அனர்த்த மீட்பு! உதவியா, உபத்திரவமா?

Report Print Subathra in கட்டுரை

நவீன உலகின் பாதுகாப்புத் திட்டங்களில் அனர்த்த மீட்பும் ஒன்றாக மாறியிருக்கிறது. 20ம் நூற்றாண்டின் இறுதிவரையில் காணப்பட்ட பாதுகாப்பு ஒழுங்கு முறைகள் நேரடியான போர்களையும் அதற்கான பாதுகாப்புத் திட்டங்களையும் கொண்டிருந்தன.

ஆனால் 21ம் நூற்றாண்டின் பாதுகாப்பு ஒழுங்குமுறை வேறுபட்டது. நாடுகளுக்கிடையிலான போர்களும் உலகளாவிய போர்களும் மாத்திரமன்றி உள்நாட்டுப் போர்களும் கூட இப்போது மட்டுப்படுத்தப்பட்டு விட்டன.

குறிப்பிட்ட சில நாடுகளுக்கிடையில் ஆயுதப் போட்டிகள் இருந்தாலும் போர்களை மையப்படுத்திய பயிற்சிகளும் ஒத்தகைகளும் குறைந்திருக்கின்றன. முன்னர் பனிப்போர் காலத்தில் நேட்டோ, வார்ஸோ என்று அணி பிரிந்து மோதிக் கொண்டது போன்ற சூழல் இன்று இல்லை.

தற்போது அமெரிக்காவுக்குப் பின்னால் குறிப்பிட்ட நாடுகளும், சீனா, ரஷ்யா போன்றவற்றுக்குப் பின்னால் சில நாடுகளும் இருந்தாலும் அவை பனிப்போர் காலத்தைப் போன்ற பயிற்சிகள் ஒத்திகைகளில் ஈடுபடுவதில்லை.

கால மாற்றமும் பாதுகாப்பு முறை மாற்றமும், உலக ஒழுங்கில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்களும் இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்காக வல்லரசு நாடுகள் ஆயுதப் போட்டிகளில் இருந்து விலகிக் கொள்ளவோ தமது பாதுகாப்பு விரிவாக்கத் திட்டங்களை விலக்கிக் கொள்ளவோ தயாராக இல்லை.

நேரடியாக இல்லாவிடினும் மறைமுகமாகவேனும் பாதுகாப்பு ரீதியாக நாடுகளை தம்முடன் இணைத்து வைத்திருப்பதற்காக வல்லரசுகள் முயற்சிக்கின்றன. அதற்காக வெவ்வேறு அணுகுமுறைகளையும் திட்டங்களையும் செயற்படுத்துகின்றன.

அவ்வாறு செயற்படுத்தப்படுகின்ற திட்டங்களில் ஒன்றுதான், அனர்த்த மீட்பு மற்றும் உதவியாகும். எதிர்பாராத அனர்த்தங்கள் ஏற்படுகின்ற போது அதனை எதிர்கொள்வதற்கான தயார் படுத்தல்கள் பயிற்சிகளை மேற்கொள்வதும் உதவிகளை வழங்குவதும் இந்த பாதுகாப்பு முறையில் அடங்கியுள்ளது.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் இலங்கைக்கு வருகின்றன. இதன்போது இலங்கைக் கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறான பயிற்சிகளில் பிரதானமானது அனர்த்த மீட்பு மற்றும் உதவி பற்றியதாகும்.

போர்க்கால மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிக்கிய இலங்கைப் படைகளுக்கு பயிற்சிகளை அளிப்பதில் அமெரிக்கா பின்வாங்கியிருந்த காலகட்டத்தில் கூட இலங்கை இராணுவம் மற்றும் கடற்படைக்கான அனர்த்த மீட்பு மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பான பயிற்சிகளை அளித்துக் கொண்டுதான் இருந்தது.

இப்போது இது அனர்த்த மீட்பு உதவி ஒத்தகைகளாகவும் கூட்டுப் பயிற்சிகளாகவும் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடற்படை, அவுஸ்திரேலியா, ஜப்பான் போன்ற பல நாடுகள் இலங்கையுடன் இணைந்து அனர்த்த மீட்பு பயிற்சிகளில் ஈடுபடுகின்றன.

தற்போதைய பூகோள அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துகின்ற ஓர் அம்சமாக இந்த அனர்த்த மீட்பு பயிற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மாறியிருக்கின்றன.

இதற்குப் பின்னால் இராணுவ நோக்கங்களும் மூலோபாயங்களும் ஒழிந்திருப்பது வெளிப்படையாகத் தெரிவதில்லை.

2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதி நேபாளத்தைப் பெரும் பூகம்பம் ஒன்று தாக்கியது. பேரழிவுகளை ஏற்படுத்திய அந்தப் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ஹடவர்களுக்கு உதவ பல்வேறு நாடுகளும் உதவிகளையும் உதவிக் குழுக்களையும் அனுப்பி வைத்திருந்தன.

அப்போது அமெரிக்காவில் இருந்து அவசர அவசரமாக ஒரு மீட்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவினர் பைன்டர் என்ற கருவிகளை வைத்திருந்தனர். Finding Individuals for Disaster and Emergency Response (FINDER) என்பது தான் அதன் விரிவாக்கம்.

நாசாவும், அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் தணைக்களமும் இணைந்து உருவாக்கியிருந்த மிக நவீனமான கருவி அது. நிலத்துக்குக் கீழ் சிக்கி இருப்பவர்கள் அல்லது பதுங்கி இருப்பவர்களை அவர்களின் இதயத்துடிப்பை வைத்துக் கண்டறியும் தொழில்நுட்பம்.

20 அடி ஆழமுள்ள கொங்கிறீட் அல்லது 30 அடி ஆழத்தில் கட்டிடச் சிதைவுகளுக்குக் கீழ் இருப்பவர்களை அவர்களின் இதயத்துடிப்பை வைத்து அது காட்டிக் கொடுத்து விடும்.

இதனைப் பரிசோதித்துக் கொள்வதற்குத் தான் அமெரிக்காவின் சிறப்பு மீட்புக் குழு காத்மண்ட் வந்திருந்தது. அந்தக் குழுவினரால் 4பேர் இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு மீட்கப்பட்டிருந்தனர்.

கொங்கிறீட் பதுங்கு குழிக்குள் இருப்பவர்கள் பற்றி எங்கு வைத்தும் சோதனையிட முடியும். ஆனால் சிதைவுகளுக்குள் சிக்கி இருப்பவர்கள் தொடர்பாக இது போன்ற தருணங்களில் தான் கண்டறிய முடியும். பாரிய பதுங்கு குழிகள் மற்றும் அவற்றுக்குள் ஒழிந்திருப்பவ்களை கண்டறியும் தொழில்நுட்பத்தை மேலும் முன்னேற்றுவதற்காகவே நேபாளத்தில் அனர்த்த மீட்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது.

அதுபோலத் தான் அனர்த்த மீட்புப் பணிகளில் ஈடுபடுகின்ற நாடுகள் தமது இராணுவ நலன்களையும் புற்க்கணித்துச் செயற்படுவதில்லை.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் கடற்படையினருக்கு அனர்த்த மீட்பு மற்றும் உதவி தொடர்பாக அமெரிக்கா பெருமளவு பயிற்சிகளை அளித்துள்ளது. இதற்காக அமெரிக்க கடற்படை்யின் பாரிய போர்க் கப்பல்கள் கொழும்பு, திருகோணமலை, அம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கு வந்து சென்றன.

ஆனாலும் கடந்த மே 25ம் திகதி ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட அமெரிக்கா தனது படைகளை அனுப்பவில்லை. 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டன. அதுபோல இந்த முறை அமெரிக்கா களமிறங்கவில்லை.

ஏனென்றால் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நெருக்கமான உறவு இருக்கிறது. இராணுவ தேவைகளை வெளிப்படையாகவே நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

அதைவிட 2004ல் ஏற்பட்ட பாதிப்புகள் இதனை விட மோசமானது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இம்ஹமுறை தனது படைகளை அனுப்ப வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு ஏற்படவில்லை.

ஆனால் இலங்கையிடம் இருந்து உதவிக் கோரிக்கை விடுக்கப்பட்டவுடன் இந்தியா அடுத்த நாளே உதவிப் பொருட்கள் மற்றும் மீட்புக் குழுக்களுடன் கப்பல்களையும் அனுப்பத் தொடங்கியது.

ஐஎன்எஸ் கிர்ச், ஐஎன்எஸ் சர்துர், ஐஎன்எஸ் ஜலஷ்வா ஆகிய மூன்று கப்பல்களில் உதவிப் பொருட்களுடன் படகுகள், ஹெலிகளுடன் மீட்பு உதவிக் குழுக்களும் கொழும்பு வந்தன.

இந்தியக் கடற்படையின் ஹெலிகள் தாராளமாக மீட்புப் பணிகளுக்காக கொழும்பில் இருந்து களுத்துறை, காலி, மாத்தறை வரை பறந்து திரிந்தன. இந்தியக் கடற்படை மீட்புக் குழுக்கள், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. மருத்துவ் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

அவசர உதவிக்கான 1990 என்ற அம்புலன்ஸ் சேவையை இலங்கையில் இந்தியா ஆரம்பித்த போது அதனை இந்திய புலனாய்வு அமைப்பே கையாள்வதாகவும் தகவல்களைச் சேகரிக்கப் பயன்படுத்துவதாகவும் சிங்கள பௌத்த அமைப்புகளும் தலைவர்களும் குற்றச்சாட்டுகளை எழுப்பினார்கள்.

ஆனால் இந்தியா வழங்கிய அம்புலன்ஸ்கள் அனர்த்த மீட்பில் பயன்படுத்தப்பட்டன. இந்தியக் கடற்படையின் மீட்புக் குழுக்கள் தேவையான இடங்களுக்குச் சென்று வந்த போதெல்லாம் யாருமே வாய் திறக்கவில்லை. ஏனென்றால் இத்தகைய கட்டங்களில் இதுபோன்ற உதவிகளும் தேவை.

அதேவேளை, உதவி என்ற போர்வையில் வல்லரசு நாடுகள் தமது இராணுவ நலன்களைப் பெற்றுக் கொள்வது இயல்பான விடயம் தான்.

இந்தியா மாத்திரமன்றி பாகிஸ்தானும் பிஎன்எஸ் கல்பிகார் என்ற போர்க் கப்பலில் ஹெலிகள், படகுகளுடன் மீட்புக் குழுக்களையும் உதவிப் பொருட்களையும் அனுப்பியிருந்தது. பாகிஸ்தான் மீட்புக் குழுக்களும் தாராளமாகவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடமாடின.

அதுபோலவே சீனாவும் சாங் சுன், ஜிங் சோ, சாவோ ஹூ ஆகிய மூன்று போர்க் கப்பல்களில் உதவிகளை அனுப்பியிருந்தது. சீனக் கப்பல்களிலும் உதவிக் குழுக்களன் வந்தன. ஆனால் அவை தாமதமாகவே வந்து சேர்ந்தன.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர், முதல் முறையாக சீனப் போர்க் கப்பல்கள் கடந்த வாரமே கொழும்பு வந்திருந்தன.

கடந்த மே மாதம் நீர்மூழ்கி ஒன்றை கொழும்புதுறைமுகத்தில் தரித்து நிறுத்துவதற்கு சீனா அனுமதி கோரியிருந்தது. அதற்கு இலங்கை மறுப்பு வெளியிட்டிருந்தது.

இந்தக் கப்பல்கள் கொழும்புக்கான பயணத் திட்டத்தில் தான் இருந்தன என்றும் அனர்த்தம் ஏற்பட்டதால் தான் அதன் நோக்கம் மாற்றியமைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அனர்த்த மீட்பு மற்றும் உதவி என்பதை மையப்படுத்தியே இந்தக் கப்பல்களின் வருகை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

அனர்த்த மீட்பு விடயத்தில் இந்தியா பிராந்திய தலைமைத்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றது. தானும் இலங்கைக்கு படைகளை அனுப்பி உதவி மீட்பில் ஈடுபடும் அளவுக்கு நெருக்கத்துடன் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்ள பாகிஸ்தான் முயன்றது.

அதுபோலவே ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் அடைக்கப்பட்டிருந்த தனக்கான கதவுகளை திறந்து கொள்வதற்காக சீனா இந்த அனர்த்த மீட்பு விடயத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆக அனர்த்த மீட்பு என்பது வல்லாதிக்க நாடுகளின் இராணுவ நலன்களையும் இலக்கு வைத்த ஒன்றாகத் தான் மாறியிருக்கிறது.

ஒரு பக்கத்தில் அனர்த்தங்களில் சிக்கியுள்ள மக்களுக்கான உதவிகளை வழங்குவதில் கைகோர்த்திருப்பதான சகோதர உணர்வை இது வெளிப்படுத்தினாலும் அதற்குப் பின்னாலும் ஆபத்தான இராணுவ நோக்கங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை.