பாதுகாப்புக் கூட்டுகள்! ஆதாயமா? ஆபத்தா?

Report Print Subathra in கட்டுரை

போர் நடந்து கொண்டிருந்த போதும், போருக்குப் பின்னர் எழுந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளாலும் சர்வதேச அளவிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு கூட்டுப் பயிற்சிகள் போன்றவற்றில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இலங்கைப் படையினருக்கு இப்போது சாதகமான நிலைமைகள் ஏற்பட்டு வருகின்றன.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளைத் தாண்டி பாதுகாப்பு உறவுகள் ஒத்துழைப்புகளை விரிவாக்கிக் கொள்ள முடியாத நிலை இலங்கைக்குக் காணப்பட்டது.

குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் கதவுகள் மூடி அடைக்கப்பட்ட நிலையிலேயே இருந்தன அல்லது சிறிய வெளிகள் மாத்திரம் காணப்பட்டன.

ஆனால் 2015 ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இலங்கை அரசாங்கத்துக்கு மாத்திரமன்றி இலங்கைப் படைகளுக்கும் மேற்குலக மற்றும் இந்தியாவின் ஆதரவும் உதவிகளும் அதிகளவில் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன.

இந்தியக் கடற்படையின் டோனியர் விமானம் ஒன்று கடந்த வாரம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறங்கியிருந்தது. இந்தியக் கடற்படை ஆழ்கடல் கண்காணிப்பு, ரோந்து, மீட்பு உள்ளிட்ட தேவைகளுக்கு அதிகளவில் பயன்படுத்தி வருவது இந்த டோனியர் விமானத்தைத்தான்.

இந்த விமானத்தில் வந்திருந்த இந்தியக் கடற்படை அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்கவில் தங்கியிருந்து இலங்கைக் கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகளுக்கு பயிற்சிகளை அளித்தது.

இந்தியக் கடற்படை டோனியர் விமானம் ஒன்று இலங்கையில் பயிற்சிக்காக தரையிறங்கியது இதுவே முதல்முறை என்றும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் இலங்கை விமானப்படை கடற்படையினருக்கு பயிற்சி அளிக்கவே அது கொழும்பில் தரையிறங்கி இருப்பதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சின் டுவிட்டர் செய்தி ஒன்றில் குறிப்பிட்டிருந்தது.

எனினும் எத்தகைய பயிற்சி எத்தனை நாட்கள் இந்தப் பயிற்சி என்ற விபரங்கள் எதுவுமே வெளியிடப்படவில்லை. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அண்மைக் காலமாக பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுப்பெற்றிருக்கின்றன.

கூடுதல் படையினருக்குப் பயிற்சியளிக்கவும், புதிய துறைகளில் பயிற்சிகள் உதவிகளை வழங்கவும் இணக்கப்பாடுகள் காணப்பட்டிருக்கின்றன.

அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானப்படையின் எம்.ஐ.17 ஹெலிகள் தொடர்ச்சியாக சேவையில் ஈடுபட்டு பழுதடைந்த போது அவசரமாகத் தேவைப்பட்ட உதிரிப்பாகங்களை இந்திய விமானப்படை தமது சிறப்பு விமானம் ஒன்றில் கட்டுநாயக்கவுக்கு அனுப்பி வைத்திருந்தது நினைவிருக்கலாம்.

இப்போது டோனியர் விமானத்தை கட்டுநாயக்கவில் பயிற்சியளிப்பதற்காக இந்தியா அனுப்பியிருக்கிறது.

இந்தியாவிடம் உள்ளது போல் இலங்கை கடற்படையிடம் விமானப்படை அலகு ஒன்று கிடையாது. பலமான நாடுகளின் கடற்படைகள் அவ்வாறான தனி விமானப்படைப் பிரிவு அல்லது அலகை வைத்திருக்கின்றன.

போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் அவசர வேளைகளில் விமானப்படையின் உதவி கிடைப்பதில்லை என்று சினந்து கொண்ட கடற்படை தனக்கென ஒரு விமானப்படை அலகை உருவாக்குவதற்கு அனுமதி கோரியிருந்தது. ஆனால் அந்தத் திட்டம் செயற்படுத்தப்படவில்லை.

கடற்படையில் தனியான விமானப்படை அலகு இல்லாததால் கடற்படைக்கும் விமானப்படைக்கும் சேர்த்தே இந்தியக் கடற்படையின் டோனியர் விமானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பயிற்சிகள் நிச்சயமாக ஆழ்கடல் கண்காணிப்பு மற்றும் ரோந்து பற்றிய பயிற்சிகளாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.

இந்தியா மாத்திரமன்றி அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் கூட இலங்கைக் கடற்படையையும் ஆழ்கடல் கண்காணிப்பு பொறிமுறையையும் பலப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருவது வெளிப்படை.

அமெரிக்க கடற்படையின் 10வது ரோந்து அணியின் P8A Poseidon என்ற இராட்சத கடல்சார் கண்காணிப்பு விமானம் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் திகதி தொடக்கம் 11ம் திகதி வரையில் அம்பாந்தோட்டை, மத்தள விமானநிலையத்தில் தரித்து நின்றது.

இதன்போதும் இலங்கைப் படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. விளக்கங்கள் கொடுக்கப்பட்டன என்றே கூறப்பட்டது. அதுவும் ஆழ்கடல் கண்காணிப்புத் திறனை அதிகப்படுத்துகின்ற ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது.

இப்போது இந்தியக் கடற்படையின் டோனியர் விமானத்தின் வருகையும் அதுபோன்ற ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் துறைமுகங்களில் அடிக்கடி வெளிநாட்டுப் போர்க் கப்பல்களை அவதானிக்க முடிகிறது.

முன்னர் எப்போதாவது ஒன்று என வந்து கொண்டிருந்த வெளிநாட்டுப் போர்க் கப்பல்கள் இப்போது அடிக்கடி வரத் தொடங்கியுள்ளது மாத்திரமன்றி கூட்டாகவும் வரத் தொடங்கியிருக்கின்றன. அதாவது இரண்டு அல்லது மூன்றாக கொழும்புத் துறைமுகத்துக்கு வருகின்ற நிகழ்வுகள் அதிகரித்திருக்கின்றன.

சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் பின்னர் இந்தியக் கடற்படையின் மூன்று போர்க் கப்பல்கள் தனித்தனியாக கொழும்பு வந்தன. பாகிஸ்தான் கடற்படையின் ஒரு போர்க் கப்பல் வந்தது. அமெரிக்க கடற்படையின் ஒரு போர்க் கப்பல் வந்தது. சீனாவின் மூன்று போர்க் கப்பல்கள் ஒன்றாக வந்து தரித்து நின்றன. ரஷ்யக் கடற்படையின் பயிற்சிக் கப்பல் ஒன்றும் வந்து சென்றது. அதற்குப் பின்னர் இப்போது பிரெஞ்சுக் கடற்படையின் இரண்டு போர்க் கப்பல்கள் வந்து கொழும்பில் தரித்து நிற்கின்றன.

இந்தக் கப்பல்கள் அனைத்தும் பல நாட்கள் கொழும்பில் தரித்து நின்றன என்பதும் இந்தப் பயணங்களில் பெரும்பாலானவை மனிதாபிமான உதவியைக் காரணம் காட்டி மேற்கொள்ளப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆனாலும் இந்தப் பயணங்களின் போது இலங்கைக் கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ளவும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் இந்த வெளிநாட்டுப் போர்க் கப்பல்கள் தவறவில்லை.

இலங்கைக் கடற்படையினருக்கு இப்போதுள்ளது போன்ற பயிற்சி வாய்ப்பு முன்னர் கிடைத்திருக்கவில்லை. கடற்புலிகளுடன் சண்டையிட்டு சண்டையிட்டே அவர்கள் தமது திறனை வளர்த்துக் கொண்டனர். கடற்புலிகளும் அவ்வாறே வளர்ச்சி பெற்றனர்.

ஆனால் இப்போது கடற்படையினருக்கு வெளியில் இருந்து பயிற்சிகளும் வாய்ப்புகளும் முன்னொருபோதும் இல்லாதளவுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இது ஆட்சி மாற்றத்தினால் அரச படைகளுக்குக் கிடைத்திருக்கின்ற சாதகமான சூழல் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த 20ம் திகதி கொழும்புத் துறைமுகத்துக்கு பிரேஞ்சுக் கடற்படையின் இரண்டு பாரிய போர்க் கப்பல்கள் வந்தன. இன்று வரை தரித்து நிற்கவுள்ள இந்தக் கப்பல்களில் ஒன்று மிஸ்ட்ரால் என அழைக்கப்படும். தரையிறக்க மற்றும் ஹெலிகொப்டர் தாங்கி போர்க் கப்பலாகும்.

குறுகிய தூரத்தில் என்றால் இரண்டு பற்றாலியன் (900) படையினரை ஆயுதங்கள், வாகனங்கள், போர்த் தளபாடங்களுடன் தரையிறக்கும் வசதியைக் கொண்டது. நீண்ட தூரத்துக்கு ஒரு பற்றாலியன் (450) படையினரையும் 150 மாலுமிகளையும் ஏற்றிச் செல்லும் வசதி கொண்டது.

இந்தக் ஹெலிகொப்டர் தாங்கி கப்பலில் ஒரே நேரத்தில் 16 கனரன ஹெலிகொப்டர்களை அல்லது 35 இலகு ரக ஹெலிகொப்டர்களை நிறுத்தி வைக்க முடியும். ஒரே நேரத்தில் 6 ஹெலிகள் தரையிறங்குவதற்கான வசதிகளும் இதில் உள்ளன.

இலங்கைக்குப் பாரிய ஹெலிகொப்டர் தாங்கி கப்பல் ஒன்று வருகை தந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

1985ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க கடற்படையின் யு.என்.எஸ் கிற்றி ஹோக் என்ற விமானம் தாங்கிக் கப்பல் கொழும்புத் துறைமுகம் வந்திருந்தது. அதற்குப் பின்னர் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற விமானம் தாங்கிக் கப்பல் கொழும்பு வந்தது.

2013ல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்ற சீன நீர்மூழ்கிகளுக்குப் பின்னர் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற விமானம் தாங்கிக் கப்பலின் வருகை முக்கியத்துவமானதாக இருந்தது.

அமெரிக்க கடற்படையின் பாரிய போர்க்கப்பல்கள் பல அண்மையில் கொழும்புக்கு வந்து சென்றிருந்தாலும் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவுக்குப் பின்னர் பிரெஞ்சுக் கடற்படையின் மிஸ்ட்ரால் என்ற ஹெலிகொப்டர் தாங்கியின் வருகையே மிக முக்கியமானது.

நீர்மூழ்கிகள், விமானம் தாங்கிகளை அடுத்து ஹெலிகொப்டர் தாங்கி கப்பல்கள் பாதுகாப்பு ரீதியாக முக்கியமானவை. பிரான்சின் மிஸ்ட்ரால் போர்க்கப்பலில் பிரித்தானிய கனேடிய படையினரும் ஹெலிகளும் கூட இருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாத விடயம்.

இது கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபடும் கப்பல். அதனால் தான் பிரித்தானிய, கனேடிய கடற்படையினரும் இருக்கின்றனர். இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியான தளபதி ஸ்ரனிஸ்லஸ் டி சார்கெரஸ் இலங்கைக் கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை ஒழுங்கு செய்யவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

மிஸ்ட்ராலுடன் கோர்பெட் என்ற பிரெஞ்சுப் போர்க்கப்பலும் கொழும்பு வந்தது. பாரிய தரையிறக்க கப்பல்கள் அல்லது விமானம் தாங்கிகள், ஹெலிகொப்டர் தாங்கிகள் தனியாகப் பயணம் செய்வதில்லை. வேறு போர்க் கப்பல்களின் பாதுகாப்புடனேயே பயணம் செய்வது வழக்கம்.

கோர்பெட் போர்க் கப்பல் ஒன்றும் சாதாரணமானது அல்ல. ரேடர்களின் கண்ணில் இலகுவில் சிக்காத ஸ்டெல்த் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ஏவுகணைகளைக் கொண்டது. இது போன்றதொரு பிரெஞ்சுப் போர்க் கப்பலான ஆகோனிட் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் திகதி கொழும்பு வந்திருந்தது.

கொழும்புத் துறைமுகம் மீது பிரான்சுக்கு பெரியளவில் ஆர்வம் இல்லை என்றே கூறப்பட்டாலும் அது உண்மையல்ல என்பதை பிரெஞ்சுப் போர்க் கப்பல்களின் வருகை உணர்த்துகிறது. இலங்கைத் துறைமுகங்களில் நடக்கும் மாற்றங்களை பிரான்சும் உன்னிப்பாக அவதானிக்கிறது என்று மிஸ்ட்ரால் கப்பலில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரெஞ்சுத் தூதுவர் கூறியிருந்தார்.

பிரான்சின் ஹெலிகொப்டர் தாங்கியை அடுத்து ஜப்பானின் பாரிய ஹெலிகொப்டர் தாங்கி கப்பலான இசுமோவும் கொழும்பு வரவுள்ளது. அடுத்த மாதம் இந்தியா, அமெரிக்காவுடன் இணைந்து மலபார் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவே ஜப்பானிய ஹெலிகொப்டர் தாங்கி கப்பல் கொழும்பு வரவுள்ளது.

இதில் 7 நீர்மூழ்கி எதிர்ப்பு ஹெலிகொப்டர்களும், இரண்டு தேடுதல் மீட்பு ஹெலிகொப்டர்களும் தரித்திருக்கும். எனினும் 28 விமானங்களை நிறுத்துகின்ற வசதிகள் இந்தக் கப்பலில் இருக்கின்றன.

இதிலும் கூட இலங்கைக் கடற்படையினர் பயிற்சி பெறும் வசதிகளும், வாய்ப்புகளும் இருக்கின்றன.

பல்வேறு நாடுகளின் போர்க் கப்பல்களும், நாசகாரிகளும், விமானம் தாங்கிகளும் கொழும்புக்கு வந்தாலும் சீன நீர்மூழ்கிகள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் இன்னமும் உசாராகவே இருக்கிறது.

கடந்த மாதம் கூட சீன நீர்மூழ்கி ஒன்று தரித்துச் செல்வதற்கு அனுமதி கோரப்பட்ட போது அதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை. இலங்கை கடற்பகுதியை இன்னொரு நாட்டுக்கு எதிரான ஆயுதப் போட்டிக்காக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று இலங்கை அரசாங்கம் கூறியிருக்கிறது.

1981 மே 30ம் திகதி வெளியான தி இந்து நாளிதழுக்கு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன அளித்த பேட்டியில் எரிபொருள் நிரப்பவும், விநியோகத் தேவைகளுக்காகவும் எந்த நாட்டுக் கப்பல்களும் இலங்கைத் துறைமுகங்களுக்கு வரலாம் என்று கூறியிருந்தார.

சீன நீர்மூழ்கிகள் கொழும்பு வந்ததால் சர்ச்சைகள் ஏற்பட்ட போது அதே நிலைப்பாட்டை மகிந்த ராஜபக்சவும் குறிப்பிட்டிருந்தார்.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ரணில் விகரமசிங்கவும் அவ்வாறு தான் கூறியிருந்தார்.

ஆனாலும் சீன நீர்மூழ்கிகள் விடயத்தில் அந்த நிலைப்பாட்டை இலங்கையால் எடுக்க முடியாத நிலையே இன்னமும் இருக்கிறது. காரணம் இந்தியாவை, அமெரிக்காவை மீறி எதையும் செய்ய முடியாத நிலை இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளது.

இப்போதுள்ள சூழலில் இலங்கைக் கடற்படையினருக்கு ஏராளமான பயிற்சி வாய்ப்புகள் கிடைத்தாலும் இதுபோன்ற சிக்கல்களையும் இலங்கைக்கு ஏற்படுத்தியிருக்கிறது.