கரும்புலியாக காத்திருந்த வேளை துரோகத்தால் வீழ்ந்த பவான்

Report Print Dias Dias in கட்டுரை
கரும்புலியாக காத்திருந்த வேளை துரோகத்தால் வீழ்ந்த பவான்

கலைந்த தலையும், கசங்கிய ஆடையுடமாக ஒருவர் வருவார். அவர் வருகின்ற மிதிவண்டியின் ஓசையிலேயே மற்றவர்கள் ஒதுங்கி வழிவிடுவார்கள். அந்த அளவு கட கட வண்டி அது.

கடந்த 1980 காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட நீதி மன்றத்தில் எழுது வினைஞராக வேலைக்குச் சேர்ந்திருந்தார் பவான்.

கோட்டைக் கல்லாற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர். தனது வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கின்ற கோட்டைக் கல்லாற்று மகாவித்தியாலத்திலேயே ஆரம்பக் கல்வியைக் கற்றார்.

கோட்டைக் கல்லாற்றுப் பாடசாலைகளுக்குச் செல்லும் மணல் ஒழுங்கையால் சென்றால் மூன்று நான்கு வளவுகள் தாண்டி இவரின் வீடு இருக்கும் .

சிறியதொரு ஓலைக்குடிசை, அதற்குள் ஒரு அறை முன்பக்கத்தில் திறந்த பகுதியில் ஒரு பழைய காலத்துக் கட்டில். அடுத்த பக்கத்தில் அடுப்பு இருக்கும். அதில் தான் குடும்பத்துக்கான சமையல், விருந்தினர்களுக்கான தேனீர் தயாரிப்பு எல்லாம்.

வீட்டு முற்றத்தில் பெரிய வேப்பமரம், கிணற்றடியில் மயிர்க்கொட்டி மரம் - இந்த வசிப்பிடத்தில் சரவணபவானின் அப்பா, அம்மாவுடன் சின்னத்தம்பி சடாச்சர பவானும் வசித்து வந்தார்கள்.

அரைக் காற்சட்டை போட்ட பொடியனான சரவணபவான் உயர்தரவகுப்புப் படிப்பதற்காக மட்டக்களப்பு சிவானந்தா மகாவித்தியாலயத்தில் சேர்ந்து அதன் விடுதியில் தங்கிப் படித்து வந்தான்.

1971 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் பதியுதீன் முகமட்டினால் கொண்டு வரப்பட்ட 'தரப்படுத்தல்' என்ற கல்விக் கொள்கை தமது உயர் கல்வியை அடியோடு அழிப்பதை உணர்ந்த தமிழ் மாணவர்களும் தமிழ் இனத்தவரும் கொதித்து எழுந்தனர்.

தாங்களும் தங்கள் பாடும் என்றிருந்த தமிழர் வரலாற்றில் இச் சம்பவமானது இளைஞர்களை உசுப்பேத்தி விட்ட ஒரு சம்பவமாகக் கருதப்படுகிறது.

இக்காலத்தில் தமிழ் மாணவர்கள் தங்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்து வீதியில் இறங்கி பின்னால் வரப்போகும் ஒரு பெரிய புரட்சிக்கு வித்திட்ட பெருமை சிங்கள அரசாங்கத்தையே சாரும்.

1971ஆம் ஆண்டு தமிழ் மாணவர்களின் உரிமையை வென்றெடுக்க ' தமிழ் மாணவர் பேரவை ' என்ற இயக்கம் உருவாகியது . இந்த இயக்கத்தின் தலைவராக திரு சத்திய சீலன் இருந்தார்.

பல்வேறு இடங்களில் தமிழ் மாணவர் பேரவையினரின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தலைநகரில் உள்ள வெபர் மைதானத்திலும் ஒரு கூட்டம் நடந்தது. மட்டு நகரில் இருந்த பாடசாலைகளின் மாணவர்கள் அனைவரும் வந்து இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்திலும் பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டார்கள் .

இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்குப், பலர் வந்திருந்தாலும் யாழ்ப்பாணத்திலிருந்து சத்திய சீலன் வந்திருந்தது அடையாளப்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வாக இருந்தது .

சத்தியசீலனுடன் பலர் வந்திருந்தாலும் சிவகுமார் என்ற ஒரு மாணவனும் வந்திருந்தார். இவர்தான் பின்னர் சரித்திரம் படைத்த மாவீரராகப் புகழ் பெற்றார்.

1971ஆம் ஆண்டுக்குப் பின் தமிழ்மாணவ பேரவையினரின் போராட்டங்கள் பெரிய அளவில் நடக்கவில்லை கறுப்புக்கொடி காட்டுதல் சுவர் ஓட்டிகள் ஒட்டுதலுடன் மெல்ல மெல்ல அலைகள் அடித்துக்கொண்டு இருந்தன.

இந்தக் காலத்தில்தான் பொன். வேணுதாஸ்,மோகனச்சந்திரன் போன்றோரின் செயற்பாடுகள் மட்டக்களப்பு நகரத்தை ஒட்டி ஆரம்பிக்கப்பட்டது என்று கூறலாம்.

1972 ஆம் ஆண்டு புதிய குடியரசு அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட போது அடங்கிக் கிடந்த தமிழ் இளைஞர்கள் சுறுசுறுப்பு அடைந்தார்கள். தமிழ் அரசியல் வாதிகள் விழித்துக்கொண்டார்கள்.

தமிழ் இனத்தின் உரிமைகள் சிங்கள அரசாங்கத்தால் பறிக்கப்படுகின்றது. என்ற உணர்வு எல்லாத் தமிழர்களையும் பற்றிக்கொண்டது .எந்தக் காலத்திலும் தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ முடியாது. என்ற நிலை உருவானது.

1972ஆம் ஆண்டுதான் முதன் முதலாக 'தமிழீழம்' என்ற சொல் இளைஞர்களின் உணர்வுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

தமிழீழம் மலர்க! தமிழீழம் தமிழரின் தாகம் என்ற வசனங்கள் எல்லாம் வீதிக்கு வரத் தொடங்கின. அந்த நேரத்தில் சிவானந்தா விடுதியில் தங்கியிருந்து படித்துக்கொண்டிருந்த சரவணபவான் வெண்கட்டிகளை எடுத்துக்கொண்டு இரவிலே வேலி புகுந்து வருவார். அவருடன் சேர்ந்து சில இளைஞர்களும் தமிழீழம் மலர்க என்ற வசனத்தை வீதிகளில் எழுதுவார்கள். பின் ஓடி மறைந்து விடுவார்கள்.

வெண்கட்டியால் எழுதுவது அழியத் தொடங்கியது. இதன் பின் சுண்ணாம்பு கரைத்து எழுதினார்கள் அதன் பின் சுண்ணாம்புடன் வச்சிரமும் கரைத்து வீதிகளிலும் சுவர்களிலும் எழுதினார்கள்.

'மெல்ல மெல்ல தமிழர் போராட்டம் உருமாறிக்கொண்டிருந்தது'

குடியரசு அரசியல் அமைப்புச் சட்டம் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படுகின்ற நாள் தமிழர் தேசம் எல்லாம் கரி நாளாக தமிழ் அரசுக் கட்சியினரால் பிரகடனப் படுத்தப்பட்டது.

வெண்கட்டியில் வீதியில் எழுதிய போராட்டம் கறுப்புக்கொடி கட்டுதல், மந்திரி மாருக்குக் கறுப்புக்கொடி காட்டுதல், சிங்கக் கொடி எரித்தல் என்ற வடிவங்களைப் பெற்றுக்கொண்டு இருந்தது. இந்தச் சம்பவங்களில் எல்லாம் பவான் என்று அழைக்கப்பட்ட சரவணபவான் இருந்தார். பவான் சிவஜெயம் (காசி ஆனந்தனின் தம்பி ) ஆகியோரிடமும் இருந்த இரண்டு ஒட்டை மிதி வண்டிகள் தான் மட்டக்களப்பில்இளைஞர் பேரவைஇ தமிழர் கூட்டணி போன்ற இயக்கங்களுக்கு உறுதுணையாக இருந்தன .

அவை சுவர் ஒட்டி ஓட்டுதல், துண்டுப் பிரசுரம் விநியோகித்தல் இவீதிகளில் எழுதுதல் போன்றவற்றுக்கெல்லாம் உதவியாக இருந்தன.

பவானின் கையெழுத்து வடிவானது. அச்சு எழுத்துப்போல் இருக்கும். இதனால் சுவரொட்டி எழுதுவதற்கு அவரையே காத்திருப்போம். மட்டக்களப்பு நகரத்தில் இருந்த ஒரு அச்சகம் - 'ராஜன் அச்சகம் „ என்று அதற்குப் பெயர். ஒவ்வொரு எழுத்துக்களாக எடுத்துத்தான் அச்சுக் கோர்க்க வேண்டும்.

இந்த அச்சகத்தின் உரிமையாளர் இனப்பற்றாளரும், விடுதலை உணர்வு உள்ளவரும் ஆவார். இரவிலேயே அச்சகத்தை திறந்து தந்து எங்களுடன் கூட நின்று துண்டுப் பிரசுரங்களை அச்சடித்துத் தருவார்.

அச்சுப் கோர்ப்பதும், காலால் மிதித்து மிதித்து ஒவ்வொரு பிரசுரமாக அடிப்பதும் சிரமமான வேலை. இந்த வேலைகளில்எல்லாம் சிவஜெயமும் பவானும்அலுப்புப் பார்க்காமல் ஈடுபடுவார்கள்.

பவான் தனது க .பொ. த உயர் தர பரீட்சையில் சித்தியடைந்து சிறிது காலத்தில் எழுது வினைஞராக மட்டக்களப்பு மாவட்ட நீதி மன்றத்தில் இணைந்து கொண்டார்.

மட்டக்களப்பில் அவரது சித்தப்பா வீட்டில் இருந்து வேலைக்குப் போவார். இதன் காரணமாக இரவிலேயே அவரால் இவ்வாறான வேலைகளில் ஈடு படுவது வசதியாக இருந்தது .

இவரின் அரசியல் செயல்பாடு காரணமாக வேலைக்குப் போவது குறைவடைந்தது. இதனால் அதிகாரிகளின் எச்சரிக்ககையை பலதடவைகள் சந்தித்து இருக்கிறார். இதன் உச்சக்கட்டமாக கொழும்பு மாவட்ட நீதி மன்றத்துக்கு இடமாற்றப்பட்டார்.

இதன் பின் பவானின் வாழ்க்கைச் செலவு கஷ்டமான நிலைக்கு வந்தது. தன்னை நம்பியே இருக்கும் தாய், தந்தை, தம்பி படிப்பு தனது செலவு என்பதெல்லாம் அவருக்குப் பெரிய சுமையாக இருந்தது. அப்படியான நிலையிலும் கொழும்பில் இருந்து வெள்ளிக்கிழமை பின்னேரம் புகை வண்டியில் ஏறி விடிய மட்டக்களப்புக்கு வந்துவிடுவார் .

அநேகமான நாட்களில் புகையிரத்துக்கான பயனச் சீட்டினை எடுக்கமாட்டார். ஆசனங்களுக்கு கீழே படுத்துக் கிடந்தது பயணிப்பது இவருக்கு விருப்பமான செயல். இந்தப்பயணங்களில் பல தடவைகள் இவர் தண்டப்பணம் செலுத்தியதும் பணம் இல்லாத போது மணிக்கூட்டைக் கழற்றிக்கொடுத்த சம்பவங்களும் நிறைய நடந்திருக்கின்றன.

சில காலம் ஹாடி தொழில் நுட்பக் கல்லூரியில் படித்த சடாட்சர பவன் பின்னர் தனது உயர்தரப் பரீட்சையில் சித்தி யடைந்தார்.

இவர் பேராதனை பல்கலைக் கழகத்துக்கு சென்று பதிவு செய்வதற்கு சில நாட்களுக்கு முன் காசி ஆனந்தனின் தம்பியின் உந்துருளியில் சென்று விபத்துக் குள்ளானார். இதில் அவரின் கால் உடைந்தது. இதனால் அவரால் பதிவு செய்ய பல்கலைக்கழகம் செல்ல முடியாமற் போய்விட்டது. இந்த பதிவினை பவான் அவர்களே சென்று செய்தார்.

சடாட்சர பவானின் பொறியியலாளராகும் கனவு கரைந்து கொண்டிருந்தது. ஒரு பக்கம் கால் உடைவு ,மற்றப்பக்கம் அரசியல் சூழ் நிலை அரசியற் செயற்பாடுகளில் இருந்து தம்பியை விலக்கி படிப்பைத் தொடர்வதற்கு பவான் எடுத்த முயற்சிகள் எல்லாம் பலன் அளிக்காமல் போய்க்கொண்டிருந்தன.

1977ஆம் ஆண்டு மீண்டும் நெருப்பு மழை தமிழர் பகுதிகளில் பெய்யத் தொடங்கியது து.சு. ஜெயவர்த்தனாவின் அரசியல் அமைப்புச் சட்டம் இளைஞர்களின் இரத்தத்தைச் சூடேற்றிக்கொண்டு இருந்தது. இந்தச் சம்பவங்களில் எல்லாம் பவான் தீவிரமாகச் செயற்பட்டார். பின்னர் காசி ஆனந்தனுடனும் அவரது குடும்பத்துடனும் பவானும் சில இளைஞர்களும் மிகவும் நெருக்கமாகப் பழகினார்கள்.

இவரின் செயல்பாடுகளில் எல்லாம் பவானும் ஒன்றித்து நின்றார். இந்தக் காலத்தில் பவானின் தம்பி சடாட்சரபவானும் இணைந்து கொண்டார். தந்தையார் பவானுயும் அவரது தம்பியையும் சந்திப்பதற்காகக் காசி ஆனந்தனின் வீட்டுக்குத் தேடி வரவேண்டிய அளவுக்கு அவர்களின் உறவு நெருக்கமாக இருந்தது.

பவான் வேலைக்குப் போவதும் பின்னர் கூட்டணி, தமிழ் இளைஞர் பேரவை வேலைகளில் ஈடு படுவதுமாக இருந்தார்.

சடாட்சர பவான் என்கின்ற பிரான்சிஸ் 1983 ஆண்டுக்கு பிறகு முழுநேர போராளியாகியது போல பரமதேவாவும் இந்தக் காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் சேர்ந்து கொண்டார்.

பிரான்சிஸ் ஆயுதப் பயிற்சிக்கு வர முற்பட்ட போது அவரைத் தடுத்து நிறுத்திய யோகன் என்பவர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விடுதலைப் புலிகளின் தொடர்பாளராக அவரை நியமித்து விட்டுச் சென்றார் .

இக் காலப்பகுதியில் களுவாஞ்சிக்குடியை சேர்ந்த ( சுந்திஃ2ம்லெப்.சுந்தரம் என்று அழைக்கப்பட்ட (தம்பிப்பிள்ளை அருள்ராஜா (29.08.1986. வீரச்சாவு ) மட்டுநகர் அரசடியைச் சேர்ந்த கண்ணன் ஃமயூரன் (சீனித்தம்பி ஜீவராஜ் 14.11.1990 வீரச்சாவு), மற்றும் மகிழடித்தீவைச் சேர்ந்த ரவி (தம்பையா வாமதேவன் 22.09.1984 வீரச்சாவு), மேஜர் சந்திரன் (வள்ளுவன்) காத்தமுத்து சிவஜெயம் 10.09.1988.) ஆகியோருடன் மட்டுநகர் ஜீவன்,கல்முனை முருகன்,ஆனைக்குட்டி ஆரையம்பதி இவர்களையும் இணைத்துக்கொண்டு மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டார் பிரான்சிஸ்.

பரமதேவா, பிரான்சிஸ் இவர்களைப் பற்றி இரு புத்தகங்களையே எழுதலாம் தற்போது அவர்களை இந்த இடத்தில் நிறுத்தி விட்டு பவானைப்பற்றிய சம்பவங்களை நினைவு கூர்வோம் .

1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் அநேகமான இளைஞர்களை கவர்ந்த தேர்தலாக இருந்தது. இந்த வகையில் பவான் அவர்களும் காசி ஆனந்தனின் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்தார்.

அப்போது தொகுதி வாரியான தேர்தலாக இருந்தது. மட்டக்களப்பு த் தொகுதியில் காசி ஆனந்தன் அவர்களும், இராஜதுரை அவர்களும் கூட்டணி, தமிழரசுக் கட்சி ஆகிய கட்சிகளில் போட்டியிட்டார்கள். இதில் இராஜதுரை அவர்கள் வெற்றி பெற்றார்.

இந்தத் தேர்தலுக்கு பின் அரசியல் ரீதியான பெரிய செயற்பாடுகள் எதுவும் நடக்கவில்லை. அதே நேரத்தில் இளைஞர்கள் வேறு திசையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள் .

இளைஞர்களின் போராட்ட வடிவங்கள் மாறிக்கொண்டிருந்ததால் அவர்கள் எல்லாம் ஸ்ரீலங்காப் படைகளால் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்பட்டார்கள் இதனால் அவர்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது

1983ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலைமை மோசமானது பவான் அவர்களால் தொடர்ந்து ஒரே இடத்தில் இருந்து வேலை செய்யமுடியாமல் போய் விட்டது . 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினர் இலங்கைக்கு வந்தபின் நிலைமை இன்னும் மோசமானது .

பவானின் தம்பி பிரான்சிஸ் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டிருந்தார். இந்தியப் படைகள் தேசவிரோதக் குழுக்கள் மத்தியில் நின்று பிரான்சிஸ் செய்த அரசியல் பணி இந்தியப் படைகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பவானின் வீடும் பல தடவைகள் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டது.

பிரான்சிஸ்சினால் பவானும் தன் வேலையை விட்டுத் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. தனது ஒரே ஒரு தம்பியான பிரான்சிஸ் மீது பவான் அதிக பாசம் வைத்திருந்தார். இப்படியாக இக்கட்டான சூழ்நிலையிலும் பிரான்சிசையும் சந்திக்க பவான் வந்து போவார். இந்தக் காலத்தில் விடுதலைப் புலிகளின் முகாம்களிலேயே பவான் தங்கினார்.

அம்பாறை கஞ்சிக்குடியாறு ஆற்றுப்பகுதியில் இருந்த விடுதலைப் புலிகளின் முகாமிலிருந்து பவான் வெளிவேலைகளுக்காக வந்து போகும் நாட்களில் பிரான்சிசையும் எப்படியாவது ஒரு தரம் சந்தித்து விட்டு போவார். இவர் ஊடக பிரான்சிசுடன் நகரத்தில் பணியில் இருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தேவையான உதவிகளையும் இவரே கவனித்துக் கொண்டார்.

பவானைப் பிடித்தால்பிரான்சிசை பிடிக்கலாம் என்று ஒட்டுக்குழுக்கள் ஊடக அறிந்த இந்தியப்படையினர். பவானைக் கண்காணிக்கத் தொடங்கினர். பலதடவைகள் இந்தியப் படையினரிடம் இருந்து சாதுரியமாகத் தப்பி இருக்கிறார் பவான்.

வைத்தியரால் காப்பாற்றப்பட்ட பவான்

கஞ்சிக்குடியாறு ஆற்றுப்பகுதியில் பவானின் நடமாட்டத்தை அறிந்த இந்தியப் படைகளும் தேசவிரோதக் குழுக்களும் அந்தப் பகுதியில் ஒரு சுற்றி வளைப்பை மேற் கொண்டன. அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் அந்த ஊரில் வைத்தியராக கடமை செய்து கொண்டிருந்தார்.

நிலைமையை அறிந்த வைத்தியர் தன்னிடம் இருந்த நூற்றுக்கணக்கான நெல் மூடைகளுக்குள் மத்தியில் இருந்த ஒரு இடத்தில் பவானை மறைத்து வைத்துப் பாதுகாத்தார். ஒரு நாள் முழுவதும் நெல் மூடைகளுக்குள் மத்தியில் இருந்த பவான் அன்று அந்த வைத்தியரால் காப்பாற்றப்பட்டார்.

சிறிது காலத்தில் அந்த வைத்தியரும் படையினரால் தேடப்படுபவரானார். அந்தக் காலப்பகுதியில் இந்தியப் படையினருடனான யுத்தம் முடிந்து.

மீண்டும் இலங்கைப் படையினருடன் யுத்தம் ஏற்பட்ட பின் இலங்கைப் படையினரும் சகோதர இனத்தவர்களும் சேர்ந்து வைத்தியரிடம் இருந்த ஆயிரத்துக்கு மேற் பட்ட நெல் மூடைகளையும் உழவு இயந்திரம் போன்ற சொத்துக்களைக் கொள்ளை அடித்து வீட்டுக்கும் தீவைத்தனர்.

தெய்வாதீனமாக உயிர்தப்பிய வைத்தியரும் இஆசிரியையான அவருடைய மனைவியும் நான்கு பிள்ளைகளும் விடுதலைப் புலிகளின் உதவியோடு காட்டுப் பகுதி ஊடாக மட்டக்களப்பு வந்தாறுமூலைக்கு மேற்குப் பெரிய வெட்டுவானில் கரிகாலனின் பொறுப்பில் உள்ள விடுதலைப் புலிகளின் முகாமுக்கு வந்து சேர்ந்தார்கள். பின்னர் இவர்கள் யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டனர் மருத்துவர் நடராஜன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வில்லியம் மருத்துவ மனையில் பணி புரிந்தார் .

1994ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தை காலத்தில் சமாதானக்குழுவில்ஒருவராக விடுதலைப் புலிகளின் சார்பில் மருத்துபர் நடராஜன் இருந்தார் .

அக்டோபர் 30ஆம் 1995 யாழ் இடம் பெயர்வுக்கு பின் நட்டாங்கண்டல் (வன்னி) மருத்துவ மனையில் பொறுப்பு வைத்திய அதிகாரி இருந்தார். இறுதி யுத்த காலத்தில் மரணமானார்.

இந்திய இராணுவத்திடம் இருந்து பல தடவைகள் தப்பிய பிரான்சிஸ் தனது சொந்த ஊரான கோட்டைக் கல்லாற்றிலேயே அகப்பட்டு கொண்டார். இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் தேசவிரோதக்குழுக்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு பிரான்சிஸ் மதியா பரணம் என்பவரது வீட்டில் மறைந்திருந்தபோது அவரைத் தமிழினம் இழந்தது. அவரது காலில் ஏற்பட்ட காயத்தினால் வடிந்த இரத்தத் சுவட்டைப் பின்பற்றி வந்த ஆயுததாரிகள் இவர் மீது சுட்டனர். காயமடைந்த நிலையில் பிரான்சிஸ் சைனட் அருந்தினார். அந் நிலையிலும் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து EPRLF குழுவினர் ஆனந்தக் கூத்தாடினார்.

இவரது இழப்புப்பற்றி குறிப்பிட்ட பி .பி .சி வானொலி 'இவரின் மரணம் விடுதலைப் புலிகளுக்கு ஒரு பின்னடைவாகும்' என்று குறிப்பிட்டது.

எங்கோ ஒரு மறைவிடத்தில் இருந்த பவானுக்கு பிரான்சிசின் நண்பர்களால் அறிவிக்கப்பட்டது.

எப்படியும் தன்தம்பியின் உடலைப் பார்க்க பவான் வருவார். அந்த நேரம் அவரையும் பிடிக்கலாம் என்று இந்தியப்படைகளுக்கு அறிவுரை கூறியிருந்தனர். இதன் படி பவானைப் பிடிக்க அவர்கள் ஆவலாக இருந்தனர் .ஆனால் பாவான் வரவில்லை.

இந்தியப் படையினரின் பாதுகாப்புடன் பிரான்சிசின் வித்துடல் கோட்டைக்கல்லாறு பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது .

நள்ளிரவு தாண்டிய நேரத்தில் கோட்டைக்கல்லாறு மயானத்தில் துப்பாக்கிச் சுட்டுக் சத்தங்கள் கேட்டது ஊரெல்லாம் பீதியில் விழித்துக்கொண்டது. ஏற்கெனவே பவானின் நண்பர்களின் ஏற்பாட்டின்படி பிரான்சிசின் சடலம் பவான் வந்து பார்ப்பதற்காக மேலால் புதைக்கப்பட்டிருந்தது.

ஷ பவான் நள்ளிரவில் புதைக்கப்பட்டிருந்த குழியைத் தோண்டி சடலத்தைப் பார்த்து சோகம் தாங்காமல் அழுது விட்டார். இந்த நேரத்தில் எப்படியோ தகவல் அறிந்த இந்தியப் படையினரும் EPRLF குழுவினரும் அங்கு வந்து விட்டனர். ப வானும் நண்பர்களும் ஒடித் தப்பி விட்டார்கள்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு எப்படியோ தப்பி வந்த பவான் கோட்டைக் கல்லாற்றைச் சேர்ந்த ஒரு அரச உத்தியோகஸ்தரின் உதவியுடன் மட்டு நகரிலிருந்து புகையிரத மூலம் வந்தாறுமூலைக்கு சென்றார் .

அங்கிருந்து யோன் என்ற போராளி மூலமாக புலுட்டுமான் ஓடை வழியாகச் சென்று கார்மலைஎன்ற இடத்திலிருந்த காந்தனைச் சந்தித்தார். காந்தன் மூலமாக அவர் மட்டக்களப்பு பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லைப் பகுதியான காட்டுப் பிரதேசத்தின் விசர் கங்கை என்ற இடத்தில் தங்கியிருந்த கருணாவை சந்தித்தார்

கருணாமூலம் விடுதலைப் புலிகளின் சில செயற்பாடுகளுக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இவ்வாறான சந்திப்புக்கள் என்பது இலகுவான காரியம் அல்ல என்பதும் இரவுபகலாக தொடர்ச்சியாக நடக்க வேண்டியிருக்கும் அந்தக் காலகட்டத்தில் போராளிகளாக இருந்தவர்களுக்கு தெரியும் .

எல்லா இடங்களிலும், இந்தியப்படைகளும், ஒட்டுக்குழுக்களும் இருப்பார்கள். அவர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு ஒருஇடத்துக்கு போய்ச் சேர்தல் என்றால் மிகவும் கஷ்டமான காரியம்.

கொழும்புக்குச் சென்ற பவான் அவர்கள் அங்கு தீவிரமாக இயக்க வேலைகளில் ஈடு பட்டார். அத்தோடு கொழும்புக்குப் பாதுகாப்புத் தேடிவரும் இளைஞர்களுக்கு பொருத்தமான இடங்கள் தேடிக் கொடுப்பது, காயம் அடைந்து வரும் போராளிகளைப் பாதுகாத்து வைத்தியம் செய்வது, இடம்மாற்றுவது போன்ற இரகசிய வேலைகளில் ஈடு பட்டுக்கொண்டிருந்தார் .

தன்னையும் பாதுகாத்து, இயக்கத்தையும் காப்பாற்றி தகவல்களையும் வழங்கிக்கொண்டு இருந்தார் பவான்.

இந்தக் காலகட்டத்தில் புலனாய்வுத் துறை யைச் சேர்ந்த நியூட்டன் என்பவருடன் தொடர்பு கொண்டு கரும்புலியாகச் செயல்படுவதற்கான விண்ணப்பத்தையும் செய்து இருந்தார். அவருடைய விண்ணப்பம் கிடைத்தும் முடிவு வராததால் அதற்காகக் காத்திருந்தார்.

தமிழீழத்தின் பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமாகிக்கொண்டிருந்தது இயக்கத்தில் இருந்தாலும் இல்லை என்றாலும் தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுவது, கைது செய்யப்படுவது, காணாமல் ஆக்கப்படுதல் சாதாரணமாக நடந்து கொண்டே இருந்தது. தமிழர்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் இளைஞர்கள் எங்காவது ஓடித் தப்பி விடுவோம் என்ற நிலையில் இருந்தார்கள்

இப்படியான ஒரு சூழ் நிலையில் பவானின் உறவுமுறையான ஞானமுத்து விமலசூரியன் இ நல்லதம்பி விஜயஈஸ்வரன் ஆகிய இரண்டு இளைஞர்களுக்கும் கொழும்புக்குப் பவானைத் தேடி வந்தார்கள். இவர்கள் இயக்கத்துடன் ஈடுபாடோ சேரவேண்டுமோ என்ற எண்ணம் கடுகளவும் இல்லாதவர்கள். அற்போதைய சூழ் நிலையில் இருந்து உயிர் தப்பினால் போது மென்ற நிலையில் ஓடி வந்தவர்கள்.

பவான் கொழும்பில் நிற்கின்றார்: இவரிடம் போனால் பாதுகாப்பாக நிற்கலாம்: அத்தோடு ஒரு நல்ல முகவர் பிடித்து வெளிநாடு ஒன்றுக்குப் போய் விடலாம் என்ற எண்ணத்தோடு பெற்றோர் கடன் பட்டுக் கொடுத்த, கஷ்டப்பட்டு தேடிய காசுகளோடு கனவு நிறைந்த உலகத்தைத் தேடி வந்தவர்கள்

இவர்களைக் கண்ட பவான் அவர்களுக்கான பாதுகாப்பான இடத்தை ஒழுங்கு பண்ணிக் கொடுத்தார். அத்துடன் அவர்களுக்கு நல்ல ஒரு தொழில் வாய்ப்போடு வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் நல்ல முகவுரை தேடி அலைந்தார்.

எதோ ஒரு வகையில் முன்பு அறிமுகமான ஒரு பெண் ஊடக தன் உறவினர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஈடு பட்டுக்கொண்டிருந்தார். அந்தப் பெண்ணும் தனக்குத் தெரிந்தவர்கள் ஊடக அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பவானிடம் இருந்து நிறையப் பணத்தையும் பெற்றுக்கொண்டார்.

காலம் கடந்து கொண்டிருந்தது. உரியவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான வேலைகள் கொஞ்சமேனும் நடக்கவில்லை .

பணம் கொடுத்த பெற்றோரிடம் இருந்து கேள்விகள், பாதுகாப்பு நிலைமையின் மோசமான தன்மைகள் இவற்றினிடையே ஒருவருக்கும்தெரியாமல் செய்யவேண்டிய இயக்கப்பணிகள் ஒரு பக்கம் என பவான் பம்பரம்போலச் செயற்பட்டுக்கொண்டிருந்தார்.

பணம் கொடுத்த பெண்மணியைச் சந்திப்பதே கஷ்டமாக இருந்தது. அப்படிச் சந்தித்தாலும் அவள் போதையிலும் உல்லாசமாகவும் இருந்தாள் வெளிநாட்டுக்கு அனுப்பாவிட்டாலும் கொடுத்த பணத்தையாவது திரும்பப் பெற்றுக் கொள்வதற்குப் பவான் படாத பாடுபட்டுக்கொண்டிருந்தார்.

சில சந்தர்ப்பங்களில் அந்தப் பெண் சில பொலிஸ் அதிகாரிகளுடன் உல்லாசமாக இருப்பதையும் பவான் கண்டுள்ளார் . எப்படியாவது கொடுத்த பணத்தை வாங்கிவிட வேண்டும் என்பதில் பவான் குறியாக இருந்தார். இதற்கிடையில் பல ஏமாற்றங்களையும்இ எச்சரிக்களையும் சந்தித்து இருந்தார்.

18.09.1989. அன்று அந்தப் பெண்ணிடம் இருந்து தொடர்பு கிடைத்திருந்தது .மற்ற இருவருடனும் வத்தளைப் பகுதிக்கு வருமாறும் வரும் போது மீதி பணத்தை எடுத்து வருமாறும் அப் பெண்மணி கூறினார் .கிடைத்த அழைப்புக்கு ஏற்ப பவான் மற்ற இளைஞர்களையும் அழைத்துக்கொண்டு குறித்த இடத்துக்குச் சென்றார் .

தற்செயலாகக் கண்ட ஒருவரின் கூற்றுப்படி இலக்கத்தக்கடு இல்லாத ஒரு காவல் துறை வாகனத்தில் அந்த மூவரும் பலவந்தமாக எற்றப்பட்டனர் ஏற்றுவதைக் கண்டதாக தெரிவித்தார்.

பின்னாளில் புலிகளால் கைது செய்யப்பட்ட இப் பெண்மணி இவ்விபரங்களை உறுதி செய்தார்.எனினும் மூவருக்கும் என்ன நடந்தது என்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனச் சாதித்தார்.

இன விடுதலையினை முழுநேரமாக நேசித்துக்கொண்டு இருந்த பவானின் குடும்பம் வாரிசு இல்லாமல் மறைந்து போன வரலாறு இது .

குறிப்பு- (இம்மாவீரரின் வீரச்சாவு நடந்த திகதி புலிகளின் மாவீரர் பட்டியலில் 13.03.1989. என்று பிழையாக பதியப்பட்டுள்ளது. சரியான திகதி 18.09.1989 என்பது ஆகும்)