வித்தியா கொலை வழக்கில் பொலிஸாரின் விசாரணையில் நம்பிக்கையில்லை! விஜயகலா விடுத்த அறிவிப்பு

Report Print Jeslin Jeslin in கட்டுரை

கால மாற்றங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு மனிதனும் அதற்கேற்ப இசைவாக்கமடைந்து வாழ பழகிக்கொண்டுள்ளான். மனிதன் மாத்திரமல்ல அவன் சார்ந்த சமூகமும் கூட அதற்கேற்றாற்போல் வாழ கற்றுக்கொண்டுள்ளன.

ஒரு சமயத்தில் கல்வி, சமூக விழுமியங்கள், ஒழுக்கங்கள் பண்பாடு என உயர் மட்டத்தில் அனைவராலும் மதிக்கத்தக்க வகையில் வாழ்ந்த ஒரு சமூகம் கூட காலங்களுக்கு ஏற்ப மாற்றமடைந்து விடுகின்றது..

அதை பிரதிபலிக்கும் வகையில் அரங்கேறிய நிகழ்வுதான் யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை.

வித்தியா என்ற பெயர்... 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் சாதாரணமாக உச்சரிக்கப்பட்ட, அனைவராலும் சுமூகமாக பயன்படுத்தப்பட்ட அந்த பெயர் காலப்போக்கில் அனைவரது மனதிலும் கடும் துயரை ஏற்படுத்துவதாக அமைந்துவிட்டது.

இதேவேளை வித்தியா படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் பல்வேறு தரப்பினரும், அரசியல் வாதிகளும் கண்டனங்கள் வெளியிட்டிருந்தனர்.

அத்தோடு வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் கோரிக்கைகளும், போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

அந்தக் கோரிக்கைகள், அரசியல்வாதிகளின் அறிக்கைகள் என்பன காலப்போக்கில் மாற்றங்களை ஏற்படுத்துவதாய் கூட அமைந்திருக்கின்றது. சில அறிக்கைகள் பல சந்தேகங்களை தோற்றுவிப்பதாயும் அமைந்திருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது

இந்நிலையில் வித்தியா படுகொலை செய்யப்பட்ட தினத்திலிருந்து வித்தியா கொலை வழக்கின் போக்கு மற்றும் சமூக போக்கு என்று ஒரே பார்வையில்.....

கடந்த வார தொடர்ச்சி..

வித்தியா கொலை செய்யப்பட்ட தினத்திலிருந்து பல்வேறு பிரதேசங்களிலும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு பேரணிகள் கண்டன அறிக்கைகள் என தொடர்ந்து சென்றன.

2015ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் வித்தியா கொலை வழக்குத் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் குரல் எழுப்பப்பட்டது.

நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும் அளவிற்கு துயரத்தை ஏற்படுத்தியிருந்தது வித்தியாவின் கொலை என்பது இதிலிருந்து புலப்படும்.

மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை திட்டமிட்ட முறையில் திசை திருப்ப முயற்சி செய்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதற்கு மறுதினம் 2015 மே 22ஆம் திகதி மாணவி வித்தியாவின் கொலைக்கு நீதி கேட்டு வயோதிப தாயொருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அந்த வயோதிப தாயிடம் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் முறைகேடான வார்த்தை பிரயோகத்தைப் பயன்படுத்தியமை அன்றைய தினம் மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.

அன்றைய தினமே புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை விடயத்தில் நீதி நிலைநாட்டப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு மே 25ஆம் திகதி வித்தியாவை வன்புணர்விற்குட்படுத்திப் படுகொலை செய்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான சுவிஸ்குமார் என்கின்ற மகாலிங்கம் சிவகுமார் தமது நாட்டு பிரஜை அல்ல என சுவிஸ் தூதரகம் அறிவித்திருந்தது.

கொழும்பிலுள்ள சுவிஸ் தூதுவராலயம் குறித்த அறிவித்தலை விடுத்திருந்தது.

இது இவ்வாறு செல்ல மீண்டும் 2015 மே 27ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் புங்குடுதீவு மாணவியின் படுகொலை விசாரணையில் பொலிஸார் மீது நம்பிக்கையில்லை என ஒரு அறிவித்தலை விடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

2015 ஜூன் மாதம் 1ஆம் திகதி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அன்றைய தினம் யாழ். நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மீண்டும் ஒரு யுத்த சூழலை நினைவுபடுத்துவது போல விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் என பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து இடைப்பட்ட காலப் பகுதிகளில் ஆங்காங்கே போராட்டங்களும், எதிர்ப்புப் பேரணிகளும் இடம்பெற்று வந்த நிலையில் 2015 செப்டம்பர் 1ஆம் திகதி வித்தியாவின் கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் 9 சந்தேக நபர்களும் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 9 சந்தேக நபர்களுக்கும் 2015 செப்டம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை அன்றைய தினம் 09 சந்தேகநபர்கள் சார்பிலும் சட்டத்தரணி ஒருவர் முதல் தடவையாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து 2015 செப்டம்பர் 29ஆம் திகதி 9 சந்தேக நபர்களும் ஊர்காவற்துறை நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது மேலும் ஒருவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு சந்தேக நபர்கள் 9 பேரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு இதன்போது உத்தரவிடப்பட்டது.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கூறிய விடயத்தை கருத்திற்கொண்டு நீதவான் வழக்கு விசாரணையை ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரை ஒத்திவைத்திருந்தார்.

தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஊர்காவற்துறை நீதவான் எஸ்.லெனின் குமார் உத்தரவு பிறப்பித்திருந்தார். தொடர்ந்தும் சந்தேக நபர்களை ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டிருந்தார்.

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்களை நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதேவேளை நான்கு, ஏழு மற்றும் ஒன்பதாம் இலக்க சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி பீ.பல்கமகே அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

நவம்பர் மாதம் 9ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதும் சந்தேகநபர்களை நவம்பர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

2015 நவம்பர் மாதம் 23ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஜின்டெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் மரபணு சோதனை என்பனவற்றின் அறிக்கைகள் கிடைக்காமையால் டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.

2015 டிசம்பர் முதலாம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்காம், ஏழாம் மற்றும் ஒன்பதாம் இலக்க சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணியொருவர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். தொடர்ந்து சந்தேகநபர்கள் டிசம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

2015 டிசம்பர் மாதம் 15ஆம் திகதி 10ஆவது சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். தொடர்ந்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு அமைய மேலதிக விசாரணைகளுக்காக 5ஆம் 6ஆம் மற்றும் 10ஆம் சந்தேகநபர்களை மெகசீன் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நீதவான் அனுமதி வழங்கியிருந்தார்.

எஞ்சிய 7 சந்தேகநபர்களையும் தொடர்ந்தும் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் அன்றைய தினம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கு தொடர்ந்தும் டிசம்பர் மாதம் 28ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 2015 டிசம்பர் மாதம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபர்களை 2016 ஜனவரி மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்தோடு, இலக்கம் ஐந்து, ஆறு மற்றும் பத்தாம் இலக்க சந்தேக நபர்களான சந்திரகாசம், துஷாந்தன், ராஜ்குமார் ஆகிய மூவரையும் கொழும்பு மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்..

கடந்த வார கட்டுரையை பாரக்க..

மர்மமான முடிச்சுக்களை அவிழ்த்து விட்டது வித்தியாவின் வழக்கு

தொடரும்...