கத்தினால் வகுக்கப்பட்டதும் விமானப்படையின் ஹெலிகொப்டர்களை அவர் இங்கு பயணங்களுக்கு நம்பியிருந்ததும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கு காரணமாகியது.

2013ம் ஆண்டு இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வடக்கிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அவரும் கூட விமானப்படையின் விமானத்திலேயே இரணைமடுவிற் சென்று இறங்கினார். எனினும் அவர் தரைவழியாகவும் பல இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு மக்களைச் சந்தித்திருந்தார்.

எனினும் பாதிக்கப்பட்டவர்கள் சுதந்திரமாக அவரைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததுடன், அடுத்த பயணத்தை அவர் மேற்கொண்ட போது ஐநா ஹெலிகொப்டரையே பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இலங்கையில் நடந்த கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரித்தானியப் பிரதமர் 2013ம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் போதும் இலங்கை விமானப்படையின் விமானம் மற்றும் ஹெலிகொப்டர்களிலேயே பயணம் மேற்கொண்டிருந்தார்.

ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் 2015ம் ஆண்டு இலங்கைக்கு வந்திருந்த போதும் விமானப்படை ஹெலிகொப்டர்களிலேயே பயணங்களை மேற்கொண்டிருந்தார்.

ஆனால் 2015ம் ஆண்டு இலங்கைக்கு வந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் பயணத்துக்கு தனி விமானமும் பிரத்தியேக ஹெலிகொப்டர்களும் கொண்டு வரப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணத்துக்கும் கூட ஜோன் கெரி அமெரிக்க விமானப்படை விமானத்தில் தான் பயணம் செய்தார். அமெரிக்க ஹெலிகொப்டர்களையே பயன்படுத்தினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கூட இலங்கையில் மேற்கொண்டிருந்த இரண்டு பயணங்களுக்கும் சொந்த விமானங்களையே பயன்படுத்தினார்.

இந்தியன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தனிவிமானத்தில் கட்டுநாயக்க வந்த அவர் இலங்கைக்குள் மேற்கொண்ட பயணங்களுக்காக எம்.ஐ 17 ஹெலிகொப்டர்களை பயன்படுத்தியிருந்தார்.

இந்தியப் பிரதமரின் பயணங்களுக்காக நான்கு பிரத்தியேக ஹெலிகொப்டர்கள் புதுடெல்லியில் இருந்து திருச்சி வழியாக கட்டுநாயக்கவுக்கு வந்திருந்தன.

இந்தியப் பிரதமரின் வருகைக்கு முன்னரே கொழும்பு வந்த இந்தக் ஹெலிகள் டிக்கோயாவில் தரையிறங்கிப் பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கிய போதே சர்ச்சைகளும் ஆரம்பித்தன.

ஹெலிகளின் பறப்பினால் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக வீடுகளின் கூரைகள் பிய்த்தெறியப்பட்டன. இதனால் பெண்ணொருவர் காயமடையவும் நேரிட்டது.

இந்தியப் பிரதமரின் ஹெலிகொப்டர்களின் அதிர்வுகளால் குழவிகள் கலைந்து கூட்டத்தைக் குழப்பி விடலாம் என்பதால் குழவிக் கூடுகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தியப் பிரதமரின் பயண அணியில் இடம்பெற்றிருந்த ஒரு ஹெலிகொப்டர் அஸ்கிரிய மைதானத்தில் இருந்து பறக்க முடியாமல் ஐந்து நாட்களாக தரித்து நிற்கும் நிலையும் ஏற்பட்டது.

புதுடில்லியில் இருந்து உதிரிப் பாகங்களுடன் வந்த தொழில்நுட்பக் கூழுவொன்று திருத்தங்களை மேற்கொண்டதுடன் தலதா மாளிகையில் வழிபாடு செய்த பின்னரே அந்தக் ஹெலி இயங்கத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை விமானப்படையையும் இதே ரகத்தைச் சேர்ந்த எம்.ஐ.17 ஹெலிகொப்டகளை பயன்படுத்தினாலும் கூட இலங்கை விமானப்படையினரின் தொழில்நுட்பக் குழுவின் உதவியை இந்திய அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அந்தக் ஹெலிகொப்டரில் உள்ள இந்தியப் பிரதமருக்கான பாதுகாப்பு வசதிகள் பற்றிய இரகசியங்கள் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதால் தான் புதுடில்லியில் இருந்து வரும் தொழில்நுடபக் குழுவுக்காக காத்திருக்க நேரிட்டது.

இந்தியப் பிரதமரின் பயணம் தொடர்பாக வெளியான செய்திகளுக்கு இணையாக அவரது பயண அணியில் இடம்பெற்றிருந்த ஹெலிகொப்டர்கள் பற்றிய செய்திகளும் பரவியிருந்தன.

ஆனாலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் தனது பயணத்துக்கு இந்திய விமானப்படையின் ஹெலிகொப்டர்களையும் இந்தியன் எயார்லைன்ஸின் தனி விமானத்தையும் பயன்படுத்தியதால் அவரது நிகழ்ச்சி நிரல்களில் குழப்பங்கள் ஏற்படவில்லை.

கண்டியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அஸ்கிரிய மைதானத்திலிருந்து புறப்பட்ட போது ஒரு ஹெலிகொப்டர் பழுதாகிய போதும் இந்தியப் பிரதமரை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு ஏனைய மூன்று ஹெலிகொப்டர்கள் தயாராகவே இருந்தன.

அதனால் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான அவரது பயணத் திட்டத்தில் எந்தக் குழப்பமும் ஏற்பட்டிருக்கவில்லை. ஏனென்றால் கட்டுநாயக்கவிலும் அவருக்கு ஒரு நிகழ்ச்சிநிரல் காத்திருந்தது.

த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரை அவர் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்தியப் பிரதமரின் பயணத்தின் இறுதியில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் அவரைச் சந்திப்பதற்கு கூட்டமைப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியான போது 2009ம் ஆண்டு ஐநா பொதுச் செயலர் பான் கீ மூனுக்காக கட்டுநாயக்க விமானநிலையத்தில் கூட்டமைப்பினர் காத்திருந்த சம்பவம் தான் பலருக்கும் நினைவில் வந்திருக்கும்.

ஆனால் பான் கீ மூன் கூட்டமைப்பையும் தமிழ் மக்களையும் அப்போது ஏமாற்றியது போல மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அவரைச் சந்திக்க விடாமல் சாதுரியமாகத் தடுத்து விட்டது போல இம்முறை எந்த நிகழ்வும் இடம்பெறவில்லை.

திட்டமிட்டது போலவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார். குறுகிய நேரச் சந்திப்புக்குப் பின்னர் அவர் இந்தியன் எயார்லைன்ஸ் விமானத்தில் புற்ப்பட்டுச் சென்றார்.

ஒருவேளை இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர்களை நம்பி இலங்கை அரசாங்கத்தின் நிகழ்சி நிரலுக்குட்பட்டு இந்தியப் பிரதமர் பயணத்தை மேற்கொண்டிருந்தால் 2009ம் ஆண்டு பான் கீ மூனை சந்திக்கக் காத்திருந்து ஏமாந்தது போன்ற அனுபவம் கூட்டமைப்புக்கு மீண்டும் கிடைத்திருக்கலாம்.

அஸ்கிரியவில் ஒரு ஹெலிகொப்டர் பழுதாகிப் போக இன்னொன்றுக்காக காத்திருந்து விமானத்துக்கு நேர தாமதமாகி விட்டது என்று இந்தியப் பிரதமரை அவசர அவசரமாக ரணில் விக்ரமசிங்க வழியனுப்பி வைத்திருப்பார்.

ஆனால் இந்தியப் பிரதமரின் நிகழ்ச்சி நிரல் இந்திய அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருந்ததும், அவரது பயண ஒழுங்குகள் இந்திய அதிகாரிகளாலேயே மேற்கொள்ளப்பட்டதும் அத்தகைய சூழ்நிலைகளுக்கு இடமளிக்கவில்லை.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் அமெரிக்க விமானங்கள் வருகின்றன. அமெரிக்க ஹெலிகொப்டர்களும் இலங்கை நிலப்பரப்புக்கு மேலாகப் பறக்கின்றன.

ஆனாலும் இந்தியப் பிரதமரின் வருகை மற்றும் அவரது ஹெலிகொப்டர்கள் தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டளவுக்கு அவை ஒன்றும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை.

Comments