கானல்நீராகுமா ஐரோப்பிய நீதிமன்றத்தின் தடைநீக்க ஆணை?

Report Print Eelam Ranjan Eelam Ranjan in கட்டுரை

பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை நீக்குமாறு கடந்த 26.07.2017 அன்று ஐரோப்பிய ஒன்றியப் பேரவைக்கு (Council of the European Union) அதன் அதியுயர்நிலை நீதிமன்றமாகிய ஐரோப்பிய நீதிமன்றம் (European Court of Justice) பிறப்பித்த ஆணையானது உலகத் தமிழர்களிடையே ஆரம்பத்தில் பெரும் பரபரப்பையும், பின்னர் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இதற்குக் காரணம் ஐரோப்பிய நீதிமன்றத்தின் ஆணை வெளிவந்த சில மணிநேரங்களில் கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதரகம் வெளியிட்ட அறிவித்தல்தான்.

ஐரோப்பிய நீதிமன்றத்தின் ஆணை வெளிவந்ததுமே அனைத்து ஊடகங்களும் - அவை தமிழ் ஊடகங்களாக இருந்தாலும் சரி, மேலைத்தேய ஆங்கில ஊடகங்களாக இருந்தாலும் சரி, இந்திய ஊடகங்களாக இருந்தாலும் சரி, சிங்கள ஊடகங்களாக இருந்தாலும் சரி - தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கப்பட்டு விட்டதாகவே செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும் இது பற்றி அறிக்கை வெளியிட்ட கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதரகம், ஐரோப்பிய நீதிமன்றத்தின் ஆணை 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளின் விடயத்தில் மட்டுமே பொருந்தும் என்றும், 2015ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தால் வேறு தடைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருப்பதால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடரும் என்றும் அறிவித்திருந்தது.

இவ் அறிக்கையில் ஆழமாகப் பொதிந்திருந்த சட்டபூர்வமான மற்றும் இராசரீக அம்சங்களைப் புரிந்து கொள்ளத் தவறிய சில ஊடகங்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அது மீண்டும் அமுல்படுத்தப்பட்டு விட்டதாக செய்தி வெளியிட்டிருந்தன.

உண்மையில் என்னதான் நடந்தது? தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதா? அப்படியாயின் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடரும் என்று எந்த அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்புத் தூதரகம் அறிக்கை வெளியிட்டது? ஐரோப்பிய நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் அதிகாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய கட்டமைப்புக்களுக்கு உள்ளதா? இவையெல்லாம் கடந்த இரண்டு வாரங்களாக எம்மவர்களால் பதில் காணப்படாத கேள்விகளாக உள்ளன.

இக் கேள்விகள் அனைத்துக்கும் இலகுவான முறையில் அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய பதிலை அளிப்பதே இப்பத்தியின் நோக்கமாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை 29.05.2006 அன்று பிறப்பிக்கப்பட்ட தடையாகும். இது 11.09.2001 அன்று அல்கைதா இயக்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நியூயோர்க் இரட்டைக் கோபுரங்கள் மற்றும் பென்ரகன் கூட்டுப்படைத் தலைமையகம் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து 28.09.2001 அன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 1373ஆம் எண்ணுடைய தீர்மானத்தின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தால் நிறைவேற்றப்பட்ட 2580 எண்ணுடைய சட்டத்திற்கு உட்பட்டு கொண்டு வரப்பட்ட தடையாகும்.

எஇதற்கு முன்னர் 09.10.1997 அன்று அமெரிக்காவும், 28.02.2001 அன்று பிரித்தானியாவும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டுத் தடை செய்திருந்தன.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கு முன்னர் இதற்கான காரணம் அதிகாரபூர்வமான முறையிலும், அதிகாரபற்றற்ற முறையிலும் அமெரிக்காவாலும், பிரித்தானியாவாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

1996ஆம் ஆண்டு தை மாதம் கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையம் மீது மேற்கொள்ளப்பட்ட வாகன மனிதவெடிகுண்டுத் தாக்குதலை அடுத்து பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் பிரதிநிதியொருவர் ஊடாக அமெரிக்காவால் வன்னிக்கு செய்தியொன்று அனுப்பப்பட்டது.

அதில், ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, சந்திரிகா அம்மையாரின் அதிகாரப் பரவலாக்கத் தீர்வுப் பொதியைத் தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்க மறுக்கும் பட்சத்தில், அவர்களைப் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா பட்டியலிடும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று ஆயுதப் போராட்டத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்வதன் காரணமாகவே அவர்கள் மீதான தடை போடப்படுவதாக, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பிரித்தானியாவும் செய்தி அனுப்பியது.

அதாவது, தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்துவதும், அதன் மூலம் தமிழீழத் தனியரசுக்கான ஆயுதப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதுமே இத்தடைகளின் நோக்கம் என்பதை அமெரிக்காவும், பிரித்தானியாவும் தெரியப்படுத்தியிருந்தன.

இதே நோக்கத்துடனேயே 29.05.2006 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியமும் தடை செய்திருந்தது. அக்காலப் பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்தாலும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான நிழல் யுத்தம் தீவிரமடைந்து, அதிகாரபற்றற்ற முழு அளவிலான யுத்தமாகப் பரிணமிக்கும் கட்டத்தை அடைந்திருந்தது.

இனம் தெரியாத நபர்களால் நிகழ்த்தப்பட்ட ஆட்கொலைகள் என்ற நிலை மாறி, கொழும்பில் மனிதவெடிகுண்டுத் தாக்குதல்களும், தமிழீழத்தில் வான்வழித் தாக்குதல்களும் நிகழத் தொடங்கியிருந்த கால கட்டம் அது.

அன்றைய காலகட்டத்தில் எல்லோராலுமே ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. இரு தரப்பினரும் முழு அளவிலான யுத்தம் ஒன்றுக்குத் தயாராகி விட்டார்கள் என்பதுதான் அது. இதனைத் தடுப்பதில் முழுமையான அக்கறை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இருந்திருக்குமாயின், அது இரு தரப்பினர் மீதும் சம அளவிலான அழுத்தங்களைப் பிரயோகித்திருக்க வேண்டும். ஆனாலும் அவ்வாறு ஐரோப்பிய ஒன்றியம் செய்யவில்லை.

மாறாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது மட்டுமே ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது. மறுபுறத்தில் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் விடயத்தில் இடையிடையே இராசரீக வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு தனது அதிருப்தியை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டாலும், அதன் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் பெரும்பாலும் நெகிழ்வுப் போக்குடனேயே நடந்து கொண்டது.

இதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது அவ்வியக்கத்தை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்தி, அதன் விளைவாக ஆயுதப் போராட்டத்தின் மூலம் அதற்குக் கிடைக்கக்கூடிய வெற்றி வாய்ப்புக்களை இல்லாதொழிப்பதே தமது தடையின் நோக்கம் என்பதை ஐரோப்பிய ஒன்றியம் வெளிப்படுத்தியிருந்தது. அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை என்பது அமெரிக்கா, பிரித்தானியா ஆகியவற்றின் வழியைத் தழுவி எடுக்கப்பட்ட அரசியல் முடிவாகும்.

முழு அளவிலான யுத்தம் ஒன்றுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் தள்ளப்பட்டுக் கொண்டிருந்த அன்றைய காலப்பகுதியில், இதனை சட்டரீதியாக எதிர்கொள்வதால் எவ்விதமான பயனும் ஏற்படாது என்பதைத் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிந்திருந்தார்கள்.

அவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத் தடையை சட்டரீதியாக எதிர்கொள்வதாயினும், அதற்கான முதற்படியாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் எண்ணம் தமக்குத் துளியளவும் இல்லை என்ற உறுதிமொழியைத் தாம் அளிக்க வேண்டும் என்பதும், அது சாத்தியமற்ற ஒன்று என்பதும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தெரியும். இதுதான் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்கு எதிராக எவ்விதமான வழக்குகளையும் அப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கல் செய்யாமல் போனதற்குக் காரணமாகும்.

ஆனால் இதேநிலை 18.05.2009 இற்குப் பின்னரான சூழமைவில் இருக்கவில்லை. அன்றைய நாளில் தமது ஆயுதங்களைத் தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனித்த பின்னர் தமிழீழ தாயகத்திலும் சரி, தென்னிலங்கையிலும் சரி எவ்விதமான தாக்குதல்களும் இடம்பெறவில்லை.

இவ்வாறான பின்புலத்தில் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்வது பற்றி 2011ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களால் ஆலோசிக்கப்பட்டது.

அவ்வேளையில் நெதர்லாந்தில் வசிக்கும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ஒருவரின் முயற்சியால், இவ்வழக்கைக் குறைந்த கட்டணத்தில் மேற்கொள்வதற்கு ஐரோப்பிய மனித உரிமைச் சட்டத்தரணிகள் சிலர் முன்வந்தார்கள்.

எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் யார் வழக்கைத் தாக்கல் செய்வது என்ற கேள்வி எழுந்த பொழுது, தமது பெயரில் வழக்கைத் தாக்கல் செய்வதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் டென்மார்க் கிளையின் செயற்பாட்டாளர்கள் இருவரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தில் போராளியாகப் பணிபுரிந்த பிறிதொரு ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் இன்னொருவரும் முன்வந்தனர்.

இவர்களின் முயற்சி வெற்றியீட்ட வேண்டும் என்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய செயற்பாட்டாளர்களாலும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களாலும் நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றத்தில் (General Court of the European Union) தொடரப்பட்ட இவ்வழக்கில் தடைநீக்கத்தை வலியுத்திப் பல தரப்பட்ட வாதங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்டத்தரணிகள் முன்வைத்திருந்தாலும், அதில் முக்கியமான வாதமாக அவர்களால் முன்வைக்கப்பட்டது, 18.05.2009 இற்குப் பின்னர் எவ்விதமான தாக்குதல்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்தாத நிலையில், அதற்கு முன்னரான காலப்பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்திய தாக்குதல்களையும், அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இணையங்களிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்த நிரூபிக்கப்படாத செய்திகளையும், இந்தியா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் உள்ள தடையையும் காரணம் காட்டித் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீடிப்பதானது ஒரு நீதிமறுப்புச் செய்கை என்ற வாதமாகும்.

இதனை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய ஆணையமும், பிரித்தானியா, நெதர்லாந்து ஆகிய இரண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் வாதங்களை முன்வைத்தன. தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்டத்தரணிகளின் வாதங்களையும், எதிர்த்தரப்புச் சட்டத்தரணிகளின் வாதங்களையும் ஆராய்ந்த ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம், 29.05.2006 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முடிவு சட்டத்திற்கு உட்பட்டது ஒன்று என்றும், எனினும் 18.05.2009 இற்குப் பின்னர் அடிப்படையற்ற காரணங்களை முன்வைத்து இத்தடையை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து நீடிப்பது தவறானது என்றும் கடந்த 16.10.2014 அன்று தீர்ப்பளித்திருந்தது.

அப்பொழுது அதனை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியம் மேன்முறையீடு செய்யாமல் இருந்திருக்கும் பட்சத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியா தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்திலும் 2015ஆம் ஆண்டின் முற்பகுதியோடு நீங்கியிருக்கும்.

ஆனால் நடந்ததோ வேறு. ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆட்சேபித்து 16.12.2014 அன்று ஐரோப்பிய நீதிமன்றத்தில் ஐரோப்பிய ஒன்றியப் பேரவையால் மேன்முறையீடு செய்யப்பட்டது. இம்மேன்முறையீட்டு வழக்கை பிரான்ஸ் குடியரசே முன்னின்று ஆதரித்தது.

இது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதாவது 2011ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடரப்பட்ட வழக்கை எதிர்த்துப் பிரதிவாதங்களை முன்வைத்த நெதர்லாந்தும், பிரித்தானியாவும் பின்னிலை வகிக்க, மேன்முறையீட்டு வழக்கில் பிரான்சே முன்னிலை வகித்தது. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி இப்பொழுது வாசகர்களுக்கு எழலாம். அதற்கான பதிலைக் கட்டுரையின் இறுதியில் தருகிறேன்.

பிரான்சின் ஆதரவுடன் ஐரோப்பிய ஒன்றியப் பேரவையால் மேன்முறையீட்டு வழக்குத் தொடரப்பட்ட ஒரு மாதத்தில் ஈழத்தீவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. மேற்குலகம் விரும்பிய மைத்திரி - ரணில் அரசாங்கம் ஆட்சிபீடத்தில் ஏறியது. சிங்கள தேசத்தின் பிரதம மந்திரியாகச் சிம்மாசனம் ஏறிய மறுகணமே ரணில் மேற்கொண்ட நடவடிக்கைகளில் முக்கியமானது ஐரோப்பிய ஒன்றியப் பேரவையின் மேன்முறையீடு எந்த இடையூறுகளும் இன்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிசெய்வதாகும்.

இவ்வாறாக பிரான்ஸ் முன்னின்று ஆதரவு வழங்க, மைத்திரி - ரணில் அரசாங்கம் முழுமையான இராசரீக அழுத்தங்களைப் பிரயோகிக்க, ஐரோப்பிய ஒன்றியப் பேரவையால் ஐரோப்பிய நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேன்முறையீட்டு வழக்கிற்கான இறுதி அமர்வு 22.09.2016 அன்று நடைபெற்றது.

இவ் அமர்வில் தனது நிலைப்பாட்டைப் பதிவு செய்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டவாளர் நாயகம், 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் வன்முறைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எவையும் இல்லாத நிலையில் அவ் இயக்கத்தின் மீதான தடை நீக்கப்படுவதே பொருத்தமானது என்று தெரிவித்திருந்தார்.

18.05.2009 இற்குப் பின்னரும் வன்முறைகளில் - அதுவும் 2010 ஆடி வரையான காலப்பகுதியில் - தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டதாக இம் மேன்முறையீட்டு வழக்கில் ஐரோப்பிய ஒன்றியப் பேரவை குற்றம் சுமத்தியிருந்தாலும், அதற்கான ஆதாரங்களை அது முன்வைக்கவில்லை. இதுவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சாதமாக அமைந்தது.

இவ்வாறாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைநீக்க மேன்முறையீட்டு வழக்கை ஆராய்ந்த ஐரோப்பிய நீதிமன்றம், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையையும், சொத்துமுடக்கத்தையும் நீக்கும் ஆணையைக் கடந்த 26.07.2017 அன்று பிறப்பித்திருக்கின்றது.

அதாவது, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைநீக்கத்திற்கு 26.07.2017 அன்று ஐரோப்பிய நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் ஆணையானது, 16.10.2014 அன்று ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் பிறப்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைநீக்க ஆணையை உறுதிசெய்யும் தீர்ப்பாகும்.

இன்னொரு விதத்தில் கூறுவதானால், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என்றும் 16.10.2014 அன்று ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் பிறப்பித்த ஆணை சரியானது என்பதையே 26.07.2017 அன்று ஐரோப்பிய நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அதியுச்ச நிலை நீதிமன்றம் என்ற வகையில், ஐரோப்பிய நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் ஆணையை, ஐரோப்பிய ஒன்றியம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அமுல்படுத்தித்தான் ஆக வேண்டும்.

அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கித்தான் ஆக வேண்டும். எனினும் இவ் ஆணையை அமுல்படுத்துவதற்கு நீதித்துறை விதிகளின் படி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு மாத கால அவகாசம் இருப்பதால், இம்மாத (ஆவணி) இறுதி வரை தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் தொடரலாம்.

இதுதான் 2015ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளின் அடிப்படையில் அவ் அமைப்பின் மீதான தடை தொடரும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்புத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் ஓர் அர்த்தபரிமாணம் ஆகும். அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைநீக்க ஆணையை ஐரோப்பிய நீதிமன்றம் பிறப்பித்திருந்தாலும், தடை இம்மாத இறுதி வரை தொடரும்.

அதற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது தானாகவே நீங்கி விடும். ஆனால் அத்தோடு பிரச்சினை முடிவுக்கு வரப்போவதில்லை.

ஏனென்றால், 18.05.2009 இற்குப் பின்னர் வன்முறைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டார்கள் என்பதற்கான புதிய ஆதாரங்கள் எவற்றையும் இம்மாத இறுதிக்குள்ளோ, அல்லது அதற்குப் பின்னரோ ஐரோப்பிய ஒன்றியப் பேரவையால் முன்வைக்க முடியும் பட்சத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான புதிய தடையை ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்க முடியும்.

அதாவது ஐரோப்பிய நீதிமன்றத்தின் ஆணைக்கு இணங்க இம்மாத இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தானாக நீங்கிய மறுகணமே புதிய ஆதாரங்களின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீது புதிய தடையை ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்க முடியும். 2015ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளின் அடிப்படையில் அவ் அமைப்பின் மீதான தடை தொடரும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்புத் தூதரகம் தெரிவித்திருப்பதன் மற்றுமொரு அர்த்தபரிமாணம் இதுதான்.

ஏனென்றால் ரணில்-மைத்திரி அரசாங்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக சிறீலங்காவிற்கு ஜி.எஸ்.பி பிளஸ் (GSP+) சலுகையை மீளவும் வழங்கியது போன்று, புதிய ஆதாரங்களின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் தடை செய்து ரணில் - மைத்திரி அரசாங்கத்தைத் தொடர்ந்தும் தனது கட்டுக்குள் வைத்திருப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாக உள்ளது.

அவ்வாறான ஆதாரங்கள் கிடைக்காத பட்சத்தில், பிரித்தானியாவைப் போன்று தமது உள்நாட்டுப் பயங்கரவாதத் தடைச் சட்டங்களிற்கோ, அன்றி அவசரகாலச் சட்டங்களுக்கோ உட்பட்டுத் தனித் தனியாகத் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்யுமாறு தனது அங்கத்துவ நாடுகளை – உதாரணமாக பிரான்சை - ஐரோப்பிய ஒன்றியம் கோரலாம்.

இப்பொழுது உள்ள மில்லியன் டொலர் கேள்வி என்னவென்றால், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மீளவும் விதிப்பதற்கு எவ்விதமான ஆதாரங்களை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்கப் போகின்றது என்பதுதான்.

தடைநீக்க வழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் வாதாடிய சட்டத்தரணிகளின் கருத்துப்படி, 18.05.2009 இற்குப் பின்னர் வன்முறைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எவற்றையும் இதுவரை முன்வைக்காத ஐரோப்பிய ஒன்றியத்தால், இனியும் திடமான ஆதாரங்களை முன்வைப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

ஆனாலும் அண்மைய நாட்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளைத் தொடர்புபடுத்துவதற்கு மைத்திரி-ரணில் அரசாங்கம் முற்படுவதைப் பார்க்கும் பொழுது, தமிழீழ தாயகத்தில் சிங்களப் படைகளுடன் இணைந்து இயங்கும் முன்னாள் போராளிகள் சிலரைப் பயன்படுத்தித் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மீள விதிப்பதற்கான ஆதாரங்களைக் குள்ளநரி என்று பெயர் போன ரணில் சோடித்து விடுவார் என்றே அஞ்ச வேண்டியுள்ளது.

இவ் அச்சத்திற்கு வலுவூட்டும் வகையில் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்குத் தண்டனை கொடுக்கப் போவதாக முகநூல் பக்கங்களிலும், கட்டாக்காலி இணையத்தளங்கள் ஊடாகவும் ஜனநாயகப் போராளிகள் என்ற பெயரில் இலங்கையில் இயங்கும் முன்னாள் போராளிகளைக் கொண்ட குழு ஒன்று மிரட்டி வருகின்றது. இக் குழுவில் உள்ளவர்கள் சிறீலங்கா புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புடையவர்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறி வருவது, இவர்களின் பின்னணி பற்றிய சந்தேகங்களை வலுவடைய வைக்கின்றது.

மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைநீக்க ஆணையை ஐரோப்பிய நீதிமன்றம் பிறப்பித்த சில மணிநேரங்களில், புலம்பெயர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை மிரட்டும் தொனியில் எல்லாளன் படை என்ற பெயரிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் கட்டமைப்பு என்ற பெயரிலும் இணையத் தொலைபேசி வலையமைப்புக்கள், முகநூல் பக்கங்கள் போன்றவை ஊடாக கடுகதியில் எச்சரிக்கைச் செய்திகளும், ஒலிப்பதிவுகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

18.05.2009 இற்குப் பின்னர் புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி சிங்களக் கைக்கூலிகளால் பிரான்ஸ் நாட்டில் பல்வேறு வன்முறைகள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன.

இவ் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் தம்மைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளாகவும், செயற்பாட்டாளர்களாகவும் பகிரங்கமாக அடையாளம் காட்டி வருவதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்புக்களைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகளில் தாம் ஈடுபடுவதாகவும் நியாயம் கற்பித்து வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைநீக்க மேன்முறையீட்டு வழக்கில் பிரான்ஸ் முன்னிலை வகித்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் பிரான்சில் இவ்வாறான சிங்களக் கைக்கூலிகளால் அரங்கேற்றப்பட்ட வன்முறைகளைக் காரணம் காட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இம் மாத இறுதியில் ஐரோப்பிய ஒன்றியம் மீளவும் விதித்தாலோ, அல்லது இவ் வன்முறைகளைக் காரணம் காட்டித் தனது பயங்கரவாத மற்றும் அவசர காலச் சட்டங்களின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பிரான்ஸ் குடியரசு தடை செய்தாலோ கூட நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை.