யாழ். நல்லூர் திருவிழாவில் சீரழியும் சிறுவர்களும், பெண்களும்! உண்மையான காரணம் என்ன?

Report Print Shalini in கட்டுரை

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா தற்போது சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

கடந்த மாதம் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட குறித்த திருவிழா, தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெற்று 25ஆம் நாள் மஹோற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

இந்த காட்சியைக் காண்பதற்கு உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பக்த அடியார்கள் நல்லூரை நோக்கி படையெடுத்துள்ளார்கள்.

திருவிழா ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இறுதி நாள் வரை யாழ்ப்பாணம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கும். அதேபோல் வியாபாரிகளுக்கும் இது சிறந்த சந்தர்ப்பமாகவே காணப்படுகின்றது.

உள்ளூரில் இருந்து மட்டுமல்லாது வெளிப் பிரதேசங்களில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து கடைகளை அமைத்து வியாபாரம் செய்வதையும், பெருமளவிளான மக்கள் இவற்றை ஆர்வத்துடன் நுகர்வதையும் காணக்கூடியதாக உள்ளது.

ஆனால் இவ்வளவு கோலாகலமாக நடைபெறும் திருவிழாவில் சின்னஞ்சிறு குழந்தைகளும், பெண் பிள்ளைகளும், வயது முதிர்ந்தவர்களும் படும் கஷ்டங்கள் யாருடைய கண்களுக்கும் விளங்கவில்லையா? என்ற கேள்வி மனதில் எழுகின்றது.

நல்லூர் உற்சவகால கடைகள் முன்பாக சிறுவர்கள் கடந்த ஏழு நாட்களாக ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு விற்பனையில் ஈடுபடுபவர்கள் அனைவரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

புத்தகப் பைகளை சுமந்து கொண்டு பாடசாலை செல்ல வேண்டிய வயதில் பைகளை தூக்கிக் கொண்டு பத்தி விற்பனை செய்யும் காட்சியை பார்க்கும் போது நம்மை அறியாமலேயே ஒருவித பரிதாபம் ஏற்படுகின்றது.

ஆனால் இவ்வாறு விற்பனையில் ஈடுபடும் அனைத்து சிறுவர்களும் தமது பெற்றோர் அல்லது உறவினர்களுடனே உற்சவ கால கடைகள் முன்பு காணப்படுகின்றார்கள்.

பெற்றோர்கள் குறித்த சிறுவர்களிடம் ஊதுபத்தியை கொடுத்து விற்பனை செய்து வருமாறு அனுப்புகின்றார்கள். கடைகள் அமைந்திருக்கும் வளாகத்தில் நிற்கும் பக்தர்கள் சிறுவர்களின் பச்சிளம் முகத்தைப் பார்த்து ஊதுபத்தியை வாங்கி செல்கின்றனர்.

இங்கு பாதிக்கப்படும் சிறுவர்களுடன் கலந்துரையாடிய போது...

“நாம் வெளிமாவட்டத்திலிருந்து வந்துள்ளோம், யாழ்.நகரிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளோம், எமது குடும்பத்தின் வறுமை காரணமாக உறவினர்களுடன் இங்கு வந்து நின்று விற்பனை செய்கிறோம்.” என தெரிவித்தனர்.

இது குறித்து “ஏன் சிறுவர்களை விற்பனையில் ஈடுபடுத்துகின்றீர்கள்? என பெற்றோரிடம் வினவிய போது...

எமது குடும்ப வறுமை காரணமாகவே நாம் இங்கு வந்து விற்பனை செய்கின்றோம். எமது பிள்ளைகள் பெண் பிள்ளைகள், சிறுவயது, தனியாக விட்டுவர முடியாது, சிறு பெண்பிள்ளைகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அதனாலேயே பிள்ளைகளை எங்களுடன் அழைத்து வந்திருக்கின்றோம்.

எங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பதற்கு கொப்பி, பேனா வாங்கி கொடுக்க கூட வசதியில்லை. பெரும் கஸ்டத்தின் மத்தியில் தான் சிறு பொருட்களை விற்பனை செய்து எமது வாழ்க்கையை நடாத்தி வருகின்றோம் என தெரிவித்தனர்.

இவர்கள் தெரிவித்த கருத்துக்களை கேட்கும் போது ஒருவித பரிதாபம் மனதில் தோன்றினாலும், பொதுமக்கள் சிலர் எதிர்மறையான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள்.

இந்த கும்பல் திட்டமிட்டு இவ்வாறான சிறுவர்களை பயன்படுத்தி விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், இங்கு விற்பனையில் ஈடுபடும் அனைத்து சிறுவர்களும் பெண் பிள்ளைகள், கல்வி கற்க வேண்டிய இவர்கள் இப்படியான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த வளாகம் முழுவதும் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபடுபவர்களே காணப்படுகின்றார்கள். இதற்காகவே ஒரு கும்பல் இயங்கி வருகின்றது, பச்சிளம் பிள்ளைகளை கையில் ஏந்திய வண்ணம் பிள்ளைகளை காட்டி ஊதுபத்தி விற்பனை செய்கின்றார்கள்.

அந்த பிள்ளைகளின் முகத்திற்காகவே வாங்குகின்றார்கள், நல்லூர் உற்சவ காலத்தில் எல்லாப் பகுதிகளிலும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது தெரியவில்லை.

இந்த சிறுவர்கள் சமூகத்தில் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்க நேரிடும், இவ்வாறான சிறுவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சிறுவர் அமைப்புக்கள் இவ்வாறான துஸ்பிரயோகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் தெரிவித்தனர்.

பெற்றோர்கள், பிள்ளைகள், பொதுமக்கள் என மூவரும் கருத்துக்களை வைத்து பார்க்கும் போது ஒரு விடயம் தெளிவாக தெரிகின்றது.

இங்கு சிறுவர்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவது உண்மை, மிக சிறு வயது பெண் சிறுவர்களே இவ்வாறு பாதிக்கப்படுகின்றார்கள்.

இவர்கள் கூறும் சில விடயங்கள் உண்மைக்கு புறம்பான கருத்துக்களாக காணப்படுகின்றன. சிறுவர்கள் விற்பனையில் ஈடுபடக்கூடாது அது தவறு. என எச்சரிக்கை செய்து அனுப்பிய போதும் மறுநாள் அவர்கள் விற்பனையில் ஈடுபடுகின்றார்கள்.

பெற்றோரின் பொருளாதார பலவீனம் காரணமாக தங்கள் பிள்ளைகள் எப்படி நடந்தாலும் அது பற்றி பெற்றோருக்கு தெரிய வந்தாலும் தங்களுக்குக் கிடைக்கும் வருமானத்திற்காக சில விஷயங்களை பெற்றோர் கண்டு கொள்வதில்லை.

உண்மையில் விற்பனையில் ஈடுபடுத்துவதற்கு அவர்களின் குடும்ப வறுமை காரணமா? அல்லது சிறுவர்களை கொண்டு விற்பனை செய்வதை நோக்கமாக கொண்ட கும்பலின் செயலா?

இவ்வாறு சிறு வயதிலேயே பல கஷ்டங்களை அனுபவிக்கும் குழந்தைகளினதும், பெண்களினதும் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இவர்களே எதிர்கால சந்ததியினர். இவர்களே எதிர்கால தலைமுறையினர். ஆகவே இவர்களை பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும்.

இலங்கையில் பொதுவாக ஆலயங்களிலும், திருவிழாக்களிலும் சிறுவர்களை பயன்படுத்தி யாசகம் எடுப்பது, தொழில் செய்வது, போன்ற சில சட்டவிரோத செயல்களை முன்னெடுக்கும் குழு இருக்கத்தான் செய்கின்றது.

இந்த குழு சிறுவர்களைப் பயன்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை சீரழித்து விட்டு தாம் சுகபோகமாக வாழ்கின்றனர். சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களும், எதிர்கால நிலையையும் இவர்கள் சற்றும் சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டார்கள.

அவர்கள்தான் கல்நெஞ்சு கொண்டவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் இதை பார்க்கும் எமக்கு அவ்வாறு இருக்க முடியாது. தவறு நடந்தால் தட்டிக் கேட்கும் தைரியம் இருக்க வேண்டும். அதை தடுப்பதற்கான முயற்சியை நாம் முன்னெடுக்க வேண்டும்.

உங்கள் கண்களுக்கு இவ்வாறான விடயங்கள் தென்பட்டால் அதை சாதாரணமாக எடுக்காதீர்கள். “நமக்கென்ன” என்று தள்ளிப் போகாமல் நடவடிக்கை எடுங்கள்.

அந்த வகையில் இன்று நல்லூர் வாசலில் சீரழியும் சிறுவர்கள் மற்றும் பெண்களின் நிலையை தெரியப்படுத்தியுள்ளோம்.

இவ்வாறு பாதுகாப்பின்றி, பல கஷ்டங்களை அனுபவிக்கும் இந்த குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பில் நடைவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவர் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகளே உங்களின் கவனத்திற்கு..