சூட்சுமமாகப் பறிக்கப்படும் நினைவுகூரல் உரிமை

Report Print Sathriyan in கட்டுரை

மூன்று தசாப்த காலப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஒரு பொது நினைவு நாளைப் பிரகடனம் செய்ய வேண்டும் என்றும், பொது நினைவிடம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் கோரும் தனிநபர் பிரேரணை கடந்தவாரம் பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தா முன்வைத்திருந்த இந்தப் பிரேரணையை அரசாங்கமும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் தரப்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, சில யோசனைகளையும் முன் வைத்திருக்கிறார்.

அதில் ஒன்று, பொது நினைவிடத்தை, எல்லோருக்கும் பொதுவான நாட்டின் எல்லா இடங்களில் இருந்தும் இலகுவாக வந்து செல்லக்கூடிய வகையிலான பாதுகாப்பான இடமான அனுராதபுரத்தில் அமைக்கலாம் என்பது

இரண்டாவது யோசனை, மே மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை பொது நினைவு நாளாக பிரகடனம் செய்யலாம் என்பது.

இந்த இரண்டு யோசனைகளையும், இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஒரு யோசனையாகத்தான் முன்வைத்திருந்தாரே தவிர தீர்மானமாக அறிவிக்க வில்லை. இந்த இரண்டு யோசனைகள் பற்றியும் கலந்துரையாடி முடிவெடுக்கலாம் என்றே அவர் கூறியிருந்தார்,

எனவே மே மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை பொது நினைவுநாளாக பிரகடனம் செய்வதோ, அனுராதபுரத்தில் பொது நினைவிடத்தை அமைப்பதோ இறுதியானது அல்ல ஆனாலும் பொது நினைவு நாளும் பொது நினைவிடமும் அமைக்கின்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த இரண்டு விடயங்களையும் முன்னிறுத்தி தனிநபர் பிரேரணையைக் கொண்டு வந்தது. தமிழர் தரப்பில் இருந்து தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் வாக்குகளால் தான் டக்ளஸ் தேவானந்தாவும் தெரிவு செய்யப்பட்டார்.

எனவே அவரையும் தமிழ் மக்களின் பிரதிநிதியாகத்தான் பார்க்க வேண்டும். ஆனால் அவர் முன் மொழிந்திருக்கின்ற பொது நினைவிடம் பொது நினைவு நாள் ஆகிய யோசனைகள் எந்தளவுக்கு தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதில் சந்தேகங்களும் கேள்விகளும் உள்ளன மூன்று தசாப்த காலப் போர், தமிழ் மக்களுக்கு மோசமான அழிவுகளையும், அழிக்க முடியாத நினைவுகளையும் தான் விட்டுச் சென்றிருக்கிறது

போரின் முடிவில் விட்டுச் செல்லப்பட்ட தமிழர் தரப்பின் நினைவிடங்கள் அனைத்தையும் போருக்குப் பிந்திய இராணுவச் சூழல் இல்லாமல் அழித்து விட்டது. ஆனாலும்,போர்க்கால நினைவுகளை தமிழ் மக்களிடம் இருந்து எத்தகைய இராணுவ அழுத்தங்களோ, அடக்குமுறைகளோ அழிக்கவுமில்லை, அழிக்கும் முயற்சிகள் வெற்றிபெறவுமில்லை.

கடந்த மாவீரர் தினத்தன்று, துயிலுமில்லங்களில் அஞ்சலி செலுத்துவதற்காகக் கூடிய மக்களே அதற்குச் சாட்சி.முள்ளி வாய்க்கால் நினைவு நாளில் ஒன்று கூடும் மக்களே அதற்குச் சான்று.

மூன்று தசாப்த காலப் போரின் போது, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டார்கள். வருடத்தின் எல்லா நாட்களிலும் எங்காவது ஒருவராயினும் கொல்லப்பட்டார். சிலவேளைகளில் பத்து, இருபது பேராகவோ, ஐம்பது நூறு பேராகவோ படுகொலை செய்யப்பட்டவரலாற்றுச் சம்பவங்கள் பல உள்ளன.

இவ்வாறான படுகொலைகளை அவ்வப்போது நினைவு கூர்ந்தாலும், முள்ளிவாய்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட நாளே தமிழினப் படுகொலையின் அடையாளமாக மாறியிருக்கிறது.

ஏராளமான மக்கள், உலகத்தின் கண் முன்னே படுகொலை செய்யப்பட்ட கோரமான நிகழ்வு என்பதால், இதனை இலகுவாக அடையாளப்படுத்தவும் நினைவு கூரவும் முடிகிறது.

அதுபோல, தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தில் ,மரணமான விடுதலைப்புலிகளை நினைவு கூரும் நாளாக, மாவீரர் நாள் தமிழ் மக்களால் நினைவு கூறப்படுகின்றது. புலிகளின் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த மரபு, கடந்த நவம்பர் 27ஆம் திகதி வரையில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்க விடயம்.

இந்த வகையில், மூன்று தசாப்த கால போரில் தமிழர் தரப்பில்,மாவீரர் நாளும், முள்ளிவாய்க்கால் தமிழன அழிப்பு நாளும்,என்றும் மறக்கவோ,மறைக்கவோ முடியாத நாட்களாக மாறியிருக்கின்றன.

இதுபோல, அரசாங்கமும் போர் முடிவுக்கு வந்த நாளை,போர் வெற்றி நாளாக கொண்டாடுகிறது. இப்போது அது படை வீரர்கள் தினமாக மாற்றப்பட்டிருக்கிறது. போரில் இறந்தவர்களின் நினைவு நாட்களும் அனுசரிக்கப்படுகின்றன.

போரில் வெற்றியீட்டிய தரப்பு என்ற வகையில், அரசாங்கமோ, சிங்கள மக்களோ நினைவு நாட்களை அனுசரிப்பதிலோ, நினைவுச் சின்னங்களை பாதுகாப்பதிலோ எந்தப் பிரச்சினையுமில்லை.

தமிழ் மக்களுக்குத் தான், இந்த இரண்டுக்குமே சவால்களாக இருந்தன. இப்போதும் இருக்கின்றன. மாவீரர் நாளையோ, முள்ளிவாய்க்கால் நினைவு நாளையோ அனுசரிக்க முயன்ற போதெல்லாம் தமிழ் மக்கள் கடந்த எட்டு ஆண்டுகளிலும் பெரும் நெருக்கடிகளையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டிருக்கின்றனர்.

தமிழ் மக்களின் வரலாற்று நினைவுச் சின்னங்களாக இருந்த துயிலுமில்லங்கள் சிதைக்கப்பட்டு பெரும்பாலானவை படைத்தளங்களாகப்பட்டன.

நினைவுகூரும் உரிமைகள் நசுக்கப்பட்ட மக்களாகவே தமிழ் மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். இது தமிழ் மக்களின் காயங்களை ஆற்றுவதற்கு தடையாக இருக்கும் என்னும், நினைவுகூரல் உரிமையை அனுமதிக்க வேண்டும் என்றும் ஐ.நா. உள்ளிட்ட தரப்புகள் அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்து வந்தன.

தமிழ் மக்களின் நினைவு கூரும் உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருந்த நிலையில் தான், டக்ளஸ் தேவானந்தாவினால், பொது நினைவு நாள், பொது நினைவுச் சின்னம் பற்றிய பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இதுப்பற்றிய சில யோசனைகள், ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் முன்பாகவும், கலந்தாய்வு செயலணியின் முன்பாகவும், கூறப்பட்டன.

இருந்தாலும், பொது நினைவு நாள், பொது நினைவிடம் எம்பன, தமிழ் மக்களுக்கு எந்தவகையில் பொருந்தக் கூடியது. அதனை தமிழ் மக்கள் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள் என்ற சிக்கல் உள்ளது.

பொது நினைவு நாள், பொது நினைவிடம் என்ற சிந்தனையின் ஊடாக, எல்லா இன மக்களும் ஒரே நேரத்தில் ஒன்று கூடும், வாய்ப்பு ஒன்று உருவாக்கப்படும் என்பது உண்மையே. அது தமிழ் மக்களின் நினைவு கூரும் உரிமை பறிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. அதேவேனை, தமிழ் மக்களுக்கு போர்க்காயங்கள் விட்டுச் சென்றுள்ள, மாவீரர் நாள் நினைவு கூரலும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், அந்தப்பொதுமைக்குள் புதைக்கப்பட்டு விடும் ஆபத்து இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

பொது நினைவிடம், பொது நினைவு நாள் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், தமிழ் மக்கள் இந்த நினைவு நாட்களை நினைவு கூருவதோ துயிலுமில்லங்களில் ஒன்று கூருவதோ சட்டவிரோதமாக்கப்படலாம்.

அவ்வாறு செய்தால் கூட, தமிழ் மக்களின் நினைவு கூரும் உரிமை பறிக்கப்படுகிறது என்ற குரலை எழுப்ப முடியாது. ஏனென்றால், அதற்குத் தானே பொது நினைவு நாளும், பொது நினைவுச் சின்னமும் இருக்கிறது என்ற பதில் கேள்வி எழுப்பப்படும்.

பொது நினைவு நாள் பற்றிய பிரேரணை மீது உரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஒரு விடயத்தைக் கூறியிருந்தார்.

" போரில் இறந்த மக்களை நினைவு கூறுங்கள், ஆனால் புலிகளை நினைவு கூறாதீர்கள், அவர்களுக்காக நினைவிடம் அமைக்காதீர்கள்,

புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம், புலிகளை நினைவு கூருவது, இராணுவத்தினரை அவமதிக்கும் செயல்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதிலிருந்து அரசாங்கம் எதைச் செய்ய முனைகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

புலிகளை நினைவு கூரும் நடைமுறையில் இருந்து, தமிழ் மக்களின் நினைவு கூரும் உரிமையை தனியாகப் பிரிக்க எத்தனிக்கிறது அரசாங்கம்.

தமிழ் மக்களுக்கு பொது நினைவிடத்தில், பொதுவான நினைவு நாளில், நினைவு கூரும் உரிமையை அளித்து விட்டால், அதற்கு அப்பால் புலிகளை நினைவு கூரும் உரிமையை அவர்கள் இழந்து விடுவார்கள். புலிகளைத் தடை செய்யப்பட்ட இயக்கமாக மட்டும் அரசாங்கம் பார்க்கவில்லை அதற்கும் அப்பால் புலிகளை நினைவு கூருவதை இராணுவத்தை அவமதிக்கும் செயலாகவும் பார்க்கிறது. இது தான் அரசாங்கத்துக்கு உள்ள பிரதான பிரச்சினை.

ஆனால், புலிகளும் இந்த மண்ணில் இங்குள்ள தாய்மாருக்குப் பிறந்தவர்கள் தான். அவர்களின் உறவுகளும், வாரிசுகளும் இந்த மண்ணில் தான் இருக்கின்றனர். அவர்கள் உயிர்களைக் கொடுத்தது கூட தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்துக்காகத் தான். தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தில் இருந்த போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து, மன்னிப்பு அளிக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது என்றால், ஏன் இறந்து போன புலிகளை நினைவு கூற அனுமதிக்க முடியாது? புலிகளை நினைவு கூறுவது இராணுவத்தை அவமதிக்கும் செயல் என்ற சிந்தனையே அரசாங்கத்திடம் காணப்படுகிறது.

ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் மரணங்களுக்கு இராணுவத்தினர் காரணமாக இருந்திருக்கின்றனர். இந்த நிலையில், அதே இராணுவத்தினருக்கும் சேர்த்து பொது நினைவு நாளின், பொது நினைவிடத்தில் தமிழ் மக்களால் எவ்வாறு ஒர் உண்மையான நினைவு கூரலைச் செய்யமுடியும் என்ற கேள்வி எழுகிறது. முள்ளிவாய்க்காலிலும்,

துயிலுமில்லங்களிலும், நினைவு கூரும் உரிமையை தமிழர் தலைமைகள் நிலைநாட்டத் தயாராக இல்லாதிருப்பது தான் இதுபோன்ற நிலைமைகளுக்குக் காரணம்.

முள்ளிவாய்க்காலில் ஒரு நினைவிடத்தை அமைக்க வடக்கு மாகாணசபை தீர்மானம் எடுத்தது. ஆனால் அங்கு இன்னமும் எந்த நினைவிடமும் அமைக்கப்படவில்லை.

அண்மையில் நல்லூரில் உள்ள தியாகி திலீபன் நினைவிடத்தை புனரமைத்து பராமரிக்கும் பொறுப்பை ஏற்பதாகவும் வட மாகாணசபை முடிவெடுத்தது. அதுவும் தியாகி திலீபன் நினைவு நாளுக்கு முன்னர் அதனை செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது. தியாகி திலீபனின் நினைவு நாட்கள் 15ஆம் திகதி ஆரம்பமாகி விட்டன. ஆனாலும் திலீபனின் நினைவிடத்தை புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டதாகத் தெரியவில்லை.

விடுவிக்கப்பட்ட துயிலுமில்லங்களை ஆங்காங்கே துப்புரவு செய்யும் பணிகள் நடந்தாலும், அதற்குள்ளேயும் உள்நோக்கங்கள் இருப்பதாகவே தெரிகிறது.

தமிழர் தரப்பில் நினைவுகூரல்கள் அனைத்தும், பொதுவானமுறையில் ஒழுங்கமைக்கப்படும் ஒரு செயல்முறை உருவாக்கப்படாத வரையில், தமிழரின் நினைவு கூரல் உரிமையைச் சிதைக்கின்ற அதனைப் பறிக்கின்ற முயற்சிகள் வெவ்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படும்.

அதற்கு எம்மவர்களே துணைபோகின்ற நிலையும் தொடரத்தான் செய்யும்.