ஒரே நாளில் மாறிய மஹிந்த! ஜனாதிபதி, பிரதமரின் பதில் என்ன? சர்ச்சைகளுக்கு நடுவில் ரவி..

Report Print Shalini in கட்டுரை

அண்மைக்காலமாக இலங்கை அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விடயமாக மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை மோசடிகள் காணப்படுகின்றன.

இதில் நாட்டின் முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமாக உள்ள ரவி கருணாநாயக்கவின் பெயரும் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோரின் பெயர்கள் கூடுதலாக அடிப்படுவதையும், அவர்கள் குறித்து செய்திகள் வெளிவருவதையும் நாம் அவதானித்திருக்கின்றோம்.

அந்த வகையில் ரவி கருணாநாயக்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அரசியல் மட்டத்திலிருந்து பல சர்ச்சைகளும், சந்தேகங்களும் எழுந்திருந்தன.

ஆளும் கட்சி தொடக்கம் கூட்டு எதிர்க்கட்சியினர் வரை தற்போது ரவிக்கு எதிராக கருத்து வெளியிட்டு வருகின்றமை யாவரும் அறிந்த ஒன்றே.

ஜே.வி.பி, ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.சு.க உட்பட அனைத்து கட்சிகளின் பார்வையும் நாட்டின் முன்னாள் நிதிஅமைச்சர் பக்கம் திரும்பியுள்ளதுடன், இதில் சிலர் திருட்டுப் பட்டமும் கட்டி விட்டார்கள் என்றால் அது மிகையாகாது.

இது குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

பிரதமர்

“எமது அரசாங்கத்தில் ஊழல் செய்வர்களை வைத்திருக்க மாட்டோம். ஐக்கிய தேசியக் கட்சி திருடர்களின் கட்சியல்ல. திருடர்கள் இருந்தால், கட்சியில் நீக்கி விடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டதாக அறிக்கை ஒன்று ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன. மேலும், சமகாலத்திலும் தூய்மையற்ற நிலையில் காணப்படுவதனால் விரைவில் அரசாங்கத்தை சுத்தப்படுத்தி தூய்மையான ஆட்சி ஒன்று முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர், ஜனாதிபதி

முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவின் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து முக்கிய கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர்.

இரு தலைவர்களிடமும் அதாவது ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பிரதமரிடமும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடமும் இது தொடர்பில் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இதில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அமைச்சுப் பதவிலியிருந்து விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக குறித்த சந்திப்பின் முடிவில் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பில் பிரதமரும், ஜனாதிபதியும் உத்தியோகபூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

நம்பிக்கையில்லா பிரேரணை

இந்த நிலையில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் 33 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ரவிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்திருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவின் தலைமையில் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த வாரம் கையளிக்கப்பட்டிருந்தது.

கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் இதில் கையெழுத்திட்ட போதும் மஹிந்த ராஜபக்ஸ தொடர்பில் இருவேறு செய்திகள் வெளியாகியிருந்தன.

ரவிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதாகவும், ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் இரு வேறு கருத்துக்களை மஹிந்த வெளியிட்டிருந்தார்.

மஹிந்தவின் கருத்து

  • 05ஆம் திகதி கூறியது..

“என்னுடைய நிலைப்பாடு இங்கு முக்கியமல்ல. மக்களின் நிலைப்பாடே மிகவும் முக்கியம். அனைவரும் கையெழுத்திட வேண்டியதில்லை. நான் வாக்களிக்க செல்லப் போவதில்லை. பாராளுமன்றத்தில் இதுவரை நான் வாக்களித்ததில்லை. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊடாக எடுக்கப்பட்ட தீர்மானமே அது.

  • 06ஆம் திகதி கூறியது

இந்த அரசாங்கத்திற்கு எதிராக சென்று மிக விருப்பத்துடன், ரவிக்கும் எதிராக நான் வாக்களிப்பேன். இதனைத் தவிர்த்திருக்க யாருக்கும் முடியாது. நான் முதல் தடவையாக இதில் தான் வாக்களிக்கிறேன். அதிகளவானோர் வாக்களிப்பர் என நான் நினைக்கின்றேன். ஐக்கிய தேசியக் கட்சியின் சிலரும் வாக்களிப்பர் என இரு நாட்களிலும் வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

மேலும், இந்த நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் வாக்கெடுப்பிற்கு வரும் போது அதற்கு ஆதரவாக தாம் வாக்களிப்பதாகவும், தாம் வாக்களிக்கப் போவதில்லை என பிழையான தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி வருவதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

ரவியின் பதிவு

மஹிந்தவின் இந்த மாறுபட்ட கருத்துக்களும், பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் கருத்துக்களும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சைகளை எழுப்பியுள்ள நிலையில், ரவி கருணாநாயக்க தனது பேஸ்புக் தளத்தில் ஒரு கருத்தினை பதிவேற்றியுள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் என்னை பதவியில் இருந்து விலகுமாறு கூறியிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளது. அப்படியான பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்பதை தெளிவுப்படுத்த நான் விரும்புகிறேன் என தனது தரப்பு கருத்துக்களை பதிவேற்றியுள்ளார்.

முடிவு என்ன?

கடந்த கால ஊழல்களையும் தாண்டி தற்போது ஆட்சியிலிருப்போர் மீதும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதை சிலர் வரவேற்றுள்ள நிலையிலும், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் செய்திருப்பரானால், அந்த குற்றங்கள் நிரூபிக்கப்படுமிடத்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என்பது தொடர்பிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.