சீனாவே சவாலான களம்!

Report Print Hariharan in கட்டுரை
advertisement

புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் ரவி கருணாநாயக்க தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு கடந்த வாரம் மேற்கொண்டிருந்தார். அவரது இந்தப் பயணம் இராஜதந்திர ரீதியாக ஆச்சரியத்துக்குரிய விடயம்.

ஏனென்றால் அண்மைக்காலமாக இலங்கை அரசாங்கங்களினால் எழுதப்படாத ஒரு விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் ஜனாதிபதியாக, பிரதமராக, வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்பவர் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்வதே அந்த மரபு.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இந்த மரபை மகிந்த ராஜபக்ச மாத்திரம் அண்மைக்காலத்தில் ஒருமுறை மீறியிருந்தார். அவர் இரண்டாவது முறை ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் சீனாவுக்கே தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

மற்றைய பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்தியாவுக்குச் சென்று இந்திய அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதும் இந்திய அரசின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதும் ஒரு வழக்கமாகவே இருந்து வந்திருக்கிறது.

பிராந்திய வல்லரசான இந்தியாவுடனான உறவுகள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவின் நிலைப்பாடுகள், விருப்பங்கள் போன்றவற்றை இலங்கை போன்ற அண்டை நாடுகளின் ஆட்சிப் பொறுப்புக்கு வருபவர்கள் அறிந்திருக்க வேண்டும். அதைவிட இந்தியாவுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதும் அவசியம்.

அந்த வகையில் வெளிவிவகார அமைச்சராக கடந்த 22ம் திகதி நியமிக்கப்பட்ட ரவி கருணாநாயக்க கடந்த 06ம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். குறுகிய கால முன்னேற்பாடுகளுடன் அமைந்திருந்தது இந்தப் பயணம்.

ரவி கருணாநாயக்கவைப் பொறுத்தவரையில் இதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சு சார்ந்த எந்தப் பதவிகளையும் வகித்தவரல்ல. திடீரென அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டது ஆச்சரியமான விடயம் தான்.

அமைச்சரவை மாற்றத்தின் போது ரவி கருணாநாயக்கவிடமிருந்து நிதியமைச்சர் பதவியை மீளப்பெறும் முடிவு ஜனாதிபதியினால் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அந்தப் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கவில்லை.

அப்போது எதிர்காலத் தலைவராக வருவதற்கு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு தொடர்புகளை ஏற்படுத்தி உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ரவி கருணாநாயக்கவுக்கு ஆலோசனை கூறியிருந்தார் என்றொரு தகவலும் உள்ளது.

ரவி கருணாநாயக்கவை பொறுத்தவரையில் வெளிவிவகார அமைச்சு அவருக்கு பொருத்தமான ஒன்றா என்பது கேள்விக்குரிய விடயம் தான். வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர நிதியமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற பின்னர் தனக்கு பெரிய சப்பாத்துகள் இரண்டு தரப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். ஆனால் ரவி கருணாநாயக்க விடமிருந்து அத்தகைய கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.

வெளிவிவகார அமைச்சைக் கையாளுவது ஒன்றும் அவ்வளவு இலகுவான விடயம் என்று கூற முடியாது. தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த காலத்தில் வெளிவிவகார அமைச்சே மிகப்பெரிய நெருக்கடியான அமைச்சாக இருந்தது. அந்தளவுக்கு வெளிநாட்டு அழுத்தங்கள் இருந்தன. வெளிநாடுகளுடனான உறவுகள் குழப்பமடைந்திருந்தன.

அந்த நெருக்கடியான சூழல் இப்போது மாறிவிட்டாலும் ரவி கருணாநாயக்கவைப் போன்ற கத்துக்குட்டி வெளிவிவகார அமைச்சர்களுக்கு இது ஒன்றும் இலகுவான விவகாரமாக இருக்காது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொழும்புப் பயணம் இடம்பெற்று ஒரு மாதம் நிறைவடைவதற்குள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் புதுடில்லிப் பயணம் இடம்பெற்றிருக்கிறது.

எனவே புதிதாகப் பேசப்பட வேண்டிய விடயங்கள் என்று பெரிதாக எதுவும் இருந்திருக்காது. அதேவேளை இது ஒன்றும் சம்பிரதாய பூர்வமான சந்திப்பாக இருந்திருக்கும் என்றும் கருதுவதற்கில்லை.

advertisement

ஏனென்றால் இந்தியப் பிரதமருடனான சந்திப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

மேலும் சீனாவுடனான உறவுகள், மீனவர் விவகாரம், வர்த்தக உறவுகள், உடன்பாடுகள் உள்ளிட்ட பேசப்பட வேண்டிய பல விடயங்கள் இருந்தன. குறிப்பாக சீனா முன்னெடுக்கும் பாதை மற்றும் அணை திட்டத்தில் இலங்கையும் பங்கேற்கிறது. இந்தத் திட்டத்தின் தொடக்க மாநாடு அண்மையில் பீஜிங்கில் நடந்த போது இந்தியா அதனைப் புறக்கணித்திருந்தது. எனினும் இலங்கையின் சார்பில் ரணில் விக்ரமசிங்க அந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தார்.

முன்னதாக இந்தத் திட்டத்தில் இலங்கையும் இணைந்து கொள்வதை இந்தியா எதிர்த்தது. புதுடில்லிக்கான பயணத்தை முடித்துக் கொண்டு திரும்புவதற்கு முன்னதாக அங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனைக் கூறியிருந்தார்.

ஆனாலும் இப்போது இந்தியா அந்த நிலைப்பாட்டில் இல்லை. சீனாவின் பாதை மற்றும் அணைத் திட்டத்தில் இலங்கை இணைந்து கொண்டமை குறித்து இந்திய அரசாங்கம் எந்த கரிசனையையும் வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சீனாவின் இந்தத் திட்டத்தை இந்தியா தனக்கான அச்சுறுத்தலாகவே பார்த்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில்தான் இலங்கை போன்ற தனக்கு நெருக்கமான அண்டை நாடுகள் சீனாவுடன் கைகோர்ப்பதை இந்தியா விரும்பவில்லை.

வெளிவிவகார அமைச்சராக தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை புதுடில்லிக்கு மேற்கொண்டிருந்த ரவி கருணாநாயக்கவுக்கு இந்தப் பயணம் பெரியளவில் சவாலான ஒன்றாக இருந்திருக்க வாய்ப்பில்லை.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் நெருக்கமாக உள்ள நிலையில் அண்மைய அனர்த்தங்களின் போது இந்தியா தனது படைகளை உதவிப் பொருட்களுடன் அனுப்பி அதனை மேலும் இறுக்கமாக்கியிருந்தது.

இதுபோன்ற ஒரு சூழலில் ரவி கருணாநாயக்கவுக்கு புதுடில்லி களமொன்றும் கடினமானதாக இருந்திருக்காது.

வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் ரவி கருணாநாயக்கவை பொறுத்தவரையில் சவாலாக இருக்கப் போவது சீனாவாகவே இருக்கும்.

ஏனென்றால் நிதியமைச்சராக இருந்தபோது ரவி கருணாநாயக்கவுக்கும் சீனாவுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

2015ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட ரவி கருணாநாயக்க சீனாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இலங்கையில் சீனாவின் திட்டங்களால் இலங்கை கடனாளியாகி இருக்கிறது என்றும் சீனா கடன்களுக்கான வட்டியைக் குறைக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். ஆனால் சீனா அதற்கு இணங்க மறுத்துவிட்டது.

பீஜிங்கில் இருந்து நாடு திரும்பிய பின்னர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு சீனா அதிக வட்டிக்கு கடன் கொடுத்ததால் தான் இலங்கை பெரும் கடன்பொறியில் சிக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் சீனாவோ ஏனைய திட்டங்களில் கடைப்பிடிக்கப்படுவதைப் போலவே குறைந்த வட்டிக்கே கடன் கொடுத்ததாகவும் வட்டியைக் குறைக்க முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறியிருந்தது.

இந்தச் சூழலில் ரவி கருணாநாயக்கவின் கருத்தை கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கடுமையாக விமர்சித்திருந்தார். அமைச்சர் ஒருவரை வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர் இந்தளவுக்கு விமர்சிக்கும் உரிமை உள்ளதா என்று அப்போது கேள்விகள் எழுப்பப்பட்டன.

advertisement

ஆனாலும் ரவி கருணாநாயக்க அதிக வட்டிக்கே சீனா கடன் கொடுத்தது என்ற கருத்தை விலக்கிக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை. சீனாவும் தனது நிலைப்பாட்டில் இருந்து விலகுவதாக இல்லை.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தையும் அரசாங்கம் இடைநிறுத்தியிருந்த சூழலில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் அது அப்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. எனினும் அண்மையில் அந்தச் சிக்கலான நிலையை இரண்டு நாடுகளும் கடந்து வந்து விட்டன.

சீனாவுடன் முரண்பட்ட ரவி கருணாநாயக்க இப்போது வெளிவிவகார அமைச்ராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இந்தநிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை அவர் எவ்வாறு முன்னோக்கி நகர்த்தப் போகிறார் என்று எதிர்பார்ப்பு உள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இந்தியா சீனாவுடன் சமநிலை உறவுகளை பேணுகின்ற நிலைப்பாட்டில் உள்ளது. இதனை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க புதுடில்லியில் செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

சமநிலை உறவுகளைப் பேண வேண்டிய நிலையில் உள்ள வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஏற்கனவே சீனாவுடன் முரண்பட்டுக் கொண்டது சாதகமான விடயமாக இருக்காது.

அதேவேளை இந்தச் சூழலை இந்தியா எவ்வாறு பயன்படுத்திக் கொள்வதற்கு எதிர்பார்த்திருக்கிறது என்றும் தெரியவில்லை. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கொள்கையை இந்தியா பயன்படுத்திக் கொள்வதற்கும் முனையலாம்.

அது இந்தியாவுக்கு வெற்றியாக அமையுமானால் ஒரு வெளிவிவகார அமைச்சராக ரவி கருணாநாயக்க அந்த இடத்தில் தோல்வி காண நேரிடும்.

advertisement