விக்னேஸ்வரனின் நடவடிக்கை முன்னுதாரணமாக அமையும்..

Report Print Thileepan Thileepan in கட்டுரை
advertisement

வடமாகாணசபை அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை மாகாணசபையின் நேற்றைய அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்டது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் விசாரணை அறிக்கையினை சபையில் சமர்ப்பித்துள்ளதுடன் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் ஆராயப்பட்டிருக்கின்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

வடமாகாணசபை அமைச்சர்கள் நால்வர் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதையடுத்து இவ்விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவொன்றை அமைத்திருந்தார்.

இந்தக் குழுவானது நான்கு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்தும் விசாரணை நடத்தி தனது அறிக்கையினை கடந்த சனிக்கிழமை முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கையளித்திருந்தது.

இந்த அறிக்கையில் வடமாகாண விவசாய கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ. ஐங்கரநேசன் மற்றும் கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா ஆகியோர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் பல நிரூபனமாகியுள்ளமையினால் அவர்களை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்றும் அவர்களது செயலாளர்களையும் விலக்க வேண்டுமென்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், போக்குவரத்து, மீன்பிடி அமைச்சர் பா. டெனீஸ்வரன் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்திய போதிலும் அக்குற்றச்சாட்டுக்கள் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

இதனால் இவர்கள் இருவரையும் இந்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கின்றோம் என்றும் விசாரணைக்குழு தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.

விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மீது அதிகார வரம்புமீறல், முறைகேடுகள், நிதி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. மரம் நடுகை, பாதீனிய ஒழிப்பு, நீர் ஆய்வு விடயங்களை சுற்றாடல் அமைச்சர் என்ற கோதாவில் இவர் முன்னெடுத்துள்ளார்.

சுற்றுச்சூழல் விடயம், 13 ஆவது திருத்த சட்டத்தின் அடிப்படையில் ஒருங்கிணைவு நிரலில் உள்ளது. இவற்றை மத்திய அரசுடன் சேர்ந்து திணைக்களம் உருவாக்கி மேற்கொண்டிருக்க வேண்டும்.

அப்படியல்லாமல் அமைச்சரை முன்னிலைப்படுத்தியே இவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன. இவரது அமைச்சுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பௌசர்களை உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்காமல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

விவசாயக் கிணறு புனரமைப்பு, புழுதியாற்று நீர்ப்பாசனத் திட்டங்களில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன. இதே போன்று இடமாற்றங்கள், பதவி நீக்கங்கள் தொடர்பிலும் இவர் தலையீடு செய்துள்ளார்.

இதனைவிட இவரது செயலாளர் நியமனத்திலும் தவறிழைக்கப்பட்டுள்ளது. இதனால் இவர் பதவி விலக வேண்டும் என்று விசாரணைக் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

இதேபோன்று கல்வி அமைச்சர் த. குருகுலராஜா அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். கல்வி அமைச்சின் செயலாளரின் அதிகாரத்தை அமைச்சர் தனது கையில் எடுத்துள்ளார். இடமாற்றங்களின் போது அரசியல் செல்வாக்கு செலுத்தப்பட்டுள்ளது.

செயலாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை முறையற்ற விதத்தில் அமைச்சர் பயன்படுத்த வகை செய்யும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இதில் செயலாளரும் கையெழுத்திட்டு உடந்தையாக இருந்துள்ளார்.

advertisement

கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை சிறுமியொருவர் பாடசாலை அதிபரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து குரல் எழுப்பிய பாடசாலை ஆசிரியரை கிளிநொச்சி வலையக் கல்விப் பணிப்பாளருடன் இணைந்து கல்வி அமைச்சர் இடமாற்றம் செய்துள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இது மோசமான மன்னிக்க முடியாத குற்றமாகும். எனவே கல்வி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் விசாரணைக் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

இந்த விசாரணை அறிக்கையே முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டு தற்போது மாகாண சபையிலும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள அமைச்சர்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவி விலக்குவாரா? அல்லது அமைச்சர்கள் தானாக முன் வந்து பதவி விலகுவார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

வடமாகாண சபை தேர்தல் 2014ஆம் ஆண்டு நடைபெற்றதை அடுத்து நான்கு அமைச்சர்களும் முதலமைச்சர் விக்னேஸ்வரனினால் நியமிக்கப்பட்டனர்.

கடந்த அரசாங்க காலத்தில் வடமாகாண சபை தேர்தல் நடத்தப்பட்ட போது எப்படியாவது மாகாணசபையில் தனது பலத்தை காண்பிக்க வேண்டுமென்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டது.

தமது பட்டியலில் ஈ.பி.டி.பி. யினருடன் தமது உறுப்பினர்களையும் சேர்த்து போட்டியிட வைத்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு இராணுவத்தினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதுடன் தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டனர்.

பெருந்தொகை செலவில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கிற்குப் படையெடுத்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர்.

இவ்வாறு அரசாங்கத்தின் பெரும் படையெடுப்புக்கு மத்தியில் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது போட்டியிட்டது.

இந்த தேர்தலில் வடக்கு மாகாண மக்கள் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டமைப்பினருக்கு பூரண ஆதரவினை வழங்கியிருந்தனர்.

இதனால் கூட்டமைப்பு பெரு வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தது. அன்றைய அரசாங்கத்திற்கு வடக்கு மக்களின் தீர்ப்பு பேரிடியாக அமைந்திருந்தது.

இவ்வாறு பெரும் போராட்டத்திற்கு மத்தியில் கைப்பற்றப்பட்ட வடமாகாண சபையில் அமைச்சர்கள், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்பட்டபோது அது தமிழ் மக்களின் மனங்களை பெரிதும் பாதித்திருந்தது.

இலட்சிய உணர்வோடு ஆட்சி அமைக்கப்பட்ட வடமாகாண சபையில் ஏனைய இடங்களைப் போன்று ஊழல் மோசடிகள் மலிந்து விட்டதோ என்ற எண்ணம் மக்கள் மனங்களில் ஆராத வடுவை ஏற்படுத்தியது.

நான்கு அமைச்சர்களுக்கும் எதிராக 16 உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஊழல் மோசடிக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர் மேலும் பல முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றன.

இதனையடுத்தே முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு மூன்று பேர் கொண்ட விசாரணை ஆணைக்குழுவை அமைத்திருந்தார்.

advertisement

இந்த ஆணைக்குழு உரிய விசாரணைகளை நடத்தி தற்போது அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இந்த அறிக்கை தொடர்பில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? இல்லையா என்ற வாதப் பிரதிவாதங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

குற்றம் நிரூபிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்களையும் முதலமைச்சர் பதவி விலக்க வேண்டும் என்ற மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராஜா, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, கட்சியின் செயலாளர் என். சிறிகாந்தா ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோன்று அமைச்சர்கள் பதவி விலகதேவையில்லை. அவர்கள் உரிய விளக்கத்தை அளிக்கலாம் என்று கூட்டமைப்பு எம்.பி. எஸ். சிறிதரன் தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறு பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இந்த விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பார் என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.

ஏனெனில் அமைச்சர்கள் மீது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போது அதனை விசாரிக்க விசாரணைக் குழுவை முதலமைச்சர் நியமித்துள்ளார்.

அந்த விசாரணைக்குழு தனது அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கியதும் அந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட நான்கு அமைச்சர்களுக்கு அவர் உடனடியாகவே அனுப்பியிருந்தார்.

குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் இந்த அறிக்கைகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அனுப்பியிருக்கிறார்.

அதனைவிட மாகாண சபையிலும் அதனை சமர்ப்பித்துள்ளார். உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக இருந்து ஆயிரக்கணக்கான வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கிய நீதியரசர் விக்னேஸ்வரன் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு விடயத்தில் அதேபோன்ற நடவடிக்கை எடுப்பார் என்றே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். அவரும் அதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுத்திருக்கின்றார்.

ஆனாலும் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் தன்னிலை விளக்கத்தை அளிப்பதற்கு கால அவகாசம் அளித்த பின்னரே உறுதியான முடிவினை முதலமைச்சர் எடுப்பார் என்று தெரிகின்றது.

வடமாகாணசபையில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக முதலமைச்சர் எடுக்கின்ற முடிவானது ஏனைய மாகாணசபைகள் உட்பட முழு நாட்டுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும் என்று நம்பலாம்.


You may like this video


advertisement