மாகாணசபையை வினைத்திறன் அற்றதாக்க முற்படும் தரப்பிற்கு பின்னால் இழுபட்டு செல்லும் விக்னேஸ்வரன்

Report Print Gokulan Gokulan in கட்டுரை

இலங்கையின் ஏனைய 8 மாகாண சபைகளும் குழப்பங்கள் ஆட்சிக்கவிழ்ப்புக்கள் இன்றி இயங்கி வருகின்றன. குறிப்பாக 37 உறுப்பினர்களை கொண்ட கிழக்கு மாகாணசபையில் 7 உறுப்பினர்களை மட்டும் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஷ் ஆட்சி நடத்தி வருகிறது.

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் முஸ்லிம் பிரதேசங்களில் பெருமளவு அபிவிருத்திகளையும் செய்து வருகிறது.

இலங்கையின் மாகாணசபை வரலாற்றில் 7 உறுப்பினர்களை கொண்ட ஒரு கட்சி எந்த குழப்பமும் இன்றி ஆட்சி நடத்தி வரும் சாதனையும் கிழக்கு மாகாணசபையில் தான் நடைபெற்றிருக்கிறது.

7 பேரை மட்டும் கொண்ட கட்சி ஆட்சி நடத்த 11 பேரை கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை தக்க வைப்பதற்கு ஆதரவு கொடுப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதா என்ற விவாதம் தமிழர் தரப்பில் இன்றும் தொடர்ந்தாலும் கிழக்கு மாகாணசபையில் வடமாகாணசபையுடன் ஒப்பிடும் அளவிற்கு குழப்பங்கள் இல்லை என்றே சொல்லலாம்.

சட்டத்துறை, நிர்வாகத்துறை, அறிவு எதுவும் அற்ற பிள்ளையான் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக பதவி ஏற்று துறைசார் நிபுணர்களை நாடி நியதி சட்டங்களை நிறைவேற்றி 5 வருடங்கள் மாகாணசபையை நடத்தி சென்ற வரலாறும் உண்டு.

ஆனால் 38 உறுப்பினர்களை கொண்ட வடமாகாணசபையில் 30 ஆளும் கட்சி உறுப்பினர்களை கொண்ட போதிலும் ஊழலும் மோசடியும் அதிகார துஷ்பிரயோகங்களும், ஆட்சிக்கவிழ்ப்பு என்று அல்லாடிக்கொண்டிருக்கிறது.இந்த கூச்சலும் குழப்பங்களை ஏற்படுத்துவது எதிர்க்கட்சி அல்ல.

ஆளும் கட்சியே தங்களுக்குள் முட்டி மோதி இந்த மாகாணசபைபே வேண்டாம் என மக்கள் வெறுப்படைய வைக்கும் அளவிற்கு தங்களின் இயலாமைகளை சந்திக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

வடமாகாணசபை என்றாலே கூச்சலும் குழப்பமும் நிறைந்ததுதான் என்பது பழக்கப்பட்டு போன விடயம். 300 இற்கு மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றினார்கள் என்ற சாதனையை தவிர எதனையும் பட்டியல் இடமுடியாது.

மாகாணசபை முறை 1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு ஒவ்வொரு மாகாணங்களும் தங்களை நிர்வாகிக்க கூடிய நியதி சட்டங்களை உருவாக்கிய போதிலும் வடமாகாணசபை 2013 ஆண்டே மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபை உருவாக்கப்பட்டது.

வடமாகாணசபை தனக்கான நியதி சட்டங்களை உருவாக்கி சபையில் நிறைவேற்றி மாகாணசபை அதிகாரங்களை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய மிகப்பெரிய பணி அதன் முன் இருந்தது.

நீதியரசராக இருந்த விக்னேஸ்வரன் வடமாகாணசபைக்கு முதலமைச்சராக வந்தால் நியதி சட்டங்களை உருவாக்கி வடமாகாணசபையை ஆளுமை உள்ள சபையாக மாற்றியமைப்பார் என்ற நம்பிக்கையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கொழும்பிலிருந்து அவரை வடமாகாண சபைக்கு கொண்டு வந்தார்.

வடமாகாணசபைக்கு கொழும்பிலிருந்து ஒருவரை இறக்குமதி செய்யத்தேவையில்லை. வடமாகாணத்தில் ஆளுமை மிக்க பலர் இருக்கிறார்கள். அவர்களை ஏன் சம்பந்தனால் இனங்காணமுடியவில்லை என பலர் அப்போது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அவர் மாகாணசபை அமைச்சுக்களை வினைத்திறன் மிக்கதாக செயல்படுத்த கூடிய நியதி சட்டங்களை உருவாக்குவதற்கு பதிலாக மாகாணசபையால் எந்த பிரயோசனமும் இல்லை என்றும் அதனை செயல்திறன் அற்றதாக காட்டுவதற்கே தன்காலத்தை செலவழித்தார்.

வெறும் உணர்ச்சி அரசியல் செய்யும் சிவாஜிலிங்கம் போன்றவர்களின் பிரேரணைகளை நிறைவேற்றுவதில் கொண்டிருந்த ஆர்வம் நியதி சட்டங்களை உருவாக்குவதில் காட்டவில்லை.

மாகாணசபையே வேண்டாம் என கோரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிகழ்ச்சி நிரலில் செயல்படுவதிலேயே ஆர்வம் கொண்டிருந்தார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபை உருவாக்கப்பட்ட போது அதனை வினைத்திறன் மிக்கதாக இயங்க வைப்பதற்காக நியதி சட்டங்களை உருவாக்க சட்டவல்லுனர்களான வி.ரி.தமிழ்மாறன், உட்பட சிலரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

ஆனால் அவர்களின் இந்த முயற்சிகள் அனைத்தையும் உதாசீனம் செய்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேறு பாதை ஒன்றை தெரிவு செய்தார். இதனால் வி.ரி.தமிழ்மாறன் போன்றவர்கள் ஒதுங்கி கொண்டனர்.

மாகாணசபை தேவையில்லை, தமிழர்கள் அதனை புறக்கணிக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்களின் நிகழ்ச்சி நிரலில் செயல்பட விரும்பும் விக்னேஸ்வரன் போன்றவர்களிடம் வேறு எதனைத்தான் எதிர்பார்க்க முடியும்? இதன் தொடர்ச்சியான விளைவு வடமாகாணசபைக்குள் மட்டுமல்ல வெளியிலும் குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

இந்த நிலைக்கு யார் காரணம்? இந்த குழப்பங்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? ஆளும் கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பா, அதன் பிரதான கட்சியாக இருக்கும் தமிழரசுக்கட்சியா? அல்லது முதலமைச்சர் விக்னேஸ்வரனா? மாகாணசபை முறையே வேண்டாம் என கூறிய அச்சபையை செயலிழக்க செய்ய முற்படும் வெளித்தரப்பா?

30 உறுப்பினர்களை ஆளும் கட்சியின் பக்கம் வைத்திருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரால் வடமாகாணசபையை சீராக நடத்த முடியாமல் ஆளும் கட்சியில் உள்ள 16 உறுப்பினர்களும் எதிரணியில் இருக்கும் 6 பேருமாக சேர்ந்து முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை ஆளுநரிடம் சமர்ப்பித்திருக்கிறார்கள்.

பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் நடந்த பேச்சுக்களை அடுத்து நம்பிக்கையில்லா பிரேரணை கைவிடப்பட்டிருக்கிறது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு 2015ஆம் ஆண்டு தொடக்கம் பல சந்தர்ப்பங்கள் தமிழரசுக்கட்சிக்கு இருந்தது. மக்கள் அதற்கு ஆதரவளிக்க கூடிய வலுவான காரணங்களும் இருந்தன.

உண்மையில் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அமைச்சர்களை விலக்கியதற்காக முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரவில்லை என்றும் குற்றம் சாட்டப்படாத அமைச்சர்களை பதவியிலிருந்து விலக்கி வைக்க எடுத்த தீர்மானத்திற்கு எதிராகவே நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்போகிறோம் என்பதை தமிழரசுக்கட்சி மக்களிடம் ஆரம்பத்தில் தெளிவு படுத்தியிருக்க வேண்டும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளையும் அழைத்து பேசியிருக்க வேண்டும்.

ஊழல் மோசடிகள் புரிந்த அமைச்சர்களை பதவி விலக்கியதால் தான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்திருக்கிறார்கள் என தவறான பிரசாரத்தை தமிழரசுக்கட்சிக்கு எதிரான தரப்பினர் முன்னெடுத்திருக்கிறார்கள்.

தமிழரசுக்கட்சிக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ். புளொட், ரெலோ ஆகிய கட்சிகளும் அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

இதில் நகைச்சுவையான ஒரு விடயம் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழரசுக் கட்சியிலிருந்து தொடர்பை துண்டிக்கப்போவதாக அறிக்கை விட்டது.

என்ன தான் தமிழரசுக் கட்சிக்கு எதிராக முன்னாள் ஆயுதக்குழுக்கள் அறிக்கை விட்டாலும் தேர்தல் என்று வரும் போது தமது காலடிக்கே இவர்கள் வருவார்கள் என்பது தமிழரசுக்கட்சிக்கு தெரியும்.

ஈ.பி.ஆர்.எல்.எவ், போன்ற முன்னாள் ஆயுதக்குழுக்களால் தனித்து போட்டியிட்டு வெல்ல முடியாது. அவர்கள் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட வேண்டும். இல்லையேல் வேறு கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட வேண்டும்.

இதனால் தான் ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற முன்னாள் ஆயுதக்குழுக்களும் கடந்த கால தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை முன்னிறுத்தி அரசியல் செய்ய முற்பட்டிருக்கிறார்கள்.

நீதியரசராக இருந்த விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவி ஏற்ற பின் அவரின் அரசியல் நடவடிக்கைகளில் பல பிறழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஊழல் மோசடிகளுக்கு துணை போயிருக்கிறார்.

ஊழல் மோசடிகள் அதிகார துஷ்பிரயோகங்களை செய்த விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் போன்றவர்களை காப்பாற்ற முற்பட்டிருக்கிறார். ஏன் அவரின் கீழ் இயங்கும் உள்ளுராட்சி திணைக்களம் உட்பட பல திணைக்களங்களில் ஊழலும் மோசடிகளும் மலிந்து கிடக்கின்றன.

ஆனால் இந்த 4 ஆண்டுகளில் அவர் செய்த உருப்படியான நல்ல காரியம் என்றால் ஊழல் மோசடிகளை விசாரிப்பதற்கு விசாரணைக்குழு ஒன்றை நியமித்ததும் குற்றம் சாட்டப்பட்ட இரு அமைச்சர்களையும் பதவி விலகுமாறு பணித்ததுமாகும். இந்த நடவடிக்கைக்காக முதலமைச்சர் விக்னேஸ்வரனை பாராட்டியே ஆக வேண்டும்.

ஆனால் இந்த நல்ல காரியத்தை செய்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம் சாட்டப்படாத ஏனைய அமைச்சர்களையும் பதவி விலகுமாறு பணித்தார், இது அவரின் சர்வாதிகாரப் போக்கையே காட்டுகிறது.

அவர் நியமித்த விசாரணைக்குழு குற்றமற்றவர்கள் என அறிவித்த அமைச்சர்களை எதற்காக கட்டாய ஓய்வில் செல்லுமாறு பணித்தார்.

அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் மீண்டும் விசாரணைக்குழுவை நியமித்து விசாரிக்க வேண்டுமே ஒழிய குற்றவாளிகள் என நிரூபிக்காதவரை அவர்களை விலக்கி வைப்பது நீதிக்கு புறம்பானதாகும்.

அது மட்டுமல்ல கடந்த செவ்வாய்கிழமை வடமாகாண விசேட அமர்வில் அவர் ஆற்றிய உரை கூட அவர் மீதான மதிப்பை இறக்க செய்யும் செயலாகவே இருந்தது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் தனது உரையை எழுதி வாசிப்பதே வழக்கமாகும்.

நீதியரசராக இருந்த காலத்தில் கொழும்பில் கம்பன் கழக கூட்டங்கள் தொடக்கம் அவர் உரையாற்றும் போது எழுதி வாசிப்பதையே வழக்கமாக கெர்ண்டிருந்தார்.

தனது உரையில் எந்த தடுமாற்றங்களோ தவறுகளோ இருந்து விடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த செவ்வாய்க்கிழமை வடமாகாணசபையில் தான் எழுதி வந்த உரையை வாசித்தார்.

ஆனால் அந்த உரை அவரின் குழப்பத்தையே பிரதிபலித்தது. அவர் குழப்பி போய் இருக்கிறார், யார் யாரோ தனக்கு எதிராக செயற்படுகிறார்கள் என குற்றம் சாட்டும் எண்ணம் மேலோங்கியிருந்ததையும் தன்னை பதவி இறக்கி விடுவார்களோ என்ற பதட்டமும் அவரின் உரை தெளிவு படுத்தியது.

இந்த விசாரணைக்குழு தனது விரும்பத்தில் நியமிக்கவில்லை என்றும் சில உறுப்பினர்களே குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததால் விசாரணைக்குழுவை அமைத்தேன்.

சில உறுப்பினர்கள் என்சார்பானவர் என அடையாளப்படுத்தப்பட்ட ஒருவரை மட்டும் வெளியேற்ற முற்பட்டு அவர்களின் மதிப்புக்குரிய இன்னொருவரையும் பதவி இழக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

எங்கள் செயல்பாடுகள் அனைத்தையும் மக்கள் முன்கொண்டு வந்து அசிங்கப்படுத்தி விட்டார்கள் என ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த உறுப்பினர்கள் மீது அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

ஐங்கரநேசன் தனக்கு சார்பானவர் என்பதை அந்த உரையில் குறிப்பிடுகிறார். இதன் மூலம் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் புரிந்ததாக கூறப்படும் ஊழல்கள் மோசடிகள் அதிகார துஷ்பிரயோகங்கள் அனைத்திற்கும் அவர் பொறுப்பேற்க வேண்டியவர் ஆகிறார்.

தன்னிடம் இரகசியமாக வந்து இந்த பிரச்சினையை சொல்லியிருந்தால் அதனை தான் தீர்த்திருப்பேன். இப்போது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணைக்குழு முன் சொல்லி சந்தி சிரிக்க வைத்துவிட்டீர்களே என்ற ஆதங்கத்தையும் முதலமைச்சர் வெளிப்படுத்திருக்கிறார்.

குற்ற சாட்டுக்களை முன்வைத்த உறுப்பினர்கள் மீதே அவர் தன் கோபத்தை வெளிப்படுத்தினார். அன்றைய உரையில் தான் முதலமைச்சராக மக்களால் தெரிவு செய்யப்பட்டேன் என குறிப்பிட்டிருந்தார். மாகாணசபை தேர்தலில் முதலமைச்சருக்கென மக்கள் வாக்களிப்பதில்லை.

13 ஆவது மாகாணசபை திருத்த சட்டத்திலும் அவ்வாறான முதலமைச்சருக்கு வாக்களிக்கும் ஏற்பாடுகள் எதுவும் இல்லை. தேர்தல் முடிந்த பின் அதிகூடிய ஆசனகளை பெற்ற அல்லது பெரும்பான்மையை நிரூபிக்க கூடிய கட்சியின் செயலாளர் முதலமைச்சரின் பெயரை தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்து அவர் அதனை வர்த்தமானியில் பிரசுரித்த பின்பே முதலமைச்சர் பதவி ஏற்றுக்கொள்கிறார்.

கட்சி செயலாளர் பெயரை அறிவிக்கும் வரை அவர் மாகாணசபை உறுப்பினர் மட்டும் தான். இது எல்லா மாகாணசபைக்கும் பொருந்தும். அவரை மக்கள் மாகாணசபை உறுப்பினராகத்தான் தெரிவு செய்தார்கள்.

கட்சியின் செயலாளர் தான் முதலமைச்சராக பெயரிட்டார் என்பதை சட்டம் தெரிந்த விக்னேஸ்வரன் அறியாததேன்? மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட போது விக்னேஸ்வரன் யாழ்ப்பாண மக்களுக்கு அறிமுகமானவர் அல்ல.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வேட்பாளர்கள் அனைவருக்கும் கண்டிப்பான உத்தரவு ஒன்றையும் பிறப்பித்திருந்தது.

ஒவ்வொரு வேட்பாளரும் தங்களின் இலக்கத்துடன் விக்னேஸ்வரனின் இலக்கத்தையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற உத்தரவால்தான் ஏனைய உறுப்பினர்களின் விரும்பு வாக்குகளை விட விக்னேஸ்வரன் அதிக விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.

அவர் அதிக விருப்புவாக்குகளை பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய வேட்பாளர்களும் தான் என்பதை மறப்பது அவரின் தகமைக்கு நல்லதல்ல.

இருவர் மீது கொண்ட பகைமையே முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்த குழப்பங்களுக்கு காரணம் என நினைக்கிறேன்.

ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அடுத்தவர் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம். வடமாகாணசபைக்கு விக்னேஸ்வரன் கொண்டுவரப்பட்ட பின்னர் தமிழரசுக் கட்சி தலைவராக இருந்த ஆர். சம்பந்தன் அவர்களுக்கு பின்னர் விக்னேஸ்வரன் அந்த பதவிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு வளர்க்கப்பட்டு வந்தது.

ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை கூட்டங்களிலும் விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.

அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ போன்ற கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன. நீதியரசர் விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக கொண்டுவரப்பட்டவர்.

தமிழரசுக்கட்சியை சேர்ந்தவராக அவரை அடையாளப்படுத்தக் கூடாது, தமிழரசுக் கட்சியின் கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளக் கூடாது என போர்க்கொடி தூக்கின.

அதற்கு ஓருமுறை பதிலளித்த விக்னேஸ்வரன் ஆயுதக்குழுக்களாக இருந்த கட்சிகளுடன் தான் இணைந்து கொள்ள முடியாது என கூறியிருந்தார்.

ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு மிக நெருக்கமானவராக அக்கட்சியின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மிக்கவராக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வந்ததை முதலமைச்சர் விக்னேஸ்வரனால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது.

என்ன தான் நீண்ட அனுபவம் கொண்ட நீதியரசராக இருந்தாலும் அவர் கோபத்தையும் தனது ஆதங்கத்தையும் மறைத்து பேசும் வல்லமை கொண்டவர் அல்ல. அந்த வெளிப்பாட்டை கடந்த செவ்வாய்க்கிழமை அவர் ஆற்றிய உரையில் காண முடியும்.

தமிழரசுக் கட்சியை பொறுத்தவரை சம்பந்தன் அவர்களுக்கு பின்னர் மாவை சேனாதிராசா தலைமை பொறுப்பை எடுத்தாலும் தமிழரசுக்கட்சியை வழிநடத்துபவரும் முடிவுகளை எடுப்பவரும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான தலைமைத்துவ போட்டியே விக்னேஸ்வரனை தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி செல்ல வழிவகுத்தது எனலாம்.

சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மத்திய சுகாதார அமைச்சருடன் நேரடியாக தொடர்பு கொண்டு செயல்பட்டு வருகிறார், தனக்கு கீழ் அவர் செயல்படவில்லை என்ற தாழ்வு மனப்பான்மை முதலமைச்சரிடம் அண்மைக்காலமாக வளர்ந்து வந்திருக்கிறது.

இந்த விசாரணைக்குழு அமைத்த போது சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும், அதன் மூலம் அவரை பதவி விலக்கலாம் என எண்ணியிருந்த விக்னேஸ்வரனுக்கு இந்த விசாரணைக்குழு அறிக்கை ஏமாற்றமாகவே அமைந்திருக்கிறது.

தனக்கு நெருக்கமான ஒருவரை குற்றவாளியாக கண்ட இந்த விசாரணைக்குழு தான் பதவி விலக்க எண்ணியிருந்த ஒருவரை குற்றவாளி இல்லை என விடுவித்திருக்கிறது என அவர் சீற்றம் கொண்டிருக்கிறார்.

இதனை அவரின் உரையின் மூலம் அவதானிக்க முடிகிறது. சில அமைச்சர்கள் எம்முடன் ஒத்துழைக்காது பிற நிகழ்ச்சி நிரலில் செயல்படுகிறார்கள்.

அவர்களுக்கு மத்திய அமைச்சர்கள் தான் முக்கியமாக தெரிகிறார்கள் என சத்தியலிங்கம் மீது முதலமைச்சர் தனது உரையில் குற்றம் சாட்டியிருந்தார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழரசுக்கட்சியுடன் பகை உணர்வை வளர்த்து வருகிறார் என்பதற்கு கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தையும் உதாரணமாக சொல்லலாம்.

இரு அமைச்சர்களை பதவி விலக்கி விட்டு புதியவர்களை நியமிப்பது தொடர்பாகவும் இரு அமைச்சர்களை கட்டாய ஓய்வில் செல்ல பணிப்பது தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பேசியிருக்கிறார்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியாகவும் வடமாகாணசபையில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியாகவும் விளங்கும் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவுடன் தொடர்பு கொண்டு முதலமைச்சர் பேசவில்லை.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கடந்த வியாழக்கிழமை பேசிய போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடன் பேசிய நீங்கள் ஏன் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவுடன் பேசவில்லை என சம்பந்தன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவின் தொலைபேசி இலக்கம் என்னிடம் இல்லை என கூறியிருக்கிறார்.

இந்த பதிலின் மூலம் மதிப்புமிக்க நீதியரசரான விக்னேஸ்வரன் அடிமட்ட அரசியல்வாதியாக மாறிவிட்டார் என்பது தெளிவாகிறது.

இரா.துரைரத்தினம்

Email: thurair@hotmail.com