பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட ரசிகலாவிற்கு நடந்தது என்ன? தாயும் குழந்தையும் பலியாகிய சோகம்

Report Print Reeron Reeron in கட்டுரை

மட்டக்களப்பு - படுவான்கரை பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கி கொண்டிருக்கும் மகிழடித்தீவு வைத்தியசாலையில் பிரசவத்திற்காக சென்ற இருபது வயதுடைய இளம் யுவதி ரசிகலா மரணமடைந்திருந்தார்.

ஒரே பிரேதப் பெட்டியில் ரசிகலாவும் குழந்தையும் வைக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி, பார்ப்பவர்களை கலங்க செய்திருந்தது.

இந்த மரணம் தொடர்பாக பலத்த சர்ச்சை மற்றும் மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

பின்தங்கிய கிராமமான காஞ்சிரங்குடாவை சேர்ந்தவர் ரசிகலா. திருமணம் செய்து முதல் பிரசவத்திற்காக 28.08.2017ம் திகதி அதிகாலை 12.30க்கு சாதாரண பிரசவவலி காரணமாக அவரது தாயாரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தன் மகளுடன் நிற்பதற்கு அங்கு பணிபுரியும் சுகாதார பணியாளர்களிடம் அனுமதி கேட்டுள்ளார்.

வைத்தியசாலை விதிமுறை அதற்கு அனுமதிக்காது என்பதால், அவர்கள் மறுத்து விட்டனர். தாயார் தொடர்ந்து கேட்க, திட்டி வெளியில் விட்டு கதவை சாத்தியுள்ளனர்.

“என்ட மகள் பிரசவத்திற்காக மகிழடித்தீவு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனம். அங்கபிறசர் மற்ற எல்லா செக்கிங்கும் பண்ணி போட்டு நாலு மணிக்கு பிள்ளை பிறக்க கூடியசாத்தியக் கூறு இருக்கு என்டு சொன்னாங்க. பிள்ளைய வாட்டுல வச்சாங்க. பிறகுநான் மகளோட நிக்கபோறன் என்டு அங்க வேல செய்யிற ஆக்களிட்ட கேட்டன்.

என்ட மகளுக்கு காலெல்லாம் வீங்கி இருக்கு. நான் நிக்கட்டா என்டு. அதுக்கு ஒருவேலை செய்யிற ஆள் நீ நிக்கிறன்னடா நாங்க என்னத்துக்கு இருக்கம் என்டு ஏசினாங்க. பிறகு என்னை வெளியில விட்டு கதவ சாத்தி போட்டாங்க. நான் வரும் போது மகளுக்கு பக்கத்தில் பிரசவத்திற்காக இருந்த இன்னுமொரு பிள்ளையிர போன் நம்பர வாங்கிகொண்டு வீட்டபோய்த்தன்' என்றார் ரசிகலாவின் தாயார்.

ரசிகலாவிற்கு மகபேற்றுக்கான திகதி 22.09.2017 ஆகும். ஆனால் இவர் செல்லும் கிளினிக்கில் 29.08.2017ஆம் திகதி வைத்தியசாலைக்கு பிரசவத்திற்காக செல்ல வேண்டும் என்ற அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

கூறிய திகதிக்கு முன்னரே அடிவயிற்றில் சாதாரண வலி ஏற்பட வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

வைத்தியசாலையில் ரசிகலாவை அனுமதித்து விட்டு வீட்டுக்கு சென்ற தாயார், அதிகாலை 3 மணியளவில் தொலைபேசி இலக்கம் வாங்கிய பெண்ணை தொலைபேசியில் அழைத்து நிலவரத்தை கேட்டுள்ளார்.

ரசிகலாவிற்கு வலி சற்று அதிகமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த பண்டாரிய வெளியை சேர்ந்த பெண்ணொருவர் அதிகாலை 5 மணியளவில் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ரசிகலாவிற்கு வலிப்பு வந்து கட்டிலில் இருந்து விழுந்து இரத்தம் வந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார் என்ற தகவலை வழங்கியதாக ரசிகலாவின் தாயார் கூறுகிறார்.

எனினும் தகவலை கூறியதாக கூறப்படும் பெண், தற்போது அதனை மறுத்து வருகிறார்.

'மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சென்று ஒவ்வொரு மகப்பேற்று வாட்டாக தேடினேன். எங்கேயும் கிடைக்கவில்லை. பின்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சென்றுகேட்டேன். இருக்கிறார் என்றார்கள். மகிழடித்தீவு வைத்தியசாலையில் இருந்து என்ட மகள கட்டையாத்தான் கொண்டு போயிருக்காங்க' எனவும் தாயார் தெரிவித்தார்.

கட்டிலில் இருந்து கர்ப்பிணி தாயான ரசிகலா விழுந்தாரா இல்லையா என்பதுதான் தற்போதுள்ள பிரச்சினை.

வலிப்பு ஏற்பட்டதால் கட்டிலில் இருந்து விழுந்து ரசிகலா இறந்தார் என்ற தாயாரின் குற்றச்சாட்டை வைத்தியசாலை நிர்வாகம் மறுத்து வருகிறது.

அப்படியொரு சம்பவம் நடக்கவில்லையென்கிறார்கள். இந்த விடயம் தொடர்பாக வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் தி.தவநேசனிடம் தொலைபேசியூடாக வினவியபோது-

“அந்தப் பெண் 28ம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் நிகழ்வொன்றிருந்ததால் நானும் வைத்தியசாலையில் தங்கியிருந்தேன்.

ரசிகலாவை நேரில் சென்று பார்த்தேன். மீண்டும் 4.30 மணியளவில் ரசிகலாவிற்கு வலிப்பு வந்துவிட்டது என்று தொலைபேசி அழைப்பு வந்தது.

உடனடியாக அவரை மட்டக்களப்பிற்கு இடமாற்றம் செய்தேன். பின்னர் நடந்தது ஒன்றும் எனக்கு தெரியாது. உங்களுடைய வைத்தியசாலையில் கர்ப்பிணிதாய் இறந்ததாக முகப்புத்தகங்களில் காரசாரமாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன என்று 03ஆம் திகதி (செப்ரெம்பர்) தொலைபேசி அழைப்புக்கள் வந்தன.

அந்த கர்ப்பிணிதாய் 28ம் திகதி (ஒக்ரோபர்)அதிகாலை வைத்தியசாலைக்கு பிரசவத்திற்காக வந்தார். வலிப்பு வந்ததால் அதே தினத்தில் அதிகாலை 4.30 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றிவிட்டேன் என்பதை சொன்னேன்” என்றார்.

தமது மகளுக்கு வலிப்பு வருவதில்லை என்பது ரசிகலாவின் தாயாரின் வாதம்.

தாயாரின் கருத்தும், வைத்தியசாலை கருத்தும் வேறுவேறாக இருப்பதால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த விடயம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் கருத்துக்கள் தொடர்பாக வைத்தியர் தி.தவநேசன் கவலை தெரிவித்தார்.

“கர்ப்பிணி தாய் கட்டிலில் இருந்து கீழே விழுந்ததென முகப்புத்தகத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அது தவறானது. இந்த வைத்தியசாலை தற்போதுதான் விரைவாக அபிவிருத்தியடைந்து வருகிறது.

இப்படியான செய்திகள் வைத்தியசாலையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது. இந்த பிரச்சனையை விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்படும். அந்த விசாரணை முடிந்ததும் நான் இடமாற்றம் பெற்று சென்று விடுவேன். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னியில் இருந்துதான் நானும் சேவை செய்ய இங்கு வந்தேன். அதை கலைத்து விட்டார்கள்” என்றார்.

ரசிகலாவின் தாயாரின் கருத்தும், வைத்தியசாலையில் கருத்தும் வேறுவேறாக இருப்பதால், முறையான விசாரணை ஒன்றின் மூலமே உண்மையை கண்டறியலாம்.

ரசிகலா என்ன நேரம் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டார்? அப்போது வைத்தியர்கள் கடமையில் இருந்தனரா? ரசிகலாவிற்கு வலிப்பு வந்ததா? கட்டிலில் இருந்து கீழே விழுந்தாரா? வலிப்பு வந்ததாக அங்குள்ள பெண்மணி தொலைபேசியில் தெரிவித்தாரா? அப்படி தெரிவித்திருந்தால், பின்னர் என் மறுத்தார்? தெரிவிக்கவில்லையாயின், ரசிகலாவின் தாயார் ஏன் அப்படி சொன்னார்? மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது என்ன நிலையில் கொண்டு செல்லப்பட்டார்? என்ற வினாக்களிற்கு முறையான விடைகள் கண்டறியப்பட வேண்டும். தனியே மருத்துவதுறை சார்ந்த விசாரணைக்கு அப்பால், புலன் விசாரணையும் அவசியம். அப்படியென்றால்தான் மக்களின் சந்தேகங்கள் நியாயமாக தீர்க்கப்படும்.