வலுக்கிறது கடும் எதிர்ப்பு; தப்புமா ரவியின் பதவி?

Report Print Rakesh in கட்டுரை

சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் பெப்பர்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத் தலைவர் அர்ஜுன் அலோசியஸ், முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக பல்வேறு சாட்சியங்கள் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பதியப்பட்டுள்ளதால் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகள் தோற்றம் பெற்றுள்ளன.

குறிப்பாக, அர்ஜுன் அலோசியஸுடன் ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்ற தொடர்புகளால் பிணைமுறி மோசடி விவகாரத்தில் ரவி கருணாநாயக்கவுக்கு முக்கிய கதாப்பாத்திரமொன்று இருக்கக்கூடும் என்று சில அடிப்படைக் காரணிகளில் தெரியவந்துள்ளதால் அவருக்கு எதிராக தேசிய அரசு நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று கருத்துகள் வலுப்பெற்றுள்ளன.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விநியோகத்தின்போது மோசடி இடம்பெற்றதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் மீன்வள அமைச்சருமான மஹிந்த அமரவீர நிதிமோசடி பிரிவில் முறைப்பாட்டை தாக்கல் செய்திருந்தார். அதன்பின்னரே பிணைமுறி விவகாரம் பூதாகரமானதாக மாறியது.

அப்போதைய 100நாள் அரசில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டியூ. குணசேகர தலைமையில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற கோப் குழு இந்த விடயம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகளை நடத்தியது.

கோப் குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட சூழலில் நாடாளுமன்றம் அதிரடியாக கலைக்கப்பட்டு ஓகஸ்ட் 8ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டு புதிய கூட்டரசு அமையப்பெற்றது.

என்றாலும், புதிய நாடாளுமன்றிலும் பிணைமுறி விவகாரம் முற்றியதால் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் மீண்டும் கோப் குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.

இந்தக் குழுவின் அறிக்கையில் அர்ஜுன் மகேந்திரன் பிணைமுறி மோசடியில் நேரடியாக தொடர்புபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே ஜனாதிபதி ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதி நீதியரசர்களான கே.டி.சித்திரசிறி, பி.எஸ்.ஜயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற முன்னாள் கணக்காளர்நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி உள்ளிட்ட மூவர் இவ்வாணைக்குழுவின் விசாரணையாளர்களாக நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதிமுதல் 2016ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற அனைத்து பிணைமுறி மோசடிகள் குறித்தும் இந்த ஆணைக்குழுவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. ஆணைக்குழுவால் சர்ச்சைக்குரிய மோசடியாக கருதப்படும் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி பெப்பர்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்துக்கு விநியோகிக்கப்பட்ட பிணைமுறிகள் தொடர்பில் இதுவரை பல்வேறு உண்மைகள் வெளிகொணரப்பட்டுள்ளன.

அதன் ஒரு கட்டத்திலேயே அர்ஜுன் அலோசியஸ் மற்றும் முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து அண்மையில் வெளியாகிய தகவல்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தன.

ரவி கருணாநாயக்கவும் அவரது குடும்பமும் தற்போது வசித்துவரும் மொனார்க்ஸ்ரீ ரெசிடன்ஸி மனைத்தொகுதியை அர்ஜுன் அலோசியஸே பெற்றுக்கொடுத்துள்ளதாகவும், அதற்கான வாடகையை அவரே செலுத்தியதாகவும் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக பதவிவகித்த காலப்பகுதியில் அர்ஜுன் அலோசியஸுடன் சிங்கப்பூரில் அடிக்கடி சந்தித்துக்கொண்டதாக விசாரணையின்போது ஆணைக்குழு கேள்வியெழுப்பியிருந்தது.

குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்புகள் என பலதரப்பட்ட விடயங்களில் இருவருக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து 2ஆம் திகதி இடம்பெற்ற விசாரணையில் ரவி கருணாநாயக்கவிடம் கேள்விகள் தொடுக்கப்பட்டிருந்தாலும் அனைத்தையும் அவர் மறுதளித்திருந்தார்.

தேசிய அரசிலும் நாடாளுமன்றத்தில் எதிர்த்தரப்பிலும் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ளதால் அவர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்ற கருத்து மேலோங்கியுள்ளது. பொது எதிரணி இவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சபாநாயகரிடம் சமர்ப்பித்திருந்தது. சு.கவின் தரப்பில் ஜனாதிபதிக்கும் இவரை உடனடியாக அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகிறது.

ஜனாதிபதியும் இந்த விடயம் குறித்து ஆராய்ந்துவரும் சூழலில் இன்னும் ஓரிரு தினங்களில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக சு.கவின் வட்டாரங்களில் இருந்து அறியமுடியகின்றது.

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான கடும் எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ளதால் அவரின் பதவி விரைவில் பறிபோகக்கூடிய சூழல் அதிகமாக உள்ளதாக அரசின் தகவல் அறியும் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

advertisement