பெண்களை புன்னகைக்க வைப்பது என்ன? மூளைக்குள் மறைந்திருக்கும் மர்மம்!

Report Print Jeslin Jeslin in கட்டுரை

ஒவ்வோர் தனிப்பட்ட மனிதனும் தனது வாழ்வை இரண்டு வகையில் வாழத் தொடங்குகின்றான்.

முதலாவது பிறப்பு முதலாகவே பிறரின் விருப்பத்திற்காக வாழப் பழகுகின்றான். இரண்டாவது தனது சந்தோஷத்திற்காக பிறரை வருத்தி வாழ்வது.

உதாரணமாக ஒரு சிறு குழந்தையை சீண்டிப் பார்த்து விட்டு அந்தக் குழந்தை அழுவதை சுற்றி வேடிக்கை பார்ப்பது மட்டுமல்லாது, “எப்படி அழுறான் பார்.. முகமெல்லாம் சிவந்துருச்சி” காலெல்லாம் உதறுறான் பார்.. என ரசிப்பார்கள், சிரிப்பார்கள்

ஆனால் அந்தக் குழந்தையின் வேதனையை யாரும் உணர மாட்டார்கள். அவர்களுக்கு அவர்களுடைய சந்தோசம் மாத்திரமே அந்த தருணத்தில் தேவையாக இருக்கும்.

அதே போல சின்ன சின்ன விடயத்தையும் பிறரின் விருப்பத்திற்காக செய்வதிலும் கூட நாம் தியாகி என்ற பெயர் கிடைக்கும். எனினும் நமது சுதந்திரமும், நமக்கென்ற தனித்துவமும் அந்த இடத்தில் தடைப்பட்டுப் போகின்றது என்பது மறுக்க முடியாத உண்மையும் கூட..

பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்று வாழாமல் எமக்கென்ற ஒரு தனித்துவத்துடன் வாழப் பழகிக் கொள்வதும், நமது வாழ்வை நமக்கு பிடித்தவாறு வாழ்வதும் தான் எமது வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்.

இந்த நிலையில் நமது வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவது வாழும் போது நாம் மகிழ்ச்சியாக வாழ்வது தான். சிரித்து மகிழ்ந்து வாழ்வதில் தான் எமது முழு வாழ்வின் தனித்துவமே இருக்கின்றது.

ஒருவருடன் சிரித்து பேச எமக்கு நேரம் இல்லையெனில் நிச்சயமாக நாம் தவறான வாழ்வை வாழ்கின்றோம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

“சிரிப்பு” அப்படியென்றால் இந்த சிரிப்பு தான் நம் வாழ்வை அர்த்தமுள்ளாக்குகின்றதா என்ற கேள்வி தற்போது நம்முள் எழலாம்.

சந்தோசங்களை பிரதிபலிப்பது சிரிப்பு என்றால் நிச்சயமாக சிரிப்பு தான் எமது வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுகின்றது என்று கூறுவதிலும் தவறில்லை.

சிரிப்பு என்பது மனிதனோடு கூடப் பிறந்த ஒரு உணர்வின் வெளிப்பாடு. இது ஒரு ஆரோக்கியமான மனிதனிடமிருந்து பல விதமான சந்தர்ப்பங்களிலும் இயல்பாக வெளிப்படக்கூடிய ஒன்று.

சிரிப்பு மனதையும், உடலையும் வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

சிரிக்கும் போது உடலில் 300 தசைகள் அசைகின்றன. உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் வெளியேறுகின்றன.

நடைமுறை உலகில் வாழ்க்கையின் ஒரு குழந்தைகள் சராசரியாக 400 தடவைகள் சிரிக்கின்ற போது மாறாக பெற்றோர்கள் 15 தடவைகள் மாத்திரமே சிரிக்கின்றார்கள் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

அநேகமாக எம்மவரில் ஒரு சிலருக்கு வாழ்வில் சலிப்புகள் ஏற்படும் போது.. சே.. சிறுவனாகவே இருந்திருக்கலாம் என முகம் சுழித்துக் கொள்வார்கள்.

அதற்கு காரணம் சிறுவர்களாக இருந்தால் பிரச்சினைகள் இல்லை என்பது அல்ல. சிறுவனாக இருக்கும் போது கவலைகளை மறந்து சந்தோஷமாக சிரித்து வாழலாம் என்பதே.

ஒவ்வொருவரும் சிரிக்கின்ற தன்மையை கொண்டு மனிதர்களின் பண்பும் வெளிப்படுகின்றன.

குறிப்பாக

வெற்றியில் சிரிப்பவன் வீரன், கண் பார்த்து சிரிப்பவன் கஞ்சன், துன்பத்தில் சிரிப்பவன் மனிதன், மகிமையில் சிரிப்பவன் மன்னன்.

இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன், மாண்பில் சிரிப்பவன் பண்பாளன், கற்பனையில் சிரிப்பவன் கவிஞன், ஓட விட்டு சிரிப்பவன் நய வஞ்சகன், தெரியாதென்று சிரிப்பவன் நடிகன், நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்.

ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன், கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன், கொடுக்கும் பொழுது சிரிப்பவன் சூழ்ச்சியாளன், நினைவோடு சிரிப்பவன் அறிவாளி, இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி.

குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி, நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி, தற்பெருமையில் சிரிப்பவன் கோழை, நிலை மறந்து சிரிப்பவள் காதலி, காதலால் சிரிப்பவள் மனைவி, அன்பால் சிரிப்பவள் அன்னை.

இவ்வாறு சிரிப்பால் கூட மனிதனின் பண்பை விபரிக்கும் அளவுக்கு சிரிப்பு வாழ்வோடு ஒன்றித்து விட்டுள்ளது.

சிரிப்பிலும் குறிப்பாக பெண்களின் சிரிப்பு தனித்துவம் வாய்ந்தது. “அவள் புன்னகை என்னை ஈர்த்தது” இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏராளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம்.

ஒரு சிறிய விடயம் என்றாலும் கூட பெண்கள் அதிகமாய் சிரித்து விடுவார்கள். பெண்கள் ஏன் இவ்வாறு சிரிக்கின்றார்கள் என ஆய்வாளர்கள் ஒரு ஆய்வையும் நடத்தியிருந்தனர்.

கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போடு பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது. 10 ஆண்களையும் 10 பெண்களையும் தேர்வு செய்து கார்ட்டூன் படங்களைக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்களும் கண்காணிக்கப்பட்டது.

கார்ட்டூன் படத்தில் இருந்த பஞ்ச் வசனம் அவர்களின் சிந்தனையைத் தூண்டி சிரிப்பை வரவழைத்தது. இதில் பெண்கள் நீண்ட நேரம் சிரித்தபடி இருந்தனர்.

இதற்கு அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகும். அதாவது பெண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகுதிக்கு முந்தைய அடுக்கு இதில் முக்கிய பங்காற்றுகிறது.

அவர்களின் மூளை விவேகமாக செயல்படுவதுடன் அதிக எதிர்பார்ப்பின்றி இருக்கிறது. எனவே இயல்பான நகைச்சுவைகள் கூட அவர்களுக்கு சிறப்பாகத் தெரிகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைகிறது. பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும் பிறரை நோகச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமைகிறது என்கிறது ஆய்வு. பிறர் நோகாமல் சிரியுங்கள் நோயின்றி வாழுங்கள்!