மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வீண் விரயமாக்கப்படும் அரச வளங்கள்

Report Print Kari in கட்டுரை

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஊழல்மிகு அரச நிறுவனங்களில் ஒன்றாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும் அண்மைக்காலமாக இடம்பிடிக்கத் தொடங்கியுள்ளது.

கடைநிலை ஊழியர்முதல் மேல் நிலை ஊழியர் வரை இவ் வைத்தியசாலையில் ஊழலி்ல் கோலோச்சி வருவதால்,யாரும் வீண் விரயமாகும் அரச வளங்கள் குறித்து கரிசனை கொள்வதில்லை.

கடந்த 2015 கார்த்திகை 13 ம் திகதி சுகாதார அமைச்சரால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நவீன மயப்படுத்தப்பட்ட பல வசதிகளை கொண்ட புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு திறந்து வைக்கப்பட்டது.

அங்கே அதி நவீன அதி தீவிர சிகிச்சைப்மிரிவு,அதி நவீன சத்நிர சிகிச்சைக்கூடம்,நோயாளர் விடுதிகள்,chemotherapy ( வேதியல் சேர்மானங்களை கொண்டு சிகிச்சையளிக்கும் முறை) சிகிச்சை பிரிவு,Radiotherapy (கதிரியக்க சிகிச்சை) பிரிவு, புற்றுநோயாளர்களுக்கான சால்சாலைகள் என பலபிரிவுகள் காணப்பட்டன.

எனினும் குறித்த புற்றுநோய் சிகிச்சை பிரிவு திறக்கப்பட்ட நாள்முதல் இன்று வரை பல சிகிச்சை மையங்கள் மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.

நோயாளருக்கான சிகிச்சை விடுதிகளும்,சால்சாலைகளும் தொடர்ந்து இயங்கினாலும்,அதி தீவிர சிகிச்சை பிரிவு, Radiotherapy பிரிவு என்பன இன்றுவரை இயங்கவில்லை.

அதிநவீன சத்திரசிகிச்சை கூடம் திறப்புவிழா நடைபெற்று ஒரு வருடங்களின் பின்பே இயங்கத் தொடங்கியது.அதாவது இவ்வருடம் தை மாதம் முதலே வாரத்தில் இரண்டு நாட்கள் என்ற அடிப்படையில் சத்திரசிகிச்சை கூடம் இயங்குகிறது. மீதி நாட்களில் குறித்த சத்திரசிகிச்சை கூடம் மூடியே கிடக்கிறது.

"கிடைத்த வரம் ஒன்றை பூசாரிகள் தடுப்பது போல" மட்டக்களப்பின் புற்றுநோய் தாக்கத்துக்குள்ளான நோயாளர்களுக்கு சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்தி கொள்ள கிடைத்த வரம் ஒன்றை வாரத்தில் இரு நாட்கள் என மட்டுப்படுத்தி வைத்தியசாலை நிருவாகம் தடுத்து வருகிறது.

அதே போன்று 10 கட்டில்களை கொண்டு ஒரே நேரத்தில் 10 நோயாளர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அதி தீவிர சிகிச்சையை வழங்கக்கூடிய புற்றுநோய்க்கான அதிதீவிர சிகிச்சை பிரிவை இன்றுவரை வைத்தியசாலை நிருவாகம் பூட்டி வைத்துள்ளது.

இதற்கான காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஆளணி பற்றாக்குறை என்ற காரணத்தை நிருவாகம் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறது.

புற்று நோய் என்பது மிகப்பாரியளவில் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. இந்நோ யாளர்களுக்கு அதிதீவிர சிகிச்சை அவ்வப்போது தேவைப்படலாம்.

உதாரணமாக பாரிய புற்று நோய் சத்திர சிகிச்சையின் பின்னரும்,chemotherapy எனும் சிகிச்சை முறையின் பின்னரும் பல சந்தர்ப்பங்களில் நோயாளர்களுக்கு அதி தீவிர பராமரிப்பு தேவைப்படக்கூடும்.

ஆனால் அந்த தீவிர சிகிச்சையை வழங்க அமைக்கப்பட்ட அலகை மூடி பிரதான வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவையே இச்சந்தர்ப்பங்களில் நிருவாகம் பயன்படுத்தி வருகிறது.

இந்நிலைமை நோயாளர்களுக்கு பாரிய அசௌகரியத்தை ஏற்படுத்துவதுடன் உயிர் உத்தரவாதமற்ற தன்மையையும் தோற்றுவிக்கிறது. காரணம் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் இருந்து பிரதான வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவுக்கு நோயாளர்கள் ஆபத்தான நிலையில் நோயாளர் காவு வண்டியிலே அனுப்பப்படுகின்றனர்.

இந்த மாற்றீட்டு நிகழ்வுகளிலும் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன.ஆக அழகிய அதிதீவிர சிகிச்சை கூடம் நோயாளர் அருகில் இருக்க, இன்னொரு இடத்திற்கு அவர்களை மாற்றும் நிலைமையானது " கனி இருக்க காய் கவர்தலுக்கு ஒப்பானது".

அதே போன்று Radiotherapy எனப்படும் புற்று நோய்க்கான சிகிச்சை முறை ஒன்றை மட்டக்களப்பிலே மேற்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சை பிரிவிலே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கான விசேட கட்டடமும் நிருமானிக்கப்பட்டுவிட்டது.குறித்த சிகிச்சையை வழங்கும் linear accelerator (model Electa dual energy) எனும் உபகரணமும் கடந்த வருடம் வைகாசி தாதமளவில் மட்டக்களப்பை வந்தடைந்து விட்டது.

குறித்த உபகரணத்தை இயக்கும் விற்பன்னர்களும் மட்டக்களப்புக்கு சுகாதார அமைச்சால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.ஆனால் உபகரணம் மட்டும் இன்னும் உரிய இடத்தில் பொருத்தப்படவில்லை.

குறித்த உபகரணம் அல்லது இயந்திரம் 70.7 மில்லியன் பெறுமதியானது.ஐந்து வருடங்கள் உற்பத்தி நிறுவனத்தின் உத்தரவாதத்தை கொண்டது. ஆயினும் இயங்கா நிலையில் அதன் உத்தரவாத காலம் வெற்றிகரமாக ஒருவருடத்தை தாண்டிவிட்டது.

அத்துடன் குறித்த இயந்திரத்தை உரிய இடத்தில் பொருத்தி அதிலிருந்து நோயாளருக்கான சிகிச்சையை பெற்றுக்கொடுக்க குறைந்தது ஆறு மாதங்களாவது தேவைப்படலாம்.

ஏனெனில் குறித்த உபகரணம் பாரிய கதிரியக்க சக்திவாய்ந்தது.அதன் தொழிற்பாட்டை நன்கு உறுதிப்படுத்திய பின்னரே நோயாளரில் பயன்படுத்த முடியும்.

இவையெல்லாம் நன்கு தெரிந்திருந்தும் வைத்தியசாலை நிருவாகம் இவற்றில் அக்கறை கொள்ளவில்லை.பல கோடி ரூபாய்கள் பெறுமதியான அரச வளங்கள் மக்களை சென்றடையாது தேங்கி கிடப்பதையிட்டு கடைநிலை ஊழியரோ அல்லது மேல்நிலை ஊழியரோ கவலை கொள்ளவில்லை.

இவற்றை உன்னிப்பாக அவதானிக்கும் போது, இத்தனை தேக்கங்களுக்கும் அரச வள வீண் விரயத்துக்கும் ஊழல்தான் பிரதான காரணமாக இருக்கலாம் எனும் பலமான சந்தேகம் தோன்றுகிறது.

தரமற்ற கட்டட நிர்மானிப்பு,தரமற்ற உபகரண கொள்வனவு போன்றவற்றை மறைக்க அவற்றை பயன்படா நிலையில் வைத்திருந்துவிட்டு அவற்றின் உத்தரவாத காலம் முடிந்த பின்னர் அரச நிர்வாக பிரமாணங்களுக்கமைய அவற்றை " பயன்படுத்த முடியாதவை"( condemned) என கூறி வீசுதல் இவ்களின் நோக்காக இருக்கலாம் என்ற சந்தேகம் தோன்றுகிறது.

இதற்கான பலமான ஆதாரமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதான சத்திர சிகிச்சை கூடத்தில் பொருத்தப்பட்ட central air condition system ( மத்திய குளிரூட்டல் அமைப்பு முறை) இனை கூற முடியும்.

இற்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் பிரதான சத்திர சிகிச்சை கூடத்திற்கு 15 மில்லியனுக்கும் மேற்பட்ட செலவில் குறித்த central air condition system பொருத்தப்பட்டது

.அதற்கான கொடுப்பனவுகள்,நிறுத்தி வைக்கப்படும் பணத்தொகைகள் என சகலதும் வழங்கப்பட்டது.

ஆயினும் ஒரு மாதமேனும் குறித்த air condition system சரியாக இயங்கவில்லை.உத்தியோகபூர்வ முறைப்பாடுகள் ஏட்டோடு நின்றுவிட,குளிரூட்டலுக்கான தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டனவேயன்றி குறித்த system தொடர்பில் யாரும் கரிசனை கொள்ளவில்லை.இன்று அந்த system கைவிடப்படும் சந்தர்ப்பத்தை(condemned) எதிர்பார்த்திருக்கிறது.

ஆகவே வைத்தியசாலையின் கடைநிலை முதல் மேல் நிலை வரையான ஊழியர்களே, வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்களே, மட்டக்களப்பின் அரசியல்வாதிகளே, மட்டக்களப்பின் திணைக்களங்கள்சார் தலைவர்களே, மட்டக்களப்பின் புத்திஜீவிகளே, மட்டக்களப்பின் சமயத்தலைவர்களே,

பாமர மக்களின் உயிர்களோடு விளையாட்டு நடாத்தும் இந்த வைத்தியசாலையிலும் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.

ஊழல்வாதிகளுக்கெதிராக போராட தொடங்குங்கள். உங்களதும் உங்கள் எதிர்கால சமூகத்தினதும் நோயற்ற வாழ்வுக்கு இன்றே விழித்தெழுங்கள்.