அதிகரிக்கும் போராட்டங்களுக்கான நிரந்தர தீர்வு என்ன...?

Report Print Thileepan Thileepan in கட்டுரை

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டரை ஆண்டுகள் பூர்த்தியடைந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தென்பகுதியில் தொழிலாளர்கள் வர்க்கம் தமது உரிமைகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் தொழிற்சங்க போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வடக்கு, கிழக்கு மக்கள் தமது இனப்பிரச்சனையை முன்வைத்தும், தமது நாளாந்த பிரச்சனைகளை முன்வைத்தும், தமது வாழ்வுரிமைக்காவும், உறவுகளைத் தேடியும் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இரண்டு போராட்டங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசங்களை அவதானிக்க முடிகிறது.

தென்பகுதியில் நடைபெறுகின்ற போராட்டங்கள் ஒரளவு தீர்வு கண்டவுடன் அல்லது அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்தவுடன் கைவிடப்படுகின்றன. இந்தப் போராட்டங்கள் குறித்து அரசாங்கம் கூடிய கரிசனையும் செலுத்தி வருகிறது. ஆனால், வடக்கு, கிழக்கில் நடைபெறும் போராட்டங்கள் கவனிப்பாராற்ற நிலையில் தொடர்ச்சியாக 150 நாட்களைக் கடந்து நடைபெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிவேண்டி மக்கள் வீதிகளில் இறங்கியிருக்கிறார்கள்.

தமது பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி அந்த காணி உரிமையாளர்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த இரண்டு விடயங்களிலும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் அவைகள் ஒரு முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை. இவ்வாறு மக்கள் ஆட்சி மாற்றத்தின் பின் கிடைத்திருக்கின்ற ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி தமது உரிமைக்காக போராடி வரும் நிலையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெறும் சில சம்பவங்கள் அந்த மக்களையும் கிலி கொள்ள வைத்துள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்சூடும், ஆவா குழுவினர் என்ற சட்டவிரோத குழுக்களை கட்டுப்படுத்தல் என்ற பெயரிலும், மணற்கொள்ளையில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்தல் என்ற பெயரிலும், தாக்குதல் முயற்சிகளை மேற் கொண்டதாக முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டமையும் வடக்கு, கிழக்கில் பல நடவடிக்கைகளை இராணுவமும், பொலிஸாரும் மேற்கொண்டிருந்தது.

இவற்றுக்கு எல்லாம் சிகரம் இட்டதனைப் போன்று அண்மையில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்கு வைத்தும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றிருக்கின்றது.

நீதிபதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடானது இந் நாட்டின் சாதாரண மக்களின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தியிருக்கின்றது. இவைகளுக்கு பின்னால் யார் இருக்கின்றார்கள் என்பதும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதற்கு என்ன காரணம் என்பதும் ஆராயப்பட வேண்டியதொன்றே.

2009 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் அமைதிச் சூழல் ஏற்பட்டிருந்தாலும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஒருவகை அச்ச நிலை தொடரவே செய்கிறது. இந்த பகுதிகளை ஒரு அச்ச நிலையில் வைத்திருப்பதற்கு திரைமறைவில் சில சக்திகள் செயற்படுவதாகவே எண்ண வேண்டியுள்ளது. கிறிஸ் பூதம், ஆவா குழு, துப்பாக்கி சூடு, புலிகள் மீள் உருவாக்கம், கைதுகள் என காலத்திற்கு காலம் மாறுபட்ட சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.

மறுபக்கம், புதிய அரசியல் யாப்பிற்கு எதிராக மகாசங்கத்தினரும், மஹிந்த தரப்பினரும் செயற்படும் விதம் வடக்கு, கிழக்கு வாழ் மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. அரசாங்கம் பௌத்த மதகுருமார்களின் ஒப்புதல் இன்றி எதையும் நிறைவேற்ற மாட்டோம் என்றும் உறுதியளித்துள்ளது. அதேநேரம் புதிய அரசியல் யாப்புக்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு இருப்பதாகவும் கூறுகின்றது. இந்த நிலைப்பாடுகளின் காரணமாகவே மீண்டும் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டு விடுமோ என்று தமிழ் மக்கள் மத்தியில் ஐயமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. மக்களுடைய இந்த எண்ணங்களுக்கு அண்மையில் வடக்கு, கிழக்கில் ஏற்பட்டிருக்கும் சம்பவங்களும் உரமூட்டுகின்றன.

இந்த நாட்டில் தற்போது உள்ள சகல பிரச்சனைகளுக்கும் மூல காரணமாக இருப்பது தேசிய இனப்பிரச்சனையே. அதனை சரியாக கையாளாமல் எந்தவொரு பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு காண்பது என்பது கடினமான விடயம். உதாரணமாக அம்பாந்தோட்டையில் சீனா அமைக்கவிருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் அதனைப்போன்று திருகோணமலையில் ஜப்பானிற்கும், இந்தியாவிற்கும் வழங்கவிருக்கின்ற எண்ணைக் குதங்களும் இலங்கை கனியவள ஊழியர்களின் எதிர்ப்புகளுக்கும் கண்டனத்திற்கும் உட்பட்டுள்ளது.

சீனாவிடம் கடந்த அரசாங்கம் சர்வதேச அழுத்தத்தை சமாளிப்பதற்காகவும், கடந்த அரசாங்கத்தின் மேல் சர்வதேசத்தால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விடுவிப்பதற்காகவும், தென்பகுதி மக்களிடையே தனது வெற்றி வாதத்தை முன்வைத்து வாக்கு வங்கிகளை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் மஹிந்த அரசாங்கம் சீனாவிடம் இருந்து ஏராளமான நிதி உதவிகளை பெற்றுக் கொண்டதுடன், இராஜதந்திர உறவுகளையும் பலப்படுத்திக் கொண்டது. இதன்காரணமாக இலங்கையின் மீது சீனாவின் பிடி இறுகியதுடன் சீனாவை விட்டு விலக முடியாத நிலையும் ஏற்பட்டு இருந்தது.

சீனாவிடம் வாங்கிய மித மிஞ்சிய கடன் தொகையானது சீனா எங்கு எங்கு எல்லாம் இடம் வேண்டும் எனக் கேட்கிறதோ அங்கெல்லாம் இலங்கை தனது இடத்தை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளியது. அதே சமயம் மேற்குலக நாடுகளின் ஆசியுடனும் அயல் நாடான இந்தியாவின் அனுசரணையுடனும் ஆட்சி அமைத்த புதிய அரசாங்கம் ஒரு புறம் சீன சார்ப்பு கொள்கையையும், மறுபுறத்தே அமெரிக்கா உள்ளிட்ட சீனாவுக்கு எதிரான நாடுகளுடனும் தொடர்புகளை பேண வேண்டியுள்ளது. சீனாவை வழிக்கு கொண்டு வருவதற்கும், இலங்கை சீனாவின் பக்கம் அதிகம் சார்ந்து விடாமல் இருப்பதற்கும் சீனாவிற்கு எதிரான நாடுகள் அனைத்துக்கும் இனப்பிரச்சனை ஒரு துரும்புச் சீட்டாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில் அரசாங்கம் இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை எட்டாமல் எந்த நாட்டுடனும் ஒரு சுமுகமான உறவை பேண முடியாது. கடந்த அரசாங்கத்தைப் போல் நாங்கள் யாருக்காவும் எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று பொறுப்பின்றி செயற்படவும் முடியாது. உள்ளாட்டு ஊழியர்களின் அச்சத்தின் காரணமாக எழுந்திருக்கும் சீன எதிர்ப்பும், சர்வதேச சமூகத்தின் சீன எதிர்ப்பும் வேறு வேறு நலன்களை கொண்டதாக இருக்கின்ற போதிலும், இதற்கு மூல காரணமாக இருப்பது இனப்பிரச்சனை என்பது இங்கு விளங்கிக் கொள்ள வேண்டிய விடயம்.

ஆட்சி மாற்றத்திற்கு உதவிய சர்வதேச நாடுகள் அடிப்படையில் சீன எதிர்ப்பு கொள்கையை கொண்டிருந்தாலும், தமிழ் தரப்பை இணக்க வைப்பதற்கு இனப்பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டன. இலங்கையில் தங்களுக்கு ஒரு நிலம் கிடைத்தவுடன் இனப்பிரச்சனையை மெல்ல கைகழுவுகிறதா என்ற எண்ணம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டும் உள்ளது. இதன் காரணமாக தற்போது அந்த நாடுகள் இலங்கையின் மீது இராஜதந்திர ரீதியில் லேசான அழுத்தங்களை பிரயோகிகத் தொடங்கியுள்ளன. ஆகவே தமக்கு ஆதரவு அளித்த நாடுகளுக்காகவும், இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டிய அவசியமுள்ளது.

ஒட்டுமொத்தத்தில் இனப்பிரச்சனையில் இருந்து விலகி இந்த அரசாங்கம் யாருக்கும் எத்தகையதொரு தீர்வையும் கொடுத்து விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனையே புதிது புதிதாக ஏற்படும் போராட்டங்கள் வெளிப்படுத்தியும் இருக்கின்றது. இத் தருணத்தை தமிழ் தரப்பினர் சரியாக பயன்படுத்தி கொண்டு அரசாங்கத்தின் மீது உரிய அழுத்தத்தை செலுத்தி தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையிலும், நிரந்தர தீர்வை எட்டுவதற்கும் முயற்சிக்க வேண்டும்.

அரசாங்கம் இனப்பிரச்சனைக்கான தீர்வை இனியும் தள்ளி வைக்காமல் பல்வேறு விடயங்களை முன்வைத்து அதனை திசை திருப்பாமல் இதய சுத்தியுடன் தீர்வு காண்பதற்கு முன்வரவேண்டும். இதுவே இந்த நாட்டை வலுவான நிலைக்கு இட்டுச் செல்வதற்கு உதவும்.