மகிந்தவுடன் இரகசிய சந்திப்புகளில் தமிழர்களின் முக்கிய புள்ளி!! மாற்றம் ஏற்படுமா..?

Report Print Nivetha in கட்டுரை

அரசியல் அரங்கில் மஹிந்த ராஜபக்ஸவின் மீள் வருகை மற்றும் ஆட்சிக் கைப்பற்றல் தொடர்பில் கூட்டு எதிர் கட்சியினர் அதீத நம்பிக்கை வெளியிட்டு வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை மகிந்த அடிக்கடி சந்தித்து வருகின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் சந்திப்பை இரகசியமாக பேணிய போதும் அந்த தகவல் மெதுவாக கசிந்ததை தொடர்ந்து இருவரும் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

புதிய அரசமைப்பு உருவாக்கம் உட்பட தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தனித்து இருவரும் சுமார் 45 நிமிட நேரம் மந்திர ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரில் கொழும்பு விஜேராம மாவத்தையில் அவரது இல்லத்தில் நேரில் சென்று இரா.சம்பந்தன் சந்தித்துள்ளார்.

அரசியலில் அதிரடியான மாற்றங்களை தொடர்ந்து நல்லாட்சியின் கூட்டாட்சி தொடருமா..? அல்லது நிறைவுக்கு வருமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து விட்டது. இந்த நிலையில் அடிக்கடி மகிந்தவை இரகசியமாக சம்பந்தன் சந்தித்து வருகின்றார்.

இது நல்ல சந்திப்பு. பரஸ்பரம் கருத்துப் பரிமாறினோம். அவரது அழைப்பின் பேரில் இது நிகழ்ந்தது என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக இதற்கான ஏற்பாடுகள் இருந்தன. இப்போதுதான் சந்திப்பு சாத்தியமாயிற்று. பல விடயங்கள் குறித்துப் பேசியதாகவும் கூறியுள்ளார். தேசிய அரசை அமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகின்றது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு அமையப்பெற்றது.

அதன் பின்னர் மீண்டும் அதே வருடம் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்று தேசிய அரசை நிறுவியது.

ஐ.தே.கட்சியுடன் இணைந்து ஆட்சியில் பங்கொள்ளமுடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான பொது எதிரணி சுயாதீனமாகச் செயற்பட ஆரம்பித்தது. அன்றுமுதல் இன்றுவரை தேசிய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே பொது எதிரணி செயற்பட்டுவருகின்றது.

அண்மையில் நல்லாட்சி அரசை மூதேவி பிடித்த ஆட்சி என்று கூறி கொழும்பில் பாரிய ஆர்பாட்டம் ஒன்றையும் மேற்கொண்டனர். இந்த நிலையில் தற்போது சம்பந்தனை இரகசியமாக சந்தித்து வருகின்றார்.

இந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த முடிவின் பிரகாரமே தேசிய அரசில் 2017 டிசம்பர் மாதம் வரை அங்கம் வகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது என்றும் டிசம்பர் மாதம் முடிவடைந்ததும் தொடர்ந்தும் இருப்பதா, இல்லையா என்பதை கட்சியின் மத்திய செயற்குழுவே முடிவெடுக்கும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அத்துடன், தேசிய அரசு 2020 வரை தொடரும் என்ற நம்பிக்கை உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சிலர் தேசிய அரசிலிருந்து வெளியேறுவார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, குறித்த ஒப்பந்தம் நீடிக்கப்படுமா அல்லது அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் இவர்களின் சந்திப்பு தொடர்பில் பல்வேறு எண்ணப்பாடுகள் தோன்றியுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் அதிதிகளாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கும் தயார் என்று கூறியிருந்தார். இந்தக்கூற்றும் சமூக ஊடக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில்தான் தற்போது முன்னாள் ஜனாதிபதியின் அழைப்பின்பேரில் அவரை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் சந்தித்து பேசியுள்ளார்.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரும் நோக்கத்திலேயே அவர் இச்சந்திப்பை மேற்கொண்டாரா அல்லது இந்த சந்திப்பில் வேறு உள்நோக்கங்கள் உள்ளனவா என்ற கேள்வியும் தற்போது எழுப்பப்படுகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம் அரசியல் ஆடுகளத்தில் என்ன மாற்றங்கள் நிகழப்போகின்றது என்று..