முள்ளிவாய்க்கால் பாடம் கற்க மறுக்கும் தமிழர் தரப்பு

Report Print Habil in கட்டுரை

இலங்கையில் தமிழ் மக்கள் மிகப் பெரிய இனஅழிப்பைச் சந்தித்து எட்டு ஆண்டுகள் முடிந்திருக்கின்றன.

2009 மே 18ம் திகதி முடிவுக்கு வந்த போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஈழத்தமிழர்கள் எதிர்கொண்ட இந்த மாபெரும் படுகொலைகளை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்றிருக்கின்றது.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் காலடி வைக்கக் கூட முடியாதளவுக்கு இறுக்கமான பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்தன.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், சில கெடுபிடிகள், தடைகள், தடங்கல்களுடன் வடக்கு மாகாணசபையினால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

முன்னெப்போதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்றிராத இரா.சம்பந்தன், சுமந்திரன் உள்ளிட்டோரும் இம்முறை பங்கேற்றிருந்தனர்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள், இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதகுருமாருடன், பௌத்த குருமார் சிலரும் பங்கேற்றமை முக்கியமானது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் பௌத்த குருமாரும் பங்கேற்கின்ற அளவுக்கு நிலைமைகளில் மாற்றங்கள் இடம்பெற்றிருந்தாலும், ஒரே தலைமையின் கீழ், ஒரே நோக்கிற்காக செயற்பட்டவர்கள், போராடியவர்களான தமிழ்த் தேசிய அரசியல் சக்திகள் இந்த நிகழ்வில் ஒன்றிணையத் தவறியமை துரதிஷ்டமான விடயம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரசியல் பேதங்கள், அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது. அதில் பங்கேற்கின்ற உரிமையும், பங்கேற்க வேண்டிய கடப்பாடும் அனைவருக்கும் உள்ளது. யாரையும் இதில் பங்கேற்கக் கூடாது என்று கூறும் உரிமை யாருக்கும் இல்லை. பங்கேற்காமல் விலகி நிற்பதை நியாயப்படுத்துவதும் தார்மிகமானது அல்ல.

போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரமாயிரம் தமிழர்கள் கொன்றழிக்கப்பட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை. அதனால் தான், இந்த விவகாரம் ஜெனீவா வரை சென்றிருக்கிறது.

ஜெனீவா வரை சென்றிருக்கின்ற இந்த விவகாரத்தை உண்மையைக் கண்டறிந்து, நீதியை வழங்கும் நிலைக்குக் கொண்டு செல்வதற்கு தமிழர் தரப்பின் ஒற்றுமை முக்கியமானது.

தமிழர் தரப்பு அரசியல் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து நின்று நிகழ்வுகளை நடத்தியும் விமர்சித்தும் கொண்டிருந்தால், நீதிக்காகப் போராடும் தமிழ் மக்களின் குரல் உரியவாறு சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படாது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாணசபை ஒழுங்கு செய்கிறது. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாணசபைக்கு இந்த நிகழ்வை ஒழுங்கமைக்கும் உரிமையும் இருக்கிறது.

வடக்கு மாகாணசபை ஒழுங்கமைத்த ஒரே காரணத்தைக் காட்டிக் கொண்டு இதிலிருந்து விலகி நிற்பதும், வேறுபல அரசியல் காரணங்களுக்காக தனித்தனி நிகழ்வுகளை நடத்தி, தமிழரின் பலத்தை வெளிப்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்துவதும், தமிழர் தரப்பிலுள்ள மிகப்பெரிய பலவீனம்.

முள்ளிவாய்க்காலில் இன்னும் அதிகமான மக்களை நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்க வைப்பதற்கு வடக்கு மாகாணசபை முயற்சித்திருக்கவில்லை. அத்தகைய ஒழுங்குகளை வரும் காலத்தில் செய்வதற்கு எந்தளவுக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற கேள்வி இருக்கிறது.

அரசியல் நலன்களுக்கு அப்பால் பொதுவான ஓர் இடத்தில் அனைவரும் அஞ்சலிசெலுத்துகின்ற வகையில் இந்த நிகழ்வை ஒழுங்கமைப்பதற்கான கட்டமைப்பு உருவாக்கப்படுவது அவசியம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் என்பது அரசியல் கருத்துகளுக்காக மோதிக்கொள்ளும் களமல்ல என்பதை தமிழர் தரப்பு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை இம்முறை நினைவேந்தல் நிகழ்வில் நடந்தேறிய விரும்பத்தகாத சம்பவங்கள் உணர்த்தியிருக்கின்றன.

ஒரே நோக்கிற்காக பல நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதை விடுத்து, ஒரேயிடத்தில் அனைவரையும் ஒன்று திரட்டுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்பதையும் உணர முடிகிறது.

எல்லோருடைய நோக்கமும் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூருவது மட்டும் தான் என்றால், எதற்காக பிரிந்து நின்று நினைவேந்தல்களை நடத்த வேண்டும் என்ற கேள்வியில் நியாயங்கள் இருக்கின்றன.

தமிழர் தரப்பில் ஒற்றுமைக் குறைபாடு இருப்பது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. ஆயுதப் போராட்ட காலத்தில், முரண்பாடான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தவர்கள், செயற்பட்டவர்கள் கூட பொது இலட்சியத்துக்காக பின்னர் ஒன்றிணையத் தவறவில்லை.

ஆயுதப் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னர், தமிழரின் விடுதலை, அரசியல் உரிமைகள், படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் போன்ற பொதுநோக்கிற்காக ஒன்றிணைய மறுக்கும் போக்கு நீடித்திருப்பது, எட்டு ஆண்டுகளுக்கு முந்திய முள்ளிவாய்க்கால் பேரவலங்களுக்கு இணையானது.தமிழர் தரப்பில் காணப்பட்டு வந்த பிளவுகளும், முரண்பாடுகளும் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களுக்கே சாதகமாக மாறி வந்திருக்கிறது.

இப்போதும் கூட, தமிழர் தரப்பில் பிரிந்து நின்று செயற்படும் போக்கைப் பயன்படுத்திக் கொள்ளப்போவதும், சிங்களப் பேரினவாத சக்திகள் தான்.சிங்களப் பேரினவாதம், தமிழரை ஒடுக்குதல், தமிழரின் உரிமைகளை நசுக்குதல் என்ற பொது இலட்சியத்தில் கட்சி, அமைப்பு ரீதியான வேறுபாடுகளை மறந்தே எப்போதும் செயற்பட்டு வந்திருக்கிறது.

ஆனால், தமிழர் தரப்பில் அத்தகைய நிலை ஒருபோதும் இருந்ததில்லை. இனிமேலாவது கற்றுக் கொண்ட பாடங்களில் இருந்து புதிய அணுகுமுறைகளை நோக்கிச் செல்வதற்கு தமிழர் தரப்புத் தயாராக வேண்டும்.

ஏனென்றால், ஒவ்வொரு ஆண்டும் மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் சுடர் ஏற்றி விட்டுச் செல்வது மாத்திரம் தமிழர்களின் கடமையாக இருக்க முடியாது.

முள்ளிவாய்க்கால் பேரழிவுகளுக்கான நீதியைப் பெறுவதும், இதுபோன்ற அழிவுகள் இனிமேல் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவம் அவசியம்.போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற கொடூரங்களுக்கும் குற்றங்களுக்கும் நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் இன்னமும் வெற்றி பெறவில்லை.

சர்வதேச சமூகம் காட்டுகின்ற நெகிழ்வுப் போக்கினால், முள்ளிவாய்க்கால் பேரவலங்களுக்கு நீதியை வழங்கும் செயற்பாட்டில் இருந்து இலங்கை அரசாங்கம் தப்பித்துக் கொண்டு வருகிறது.

இந்த நிலையை மாற்றி, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக செயற்படுவதும் கூட முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தோருக்காக செலுத்தப்படும் அஞ்சலி தான்.

அத்தகைய பொதுநோக்கில் தமிழர்கள் ஒன்றுபடத் தயாரில்லாமல் இருப்பதும் துரதிஷ்டமே.போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளாகியும் தமிழருக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்படாத நிலை தொடர்வதும், அழிவுகளுக்கு நீதி வழங்கப்படாத நிலை தொடர்வதும், முள்ளிவாய்க்காலில் பட்ட காயங்களை இன்னமும் ஆறாத நிலையில் தொடரச் செய்கிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவுகளுக்கு நீதியை வழங்குவதற்கான தமிழரின் முயற்சிகள் ஒரு புறமிருக்க, சிங்கள மக்களின் மனங்களில் மாற்றங்கள் நிகழ வேண்டியதும் முக்கியமானது.

முள்ளிவாய்க்காலில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற உண்மை சிங்கள மக்களாலும் உணரப்பட வேண்டும். ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சில பௌத்த பிக்குகளாயினும் பங்கேற்றதை வரவேற்க வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் அரசியலிலும், சமூகத்திலும் பௌத்த பிக்குகளின் செல்வாக்கு அதிகம். அவர்களில் பலரே அழிவுகளுக்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

ஆனாலும், மாறுபட்ட சிந்தனையுடைய பெளத்த பிக்குகளும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

அத்தகைய, உண்மையை உணர்ந்து, தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதை சிங்கள மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு மிகக் குறைந்தளவிலான பிக்குகள் முன்வந்தாலும் கூட, அது ஆறுதல் அளிக்கக் கூடியது.

இதுவரையான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள், எத்தகையதாக இடம்பெற்றிருந்தாலும் இனிவரப் போகும் காலங்களிலாவது தவறுகளைத் திருத்திக் கொண்டு, தமிழ் மக்களின் நலன்கள் மற்றும் ஒற்றுமைக்கு முன்னுரிமை கொடுப்பதாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செய்யும் தரப்பினராகட்டும், தம்மை நடுநிலையாளர்களாக காட்டிக் கொள்ளும் தரப்பினராகட்டும், அமைப்பு ரீதியாகச் செயற்படுவோராகட்டும், இந்தப் பொது நோக்கிற்காக- ஒரே ஒரு நாளில் மாத்திரம் ஒன்றாக இணைய உறுதி பூண வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் கொல்லப் பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு இதைவிட வலுவான வழியொன்று தமிழர் தரப்பிடம் இருக்கும் எனத் தோன்றவில்லை.

Comments