வடக்கு, கிழக்கு மாகாணங்களை 'பெளத்த பூமி' என அழைப்பதற்கு வித்திடலாமா?

Report Print Thamilin Tholan in கட்டுரை

வரலாற்றில் முதல் தடவையாக தமிழ்க் கட்சிகள் ஒரே தேசத்தை உருவாக்குவதற்கும், பெளத்த மதத்திற்கு முதலிடம் வழங்குவதற்கும் உடன்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (22) காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசியலமைப்புச் சபையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையின் முதல் பந்தியில் மேற்படி பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குத் தமிழ்க் கட்சிகள் உடன்பட்டுள்ளதாகவும், தமிழ்க் கட்சிகள் முதன்முறையாகத் தமது பாரம்பரிய நிலைப்பாட்டைத் தளர்த்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக அந்தச் செய்தி மேலும் கூறுகின்றது.

சரணாகதி அரசியல் நடத்தும் தமிழர் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இது தொடர்பில் அரசாங்கத்துடன் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டார்களோ தெரியவில்லை.

ஆனால், இவ்வாறானவர்களை நம்பி வாக்களித்த எமது மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகவே இது அமைய முடியும்! அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்குதே உண்மையான ஜனநாயகமாகவும், பொருத்தமானதாகவும் அமையும் என நான் நம்புகின்றேன்.

பெளத்த மதத்திற்கு முன்னுரிமை என்ற நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்ந்த பங்காளிக் கட்சிகள் கூட ஆதரிக்கவில்லை.

குறிப்பாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பெளத்த மதத்திற்கு முன்னுரிமை என்பதை ஒருபோதுமே ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகிறார். ரெலோ, புளொட் போன்ற கட்சிகளும் இவ்வாறான நிலைப்பாட்டிற்கு உடன்படாத சூழலே உள்ளது.

தமிழர் நலனில் அக்கறையுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரே தேசம், பெளத்த மதத்திற்கு முன்னுரிமை ஆகிய இருவிடயங்களிலும் கடுமையான எதிர் நிலைப்பாடுகளையே கொண்டுள்ளது.

பெளத்த மதத்திற்கு முன்னுரிமை என்ற விடயத்தில் வட மாகாண முதலமைச்சரும் இறுக்கமான போக்கையே கொண்டுள்ளார். தமிழ்மக்கள் பேரவையும் இதே நிலைப்பாடையே கொண்டுள்ளது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் நிலையான கொள்கையில்லாத சில கட்சிகள் தொடர்பில் நாம் கணக்கிலெடுக்கத் தெரியவில்லை.

யாழ். நாவற்குழியில் ஒரு புத்தபெருமானின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் அண்மையில் பிரமாண்டமான பெளத்த ஆலயத்தை நிர்மாணிப்பதற்கு அண்மையில் நாவற்குழிப் பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்ட போது இதற்கெதிராக மக்களால் சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட போது இலங்கையில் பெளத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே, நாவற்குழியில் பெளத்த விகாரையை அமைக்கலாம் என நீதவான் தீர்ப்பு வழங்கியிருந்தமை பலரும் அறிந்த விடயம்.

இந்த நிலையில் பெளத்த மதத்திற்கு முதலிடம் வழங்குவதற்குத் தமிழ்க் கட்சிகள் ஒருவேளை உடன்படும் நிலை உருவானால் அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துப் பாருங்கள்.

இலங்கையைத் திருமூலர் சிவபூமி என ஒரு காலத்தில் அழைத்ததாக வரலாறு மூலமாக நாம் அறிகிறோம். ஆனால், மேற்கண்ட நிலை உருவானால் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் "பெளத்த பூமி" என அழைக்கப்படுவதற்கு வித்திடுவதாகவே அமையும்.

ஏற்கனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மறைமுக மற்றும் நேரடி பெளத்தமயமாக்கல் காரணமாக பல்வேறு விளைவுகளைச் சந்தித்து வரும் நிலையில் எம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் பெளத்தத்திற்கு முன்னுரிமை என்ற விடயத்திற்கு உடன்படுவது எமது தலையில் நாங்களே மண்ணை அள்ளிப் போடுவதற்கு ஒப்பானது.

பெளத்தமக்கள் இல்லாத சைவ மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றதொரு பிரதேசத்தில் பெளத்த மதத்தைத் திணிப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கடந்த கால யுத்தத்தால் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்த எமது மக்கள் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களிலிருந்து தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் பெளத்த மயமாக்கலுக்குத் துணை போகும் வகையில் தமிழ்க் கட்சிகளும், எமது பிரதிநிதிகளும் செயற்படுவது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

எனவே, கடந்த கால வரலாற்றுப் படிப்பினைகளை மனதிற் கொண்டு புத்தி சாதுரியமாகவும்,நிதானமாகவும் செயற்பட வேண்டியது அவசியம்.

இலங்கை ஆட்சியாளர்களால் திட்டமிட்ட வகையில் ஏற்படுத்தப்பட்டு எம்மீது திணிக்கப்பட்டுள்ள 'பெளத்த மதத்திற்கு முன்னுரிமை' என்ற விடயத்தைத் தமிழ்த் தலைவர்களும், தமிழ்க் கட்சிகளும், தமிழர் நலனில் அக்கறையுள்ள அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக எதிர்க்க வேண்டும்.