இலங்கை அரசியலில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றம்! நடந்தது என்ன? காரணம் யார்?

Report Print Shalini in கட்டுரை

“தவறு செய்து விட்டார்! என்ற சந்தேகம் ஏற்பட்டால் அவரை பதவியிலிருந்து நீக்கி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது நல்லாட்சி” என்ற வார்த்தைதான் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அனைவரும் கூறிய பொதுவான கருத்தாகவுள்ளது.

கடந்த சில தினங்களாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட விடயமாக மத்திய வங்கியின் பிணை முறி விவகாரமும், ரவி மீது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையும் காணப்பட்டது. இவர் பதவி விலகுவாரா? ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பில் அனைவர் மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பு காணப்பட்டது.

இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாகவும், சற்றும் எதிர்பாராத திருப்பமாகவும் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ரவியின் உரையும், செயலும் அமைந்திருந்தது. இவற்றுக்கு முன்னதாக ரவி தொடர்பிலும் அண்மைய நாட்களில் நடந்தது என்ன என்பது பற்றியும் சற்று மீட்டுப்பார்ப்போம்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பில் ரவி கருணாநாயக்கவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன.

ஆளும் கட்சி, கூட்டு எதிர்க்கட்சி, கபே போன்ற அமைப்புக்களும், ரவிக்கு எதிராகவே தமது கருத்துக்களை வெளியிட்டு வந்தன.

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அண்மையில் ரவி கருணாநாயக்கவிடம் நீண்ட நேரம் விசாரணைகளை நடத்தியிருந்தன.

ரவி மீது பல தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன் அவர் பதவி விலக வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இது தொடர்பில் பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

இந்த நிலையிலேயே கூட்டு எதிர்க்கட்சியின் 33 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ரவி மீது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்திருந்தனர். கூட்டு எதிர்க்கட்சியின் இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆளும் கட்சியினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இது குறித்து விவாதிப்பதற்கு நாடாளுமன்றில் நாள் ஒன்றை ஒதுக்கித் தருமாறு கோரப்பட்டது, எனினும் ரவி கருணாநாயக்க தொடர்பிலான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமெனில் அவர் பதவி விலக வேண்டும் என்ற இக்கட்டான நிலை ரவிக்கு ஏற்பட்டிருந்தது.

நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றும் ரவிக்கு புதிய விடயம் அல்ல. இதற்கு முன்னரும் ரவி கருணாநாயக்க தொடர்பில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் அதனை அவர் வெற்றி கொண்டிருந்தார்.

ஆனால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை ரவிக்கு பாதகமாகவே அமைந்திருந்தது. காரணம் இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்திருந்தது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தையும் ரவி புறக்கணித்திருந்தார். மேலும் பிரதமரும் ஜனாதிபதியும் தன்னை பதவி விலகுமாறு தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகிய செய்திகளையும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க முற்றாக மறுத்திருந்தார்.

ஜனாதிபதியும் பிரதமரும் தன்னிடம் அவ்வாறு எந்த கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை எனவும், இது தொடர்பில் எந்த கூட்டங்களும் நடைபெறவில்லை என்றும் அண்மைய முகப்புத்தக பதிவில் தெரிவித்திருந்தார் ரவி.

இந்த நிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ரவி விசேட உரையாற்றுவார் என தகவல் வெளிவந்தது. தன்னைச்சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு நடுவில் உரையாற்றும் ரவி என்ன கூறுவார், எதைப்பற்றி பேசுவார், தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு என்ன பதில் சொல்லுவார், என்று ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிர்பார்த்திருந்தனர்.

அந்த வகையில் யாரும் எதிர்பாராத வகையில் ரவி தனது உரையை நிகழ்த்தியிருந்தார். “சமூக வலைத்தளங்கள் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை குறித்து அண்மைக்காலமாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதால், அதனை தெளிவுப்படுத்தி தனது நிலைப்பாடுகளை தெரியப்படுத்த வேண்டியது அவசியம் என்பதால், இந்த உரையை நிகழ்த்துகின்றேன்.” என ரவி கருணாநாயக்க குறிப்பிட்டு பல விடயங்களை இதன்போது தெளிவுபடுத்தினார்.

தன்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்த அவர், எனக்கு எதிராக கையெழுத்திட்டவர்களில் அனேகமானவர்களுக்கு நான் நிரபராதி என்பது தெரியும், நல்லாட்சிக்கு என்னால் பிரச்சினை ஏற்படக்கூடாது. இதனால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எனக் குறிப்பிட்டார்.

அத்துடன் தமது குடும்பத்தாருக்கும் இதன்போது அவர் நன்றி கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து நல்லாட்சியில் குழப்பங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவும் தான் பின்வரிசையில் சென்று அமர்வதாக குறிப்பிட்டு எழுந்து சென்று நாடாளுமன்ற கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டார்.

அனைவரும் சிறிது நேரம் நடப்பது என்ன? தற்போது நடந்தது என்ன? ஏன் பின்வரிசைக்குச் சென்றார் என்று யோசனை செய்வதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எழுந்து உரையாற்றினார்.

இதன்போது “ரவி பதவி விலகியுள்ளார்” என்பதை தெரிவித்தார் பிரதமர். ஜனாதிபதியும் நானும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

“பதவி விலகிய அனைவரும் குற்றவாளிகள் அல்ல” என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் இதன்போது பிரதமர் குறிப்பிட்டார்.

ரவியின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன? அழுத்தம் கொடுத்தது யார்? என்பது பற்றி அனைவர் மத்தியிலும் ஒரு கேள்வி எழுந்துள்ளது.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்த ரவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை தனியாக சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் வரை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னரே இவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் பணிப்பிற்கு அமையவே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என்று பல தரப்பாலும் பேசப்படுகின்றது.

இவர் பதவி விலகியது குற்றவாளி என்பதை ஒப்புக்கொள்வதற்காகவா? அல்லது தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தவறானது என்பதை நிரூபித்து விட்டு, தன்னை சந்தேகப்பட்ட அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் புதிய ரவி கருணாநாயக்கவாக மீண்டு வருவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.