மட்டக்களப்பின் ஊழல் மோசடிகள் அரசியல்வாதிகளால் மூடி மறைக்கப்படுன்கிறதா!

Report Print Ragu Ragu in கட்டுரை

வடமாகாண சபையின் ஊழல் மோசடிகள் குறித்த வாதப் பிரதி வாதங்களில் ஈடுபட்ட மட்டக்களப்பு அரசியல் தலைமைகள் தங்களது மாவட்டத்தில் நடைபெற்ற அல்லது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊழல் மோசடிகள் குறித்து வாய்திறக்காது இருப்பது நல்லாட்சிக்காக வாக்களித்த மக்களை ஏமாற்றுவதாக அமைந்துள்ளது.

ஊழல் வாதிகளுக்கே நல்லாட்சி!

மகிந்த அரசின் நிர்வாகத்தை எதிர்த்து அந்த அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக முன்நின்று செயற்பட்ட அரசியல் வாதிகள் அரச உயர் அதிகாரிகள் என பலரது அதிகார துஸ்பிரயோகங்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவருவதற்காக பாடுபட்ட சிவில்சமூக அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், பொது மக்கள் என அனைவரையும் நல்லாட்சி அரசும் அவர்களுடன் இணைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் தலைவர்களும் ஏமாற்றி விட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் நல்லாட்சி அரசின் மாற்றங்களை இங்குள்ள மக்கள் இன்னும் அனுபவிக்க முடியாமல் உள்ளது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சில மாதங்களிலேயே மகிந்த அரசின் கீழ் இருந்து செயற்பட்ட அரசியல் வாதிகள் அரச அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் நல்லாட்சி அரசுடன் இணைந்து கொண்டு தங்களது ஊழல் நிறைந்த நிர்வாகத்தை எந்தவித பயமும் இன்றி முன்னெடுத்து வருகின்றனர்.

தங்களை மாற்றிக் கொண்ட கூட்டமைப்பு!

மகிந்த அரசாங்கத்தின் குற்றவாளிகளையும் ஊழல் வாதிகளையும் விமர்சித்து மட்டக்களப்பு மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகள் தாங்கள் வெற்றி பெற்றதன் பின்னர் நல்லாட்சி அரசுடன் இணைந்து கொண்டதோடு தேசிய அரசியலில் மாத்திரம் கவனம் செலுத்தி வருவதுடன் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களை சிறையில் அடைத்ததுடன் அடங்கி போய்விட்டனர்.

மட்டக்களப்பின் ஊழல் நிறைந்த நிர்வாகத்தை மாற்றி ஊழல் அற்ற இன மத அரசியல் சார்பற்ற நிர்வாகம் ஒன்றை நிறுவுவதற்கு முயற்சிக்காதது ஊழல் நிர்வாகத்துடன் சமரசம் செய்து கொண்டு ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஊடகவியலாளர்கள் சிவில்சமூக பிரதிநிதிகளை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

யார் யாரெல்லாம் கடந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகள் என்று குற்றம் சாட்டினார்களோ அவர்களை எல்லாம் இன்று நல்லவர்களா காட்ட கூட்டமைப்பில் உள்ள சிலர் முயற்சி செய்து வருகின்றனர். மொத்தத்தில் மட்டக்களப்பின் இன்றைய நிலையை பார்க்கும் போது நல்லாட்சியின் மெத்தன போக்கை பயன்படுத்தி ஊழல் வாதிகள் தங்களது பணியை தொடர்ந்து கொண்டே உள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டுகள்!

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து தற்போது இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் நிதி மோசடி பிரிவினர் தங்களது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டு நடைபெற்றதாக கூறப்படும் வெள்ள நிவாரண ஊழல் குறித்து இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் அண்மையில் மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலக கணக்காளர்களும் கொழும்பிற்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.

வாகரை சமூர்த்தி வங்கியில் நிதிமோசடி செய்யப்பட்டதாக கூறி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய கரவைப் பசுக்கள் இன்னும் வழங்கப்படவில்லை, அதற்கான நிதிக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை ?

இவ்வாறு கடந்த அரசாங்கத்தில் நடந்த பல மோசடிகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அது குறித்து கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் அதனை செய்யாது யார் ஊழல் செய்தார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளதோ அவர்களை காப்பாற்றும் விதமாக மாகாண அமைச்சர் ஒருவர் பேசியுள்ளார்.

அதாவது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள அரச அதிகாரி ஒருவரை கூட்டிச் சென்று அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு வெள்ளை அடிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார்.

குறித்த அதிகாரி பல ஊழல்கள் செய்துள்ள போதும் அது குறித்து மக்கள் பிரதிநிதிகள் வாய்திறக்காது ஊழல் வாதிகளை காப்பாற்ற முயற்சிப்பது அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேநேரம் ஊழல் மோசடிகள் செய்த அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கிழக்கு மாகாண சபை அமைச்சர் ஒருவர் தனது கட்சி அதிகாரங்களை பயன்படுத்தி கட்டுப்படுத்தி வருவதாக ஊழல் குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றம் வரை கொண்டு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தை முற்று முழுதாக இயக்கும் ஊழல் வாதிகள்!

மட்டக்களப்பு மாவட்டம் கடந்த ஆட்சியின் ஊழல் நிர்வாகத்தில் மூழ்கி உள்ளதால் அதில் இருந்து மீள முடியாத நிலையில் உள்ளது.

மாவட்ட செயலகம் தொடங்கி அடிமட்ட அலுவலகம் வரை ஊழல் செய்வதற்கு தூண்டும் சக்திகளாக அதிகாரத்தில் உள்ள அரச அதிகாரிகளும் கடந்த ஆட்சியில் அங்கம் வகித்து தற்போதைய ஆட்சியிலும் அமைச்சர்களாக இருக்கும் அரசியல் வாதிகளுமே காரணமாக உள்ளனர்.

ஊழல் பிடிபட்டால் அதை காப்பாற்ற நாம் இருக்கிறோம் எங்களுடன் இணங்கி செயற்பட மறுத்தால் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி இடமாற்றம் பணி இடை நிறுத்தம் என பல பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

ஊழல் மாபியாக்களின் பிடியில் மட்டக்களப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் ஊழல் மாபியாக் குழுக்களின் கையில் சிக்கியுள்ளது. காணி வழங்குதல் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறை படுத்தல் ஒப்பந்தங்களை வழங்குதல் மண் அனுமதி உள்ளிட்ட அனைத்தையும் யாருக்கு வழங்க வேண்டும் அதன் ஊடாக தங்களுக்கு எவ்வளவு பங்கு போன்ற விடயங்கள் அனைத்தையுமே இந்த ஊழல் மாபியாக்களே தீர்மானிக்கின்றன.

இதில் அதிகாரம் படைத்த அரச அதிகாரிகள் தொடங்கி அமைச்சர்கள் நாடாளுமன்ற மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் இணைந்த ஒரு குழுவாகவே செயற்படுகின்றனர்.

இதில் ஒருவர் சிக்கினால் அந்த குழுவில் உள்ள ஏனைய அதிகாரம் படைத்த நபரிடமே அது குறித்த தகவல் செல்லும் அப்போது அதை அவர்கள் மறைத்து விடுகிறார்கள்.

அதையும் மீறி ஊழல் வெளியில் வந்தால் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி அதில் இருந்து தப்பித்து விடுகின்றனர். இந்த ஊழல் கலாசாரம் மட்டக்களப்பில் சர்வ சாதாரணமானதாக மாறியுள்ளதுடன் ஏனையவர்களையும் ஊழல் செய்ய தூண்டியுள்ளது.

மட்டக்களப்பில் உள்ள உயர் அரச அதிகாரிகளினால் கடந்த ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த ஊழல் கலாசாரம் தற்போது சாதாரண அலுவலகர் வரை தொடர்வதுடன் இன்று பணம் கொடுக்காமல் எதுவும் செய்ய முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இந்த நிலை இன்று பணம் கொடுத்து எதுவும் செய்யலாம் என்ற நிலையை மட்டக்களப்பில் உருவாக்கி உள்ளதோடு மக்கள் அதிகாரிகள் கேட்கும் முன்னரே இலஞ்சம் வழங்கும் நிலமை உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த நிலை மாற்றப்பட வேண்டுமானால் அனைத்து நிர்வாக தலைமைகளும் மாற்றப்பட்டு அந்த இடங்களுக்கு புதிய தலைமைகள் நியமிக்கப்பட வேண்டும்.

வெறுமனே ஆட்சி மாற்றத்தினால் மட்டக்களப்பில் எதுவும் மாறியதாக தெரியவில்லை எனவே நிர்வாக மாற்றமே ஊழல் மாபியாக் குழுக்களின் கட்டமைப்பை உடைத்து அவர்களை தனிமைப்படுத்தி அவர்களது செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் என்பதால் நிர்வாக மாற்றம் ஒன்றையே மட்டக்களப்பு மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

எனவே மாற்றம் ஒன்றே ஊழல் வாதிகளிடம் இருந்து மட்டக்களப்பு மக்களை காப்பாற்ற ஒரே வழி.