கேள்விக்குறியான நிலையில் கரையோர மக்களின் வாழ்க்கை

Report Print Yathu in கட்டுரை
advertisement

இலங்கையின் வடக்கு, கிழக்கு கரையோர மக்களின் தொழில் வாய்ப்புக்களும், பொருளாதாரமும் இன்று கேள்விக்குறியான நிலையில் காணப்படுகின்றது.

பரம்பரை பரம்பரையாக கடற்தொழிலையே நம்பி வாழ்ந்த மீனவ சமுகம் இன்று அந்த, தொழில்களை நிம்மதியாக செய்ய முடியாது வேறு தொழில்களை நாடி செல்லும் நிலை காணப்படுகின்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

யுத்தத்தினால் ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் மீண்டும் ஓர் யுத்தத்தினால் என, அடுக்கடுக்காக அழிவுகளையும், இழப்புக்களையும் எதிர்கொண்டு மீண்டும் ஒரு வாழ்வை கட்டியெழுப்புவோம் என்ற நம்பிக்கையோடு மீள்குடியேறியுள்ள மீனவர்கள் இன்று தங்களுடைய வாழ்வாதார தொழிலை சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது.

இந்திய மீனவர்களினுடைய அத்துமீறல்கள் ஒருபுறம் வெளிமாவட்ட மீனவர்களின், தடைசெய்யப்பட்ட தொழில்முறைகள் ஒருபுறம் இவர்களுடைய தொழில்களை கேள்விக்குறியாக்கியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள கடற்தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத் தொழிலை உரிய முறையில் முன்னெடுக்க முடியாது வேறு தொழில்களை நாடிச்செல்கின்ற நிலைமை அதிகளவில் காணப்படுகின்றது,

அதாவது நல்லாட்சி அரசிலும் கூட முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களின், பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வுகள் எவையும் கிடைக்கவில்லை என முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுமார் 73 கிலோமீற்றர் நீளமான கரையோர பகுதிகளில் தமது வாழ்வாதார தொழில்களை மேற்கொள்ளும் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்து வரும் சுமார் 4,600இற்கும் மேற்பட்ட கடற்தொழில் குடும்பங்களின் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் வகையில்,

தடைசெய்யப்பட்ட தொழில் நடவடிக்கைகள் மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறிய தொழில்கள் என்பவற்றால் தமது தொழில் சார் நடவடிக்கைள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தமக்கான தொழில்களை மேற்கொள்வதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தித்தருமாறு இப்பகுதி கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் அதிக கடல்வளத்தை கொண்ட கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, நாயாறு சாலை ஆகிய பகுதிகளில் வெளிமாவட்ட மீனவர்களின் தொழில்களால் தமது தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நல்லாட்சி அரசு தமக்கான வழிவகைகளை ஏற்படுத்தி தரவேண்டும் என இப்பகுதி கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

முல்லைத்தீவு மாவட்டத்தின், முகத்துவாரம் முதல் நல்லதண்ணீர்த் தொடுவாய் வரைக்குமான சுமார் 73 கிலோ மீற்றர் நீளமான கரையோர பகுதிகளை கொண்ட கடற்தொழில் பிரதேசங்களில் உள்ள 24 கடற்தொழில் சங்கங்களின் கீழ் உள்ள 4,600இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த கடலையும், கடற்தொழிலையும் நம்பியே வாழ்ந்து வருகின்றன. இவர்களின் வாழ்வாதாரமும் கடற்தொழிலே ஆகும்.

இந்த நிலையில் கடற்தொழில் குடும்பங்கள் 1991களிலும் அதற்கு பின்னான, காலப்பகுதியிலும் அதாவது 2000ஆம் ஆண்டு வரைக்கும் தொடர்ச்சியான, யுத்த பாதிப்புக்களை கொண்டு தங்களுடைய தொழில்களைச் செய்ய முடியாத நிலையில், இருந்ததோடு 2002ஆம் ஆண்டிற்கு பின்னர் ஏற்பட்ட ஒரு இடைவெளியில் தங்களுடைய தொழிலை மேற்கொண்டிருந்தனர்.

இதன் பின்னர் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தின் காரணமாக சகல தொழில் வளங்களையும் இழந்து தங்களுடைய உறவுகளையும் இழந்து நிர்க்கதியான நிலைக்குள் தள்ளப்பட்டனர்.

இதன் பின்னர் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதும், தொழில்களையும், உறவுகளையும் இழந்து, இழப்பதற்கு இனி எதுவும் இன்றி முட்கம்பி, வேலிகளுக்குள் முடக்கப்பட்டு மீண்டும் மீள்குடியேற அனுமதிக்கப்ட்பட்டனர்.

இவ்வாறு கடந்த 2010ஆம் ஆண்டு மீள்குடியேறிய இந்தக்கடற்தொழில் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக அவ்வப்போது அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஓரிரு வாழ்வாதார உதவிகளோடு வங்கிகளிலும் உறவினர் நண்பர்களிடமும், கடன்களைப் பெற்று பல இலட்சம் ரூபா பெறுமதியான தொழில் உபகரணங்களை கொள்வனவு செய்து, தங்களுடைய தொழில்களை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இந்த நிலையில் முல்லைத்தீவு கடற்பகுதிகளில் நிம்மதியாக, சுதந்திரமாக தொழில் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இந்திய மீனவர்களினது இழுவைப்படகுகள் இதனைவிட வெளிமாவட்டத்தின் மீனவர்களின் தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் இவர்களது தொழில்களை முழுமையாக பாதிப்படையச் செய்கிறது.

பாரம்பரிய முறைகளில் தொழில்களை மேற்கொண்டு வருகின்ற கொக்கிளாய் ஆறு, முகத்துவாரம், புளியமுனை ஆகிய பகுதிகளில் வெளி இணைப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட படகுகள், தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்துதல் என்பவற்றால் இந்த ஆற்றின் நீர் வாழ், வளங்கள் அழிக்கப்படுவதுடன் தொழில்களும் அற்றுப்போகின்றன.

இதேபோன்று வட்டுவாகல் ஆற்றில் கனிசமானளவு கடற்தொழிலாளர்கள் கடற்தொழில்களை மேற்கொள்கின்ற போதும் ஆற்றின் இரண்டு பக்கங்களும் படையினரின் கடடுப்பாட்டில் இருப்பதனால் சுதந்திரமாக தொழில் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.

இதைவிட முல்லைத்தீவு, வட்டுவாகல் பகுதியில் தனியார் மற்றும் பொதுக்காணிகள் என 617 ஏக்கர் காணிகளை கடற்படையினர் வைத்திருப்பதனால் இதற்குள் அடங்குகின்ற சாலை கடற்கரையோர பகுதிகளும் தொழில்களுக்காக அனுமதிக்கப்படவில்லை.

இதேவேளை முல்லைத்தீவு கரையோரப்பகுதிகளில் தடைசெய்யப்பட்ட தொழில்முறைகள் அதாவது, நிபந்தனைகளை மீறிய அட்டைத்தொழில் வெளிச்சம் பாச்சுதல் சுருக்கு வலை பயன்படுத்தல், உழவு இயந்திரங்களை கொண்டு கரைவலை வளைத்தல் போன்ற தொழில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் ஏராளமான கடற்தொழிலாளர்கள் தொழில் செய்ய முடியாது உள்ளனர்.

பல இலட்சம் ரூபா பெறுமதியான கடன்களைப் பெற்று கடற்தொழில் உபகரணங்களை கொள்வனவு செய்திருக்கின்ற போதும் உரிய தொழில்களைச் செய்யாத நிலையில் இதற்கான கடன்களை செலுத்தவும் குடும்பங்களினது வாழ்வாதாரத்திற்காகவும் வேறு தொழில்களை நாடி செல்கின்ற நிலைமையும் தொழில் வாய்ப்புக்களை தேடி அரபு நாடுகளுக்கும் செல்கின்ற நிலையும் காணப்படுகின்றது.

இந்த நிலையில் தங்களது வாழ்வாதாரத் தொழிலான கடற்தொழிலை நிம்மதியாக மேற்கொள்வதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தித்தருமாறு கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக மத்திய மாகாண அரசுகளிடமும் அது சார்ந்த அதிகாரிகளிடமும் கோரிக்கையை விடுத்து வருகின்றபோதும் இதுவரை அதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படவில்லை.

எனவே இந்தநிலை நீடிப்பதனால் எதிர்காலத்தில் சாத்வீக ரீதியிலான போராட்டங்களை முன்னெடுக்க போவதாகவும், கடற்தொழிலாளர்களும் கடற்தொழில் சங்கங்களும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரையோர மக்களின் தொழில் வாய்ப்பிலும் வாழ்வாதாரத்திலும் பாரிய முக்கியத்துவம் பெற்று விளங்கிய மீன்பிடியானது கடந்த முப்பது வருட காலப்போரினால் வீழ்ச்சி கண்டபோதும் தற்போது அவற்றில் முன்னேற்றத்திற்கான வழிவகைகள் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென பல்வேறு தரப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

advertisement