கேள்விக்குறியாகியுள்ள போர்க்குற்றங்களுக்கான நீதி?

Report Print Subathra in கட்டுரை

பிரேஸில் உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகளால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தினேஸ் குணவர்த்தனவின் கேள்விக்குப் பதிலளித்த போது ஜெனரல் ஜெகத் ஜயசூரிய விவகாரம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன வெளிப்படுத்தினார்.

ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக இலத்தீன் அமெரிக்க நாடுகளில் போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போது அவரை அரசாங்கம் பாதுகாக்கும் என்று அடுத்த சில நாட்களிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.

எனினும் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மை அவை உண்மையா பொய்யா என்பதை அவர் தெளிவாக அறிவிக்கவில்லை.

குற்றமிழைத்தாலும் இழைக்காவிடினும் போரில் பங்கெடுத்த படையினர் அனைவரையும் அரசாங்கம் பாதுகாக்கும் என்பது போல மாத்திரம் ஜனாதிபதியின் அறிவிப்பு அமைந்திருந்தது.

ஆனால் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவின் அறிவிப்பு அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்களை மனித உரிமை அமைப்புகள் முன்வைக்கவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் இராணுவத்தினரைப் பாதுகாக்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிராக பிரேஸிலில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறிய குற்றச்சாட்டு அவரது தனிப்பட்ட கருத்து என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அரசாங்கத்தின் ஒன்றுபட்ட முடிவையே தாம் வெளிப்படுத்துவதாகவும் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இதுபோல 2011ம் ஆண்டு அமெரிக்காவிலும் சுவிட்ஸர்லாந்திலும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என்றும் பின்னர் அவை அந்த அரசாங்கங்களால் விலக்கிக் கொள்ளப்பட்டன என்றும் அவர் கூறியிருந்தார்.

திலக் மாரப்பனவில் அறிவிப்பு தெளிவான சில முடிவுகளை அறிவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களைப் பரிசீலனை செய்த பின்னர் திலக் மாரப்பன கூறியுள்ளாரா அல்லது அரசாங்கத்தில் கொள்கைத் தீர்மானத்தின் அடிப்படையில் இதனை அறிவித்துள்ளாரா என்று தெரியவில்லை.

திலக் மாரப்பன சட்டமா அதிபராகப் பதவியில் இருந்தவர். சர்வதேச அளவில் சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒரு வெளிவிவகார அமைச்சராக அவர் அலட்சியமான பதிலை அளித்திருக்கமாட்டார் என்று கருதினாலும், ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிராக பிரேஸில் உள்ளிட்ட நாடுகளில் போர்க்குற்றச்சாட்டுகளைச் சமர்ப்பித்த சர்வதேச போர்க்குற்ற வழக்குகளில் பிரபலம் பெற்ற ஸ்பானிஷ் சட்ட நிபுணர் கார்லோஸ் காஸ்ரேசனா பெர்னாண்டஸ் சரியான ஆதாரங்கள் இல்லாத ஒரு குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்திருக்க மாட்டார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆர்ஜென்ட்டின சர்வாதிகாரி ஜெனரல் பினோசே, சிலியின் சர்வாதிகாரி ஜெனரல் ஜோசப் விடேலா ஆகியோருக்கு எதிரான வழக்குகளை தாம் ஆரம்பித்த போது கிடைத்திருந்த ஆதாரங்களை விட, இந்த வழக்கில் மோசமான குற்றங்கள் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இருப்பதைப் பார்த்து தான் அதிர்ச்சி அடைந்தேன் என்று சட்ட நிபுணர் கார்லோஸ் பெர்னாண்டஸ் கூறியிருந்தார்.

அவ்வாறான நிலையில் ஆதாரங்கள் இல்லாத சட்ட வலுவற்ற ஒரு குற்றசாட்டை அவர் முன்வைத்திருப்பார் என்பது நம்ப முடியாத விடயம்.

அரசாங்கத்தின் கொள்கை சார் முடிவுக்கு அமையவே ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என்று திலக் மாரப்பன கூறியிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

ஜெனரல் ஜெயசூரிய மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பல. மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்த தமது படைப்பிரிவுகளுக்கு உத்தரவிட்டது. கொலைகள், காணாமல் ஆக்கப்பட்டமை, கைது செய்யப்பட்டவர்களை சித்திரவதை செய்தமை போன்றவை அதில் உள்ளடங்கும்.

ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேஸில் உள்ளிட்ட நாடுகளில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பின்னர் இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் அவர் குற்றமிழைத்திருந்தார் என்பது உண்மையே என்று கூறியிருந்தார்.

ஆனால் எந்த அடிப்படையில் ஜெனரல் ஜெயசூரிய குற்றங்களுக்குப் பொறுப்பாக்கப்பட வேண்டியவர் என்ற குழப்பம் பலரிடம் காணப்படுகிறது.

இறுதிப் போரில் ஜெனரல் ஜெயசூரிய உண்மையில் எந்த அதிகாரத்தையும் கொண்டவராக இருந்திருக்கவில்லை. அங்கு எல்லாவற்றையும் கையாண்டவர் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தான்.

ஆனால் இறுதிப் போரில் பங்கேற்ற படைப்பிரிவுகள் அனைத்தும் நிர்வாக ரீதியாக வன்னிப் படைகளின் தலைமையகத்தின் கீழ் தான் இருந்தன. அப்போது வன்னிப் படைகளின் தளபதியாக இருந்தவர் என்ற வகையில் அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர் ஜெனரல் ஜயசூரிய தான்.

அதேவேளை ஜெனரல் ஜெயசூரியவும் போர் முனையில் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை, அவர் தனியே போருக்கான விநியோக வேலைகளையும் வவுனியா முன்னரங்க நிலைகளை பாதுகாக்கும் வேலைகளையும் தான் செய்து கொண்டிருந்தார் என்பதை அவருக்கு எதிராக குற்றம் சுமத்திய சரத் பொன்சேகாவே ஒப்புக்கொண்டுள்ளார்.

இருந்தாலும் அதிகாரபூர்வ கட்டளை அதிகாரி என்ற வகையில் போர்முனையில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு ஜெனரல் ஜயசூரிய பொறுப்பேற்காமல் நழுவ முடியாது.

ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிராக சுமத்தப்பட்ட ஏனைய குற்றச்சாட்டுகள் முக்கியமானவை. கைது செய்யப்பட்டவர்களை சித்திரவதை செய்தது, காணாமல் ஆக்கியது போன்றவையே அந்தக் குற்றச்சாட்டுகள்.

இது தொடர்பான வலுவான ஆதாரங்கள் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளன. வன்னிக் கட்டளைத் தலைமையகம் அமைந்திருந்த ஜோசெப் படைமுகாமில் மோசமான சித்திரவதைக் கூடம் இருந்தது என்பதை, யஸ்மின் சூகாவின் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கடந்த மார்ச் மாதமே அம்பலப்படுத்தியிருந்தது.

அங்கு சித்திரவதைகளையும் பாலியல் துன்புறுத்தல்களையும் எதிர்கொண்டு மீண்ட ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட 46 பேரின் சாட்சியங்கள் மற்றும் சத்தியக்கடதாசிகளுடன் ஒரு ஆவணத்தை யஸ்மின் சூகா அப்போது வெளியிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு மே மாதம் இலங்கைக்கு வந்திருந்த சித்திரவதைகள் மற்றும் ஏனைய கொடூரமான மனிதநேயமற்ற நடத்தைகள், தண்டனைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மென்டஸ் தடுப்பு முகாம்கள், இராணுவ முகாம்களுக்கு சென்று பார்வையிட்டோம்.

தடுப்பிலுள்ளவர்கள் மற்றும் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தோம். அவர்களின் சாட்சியங்களில் உண்மையைக் காண முடிந்தது. அவர்களில் பலரில் உடல் ரீதியான சான்றுகளையும் காண முடிந்தது என்று கூறியிருந்தார்.

கடந்த ஜூலை 10 தொடக்கம் 14ம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் பயணம் மேற்கொண்டிருந்த மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களைப் பாதுகாத்தலும் மேம்படுத்தலும் தீவிரவாத எதிர்ப்புத் தொடர்பான ஜக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தமது பயணத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கையிலும் தடுப்பு முகாம்களில் நடக்கும் மோசமான சித்திரவதைகளை அம்பலப்படுத்தியிருந்தார்.

தற்போது முன்னரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை சந்தித்த போது தடிகளால் அடித்தல், மண்ணெண்ணெய் ஊற்றப்பட்ட பிளாஸ்ரிக் பைகளுக்குள் முகத்தை அமுக்குதல் விரல் நகங்களைப் பிடுங்குதல், நகம் பிடுங்கப்பட்ட விரலுக்குள் ஊசிகளைச் செருகுதல், நீருக்குள் அமிழ்த்துதல், பல மணித்தியாலங்களாக கால்விரல்களில் நிற்க வைத்தல், பாலுறுப்புக்களில் சித்திரவதை போன்ற பல்வேறு சித்திரவதைகளை தாம் எதிர்கொண்டதாக தெரிவித்திருந்தனர். இவ்வாறான சித்திரவதைகள் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட மருத்துவ சாட்சியங்களும் தனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.

அதாவது தடுப்பு முகாம்கள் சித்திரவதைக் கூடங்களாகவே இயங்கின. இப்போதும் இயங்குகின்றன என்பது உண்மை. இந்த இலையில் ஜஸ்மின் சூகா முன்வைத்த ஜோசெப் படைமுகாம் சித்திரவதைக் கூடம் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலகுவில் எவரும் நிராகரிக்க முடியாது.

இங்கு நடக்கும் சித்திரவதைகளை அதன் கட்டளை அதிகாரி அறியாமல் இருந்தார் என்றும் கூற முடியாது. இறுதிப் போர் நடந்த நந்திக்கடலில் இருந்து 100 கிலோமீற்றருக்கு அப்பாலேயே தான் இருந்தேன் என்றும், தனக்கு போர்க்குற்றங்கள் பற்றி எதுவும் தெரியாது என்றும் ஜெனரல் ஜயசூரிய கூறியிருந்தார்.

ஆனால் ஜோசெப் முகாம் சித்திரவதைக் கூடம் பற்றியோ அதுபற்றிய குற்றச்சாட்டுகள் குறித்தோ அவர் எதையும் கூறவில்லை. அதனை மறுக்கும் எந்தக் கருத்தும் அவரிடம் இருந்து வெளிவரவுமில்லை.

சரத் பொன்சேகா கூட, ஜெனரல் ஜயசூரிய மீது ஜோசெப் படைமுகாமில் நடந்த மீறல்கள் தொடர்பாகத் தான் குற்றம்சாட்டியிருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட சித்திரவதைகளை, காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய நிலை வன்னிக் கட்டளை தளபதி என்ற வகையில் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவையே சாரும்.

அப்போது சரணடைந்த புலிகள் இயக்கப் போராளுகளும், கைது செய்யப்பட்டவர்களும் கூட இவரது பொறுப்பிலேயே இருந்தனர்.

இத்தகைய சந்தர்ப்பத்தில் தவறுகள் நடப்பதை அறிந்து, ஜெனரல் ஜயசூரியவுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவரை கைது செய்து தாம் விசாரணைகளை முன்னெடுத்த போதே, இராணுவத் தளபதி பதவியில் இருந்து மாற்றப்பட்டதாக சரத் பொன்சேகா கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அரசாங்கமோ, ஜெனரல் ஜயசூரியவோ எந்த உறுதியான பதிலையும் அளிக்கவில்லை. ஏனென்றால் இதனைக் கிளறப் போனால் ஏராளமான பிரச்சினைகள் வெளிவரும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

இந்த நிலையில் கடந்த வாரம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடந்த உபகுழுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகா, ஜோசெப் படை முகாமுக்குள் தாம் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அங்கு சித்திரவதைக்குள்ளானவர்களின் அவலச் சத்தங்களை கேட்க முடிந்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.

ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள தருணத்தில் இவர் ஐ.நாவில் சாட்சியம் அளித்திருப்பது மற்றொரு திருப்பம்.

ஜோசப் படைமுகாம் சித்திரவதைகள் தொடர்பாக பல சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அதுபற்றி அரசாங்கம் எந்த விசாரணைகளையும் முன்னெடுக்கத் தயாராக இல்லை என்பதையே வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவின் அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.

இதுபற்றி அரசாங்கத்துக்குள் இருக்கின்ற அமைச்சரான சரத் பொன்சேகா கூட தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக கூறியுள்ள போதிலும் அதனை அரசாங்கம் அவரது தனிப்பட்ட கருத்து என்று ஒதுக்கப் பார்க்கிறது.

குற்றமிழைத்த படையினர் தொடர்பாக தகுந்த ஆதாரங்களை முன்வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வந்த அரசாங்கம், ஆதாரங்களை முன்வைக்கத் தயாராக இருப்பவர்களை கோமாளிகளாக்க முனைகிறது.

இது போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறும் விவகாரத்தில் அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

போர்க்குற்ரச்சாட்டுகளை எதிர்கொள்ளும் இராணுவத்தினரை அரசாங்கம் பாதுகாக்கும் என்று அரசாங்கத்தில் சார்பில் அமைச்சர் திலக் மாரப்பன அளித்துள்ள உறுதிமொழி அரசாங்கத்தின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.