காப்பாற்றப்படும் ராஜபக்சர்கள்! உண்மைகள் அம்பலப்படுத்தும் ஆயுதம் பிரயோகிக்கப்படுமா?

Report Print Mawali Analan in கட்டுரை

ஞானசாரரின் ஆட்டங்கள், அவர் ஒளிந்து கொண்டு விளையாட்டு காட்டும் கண்ணாம்பூச்சி செயற்பாடுகளோடு, இயற்கையும் தன் சீற்றத்தைக் காட்டிவிட ஆரம்பகால பிரச்சினைகள் சில மறந்து போய்விட்டன.

அவற்றில் பிரதானமானது ஆட்சிக்கவிழ்ப்பு சதிகள். இனவாதம் வெளிவர ஆட்சிக் கவிழ்ப்பு அடங்கியதா? என்பது தெரியவில்லை. ஆனால் இப்போது மீண்டும் அந்த விடயங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன.

மகிந்த குடும்பம் ஆட்சிக்கவிழ்ப்பு சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கு அரசு தரப்பு அமைச்சர்கள் சிலர் ஆதரவு எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

இதேவேளை ஞானசாரரின் இனவாதப் பிரச்சினையில் ஓர் விடயம் தெளிவாகின்றதாக அரசியல் தரப்பு அவதானிகள் கூறி வருகின்றனர்.

அதாவது அண்மைக்காலம் முதலாக ஞானசாரரின் மூலமாக பிரச்சினைகள் வெளிவந்த போது மகிந்ததரப்பினரின் தலைகளும் வெளித்தெரியும்.

அதே போல மகிந்த தரப்பினர் தலை தூக்கும் போது ஞானசாரரின் இனவாதமும், பிரச்சினைகளும் வெளிவரும் என்பதனை அவதானிக்க முடியுமானதாகவே இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

இது இவ்வாறு இருக்க ஆட்சிக் கவிழ்ப்பு விடயம் மீண்டும் புகைவிட ஆரம்பித்து விட்டன. இதனை அரசு எவ்வாறு கையாளப்போகின்றது என்பது வெளிப்படையில்லை.

மகிந்த குடும்பத்திற்கு பரம எதிரியாக வர்ணிக்கப்படும் அமைச்சர் சரத் பொன்சேகா அரசிற்கு உதவுவார் என்பது பலரது எதிர்பார்ப்பு. ஆனாலும் அது சாத்தியமா?

அதேநேரம் நாட்டில் நடக்கும் சம்பவங்களுக்கு அரசும் ஓர் மறைமுக பங்காளியா என்பதும் பலரது சந்தேகம். இந்தச் சந்தேகம் எழுவதற்கு காரணம் இருக்கத்தான் செய்கின்றது.

ராஜபக்சர்களை அடக்கும் பிரதான ஆயுதம் சரத் பொன்சேகா என்பதே பலரது கூற்று. அதற்கு ஏற்றாப் போல் இரு தரப்பும் மாறி மாறி கருத்துக்களை பகிர்ந்து கொள்வதும் இன்று வரை தொடர்ந்தவாறே இருக்கின்றது.

அதேபோல பொன்சேகா சீண்டப்பட்டால் அவர் வாயில் இருந்து பல உண்மைகள் கொட்டும் என்பது கூட அனைவரும் அறிந்த விடயம். சென்ற வருடம் பாராளுமன்றத்தில் சரத் பொன்சேகா பல உண்மைகளை கொட்டினார்.

அதில் பிரதானமானது சன்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்தது கோத்தபாய ராஜபக்சவே, கோத்தபாய ஓர் கொலையாளி என பொன்சேகா பகிரங்கமாக கூறினார்.

தொடர்ந்து ஆவேசமாக உரையாற்றிய பொன்சேகா, அது மட்டுமல்ல கேட்டுக்கொள்ளுங்கள், நமக்காக நாம் திட்டத்தில் 45000 இலட்சங்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையில் கடற்படை மூலம் 910 இலட்சங்கள்.,

லங்கா வைத்தியசாலை மூலம் 6000 இலட்சங்கள், அவன்கார்ட் இல் 111000 இலட்சங்கள், மிக் விமானக் கொள்வனவு மூலம் 42000 இலட்சங்கள் இவை அனைத்தும் கோத்தபாய செய்த மோசடிகள்.

திவிநெகும திட்டத்தில் 29920 இலட்சங்கள், மல்வானை மற்றும் மாத்தறையில் காணிகள் கொள்வனவுகளில் 1000 இலட்சங்களுக்கும் அதிகமாக பசில் ராஜபக்ச கொள்ளையிட்டார்.

விமல் வீரவங்ச, யோசித ராஜபக்ச, ஷிரந்தி ராஜபக்ச, நாமல் ராஜபக்ச போன்றோர் தொடர்பிலும் பல ஊழல்களை அம்பலப்படுத்தினார் சரத் பொன்சேகா.

ஆனால் என்ன காரணத்திற்காகவோ அவர் மகிந்தவின் ஊழல்கள் தொடர்பில் ஏதும் தெரிவிக்கவில்லை. அவர் அன்று கூறிய விடயங்களின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்றதா என்பது இன்று வரை தெரியவில்லை.

அதில் பிரதானமானது லசந்த கொலையே ஆனால் அண்மையில் லசந்தவின் கொலையை அரசு மூடி மறைக்கப்பார்க்கின்றது, என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

பாராளுமன்றத்தில் பகிரங்கமாக பொன்சேகா லசந்த கொலை தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார் என்ற விடயமானது, பொன்சேகா இந்த விசாரணைக்காக வழங்கிய வாக்குமூலத்திலும் இதனையே தெரிவித்திருப்பார்.

ஆனால் அதன் பின்னர் நடந்த விசாரணைகள் எதுவுமே வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

இது இவ்வாறு இருக்க ராஜபக்சர்களின் ஊழல்களை அம்பலப்படுத்துவோம் எனக் கூறிக்கொண்ட நல்லாட்சி அரசு இன்றும் அதனைச் செய்ததாகவோ அல்லது செய்ய ஆயத்தமாகி உள்ளதாகவோ தெரியவில்லை.

பொன்சேகா மட்டுமல்ல பலர் மகிந்தவிற்கும் அவர் குடும்பத்திற்கும் எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைத்தாலும் அரசு பாரா முகமாகவே இருக்கின்றது.

இவை அனைத்தையும் பார்க்கும் போது அரசும் இணைந்து இந்த விடயங்களில் செயற்பட்டுக் கொண்டு வருகின்றதா? மக்கள் திசை திருப்பப்பட்டு கொண்டு வருகின்றார்களா?

என்ற சந்தேக நிலை தொடர்ந்து வரும் போது இனவாதம் சற்றே ஞானசாரருடன் ஒளிந்து கொள்ள மீண்டும் ஆட்சிக் கவிழ்ப்பு சூடு பிடிக்க ஆரம்பமாகி விட்டது.

இவை அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்து அரசு தனது ஆட்சியை நல்லாட்சி என்று நிறுவி விடுமா என்பதும் சந்தேகமே காரணம்.,

அன்று பாராளுமன்றத்தில் பொன்சேகா கூறிய விடயங்களில் பல சென்சாட் மூலமாக அகற்றப்பட்டு விட்டன. இது அரசு வேண்டுமென்றே செய்த செயலா? என்பதும் சந்தேகம்.

அப்படி வேண்டுமென்றே அகற்றப்பட்டு இருக்குமானால் அரசும் ராஜபக்சர்களுக்கு கூட்டு என்றும் கூறி விட முடியும்.

கடந்த கால கொலைகளுக்கும், ஊழல்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக கூறிய அரசு வெறும் அம்புகளையே பொறுக்கிக் கொண்டு வருகின்றதனை அவதானிக்க முடிகின்றது. அத்தோடு உண்மைகளை அம்பலப்படுத்தவில்லை. அரசிடம் உள்ள ஆதார ஆயுதங்களும் பிரயோகிக்கப்படாமலேயே உள்ளன.

எய்தவரோ அல்லது வில்லோ கூட விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. இப்போதும் கூட ஆட்சிக் கவிழ்ப்பும், இனவாதமும் முற்றுப் புள்ளி வைக்கப்படாமல் இழுத்துக் கொண்டே வரப்படுகின்றது.

பொன்சேகா மட்டுமல்ல பலர் கொடுத்த வாக்கு மூலங்கள், ஆதாரங்கள் மூலம் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டு இருக்கலாம், ஆனால் தொடர்கின்றது அரசு அதனைச் செய்யாமல் இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதா?