அம்பாறை கரையோர மாவட்டத்தில் 86 இடங்களில் புத்தர் சிலை அமைக்கும் வர்த்தமானி அறிவித்தல்

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் பகுதிகளான கரையோரப் பகுதிகளில் 86 இடங்களில் புத்தர் சிலை வைப்பதற்க்கான வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது.

மஹிந்த காலத்து அரசு இலங்கை முழுவதையும் சிங்கள மயமாக்குவது என்னும் திட்டத்தில் 2014 ஒக்டோபர் 10 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அறிவிப்புச் செய்துள்ள வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

2014 ஒக்டோபர் 10 வர்த்தமானி அறிவித்தல்

குறித்த வர்த்தமானி, கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான 246 இடங்கள் பற்றி அறிவிக்கின்றது.

அப்போதைய தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரிய கையொப்பமிட்டு, மஹிந்த அரசாங்கம் இந்த வர்த்தமானி அறிவித்தலை அப்போது அறிவிப்பு செய்துள்ளது.

பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 5 இடங்களும், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் 36 இடங்களும், இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் 13 இடங்களும், ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 9 இடங்களும், அக்கரைப்பற்று பிரதேசத்தில் 6 இடங்களும், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 11 இடங்களும், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 4 இடங்களும், கல்முனை பிரதேசத்தில் 2 இடங்களுமாக முஸ்லிம், தமிழர்களுக்குரிய 86 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் என்பது மனித சமுதாயம் தோன்றிய காலம் தொட்டு இன்று வரையும் தமிழ், முஸ்லிம்கள் வாழும் வாழ்ந்துவரும் பிரதேசங்களாகும்.

இந்தப்பகுதிகளில் சிங்களவர்கள் ஒரு நாளும் வாழ்ந்தது கிடையாது. அப்படி இருக்க பொத்துவில் திருக்கோவில், ஆலயடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, கல்முனை ஆகிய பிரதேசங்களில் எதற்காக புத்தர் சிலை வைக்க வேண்டும்.

குறித்த வர்த்தமானியில் பிரச்சினைக்குரிய இடங்களாக குறிவைக்கப்படுவது முஸ்லிம், தமிழர்களுக்குரிய பூர்வீக நிலங்களாகும்.

இறக்காமம் சிலைப் பதிப்புக்கு சூத்திரதாரியாக செயற்பட்டதாகக் கூறப்படும் அமைச்சர் தயாகமகே விடுத்துள்ள அறிக்கையொன்றில், கல்முனை தொடக்கம் பொத்துவில் வரைக்கும் தீகவாவிக்கு சொந்தமாக 12,000 ஏக்கர் காணிகள் உள்ளன என்று குறிப்பிட்டிருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

இறக்காமம், மாயக்கல்லி சிலை வைப்பு விவகாரம் கிழக்கு மாகாணத்தில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் மிக விரைவில் புத்தர் சிலைகள் எழும்பும். ஆங்காங்கு சிலைக்கு எதிராக தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்ப்புக்கள் கிளம்பும். இதன் மூலம் பாரிய திட்டம் ஒன்றில் அரசு முன்னகர்வு செய்யும்.

தமிழ் முதலமைச்சர், முஸ்லிம் முதலமைச்சர் என்ற கோசம்

ஆனால் இவைகளை உணராத தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுமேயில்லாத தமிழ் முதலமைச்சர், முஸ்லிம் முதலமைச்சர் என்ற கோசத்தோடு கிழக்கு மாகாண தேர்தலை நோக்கி இரண்டு தரப்பினரும் விஷம் கக்கவுள்ளார்கள்.

மட்டக்களப்பில் இருந்து இந்தக் கோசம் பவனி வரவுள்ளதாம். இந்தக் கோஷத்தால் ஹக்கீம் கட்சி பெருத்த வாக்கு வேட்டையில் ஈடுபடவுள்ளதாம்.

தமிழ் முஸ்லிம் மக்கள் தமிழ் முதலமைச்சர், முஸ்லிம் முதலமைச்சர் என்ற கோஷத்தால் மீண்டும் தமிழ் முஸ்லிம் உறவில் ஒரு பாரிய விரிசலை உருவாக்கவா என்ற கேள்வி பலமாக உள்ளது.

முஸ்லிம் முதலமைச்சர் என்று ஆட்சி புரிந்து முஸ்லிம் ஈழம் பெறவோ அல்லது முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளோ தீர்க்கவோ அல்லது புத்தர் சிலைகளை அகற்றவுமில்லை.

ஒரு போதும் தீர்த்துக் கொடுத்த பாடில்லை. அதே போன்று தமிழ் முதலமைச்சர் ஒருவர் கிழக்கை ஆட்சி புரிந்து தமிழ் மக்களுக்கு விமோட்சம் ஆகப் போவதுமில்லை.

வெறும் பந்தா காட்டவும் பவனி வரவும் ஒரு தனி நபரை கௌரவப்படுத்தவுமே ஒழிய தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இந்த முதலமைச்சர்களால் ஒன்றுமே ஆகப்போவதில்லை. இது நமது கண் முன்னே நடந்து வரும் யதார்த்தங்கள்.

மீண்டும் இரண்டு இனங்களையும் விஷம் கக்கவிட்டு பல இடங்களில் இரவோடு இரவாக புத்தர் சிலைகளை வைக்கப் போகின்றார்கள். ஆனால் முஸ்லிம் அரசியலைப்பொறுத்தமட்டில் முஸ்லிம் பகுதிகளில் புத்தர் சிலை வைப்பது ஒரு விடயமே கிடையாது. கையில் மொய் வைத்தால் அவர்களின் வாசலின் முன்பாகவும் புத்தர் சிலை வைக்கலாம்.

இந்த நல்லாட்சி என்ற அரசில்தான் பொத்துவில் நகரில் மிகப்பெரிய புத்த மத்திய நிலையம் அமைந்துள்ளது .அது நல்லாட்சி அரசின் அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. இறக்காமம் சிலை என்பது அத்துமீறி வைக்கப்பட்டது. நீதி மன்றக்கட்டளையை மீறி நடந்து கொண்டார்கள்.

அம்பாறை கரையோரப் பகுதிகளை குறி வைத்து புத்தர் சிலை வைப்பு என்பது நின்று விடப்போவதில்லை இந்த விடயம் மீண்டும் மீண்டும் தொடரும்.

இதை இரண்டு சிறுபான்மை அரசியல்வாதிகளும் சர்வேதேச நாடுகளிடம் முறையிட்டு தடுக்கலாம். ஆனால் எந்த வகையிலும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதியும் இந்த விடயத்தில் தமிழ் அரசியலுடன் ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள் என்பது மட்டும் உண்மை.

இப்போது ஹக்கீமுக்கு எதிராக களம் இறங்கியுள்ள ஹசான் அலி பஷீர் சேகு தாவூத் கூட தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து அரசியல் செய்யும் நோக்கம் இல்லாது முஸ்லிம் கூட்டமைப்பு என்ற ஒரு கோமாளி பாதையை நோக்கி நகர்ந்து வருகின்றார்கள்.

அதனால் ஹக்கீமுக்கு இந்த கூட்டமைப்பினால் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட போவதில்லை.

ஆனால் புத்தர் சிலைக்கு எதிராக தமிழ் அரசியலும், தமிழ் மக்களும் போராட வேண்டியுள்ளது. புத்தர் சிலை போராட்டம் என்பது வடக்கு, கிழக்கு முஸ்லிம் மக்களுக்கும் சேர்த்துதான் தமிழர் போராட்டம் அமையும்.

அம்பாறையில் முஸ்லிம், கூட்டமைப்பு என்று சில சில்லறைகள் கிளம்பி விட்டது. இவர்களின் கூத்தை கூர்ந்து பார்ப்போம். ஒன்றும் நடக்காது.