இலங்கையின் அரச இயந்திரத்தில் இராணுவத்தினரின் ஊடுருவல்!

Report Print Sujitha Sri in கட்டுரை

தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கமும் சரி கடந்த காலத்தில் இருந்த மஹிந்த அரசாங்கமும் சரி இராணுவத்தை நம்பியே தனது செயற்பாடுகளையும் மக்களுக்கான சேவைகளையும் மேற்கொண்டு வருகிறதாக பல்வேறு தரப்புகளாலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான கருத்துக்களுக்கு எல்லா விதமான பிரச்சினைகளிலும் பாரபட்சமின்றி இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு வருகின்றமையே காரணமாக அமைகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிற்கு இலங்கை இராணுவத்தின் தலைமைப் படைத்தலைவர் பதவி கொடுக்கப்பட்டமையே இந்த குற்றச்சாட்டுக்களுக்கு, வித்திட்டுள்ளதாக சமூகவியலளார்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மக்கள் தொடர்பான அனைத்து விடயங்களிலும் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டமையானது அரசியல் காய் நகர்த்தலாகவே சமூக ஆர்வலர்களால் நோக்கப்படுகிறது.

இலங்கையின் ஏனைய பகுதிகளை விடவும் வட மாகாணம் என்பது மிகவும் கலாச்சார தொன்மை மிக்க பகுதியாக அடையாளப்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக யாழ் மாவட்டம் கலாச்சாரத்தை உயிர் மூச்சாக கொண்டு விளங்கும் மாவட்டமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது யாழில் வாள்வெட்டுச் சம்பவங்கள், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், போதைப்பொருட்கள் பாவனை என்பன அதிகரித்து காணப்படுகின்றன.

இவ்வாறானதொரு நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக யாழில் படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், யாழிலிருந்து படையினரை வெளியேற்றும் செயற்பாட்டிற்கு இந்த கலாச்சார சீரழிவானது முட்டுக்கட்டை போட்டுள்ளது.

வட மாகாண முதலமைச்சர் தொடர்ச்சியாக வடக்கிலிருந்து இராணுவத்தினரின் வெளியேற்றத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையிலும், மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது அனைவரையும் ஒரு கணம் உறைய வைத்துள்ளது.

யாழில் நடைபெற்று வரும் கலாச்சார சீர்கேடுகளை தடுத்து முற்றுப்புள்ளி வைத்து, யாழில் பெண்கள் நள்ளிரவு 12 மணி வரையிலும் தனியாக செல்லும் சுதந்திரம் கிடைக்கும் வரையில் தான் இங்கிருந்து அசையப் போவதில்லை என தெரிவித்திருந்த இளஞ்செழியன் இலக்கு வைக்கப்பட்டமை மற்றும் யாழில் கடந்த சில நாட்களாக தொடரும் தாக்குதல் சம்பவங்கள் அனைவரையும் தற்போது இருள் சூழ தொடங்கும் முன்னதாகவே வீட்டிற்குள் முடங்க வைத்துள்ளது.

இந்த சம்பவங்கள் யாழிலிருந்த இராணுவத்தினரின் வெளியேற்றத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே செல்கிறது எனலாம். அத்துடன் காலம் செல்லச் செல்ல வடக்கில் படையினரின் ஆதிக்கமும் பரம்பலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் மூன்று நாட்களாக மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் நாடு முழுவதும் ஸ்தம்பிதம் அடைந்து போன நிலை ஏற்பட்டது.

இருப்பினும் எரிபொருள் அத்தியாவசிய சேவையாக அறிவித்த ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை மீண்டும் பணிக்கு திரும்புமாறு அறிவித்ததுடன், பணிக்கு திரும்பாத ஊழியர்கள் தாமாகவே பணியிலிருந்து விலகியதாக கருதப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்காக படையினரை களத்தில் இறக்கியது அரசாங்கம். இது ஒரு புறம் இருக்க இறுதி யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் படையினர் மீது தொடர்ந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

கடந்த வேலைநிறுத்தம் போன்ற மனித உரிமை கோரல் போராட்டங்கள் நடைபெற்ற போது அதற்கான தீர்வுகள் வழங்கப்பட்டதே தவிர அதனை அடக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால் தற்போது உரிமை கோரி மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களை இராணுவம் கொண்டு அரசு அடக்கி வருவதாகவும் இதனால் தீர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளதாகவும் இவ்வாறான சம்பவங்களை உற்று நோக்கி வரும் பொதுமக்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இருப்பினும் படையினர் மீது விசாரணைகள் நடத்துவதற்கு ஒரு போதும் அனுமதி வழங்கப் போவதில்லை என இப்போதுள்ள அரசாங்கமும், கடந்த காலத்தில் இருந்த அரசாங்கமும் வலியுறுத்தி வந்தன.

எல்லா விடயங்களிலும் வெளிப்படையாக மோதிக்கொள்ளும் மஹிந்த அணியும், மைத்திரி - ரணில் அணியும் படையினர் விவகாரம் தொடர்பில் ஒற்றுமை போக்கையே கடைப்பிடித்து வருகிறது.

இந்த நிலையானது அனைவரது மனதிலும் சந்தேகத்தை எழுப்பும் விதத்தில் அமைந்து வருகிறது. இருப்பினும் ஜெனீவா பிரச்சினையில் இராணுவத்தினரை அரசாங்கம் காட்டிக் கொடுக்கும் என்றவாறான கருத்தும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் இவ்வாறு அனைத்து விடயங்களிலும் இராணுவத்தினரை உள்நுழைக்கும் செயற்பாடானது அரசாங்கம் ஒருபோதும் இராணுவத்தை காட்டிக்கொடுக்காது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் போதைப்பொருள் பாவனை, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் கொள்ளை போன்ற சமூக விரோத செயற்பாடுகள் நடைபெறும் இடங்களில் இராணுவத்தினரை குவிப்பதை விடுத்து பொலிஸாரை பயன்படுத்துவதே பிரச்சினைகளுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.