கனவுகளுக்கு வைக்கப்பட்ட கொள்ளி!! ஆரம்பமான அபாயத்தால் ஆபத்தில் இலங்கை!

Report Print Mawali Analan in கட்டுரை

தமிழர் பிரச்சினை, உரிமைக் கோரல் ஆயுதப் போராட்டமாக மாறியதற்கும், மாற்றியதற்கும் பதவியில் இருந்த இலங்கைத் தலைவர்கள் பிரதான காரணம் என்பதும் தெளிவான உண்மை.

அத்தோடு ஓர் அடக்குமுறை கலந்த இனவாதமும் இலங்கையில் பாரிய அளவு இழப்பினை ஏற்படுத்தியிருந்தது என்பதனை நாம் கடந்து வந்த பாதை தெளிவாக உணர்த்துகின்றது.

ஆனால் இப்போது அந்த இனவாதம் முற்று பெற்று விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, மீண்டும் இனவாதம் என்ற அபாயம் ஆரம்பித்து விட்டது அதனால் இலங்கை ஆபத்தில் உள்ளது என்பதே இப்போதைய நிலை.

இந்த இனவாதம் என்ற பிரச்சினையின் காரணமாக 30 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் ஏற்பட்ட மரணங்களும், கடத்தல்களும், துயரங்களும் மிக அதிகம்.

அது மட்டுமல்ல 30 வருடங்கள் ஏற்பட்ட இழப்புகளையும் தாண்டி, தமிழ் மக்களின் கனவுகளிலும் மண்ணை வாரிக் கொட்டி, உயிருடன் கனவுகளுக்கும் சேர்த்து கொள்ளி வைத்தது யுத்தம்.

அந்த ரணங்கள் இன்றும் மனங்களில் புதைந்திருக்க, உயிரற்றும் உயிருடனும் புதைக்கப்பட்ட தம் உறவுகளுக்கு நினைவுகூரும் இப்போதைய கதறல்கள் அப்போது முள்ளிவாய்க்கால் மற்றும் இலங்கை யுத்தம் தந்த பேரவலத்தை மீண்டும் கண் முன் காட்டியவாறே நாட்கள் நகர்கின்றன.

சுடுகாட்டில் வாழ்வும், பிணங்கள் நடுவே உணவையும், அங்கேயே பசியினால் வந்த மயக்கத்தையும் ஒரு சேர கொடுத்து, பதுங்கு குழியே தஞ்சம் என அழவும் சக்தியற்ற நிலையைத் தந்த கொடூர யுத்தமது.

பக்கத்தில் இருந்தவனையும் அடுத்த கணம் பிணமாக பார்க்க வைத்த கொடூரத்தை மறக்குமா நெஞ்சம் இன்றும். பிணமான தாய் உயிருடன் இருப்பதாக நினைத்து அவள் தன்னை காப்பாற்றுவாள் என அழுத மழலைகளின் சாபத்திற்கு பதில் கூறுபவர் யார்?

இந்த அவலங்களுக்கு பதில் கூறுகின்றவர்களைத் தேடுவதனை விடவும், இவ்வாறான அவலங்கள் ஏற்பட காரணம் என்ன என்ற கேள்விக்கு சிறுபிள்ளையும் சட்டென்று கூறும் பதில் இனவாதம் என்று.

இலங்கையில் அரசியல் இலாபக் காய் நகர்த்தல்கள் காரணமாக, சில்லறைத்தனமானதோர் குறுகிய நோக்கம் உடைய இனவாதச் சிந்தனைகளே இலங்கையில் அழிவுகள் ஏற்படக் காரணம் என்பதும் உண்மை.

அதனால் ஏற்பட்ட இழப்புகள் வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது. அதேபோல் இன்றும் அந்த யுத்த வடுக்களால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளம். இந்த நிலை என்று மாறும் என்பதும் கூட இப்போதைக்கு கேள்விக் குறியே.

இவை ஒரு புறம் இருக்க இந்த உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக இலங்கை 200 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்டுள்ளதாக இந்திய முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனன் தனது புத்தகத்தின் ஊடாக தெரிவித்துள்ளார்.

எனினும் அதனை விடவும் அதிக செலவே செய்யப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இந்தத் தொகை அபிவிருத்திக்கு பயன்பட்டிருந்தால் இப்போதைய இலங்கை எப்படி இருந்திருக்கும்?

ஆனால் அத்தனை பணமும் அழிப்புக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டன என்பதன் விளைவை இப்போதைய இலங்கை காட்டிக்கொண்டு தான் இருக்கின்றது.

அத்தோடு இலங்கை என்பது ஒரு காலத்தில் ஆசிய பிராந்தியத்தில் அதி வேக வளர்ச்சியை அடைந்து கொண்ட நாடு என்பதும் மறுக்க முடியாதது.

அந்த வகையில் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி, மரணங்கள், இழப்புகள், பரிதவிப்புகள், கொடூரங்கள், சித்திரவதைகள், கடத்தல்கள் இன்னும் பல சொல்ல முடியாத மாறாக் காயத்தினை ஏற்படுத்தியது யுத்தம் என்றாலும் அதன் ஆரம்பப்புள்ளி இனவாதம் என்பதே. இதனை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

இப்படியான ஓர் பாதையில் இனவாதத்தில் இருந்தும், பேரினவாத கொள்கைகளில் இருந்தும் விடுபடக்கூடியதோர் வாய்ப்பினை 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுடனான ஆயுதப் போர் மௌனிப்பு என்பது வழங்கி வைத்தது.

எனினும் மகிந்தவின் அரசு அந்த வாய்ப்பை தவறவிட்டது. யுத்த மௌனிப்பின் பின்னரும் சிறுபான்மை மக்களுக்கு நீதியோ, அல்லது விடிவோ கிடைக்கப்பெற்றதாக (இன்றுவரை) பதிவாகவில்லை.

குறிப்பாக மகிந்தவின் ஆட்சி காலத்தில் தமிழர்கள் ஒடுக்கப்பட, முஸ்லிம்கள் மீதும் இனவாதம் கட்டவிழ்க்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகின. அவை சிறுபான்மை மக்களுக்கு பேரதிர்ச்சிகளைக் கொண்டு வந்து சேர்த்தன.

அதன் காரணமாக கடந்த காலத்தில் ஏற்படுத்திய அழிவு மீண்டும் ஏற்படக் கூடாது, யுத்தவடுக்களில் இருந்து நாடு மீண்டு வர வேண்டும் என்பதற்காகவும், பேரினவாதிகளுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும்..,

இலங்கை குடிகள் ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தினர். அந்த ஆட்சி மாற்றமானது இலங்கை பின்னோக்கி நகர்ந்து செல்வதனை தடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒட்டு மொத்த இலங்கையர்களுக்கும் ஏற்பட்டமையும் கூட அதிசயமான விடயமே.

காரணம் எத்தனையோ ஆட்சியாளர்கள் செய்யாததை சட்டென்று புதியதோர் ஆட்சி மாற்றியமைத்து விடுமா? உண்மையில் இலங்கைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்து விடுமா? என்பதும் சந்தேகத்திற்கு இடமானதே.

ஆனாலும் ஓர் குருட்டான் போக்கிலான நம்பிக்கையினால் மக்கள் மாற்றத்தினை ஏற்படுத்த ஆயத்தமாகினர்.

அதனால் மாறியது அரசு, அத்தோடு மாறிய அரசு வழங்கிய கவர்ச்சிகரமான மக்களை ஈர்க்கும் வகையிலான வாக்குறுதிகள் அனைத்தும் ஓர் எதிர்பார்ப்பு மிக்க நம்பிக்கையை ஏற்படுத்தியது.

சட்ட ஒழுங்கு நிலை நாட்டப்படும், கடந்தகால குற்றங்கள் அனைத்தும் தண்டிக்கப்படும், மக்கள் உரிமை சமத்துவத்தோடு இழந்த சுதந்திரம் மீட்டுக்கொடுக்கப்படும் அதாவது..,

இலங்கை வரலாறு காணாத மாற்றத்தினை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அமைந்த வாக்குறுதிகள் அள்ளி வீசியவாறு புது ஆட்சியமைக்கப்பட்டது. என்றாலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

அதுவும் சரிதான் இந்த இடத்தில் 30 வருடங்களுக்கு மேலானதோர் வரலாற்றை சட்டென்று மாற்றிவிட முடியுமா? என்ற கேள்வி எழுவதும் சாதாரணமே. ஏற்றுக் கொள்கின்றேன் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால் குற்றவாளிகளை இன்றும் சுதந்திரமாக அரசு செயற்பட வைக்கின்றது. தண்டிப்புக்கு பதிலாக அரசாங்கம் அவர்களுக்கு பாதுகாப்பினையே வழங்கிக் கொண்டு வருகின்றது. இனவாதிகளுக்கு மறைமுகமாக தூபமிட்டுக் கொண்டு வருகின்றது என்பதும் ஏற்றுக் கொண்டு தானே ஆக வேண்டும்.

அதன் காரணமாக ஒரு வகையில் இந்த இடத்தில் மறைமுக பேரினவாதம் இருக்கின்றது, தொடர்ந்து வருகின்றது என்பதனையும் ஏற்றுக் கொள்ள முடியும் தானே.

அதேபோன்று இனவாதம் என்ற பிரச்சினை ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தலைவிரித்தாடுகின்றது. இதனையாவது தடுத்து நிறுத்தியதா இப்போதைய அரசு.

தற்போது பொதுபலசேனாவும், பௌத்த அமைப்புகளும் இணைந்து பௌத்தம் காக்கின்றோம் என்ற பெயரில் பகிரங்க இனவாத நஞ்சை சிங்கள மக்களின் மனதில் விதைத்துக் கொண்டு வருகின்றார்கள்.

ஞானசார தேரர் நாடு முழுவதும் சென்று இனவாதப் பரப்புரையினை மேற்கொண்டு வருகின்றார். “தாக்கினால் திருப்பித்தாக்க வேண்டும், முஸ்லிம்கள் தீவிரவாதிகள், தமிழர் புலிகள் எனும் பயங்கரவாதிகள்”

என இனவாதத்தினை வெளிப்படையாக பரப்பிக் கொண்டுவரும் அவரை கேள்வி கேட்க துணிவில்லை. இருந்தபோதும் அண்மையில் அவர் இனவாதத்தினை பரப்புவதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது.,

அரசு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி அமைதியடைய வைத்தது உண்மையில் அந்த அமைதி படுத்தல் “இப்போது வேண்டாம், சில மாதங்கள் கழித்து வைத்துக்கொள்வோம் என்ற ஆலோசனையா என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

காரணம் யார் இந்த பொதுபல சேனா? அளுத்கம பேருவளை வன்முறைகளினால் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. ஞானசாரர் முஸ்லிம் மக்கள் மீது இனவெறிச் செயலையும், நாட்டின் அமைதியை கெடுத்து பதற்றத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சிறையில் இருக்க வேண்டியவர்.

ஆனால் அன்று நடந்த கலவரத்தின் விசாரிப்புகளின் தன்மை எவ்வாறு அமைந்துள்ளது? குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்பட்டார்களா? அல்லது தண்டிக்கப்பட்டார்களா? என்பதும் மறைக்கப்படும் விடயம் மட்டுமல்ல மாற்றம் பெற்றுப்போனதோர் விடயமே.

அவை அப்படியே இருக்கட்டும் அண்மைக்காலமாக இவர்கள் செய்து வரும் இனவாதச் செயற்பாடுகள், வேண்டும் என்றே நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி என்பது வெளிப்படையாக தெரிகின்றது.

ஆனாலும் அரசின் பார்வைக்கு அது குற்றமாகப் படுகின்றதா? இல்லையா என்பதும் தெரியவில்லை அத்தனை அமைதியாக இருக்கின்றது அரசு.

இப்போது பொதுபலசேனாவின் முக்கிய குற்றச்சாட்டு பௌத்தம் அழிக்கப்படுகின்றது என்பதே. ஆனால் ஒரு காலத்தில் விடுதலைப் புலிகள் அசைக்க முடியாத பலத்தில் இருந்த போதும்..,

அழிக்கப்படாத பௌத்தமா இன்று அழிக்கப்படுகின்றது? என்ற வாதமும் இதனால் ஏற்படுகின்றது. உண்மையில் பௌத்த மயமாக்கல் என்ற பெயரில் சிறுபான்மைகள் இப்போது அடக்கப்பட்டு கொண்டு வருகின்றன என்பதே நிதர்சனம்.

அதேபோன்று பௌத்தம் அழிக்கப்படுவதாக பிரச்சினைகள் ஆரம்பிக்கப்பட்டாலும், மறுபக்கம் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன. அந்த செயற்பாடுகளில் எந்த வித தடைகளும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

அப்படியாயின் அரசு இந்த இனவாத செயற்பாடுகளுக்கு ஆதரவு அளித்துக் கொண்டே வருகின்றது என்று சொல்ல முடியுமா? ஒரு பக்கம் அழிப்பு கதை, மறுபக்கம் புதுப்பிப்புகள் நன்று நல்லதோர் திட்டமே.

ஏனெனில் எதிர்ப்பு கேள்விகள் குறைவடையும் இதனால் ஒரு வகையில் இதுவும் மக்களை திசைமாற்றம் செய்யும் செயலாகவே நோக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் சிறுபான்மைகளை தவிர்த்து ஒட்டுமொத்தமாக பௌத்த மயமாக்கலை செய்து விடுவதற்காக பௌத்தம் அழிக்கப்படுகின்றது எனக் கூறப்பட்டு, அதன் ஊடாக இனவாதத்தையும் பரப்பும் செயற்பாடுகளே நடைபெற்று கொண்டு வருகின்றது என்பது தெளிவாகின்றது.

என்றாலும் அரசு மட்டும் இந்த விடயத்தை கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன் என்பது மிகப்பெரிய சந்தேகம். காரணம் இனவாதம் என்பதும் தீவிரவாதத்தினை தூண்டும் குற்றமே.

நடப்பில் உள்ள பயங்கரவாதச் தடைச்சட்டத்தில் இனவாதத்தினை செய்பவர்களை கைது செய்யலாம். ஆனால் அரசு வெறும் பேச்சுவார்த்தை என்ற பெயரில் பேரினவாதத்தையே ஆழ விதைத்துக் கொண்டு வருகின்றது.

அதேபோல ஒரு பக்கம் இனவாத சிக்கல் வெடிக்க, மறுபக்கம் மீண்டும் விடுதலைப்புலிகள் வந்து விட்டார்கள் என்ற குழப்பமும் ஏற்படுத்தப்படுகின்றது.

விடுதலைப்புலிகள் என்று வெளிப்படையாக கூறுவதும் மறைமுகமாக இனவாதத்தின் அடிப்படையே. அந்தவகையில் முஸ்லிம்கள் மீது வெளிப்படையாக இனவாதம் கக்கப்படும் அதே சமயம்.,

விடுதலைப்புலிகள் என்ற பதம் ஊடாக வடக்கு தமிழர்கள் மீது மறைமுகமான இனவாதம் வெளிப்படுத்த ஆயத்தங்களே நடைபெற்று கொண்டு வருகின்றன என்பதனையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும் இப்போது இலங்கை கண்ணாடிக் கூட்டுக்குள் இருந்தே கல் வீசிக் கொண்டு வருகின்றது. இதனால் ஏற்படும் பாதிப்பு எந்தவகையில் அமையும் என்பதோடு நினைத்தும் பார்க்க முடியாத ஆபத்தை ஏற்படுத்தும்.

ஒரு விடயம் காவியுடை தரித்து தகாத வார்த்தைகளினாலும், அழிப்பை, இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வரும் சில பிக்குகளின் செயற்பாடுகள் காரணமாக ஏற்படும் பாதிப்பு ஒட்டு மொத்த இலங்கைக்குமே.

புனித பௌத்தமும், கௌதம புத்தரும் போதித்தது இதனையா? என்பதனை இலங்கையின் கடந்த காலம் உணர்த்தியும் அப்போதைய, இப்போதைய ஆட்சியாளர்களும் ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள் என்பது வேதனையான விடயம்.

எவ்வாறாயிலும் அரசு கொடுத்த வாக்குறுதிகளை செயற்படுத்தாமல் விட்டாலும்., இப்போது ஏற்பட்டுள்ள இனவாதத்தினை முற்றாக அகற்றி விடாவிட்டால் அதன் விளைவு எப்படி அமையும் என்பது கடந்த காலம் ஏற்கனவே அறிவித்து விட்டது.

ஆனாலும் அமைதியாக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது, அரசும் இணைந்து பேரினவாதத்தை நிலை நாட்டப்பார்க்கின்றதா என்ற சந்தேகத்தை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தி விட்டது.

அது மட்டுமல்ல இந்த நிலை தொடருமானால் கடந்த காலத்தில் இலங்கை அழிவை சந்திக்க காரணமாக அமைந்த இனவாதம், எதிர்காலத்தில் இலங்கை அழிவை சந்திக்க காரணமாக அமைந்து போகும் என்பது சந்தேமற்ற உண்மை.

இப்போதைய சூழலில் அரசு இனவாதத்தினை முற்றாக தகர்த்துவிடுவது மக்கள் அரசு மீது வைத்த நம்பிக்கையை வலுப்படுத்தும், அரசு மீது உள்ள களங்கத்தை போக்கும்..,

ஆனால் அரசு அதனைச் செய்யுமா? என்பது மட்டும் நடக்கும் அல்லது நடக்கலாம், நடந்தாலும் நடக்கலாம் என்ற நிலையே தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது என்பது வெளிப்படை.

Comments