கிழக்கு மாகாண சபை ஒக்டோபர் முதல் வாரம் கலைகின்றது!

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

கிழக்கு மாகாண ஆட்சி ஒக்டோபர் முதல் வாரம் கலைக்கப்பட்டு மீண்டும் புதிய ஆட்சி அமையும் வரை ஆளுநரின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும் என அறிய வருகின்றது.

அரசியல் அமைப்பின் 2௦ஆவது திருத்த சட்டமூலம் தோல்வி கண்டு விட்டது அதனால் தேர்தலுக்கு அரசு செல்ல வேண்டிய கட்டாய நிலை வந்துள்ளது.

புதிய தேர்தல் முறையின் கீழ் ஒன்பது மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்தப்போவதாகக் காரணங்காட்டி பதவிக்காலம் முடிவடையவுள்ள கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தலை அரசு ஒத்திவைக்க தீர்மானித்திருந்தது.

ஒன்பது மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் புதிய முறைப்படி ஒரே தினத்தில் நடத்துவதே உசிதம் எனப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த பிரேரணையின் அடிப்படையிலேயே அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கின்றது.

அமைச்சரவையின் இந்தத் தீர்மானத்துக்கு பொது எதிரணியான மஹிந்த அணி கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது.

அரசு எந்தத் தேர்தலிலும் தோல்வியைத் தழுவுவது நிச்சயம் எனத் தெரிந்திருப்பதாலேயே இத்தகைய நொண்டிச்சாட்டுகளைக் காரணங்காட்டி சகல தேர்தல்களையும் ஒத்திவைத்துக் கொண்டிருக்கின்றது எனவும், பதவிக்காலம் முடிவடையப்போகும் மூன்று மாகாண சபைகளின் தேர்தல்களையும் உரிய காலத்தில் நடத்தவேண்டும் எனவும் பொது எதிரணி வலியுறுத்தியுள்ளது.

2௦ஆவது திருத்த சட்டமூலத்தை அரசு கைவிட வேண்டிய நிலை வந்துள்ளது

அரசு 2௦ஆவது திருத்த சட்டமூலத்திற்கு பல காரணங்கள் சொன்னாலும் 2௦ஆவது திருத்த சட்டமூலம் என்பது மாகாண சபைகளை கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்குவதும் அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தும் திட்டமாகும்.

தற்போதைய நிலையில் மாகாண சபைகளை கலைக்க வேண்டுமானால் அந்தந்த மாகாண முதலமைச்சர்கள் விரும்பி கையொப்பம் இட வேண்டும்.அதாவது மாகாண சபை கலைப்பிற்கான ஒப்புதலை அந்த மாகாண முதல்வர் சம்மதிக்க வேண்டும்.

இந்தத் தீர்மானத்துக்கு பொது எதிரணியான மஹிந்த அணி கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்திருந்தது. மாகாண சபைகளும் எதிர்த்தன மற்றும் உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் கிளம்பியது.

இந்த நிலையில்தான் நீதிமன்றம் தனது தீர்ப்பை அதிபர் மைத்திரி மற்றும் சபாநாயகருக்கும் அனுப்பி வைத்துள்ளது. அந்த தீர்ப்பில் 2௦ஆவது திருத்த சட்டமூலத்திலுள்ள சரத்துக்களை சர்வஜன வாக்ககெடுப்பிற்கு உட்படுத்தி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளதாம்.

அதனால் இந்த மாதத்துடன் ஆட்சிக் காலம் முடிவடைகின்ற கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தலை உரிய திகதியில் நடத்த வேண்டிய கட்டாய நிலையில் அரசு உள்ளது.

அத்துடன் ஒக்டோபர் முதல் வாரம் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது

தற்போதய அரசமைப்பின் மாகாண சபைகள் சட்டத்தின் பிரகாரம் ஆட்சிக்காலம் முடிவடைகின்ற மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒத்தி வைக்க முடியாது. அதை தடுக்கவே இந்த 2௦ஆவது திருத்த சட்டமூலத்தை அரசு கொண்டு வந்தது.

2௦ஆவது திருத்த சட்டம் வெற்றி பெற முடியாது என்பதால் 3 சபைகளுக்குமான தேர்தலை அரசு டிசம்பர் மாதம் நடத்த வேண்டிய கட்டாயம் வந்துள்ளது.

தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஒக்டோபர் முதல் வாரம் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கில் புதிய ஆட்சி அமைக்க 2 அணிகள் களத்தில் இறங்கவுள்ளன

அதிபர் மைத்திரி தலைமையிலான நீல அணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரு கூட்டு. (இது தேர்லுக்கு பின்னரான கூட்டு- ஆட்சி அமைப்பதற்கான கூட்டு ) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே கிழக்கில் ஆட்சி அமைப்பது குறித்து அதிபர் மைத்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஐ.தே.க வும், ஹக்கீம் கட்சியும் ஒரு கூட்டு. ரிசாட் அணியும் ஐ.தே. க அணி கொண்ட பச்சை கூட்டில் இணைந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் வழமை போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனியாகத்தான் களத்தில் இறங்கும். வெற்றி பெற்ற பின்னர்தான் நீல அணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஆட்சிக் கூட்டு அமையும்.

தற்போது கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 12 உறுப்பினர்களை பெற்றுள்ளது. கடந்த முறை மட்டக்களப்பில் கோல்மால் செய்து கூட்டமைப்பு ஒன்று மற்றும் 2 போனஸ் ஆசனத்தை மகிந்த அரசு பிடுங்கி எடுத்தது. அதனால் கூட்டமைப்புக்கு 3 ஆனசம் இல்லாமல் போனது. திருடப்பட்டது.

இம்முறை கூட்டமைப்பு 14- 15 ஆசனங்களை தனியாகப் பெறும்.. ஆட்சி அமைக்க 4-5 மட்டுமே தேவைப்படும். அந்த 4-5 உறுப்பினர்களை அதிபர் மைத்திரி தலைமையிலான நீலப் பக்கம்பெற்று கிழக்கு ஆட்சியை கூட்டமைப்பு அமைக்கும் திட்டம் உள்ளது. தற்போது கிழக்கில் நீலக் கட்சி 5 உறுப்பினர்கள் உள்ளார்கள்.

ஹக்கீம் ஆதரவு இல்லாத கிழக்கு ஆட்சியை அமைக்கும் முழுமையான எண்ணம் கூட்டமைப்புக்கு உள்ளது.

இந்த நிலைப்பாட்டுக்கு அதிபர் மைத்திரி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் உள்ளது. நீல அணிக்கு இன்னும் அதிகமான வாக்குகளை பெறுவதற்காக தற்போது மட்டு நகர் சிறையில் இருக்கும் முன்னாள் முதல்வர் பிள்ளை தம்பியை விரைவில் பிணையில் விடும் எண்ணம் அரசுக்கு உள்ளது. விரைவில் பிள்ளை தம்பி பிணையில் விடுவிக்கப்படலாம்.

ஒரு கொலை சந்தேக நபர் கிரிமினல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் 6 மாதம் கடந்து பிணையில் விடுவிக்க சட்டத்தில் இடமுண்டு. ஆனால் terrorist Act. Terrorism Murder என்னும் குற்றச்சாட்டின் கீழ் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கொலை என்றால் தடை உத்தரவின் கீழ் வேண்டிய காலங்கள் வரை சட்டமா அதிபரின் பிணை வழங்கும் அனுமதி கிடைக்கும் வரை 3 மாதங்கள் கடந்து நீதிபதி முன்பாக நிறுத்தி அல்லது நிறுத்தாமல் அந்த தடை உத்தரவை நீடித்துக்கொண்டே செல்லலாம். அப்படியாகத்தான் பிள்ளையானின் வழக்குச் சென்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் இப்போது சட்டமா அதிபரின் சிபாரிசின் கீழ்தான் பிணை கிடைக்கவேண்டும்.

மறுபுறம் ஐ.தே.க.தரப்பு ஹக்கீம் றிசாட் இருவர் ஆதரவில் கிழக்கை கைப்பற்ற திட்டம் தீட்டியுள்ளது. அதற்காக மட்டக்களப்பில் தமிழ் மக்களின் சுமார் 10.000 ஆயிரம் வாக்குகளை பிடுங்கும் திட்டம் உள்ளது. இதற்காக பிரபல மட்டு மாவட்ட தமிழ் அரசியல்வாதி ஒருவரை வெற்றி பெறச்செய்ய உள்ளார்கள். அதற்காக பட்டிருப்பு தொகுதி கணேசநாதனை ஐ. தே.க களமிறக்கும் திட்டம் உள்ளது.

இந்த திட்டத்தில் சுமார் 8, 000 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும் என்பது எமது கணிப்பு. அந்த தமிழ் அரசியல்வாதி வெற்றி பெற்றால் அவர் கிழக்கில் பலமான அமைச்சராக நியமிக்கப்படுவார்.

இதுதான் ஐ.தே.கவின் பாரிய திட்டம். அதாவது மட்டு. மாவட்டத்தில் கூட்டமைப்பு வெற்றியை குறைக்கும் திட்டம்.

மறுபுறம் மட்டு. மாவட்டத்தில் பிரபல அரசியல்வாதி ஹிஸ்புல்லாஹ் மூலம் நீலப் பக்கம் தமிழ் வாக்குகளை பிடுங்கும் திட்டம் உள்ளது. இதற்கு கொஞ்சம்பணம் இறைக்கும் திட்டம் உள்ளது. ஆனால் நீல அணிக்கு தமிழ் வாக்குகள் கொஞ்சம் குறைவுதான்.

ஐ.தே.க, ஹக்கீம் காங்கிரஸ் மற்றும் றிசாட் அணியும் இணைந்து ஆட்சி அமைக்க ஒரு களம். மறு களம் நீலம் தனியாகவும், கூட்டமைப்பு தனியாகவும் மும்முனைப் போட்டி. யாருக்கு போனஸ் 2 உறுப்பினர்கள் கிடைக்கின்றதோ அந்த அணிதான் ஆட்சி அமைக்கும். கூட்டமைப்பு தனியாக 12 ஆசனங்கள் பெற்று வாக்குகள் கூடுதலாக பெற்றால் 2 போனஸ் ஆசனங்களை பெற்று விடும்.

கிழக்கில் மொத்த ஆசானங்கள் 35+ 2 = 37 ( போனஸ்-2). கிழக்கில் ஹக்கீம் காங்கிரஸ் ரிசாட் அணி மோதல் போட்டி மிகவும் தீவிரமாக இருக்கும். ரிசாத் முற்று முழுதாக கிழக்கில் முகாமிட்டு இருப்பார். காரணம் கிழக்கில் மட்டும் தேர்தல் என்பதால் மிக அதிக ஈடுபாடு கொண்டு ரிசாட் அணி கிழக்கில் 4-5 ஆசனங்கள் பெறும் நிலை உள்ளது. அத்துடன் அக்கரைப்பற்று அதாவுல்லாஹ் அதிபர் மைத்திரியுடன் இணைந்து களம் இறங்கவுள்ளார் .அம்பாறை களம் மிகவும் சூடு பிடிக்கும்.

நிலாம்டீன்