நீதித்துறையின் அசமந்தப் போக்குகளால் மரணிக்கும் உயிர்கள் இன்னும் எத்தனையோ?

Report Print Reeron Reeron in கட்டுரை

இயற்கை அனர்த்தங்களும், ஆங்காங்கே சிறு துப்பாக்கி சூடுகளும், பாலியல் துஷ்பிரயோகங்களும் எமது நாட்டிலே இடம் பெற்றுக் கொண்டே இருக்கின்றன. தமிழ் மக்களது காணி மீட்பு, காணாமால் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற பல போராட்டங்களும், பட்டதாரிகளின் வேலை கோரிய போராட்டமும் 100 நாட்களை கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

பெண்கள் மீது, குறிப்பாக சிறுவர்கள் மீது, மேற்கொள்ளப்படும் பாலியல் வன்புணர்வு தொடர்பிலும், இதில் ஈடுபடும் குற்றவாளிகள் வெகு விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலுயுறுத்திய போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

திருகோணமலை, மல்லிகைத்தீவு, வெருவெளி பகுதியில் வைத்து கடந்த மாதம் இறுதிப் பகுதியில் சிறுமிகள் மூவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பகுதிகளில் உள்ளமாணவர்கள், பொது அமைப்புக்கள் போன்றனவும் இவ்வாறான ஆர்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல்வாதிகளும் இது தொடர்பில் பேசிக்கொண்டும் இருக்கின்றனர். இதுவரை சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், அடையாள அணிவகுப்பு நடாத்தப்பட்டும் குற்றவாளிகள் இனங்காணப்படவில்லை. விசாரணைகளும் தொடர்ச்சியாக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதாகவும் கூறிவருகின்றனர்.

நல்லாட்சி என்று கூறப்படுகின்ற மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு வருடங்களும் ஆறு மாதங்களையும் கடந்துள்ளது. இக்காலப் பகுதிக்குள் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்களும், கொலை செயற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.

குறிப்பாக 2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் 13 வயதுமாணவி, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனை கண்டித்து வடமாகாணம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வன்னி மன்னகுளம் பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டு மே புங்குடுதீவில் 17 வயதான வித்தியா 9 பேர் கொண்ட குழுவினரால், கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகாலை செய்யப்பட்டதாக கூறப்பட்டும், இதுவரை உண்மையான குற்றவாளிகள் இனங்காணப்பட்டு தண்டனை வழங்கப்படவில்லை.

இன்றுவரை வழக்கு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதனையும் கண்டித்து வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு போன்ற பல பகுதிகளிலும் ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

2015 செப்டெம்பர் மாதம் சேயா என்ற சிறுமி காணாமால் போய், மறுநாள் சடலமாக மீட்கப்பட்டார். 2016 மே மாதம் மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிகரம் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறி சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டார்.

2016 மார்ச் மாதம் நுவரெலியா, தெரிபெஹெ பிரதேசத்தில் தனது 3வயது குழந்தையை தந்தையொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார். 2017 மார்ச் மாதம் பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 16 வயதுடைய சிறுவனை மஸ்கெலியா பொலிஸார் கைதுசெய்தனர்.

2016 ஒக்டோபர் மாதம் நாத்தன்டிய பகுதியில் 10 ஆம் தர பாடசாலை மாணவி யொருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 15 வயது சிறுவனொருவனை பொலிஸார் கைது செய்தனர்.

2016 ஏப்ரல் மாதம் மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர் கடற்கரை பிரதேசத்திற்கு அழைத்து சென்று பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய மூவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்தனர்.

2016 ஒக்டோபர் மாதம் பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 17 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மிரிஹான பொலிஸார் கூறினர். அம்பாறை அட்டாளைச்சேனை பாலமுனையில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

நல்லாட்சி காலத்திலும், பல பாலியல் வன்புணர்வுகள் நாட்டில் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. இவ்வாறான விடயங்கள் கவலைதரும் விடயங்களாகவே அமைந்திருக்கின்றன.

பலர் இணைந்து கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபடுதல், பின் பச்சிளம் குழந்தைகளையும், சிறுமிகளையும் கொலை செய்தல் என்பன வேதனை தரும் விடயங்களாகவே அமைந்திருக்கின்றன. இதனால் பொதுவாக பெண்கள் வீட்டை விட்டு தனியாக செல்வதற்கு தயங்கும் நிலை, நாட்டில் எந்தப் பிரதேசங்களிலும் வேலை செய்வதற்கு அஞ்சும் நிலையென்பன ஏற்பட்டிருக்கின்றது.

யுத்தம் நிறைவுபெற்று, நல்லாட்சி நிலவுவதாக குறிப்பிட்டாலும், போக்குவரத்துக்களில் மற்றும் வீடுகளில், பொது இடங்களில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றமை நிறைவு பெற்றதாகவில்லை.

சிறுவர்கள் மீது 10732 துஸ்பிரயோக சம்பவங்கள் 2015ம் ஆண்டில் மாத்திரம் நாடு முழுவதும் பதிவாகியுள்ளது. குறித்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

இதன்படி 74 சிறுவர்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் பாரதூரமான விதத்தில் பதிவாகியுள்ளன. இவர்களுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற நிலையில் குறித்த 74 சந்தேக நபர்களும் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

என்ற கருத்தினை சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தமைக்கு அமைய நாட்டில் சிறுவர்கள் மீது பல்வேறான துஸ்பிரயோகங்கள் இடம்பெற்று வருகின்றது. என்பதனை காட்டுகின்றது.

பல்வேறான செயற்றிட்டங்கள் அரசாங்கத்தினாலும், அரசசார்பற்ற நிறுவனங்களினாலும் சிறுவர்களை மையமாக கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன.

நம் நாட்டில் மட்டுமில்லாது தொழில் வாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இலங்கை நாட்டைச் சேர்ந்த பெண்களும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.

2013 ஆம் ஆண்டில் மாத்திரம் 1650 பெண்கள் பாலியல் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

2013 ஆம் ஆண்டில் மாத்திரம் 39 ஆயிரத்து 870 பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாக சென்றதாகவும் இவர்களில் 1650 பேர் தொழில் வழங்குனர்களால் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாகவும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டது.

இவ்வாறான விபரங்கள், இலங்கையில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இலங்கைப் பெண்கள் துன்புறுத்தப்படுகின்றமை தெளிவாகின்றது.

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள நீதிமன்றங்கள், இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக வெவ்வேறான தண்டனைகளை வழங்கி வருகின்றமையும் காண முடிகின்றது.

இலங்கையில் நல்லாட்சியின் பின்பு பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனைகளையும் வழங்கியுள்ளது. குறிப்பாக 2016 ஒக்டோபர் மாதம் ஆறு வயது சிறுமியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்து கொலை செய்த இளைஞருக்கு மரணதண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜேசுதாஸ் லக்ஸ்மி என்ற 12 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை புரிந்து கொலை செய்த குற்றவாளிக்கு யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் கடூழியச் சிறைத் தண்டனை, மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். சேயா என்ற சிறுமியின் கொலைக்கு காரணமான குற்றவாளிக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டது.

இவ்வாறு ஒரு சில குற்றச் செயல்களுக்கு தண்டணை விதிக்கப்பட்டுள்ள போதிலும், இன்னும் பல இவ்வாறான செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமல் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டும், உண்மையான குற்றவாளிகள் உறுதிப்படுத்தாத நிலையில் வழக்குகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. குற்றவாளிகள் விரைவில் இனங்காணப்பட்டு, தண்டனை வழங்கப்படாமையினால் பொலிஸ் மற்றும் நீதித்துறையின் மீதும் மக்கள் நம்பிக்கை இழக்கின்ற நிலையும் இருக்கின்றது.

சிறுமிகள் பாலியல் ரீதியான வன்புணர்வுகளுக்கு ஈடுபடுத்தப்படுகின்ற போது, உரிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும், தண்டணை வழங்க வேண்டுமென மக்கள் ஆர்பாட்டங்களை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு காரணம் இவ்வாறான குற்றங்களை செய்பவர்கள் தாம் பேசாமல் விட்டால் தப்பித்து விடுவார்களோ? என்ற அச்ச உணர்வேயாகும். மறுபுறத்தில் காவல் துறையினர் மீதான நம்பிக்கையின்மை என்றும் கூறமுடியும்.

நாட்டிலே இடம்பெறும் குற்றங்களை குறைப்பதற்கும், மக்கள் அரசின் மீதும், சட்டத்தின் மீதும் நம்பிக்கை கொள்வதற்கும் மிக விரைவாக குற்றவாளிகளை இனங்கண்டு தட்டணை வழங்க வேண்டும்.

இவ்வாறான குற்றங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு ஏற்ற நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். சிறுவர்கள் குறிப்பாக பெண்கள் அச்சமின்றி இந்த நாட்டில் எந்தப் பகுதிக்கும், எந்த நேரத்திலும் சென்று வருவதற்கேற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களினதும் விருப்பாகும்.

மன்னார் மாதர் ஒன்றியம் மேற்கொண்ட போராட்டமொன்றில், பாலியல் குற்றம் இழைப்பவர்களுக்கு பிணை வழங்கக் கூடாது. பாலியல் வன்முறை சம்பந்தமான வழக்குகள் ஒருவருட காலத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இவ்வாறான கோரிக்கைகளையும் அரசு கவனத்தில் கொண்டு பாலியல் ரீதியான வன்புணர்வுகள் இலங்கை நாட்டில் இடம்பெற மாட்டாது என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். மீண்டுமொரு யுத்தம் இந்த நாட்டிலே இடம்பெறுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்ற கருத்தினை நம் நாட்டு அரசாங்கம் வெளியிட்டு வருகின்றமை வரவேற்கத்தக்கது.

அதனையே மக்களும் விரும்புகின்றனர். அதே போன்று பாலியல் வன்புணர்வுகள் இடம்பெறுவதற்கும் இடமளிக்கப் போவதில்லை என்பதனை மக்களுக்கு உறுதிப்படுத்தி அரசாங்கம் கூறவேண்டும்.

இன்னும் சிறுமிகள் பாதிக்கப்படுகின்றமையை எந்ததொரு சந்தர்ப்பத்திலும் கேட்பதற்கான நிலையை அரசு உருவாக்க கூடாது. வித்தியா மீதான வன்புணவுர்தான் இறுதியான வன்புணர்வாக இருக்க வேண்டுமென அனைத்து மக்களும் வித்தியாவின் கொலையை தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்தாலும், கோசங்களை எழும்பினாலும் இன்னும் அவை நிறைவு பெறவில்லை என்பதனை திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. இனியும் இவ்வாறு இடம்பெறக் கூடாது என்பதே மக்களின் விருப்பாகும்.

குற்றங்களைப் புரிகின்ற உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை உறுதிப்படுத்தாத நிலையில் வழக்குகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். குற்றங்களைப் புரியும் குற்றவாளிகள் விரைவில் இனங்காணப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாமையினால் பொலிஸ் மற்றும் நீதித்துறையின் மீதும் மக்கள் நம்பிக்கை இழக்கின்ற நிலையே தற்போதும் காணப்படுகின்றது.