வடமாகாண சபைக்கு ஓர் திறந்த மடல்! ச.வி.கிருபாகரன்

Report Print S.V Kirubaharan S.V Kirubaharan in கட்டுரை

இலங்கை தீவில் தமிழீழத்தை நோக்கிய முதலாவது கட்ட ஆயுத போராட்டத்திற்கு கிடைத்த ஆறுதல் பரிசாக மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.

அதாவது, 1987ஆம் ஆண்டு யூலை மாதம் 29ஆம் திகதி கைச்சாத்தான இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில், 1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி, இலங்கை பாராளுமன்றத்தில் உனது குடும்ப பிரசவத்திற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, 1988ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி உனது குடும்பத்தின் பிரசவம் பதிவாகியுள்ளது. இங்கு நீ உட்பட நவக்கிரகங்களை கொண்ட உனது குடும்பம் உருவாகியது. இங்கு தான் உனது பிறப்பின் விசேட தன்மையை நாம் உணர முடிகிறது.

காரணம், உனது குடும்பத்தில் எழுவர் தனித்து இயங்கும் வேளையில், நீயோ உனது இரத்த உறவினர், சரித்திர ரீதியான நண்பர் ‘கிழக்குடன்’ இணைந்து உன்னை இனம் காட்டி கொண்டாது மட்டுமல்லாது, சரித்திரத்திலேயே வடக்கு கிழக்கு என உன்னை பதிவு செய்திருந்தாய்.

அன்று சிங்கள பௌத்த இனவாத தேசியவாத அரசுகளின் கபட தன்மைகளை நீ உணர தவறிய காரணத்தினால், நீயும் உனது நண்பனும், 2006ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி கபடங்கள் அடங்கிய திட்டங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டீர்கள்.

இதற்கு பல குட்டிகதைகள் இருந்த பொழுதிலும், ஓர் குட்டி கதை, எம்மை மிகவும் மனவேதனைகளிற்கு ஆக்கியுள்ளது.

விடயத்தை சுருக்கமாக கூறுவதனால், அன்று தமிழீழ விடுதலை போராட்டம் வெற்றி நடைபோட்ட வேளையில், தற்செயலாக தமிழீழம் உருவாகினால், அதை சட்ட ரீதியாக குழப்புவதற்கு, எமது அயலவர், ஜே.வி.பியினருக்கு கொடுத்த திட்டமாக வடக்கு கிழக்கு பற்றிய பிரிவென கூறப்படுகிறது.

தனது உண்மைத்தன்மையை யார் அறிவார்? இன்று உனது நிலையை நம்பி நாம் அழுவதா, சிரிப்பதா?

1948 ஆம் ஆண்டு முதல், இலங்கைதீவில் வடக்கு கிழக்கு வாழ் மக்கள், தமது அரசியல் தீர்விற்கு சிந்திய இரத்திற்கும், கொடுத்த உயிர்பலிகளிற்கும் மற்றைய இழப்புக்களிற்கும் சிங்கள பௌத்தர்களிடமிருந்து கிடைத்த பிச்சை என்பதற்கு மேலாக, வடக்கு கிழக்கு வாழ் மக்களின் “யானை பசிக்கு கிடைத்த சோளப் பொரியே” ‘நீ’ என்பதை நான் சொல்லி தான் மற்றவர்கள் அறிய வேண்டுமா?

இப்படியான உன்னை, நாம் எமது அநாதரவான பாரிதாப நிலையில், மிகவும் சந்தோசமாக ஏற்று கொண்டோம். உன் மூலம், நமது மாவீரர்களின் கனவுகளை என்றோ ஒரு நாள் நனவாக்க முடியும் என்பது எமது சித்தாந்தமும் சிந்தனையாகவிருக்கிறது.

இதற்கு நல்ல உதாரணமாக, எம்மை அடக்கி ஆண்ட பிரித்தானியாவில், ஸ்கொட்லாந்து மக்களின் இன்றைய அரசியல் நிலை நல்ல உதரணமாக திகழ்கிறது.

ஆனால், தமிழீழ மக்களாகிய நாம் ஓர் ‘ஏமாளிகள்’ என்பதை மீண்டும் மீண்டும் நீ நிரூபிக்க முயல்கிறாய். எமது அரசியல்வாதிகள் உணர்ச்சி பொங்க ஆற்றும் உரைகளிற்கு அவர்களது செயற்பாடுகளிற்கும் எந்த தொடர்புகளும் இல்லை என்பதை நீ அறிவாயா?

மோசடிகள், பதவி துஸ்பிரயோகங்கள் ஒரு புறம், விசாரணைகள் தீர்ப்புகள் மறுபுறம். ‘நெய்குடம் உடைந்தது நாய்களிற்கு வேட்டை’ இன்னுமொரு புறம்.

இவற்றின் அடிப்படையையோ, யாதார்த்தையோ புரியாதவர்களாக உனது சபையில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகள் சிலர் நாடகம் ஆடுகிறார்கள். வேறு சிலர் ‘முதலை கண்ணீர் வடிக்கிறார்கள்’என்ன வேடிக்கை.

சிங்கள தேசம் எண்ணுவதை நடைமுறைப்படுத்துவதற்கு ஓர் கூட்டம். பாரளுமன்ற தேர்தலில் பல தடவை தமது கட்டுகாசை இழந்தவர்கள், இவற்றை சந்தர்ப்பமாக பாவித்து, தமது ஒப்பு சொப்பிற்கு உதவாத அரசியலை நிலைபடுத்தி கொள்ள முயல்வது மறுபுறம்.

இவற்றிற்காக உனது சபைக்கு - அடிப்படை வசதிகள் அற்று நொந்து வாழும் மக்கள் இப்பாதகர்களை உன்னிடம் அனுப்பினார்கள்? இவர்களது வெட்கம், ரோசம், மானம் எங்கு சென்றுவிட்டன? உனது சபையை பார்த்து இன்று சர்வதேசமே கைகொட்டி சிரிப்பது உனக்கு தெரியவில்லையா?

கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தைகள், சந்திப்புக்கள், அறிக்கைகள். இவர்கள், யாரை யார் ஏமாற்றுகிறார்கள்? இவர்கள் நடத்தும் பேச்சுவார்த்தைகளும், சந்திப்புக்களும், அறிக்கைகளும், 1948ஆம் ஆண்டு முதல் தமிழீழ மக்களினால் மேற்கொள்ளப்படும் சுயநிர்ணய உரிமையின் தீர்விற்கானதா?

அல்லது அடிப்படை வசதிகளின்றி வாழும் தமிழீழ மக்களிற்கானதா? அல்லது எமக்கு மேலும் பிச்சை போட காத்திருக்கும் சிங்கள பௌத்த அரசுகளுடனானதா? இவர்கள் உனது பெயரால் யாரை ஏமாற்றுகிறார்கள்? சவாரி செய்கிறார்கள்?

2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி நீ உருவானதும், பல கவலையின் மத்தியிலும் நாம் உன்னை வரவேற்றோம்.

தகமைகள் தகுதிகள் அடிப்படையில் அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டதை பார்த்து பெருமைபட்டோம்.

கூடிய விரைவில் ‘உன்னை’, அதாவது வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு, ஆளுநரின் கட்டுப்பாட்டிற்கு செல்லவிருப்பதை இவர்கள் யாரும் உணரவில்லையானால், இவர்கள் யாவரும் தமிழீழ மக்களிடையே உருவான கோடரி காம்புகள்.

இன்று நீயானால், நாளை உனது இரத்த உறவினர், சரித்திர ரீதியான நண்பர் ‘கிழக்கு’ என்பதை யாவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இது தான் சிங்கள பௌத்த அரசுகளின் உண்மையான திட்டம். இதற்கு பலியானவர்கள் தான் இன்று உன்னை குழப்புகிறார்கள். பாரளுமன்ற கதிரைக்கு மீண்டும் ஆசைப்படுவர்களிடம் ஒரே ஒரு கேள்வி.

நீங்கள் 2020ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் கபட நாடகங்களை ஆடி பாரளுமன்ற தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறீர்கள் என்பது தெட்ட தெளிவு. நல்லது வாழ்த்துக்கள்.

அப்படியானால், நீங்கள் பாரளுமன்றம் மீண்டும் சென்றதும் - அல்லற்படும் தமிழீழ மக்களிற்கு, அடிப்படை வசதிகளின்றி வாழும் மக்களிற்கு, அரசியல் உரிமையின்றி வாழும் மக்களிற்கும், சிறிலங்கா பாராளுமன்றத்தில் உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை கூறுங்கள்? தயவு செய்து இந்த கேள்விக்கு பதில் கொடுத்துவிட்டு, வடமாகாண சபை விடயங்களில் தலையிடுங்கள்.