காலத்தால் மறக்கடிக்கப்பட்ட கிருசாந்தி

Report Print Gokulan Gokulan in கட்டுரை

ஏ9 வீதியில், நல்லூர் செம்மணி வீதி சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் வரவேற்கின்றது என்கின்ற வாசகம் தாங்கிய வீதி வளைவுக்கால் நுழையும்போது எமக்கு ஏற்படும் உணர்வுகளை விபரிக்க முடியாது.

அந்த உணர்வுகளுடன் ஒரு விபரிக்க முடியாத வலியும் சேர்ந்தே எம்மை யாழ்ப்பாணத்துக்குள் வரவேற்கும். ஆம் அது கிருசாந்தி குமாரசாமியின் முகம்.. அதனை தொடர்ந்து செம்மணி படுகொலைகள் ஆண்டுகள் பல கடந்தும் மறக்க முடியாத சோகங்கள்.

1999 செப்டம்பர் 7ஆம் திகதி, சுண்டுக்குளி மகளீர் கல்லூரியில் கல்வி கற்ற அரியாலை மாணவி ஒருவர் வீதி விபத்தில் மரணமானார். அவரது சகமாணவியர் ஏ9 வீதியில் உள்ள மரணமான மாணவியின் மரண சடங்கில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

கிருசாந்தி குமாரசாமியும் துவிச்சக்கர வண்டியில் வீடுதிரும்பி கொண்டிருந்த வேளையில் யாழ். வளைவுக்கு அருகில் உள்ள காவலரணில் இருந்த இராணுவத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

அவர் தடுத்து நிறுத்தப்பட்டதனை வீதியால் சென்ற பலர் அவதானித்துள்ளனர்.

கிருசாந்தி வீடு திரும்பாததன் காரணமாக கிருசாந்தியை தேடி சென்ற கிருசாந்தியின் தாயார் ராசம்மா குமாரசாமி கிருசாந்தியின் தம்பி பிரணவன் அயல்வீட்டுக்காரரான சிதம்பரநாதன் ஆகியோர் யாழ். வளைவுக்கு அருகில் உள்ள காவலரணில் கிருசாந்தி தொடர்பாக விசாரித்ததன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

அன்றைய சமாதான தேவதை சந்திரிக்கா அம்மையாரின் தலைமையிலான அரசசாங்கத்தினால் மாணவர்கள் மற்றும் மக்களின் போராட்டங்கள் காரணமாகவும் மனித உரிமை அமைப்புக்களின் அழுத்தம் காரணமாகவும் வேண்டா வெறுப்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் விளைவாக கைது செய்யப்பட்ட சோமரத்தின ராஜபக்ச, கிருசாந்தி கொலையை பற்றி மட்டுமல்லாமல் அரியாலை மற்றும் செம்மணி பகுதிகளில் நடைபெற்ற கைதுகள் கொலைகள் மற்றும் மனித புதைகுழிகள் அதனுடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பாக பல உண்மைகளை வெளிப்படுத்தினார்.

செம்மணி பகுதிகளில் மெற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் கிடைத்த மனித எச்சங்களின் மூலம் சோமரத்தின ராஜபக்ச கூறியது உண்மை என்பது வெளிப்பட்டது. சமாதானத்துக்கான போரானது செம்மணி மற்றும் அரியாலைப்பகுதிகளில் 300 தொடக்கம் 400 வரையான மனித எச்சங்களை தமிழர்களுக்கு பரிசளித்துள்ளது.

இச்சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களில் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்களா என தெரியவில்லை. ஆயினும் யுத்த சூழலை காரணமாக கொண்டு தப்பிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காண்பட்டது என்பதனை மறுக்க முடியாது.

மேலும், எத்தனை புதைகுழிகள் நாடெங்கிலும் உள்ளதென்ற கணக்கு என்று வெளிவரப்போகின்றதோ தெரியாதாயினும், கிருசாந்திகள் பலர் காலத்துக்கு காலம் உரமாகி பல உண்மைகளை வெளிப்படுத்தி கொண்டுதான் இருக்கின்றார்கள்.

அண்மையில் கூட சரத் பொன்சேகாவின் வாயிலிருந்து இசைப்பிரியா தொடர்பான சில உண்மைகள் வெளிவந்துள்ளன.

சமாதானத்துக்கான போரை நடத்தியவரும் சமாதான தேவதையுமான சந்திரிக்கா அம்மையார் எதிர்கட்சியாக இருந்தபோது இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற 25 மாணவர்களின் கொலையினை வெளிக்கொணர்ந்தார்.

ஆட்சிக்கு வந்ததும் அக்கொலையில் தொடர்புபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஆயினும் கிருசாந்தி குமாரசாமி வழக்காகட்டும், ஏனைய படுகொலைகள் தொடர்பான வழக்காகட்டும் ஆர்வத்துடன் இதய சுத்தியுடன் முன்னெடுக்கப்பட்டதா?

எத்தனை விசாரணைகள் முடிவுற்றுள்ளன என்பதனை நாம் அறிய முடியவில்லையாயினும் குற்றச்சாட்டுகளும், குற்றங்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சந்திரிக்கா அம்மையார் அவரது ஆட்சிகாலத்தில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பதிலளிக்க முன்வருவாரா?

அரசியல் நலனினை முன்னிறுத்தி காலங்கள் கடத்தப்பட்டு மறக்கச் செய்யப்படும் விடயங்களாகவும், தீர்வுகளுக்கும் விசாரணைகளுக்கும் இடமளிக்காமல் பரிகாரமளித்தல் தொடர்பாகவே கவனம் செலுத்தப்படுகின்றது.

ஆயினும் மக்கள் எதிர்பார்பதனை தம்ப தீப கோட்பாட்டு வழி வந்த அரசாங்கங்கள் செயற்படுத்த முன்வராது என்பது வெளிப்படையே. எது எவ்வாறு இருப்பினும் வரலாறுகளை மறவாதிருப்பதும் இளைய தலைமுறைக்கு எடுத்துரைப்பதும் எமது இருப்புக்கு அவசியமானதாகும்.

அந்த வகையில் கிருசாந்தி குமாரசாமியின் நினைவுதினம் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.