போர்க்குற்றங்களை ஒப்புவிக்க முன்வருவார்களா தளபதிகள்?

Report Print Karthik in கட்டுரை

பிராந்திய அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியூயோர்க்கிற்குப் பயணம் மேற்கொள்வதற்கு அமெரிக்கா வீசா வழங்கவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அமெரிக்காவுக்கு செல்வதற்கு விண்ணப்பித்து, வீசா வழங்கப்படாமல் போனது, இது மூன்றாவது சந்தர்ப்பமாகும்.

அமெரிக்காவில் வதிவிட உரிமையைப்(கிறீன் கார்ட்) பெற்றிருந்த சரத் பொன்சேகா, அதனைப் புதுப்பிக்கத் தவறியதால், அந்த உரிமையை இழந்திருந்தார்.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத் தொடக்கத்தில், அவர் அமெரிக்காவுக்குக் செல்வதற்கு வீசா கோரி விண்ணப்பித்திருந்தார். தனது மகள்களைப் பார்ப்பதற்காக அங்கு செல்வதற்கு அவர் விண்ணப்பித்திருந்தார்.

அப்போது ஜனநாயகக் கட்சியின் தலைவராக மாத்திரம் இருந்த அவருக்கு இழுத்தடித்து இழுத்தடித்து, கடைசியில் வீசா வழங்கபடவேயில்லை. அதனை அவர் வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும் அவருக்கு நெருக்கமான தரப்புகள் உறுதிப்படுத்தியிருந்தன.

இராணுவத்தின் மீதான போர்க்குற்றச்சாட்டுகளே, சரத் பொன்சேகாவுக்கு வீசா வழங்கப்படாமைக்குக் காரணம் என்றும் அப்போது சந்தேகிக்கப்பட்டது.எனினும், அமெரிக்கா தரப்பில் எந்தக் கருத்தும் அப்போது வெளியிடப்படவில்லை.

தனிநபர்களின் வீசா விண்ணப்பங்கள் தொடர்பாக எந்த தகவலையும் வெளியிடக் கூடாது என்ற இராஜதந்திர நெறிமுறைகளைக் காரணம் காட்டி, இத்தகைய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது அமெரிக்க தூதரகத்தின் வழக்கமான பாணி.

இதற்குப் பின்னர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராக மாத்திரமன்றி, பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகவும், பதவியேற்ற பின்னர், 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் அமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பித்தார்.

அரசாங்கத்தின் அமைச்சராக இராஜதந்திரக் கடவுச்சீட்டு இருந்த போதிலும், அவருக்கு வீசா வழங்கப்படவில்லை. வீசா விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கிறது என்பதற்கு அப்பால் அவருக்கு எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.

இரண்டு தடவைகளும், அவருக்கு வீசா வழங்கப்படாத போதும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக சரத் பொன்சேகாவுக்கு கூறப்படவில்லை என்றே தெரிகிறது.

இந்தநிலையில் தான், ஐ.நா. பொதுச்சபையின் 72 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கச் செல்லும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குழுவுடன், இணைந்து அமெரிக்காவுக்குப் பயணம் மெற்கொள்வதற்காக சரத் பொன்சேகா மீண்டும் வீசாவிக்கு விண்ணப்பித்தார்.

ஐ.நா. தலைமையகம் அமைந்துள்ள நியூயோர்க் நகரத்தில் வெளிநாட்டுத் தலைவர்கள், பிரமுகர்கள், இராஜதந்திரிகளுக்கு இராஜதந்திர சிறப்புரிமை உள்ளது.இதனால், தனக்கும் வீசா வழங்கப்படலாம் என்று சரத் பொன்சேகா நினைத்திருக்கக் கூடும்.

அதனால் அவர், ஜனாதிபதி செல்லும் குழுவினருடன் இணைந்தே, சரத் பொன்சேகாவும் வீசாவுக்கு விண்ணப்பித்திருந்தார்.

ஜனாதிபதியுடன் செல்லும் குழுவில் இருந்த அனைவருக்கும் வீசா அனுமதிக்கப்பட்ட போதும், சரத் பொன்சேகாவுக்கு மாத்திரம் வழங்கப்படவேயில்லை.

இந்த முறையும் கூட அவருக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் பதிலளிக்கவில்லை. பரிசீலனையில் உள்ளது என்பதுடன் எல்லாமே முடிந்து போனது,

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத் தொடருக்கான ஜனாதிபதியின் பயணம் முடிவுக்கு வந்த பின்னர், அந்த வீசா விண்ணப்பம் காலம் பிந்தியது என்று குப்பைக் கூடைக்குள் இயல்பாகவே வீசப்பட்டு விடும்.

சாதாரண நபராக, பீல்ட் மார்ஷல் மற்றும் அமைச்சர் என்று ஒரு முக்கிய பிரமுகராக, ஐ.நாவுக்கான பயணம், ஜனாதிபதியின் குழுவுடனான பயணம் என்று எல்லா வழிகளிலும் அமெரிக்காவுக்குள் நுழைய முயன்று, தோல்வியைச் சந்தித்திருக்கிறார் சரத் பொன்சேகா.

சரத் பொன்சேகாவுக்கு வீசா வழங்குவதை அமெரிக்கா இடைநிறுத்தி வைத்திருக்கிறது, இது கொள்கை சார்ந்த ஒரு முடிவு என்பதையே வெளிப்படுத்துகிறது.தமக்கு அமெரிக்கா ஏன் வீசா வழங்காமல் போயிருக்காமல் என்ற காரணத்தை, சரத் பொன்சேகா வெளிப்படுத்தியிருக்கிறார்.

இராணுவத்துக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளால் தான் தனக்கு அமெரிக்கா வீசா வழங்கவில்லை என்று அவர் ஏ.எவ்.பியிடம் கடந்த வாரம் கூறியிருக்கிறார்.”இதனால் தான், போர்க்குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறேன்.

போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த ஒரு சிலரின் செயல்களால், ஒட்டுமொத்த இராணுவத்தினதும் பெயர் பாழடிக்கப்படக் கூடாது” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பிரேசில் உள்ளிட்ட 5 இலத்தீன் அமெரிக்க நாடுகளில், ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதை அடுத்து, அவர் குற்றமிழைத்தவர் தான் என்ற வாக்குமூலத்தை அழுத்தமாகப் பதிவு செய்தவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

அதிகார மட்டத்தில் இருந்தும், பெளத்த பீடங்களில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள், அழுத்தங்கள் வந்த போதும், இன்று வரையும் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறார்.

போர்க்குற்றச்சாட்டுகளை விசாரணை செய்தால், ஒட்டுமொத்த இராணுவத்தின் மீதும் சுமத்தப்படும் பழி நீங்கி விடும் என்பது சரத் பொன்சேகாவின் வாதம்.

சிலர் செய்த குற்றங்களால், ஒட்டு மொத்தமாக இரண்டு இலட்சம் படையினரும் பழி சுமக்கவும், விளைவுகளை அனுபவிக்கவும் வேண்டியிருக்கிறது என்பது அவரது ஆதங்கம்.

சரத் பொன்சேகா, படையினரைக் கூண்டில் ஏற்ற முனைகிறார், அவர்களுக்குத் துரோகம் இழைக்கிறார் என்றெல்லாம் அரசியல் பிரமுகர்களும், பெளத்த பிக்குகளும் குற்றச்சாட்டுகளை வீசிய போது அவர், அதனை எதிர்கொள்ளும் விதம், முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது.

போரில் குற்றங்களை இழைக்காத படையிடனர் எவரும், தாம் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கவலைப்பட வேண்டியதில்லை என்று அவர் கூறியிருப்பது, போர்க்குற்றங்களுடன் தொடர்புபடாத படையினரை அமைதிப்படுத்தும் முயற்சியாகும்.

அதேவேளை, குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் அல்லது அதற்கு ஆதரவளித்தவர்களுக்கு இது இன்னும் கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.தமக்கு அமெரிக்க வீசா மறுக்கப்பட்டிருப்பதை சரத் பொன்சேகா ஓர் அவமானமாகவே பார்க்கிறார்.

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணப்பட்டிருந்தால், இந்த நிலை வந்திருக்காது என்பது அவரது கணிப்பு.ஆனால், ஓர் இராணுவத் தளபதி என்ற வகையில் அவருக்குக் கீழ் இருந்த படையினர் செய்த தவறுகளுக்கு அவர் எப்படி பொறுப்பாகாமல் இருக்க முடியும் என்று தெரியவில்லை.

இருந்தாலும், இந்த வீசா மறுப்பு அவரையும் பாதித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.இதே சலிப்பு, இவருக்கு மாத்திரமன்றி, மேலும் பல முன்னாள் இராணுவத் தளபதிகள், அதிகாரிகளுக்கு வந்திருக்கிறது.

பிரேசிலில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை அடுத்து, அங்கிருந்து அவசரமாக நாடு திரும்பிய, ஜெனரல் ஜயசூரிய, தனக்கும் அமெரிக்கா வீசா வழங்க மறுத்திருந்தது என்று கூறியிருந்தார்.

ஒரு முறை பிரேசிலில் இருந்து அமெரிக்காவின் மியாமி விமான நிலையம் வழியாக பயணம் செய்ய முயன்ற போது, தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், தனது குடும்பத்தினருக்கு மாத்திரம் அனுமதி அளிக்கப்பட்டது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதிலிருந்து, பிரேசிலில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட முன்னரே அவர் அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தார் என்பதை உணர முடிகிறது.

ஜெனரல் ஜயசூரிய அமெரிக்க வீசா மறுக்கப்பட்டது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவ்வாறாயின் அதனை அவர் முன்னரே வெளிப்படுத்தியிருப்பார்.

ஆனால், அவுஸ்திரேலியாவில் உள்ள மகளையும், பாங்கொக்கில் உள்ள மகனையும் பார்க்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்று தான் ஜெனரல் ஜயசூரிய அதிக ஆதங்கம் கொண்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவும் கூட, விசா வழங்கும் போது போர்க்கற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை தொர்பாக இறுக்கமான கண்காணிப்பை மேற்கொள்கிறது.

தன் மீது பிரேசிலில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால், அவுஸ்திரேலியா வீசா மறுக்கப்பட்டு விடுமோ என்று அவர் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

அதனால் தான், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படாது என்று ஐ.நா. பொதுச்செயலரிடம் அரசாங்கம் உறுதிமொழி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார்.

இதுபற்றி ஜனாதிபதியுடம் பேசப் போவதாகவும் அவர் கூறியிருந்த போதிலும், அந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரியவில்லை.

இதுபோலவே, இறுதிப் போரில் பங்கெடுத்த பல இராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் வீசா வழங்க மறுத்திருக்கின்றன.

இவ்வாறு வீசா வழங்க மறுக்கப்படுவது போரில் பங்கெடுத்த படை அதிகாரிகள் மத்தியில் வேறுபட்ட மன அழுத்தங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

அதனால் தான், குற்றமிழைத்த சிலருக்காக, ஒட்டுமொத்த இராணுவமும் ஏன் கெட்ட பெயரைச் சுமக்க வேண்டும் என்பது போன்ற உணர்வுகள் அவர்கள் மத்தியில் ஏற்படத் தொடங்கியுள்ளது. இது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதற்கும் தாம் தப்பிப்பதற்கான வழியாகவும் மாறியிருக்கிறது.

அமெரிக்கா போன்ற நாடுகள், வீசா மறுப்பை எந்தக் கொள்கையின் அடிப்படையில் கையாளுகின்றனவோ தெரியவில்லை.

ஆனால், போர்க்குற்றங்களை ஒப்புக் கொள்ளுகின்ற நிலைக்கும், குற்றமிழைத்தவர்களை ஒருவர் மற்றவர் வெளிப்படுத்துகின்ற நிலைக்கும் இது கொண்டு வந்து நிறுத்தத் தொடங்கியுள்ளது.

வரும் காலத்தில் இன்னும் பலர் சரத் பொன்சேகாவைப் போல வாக்குமூலங்களை அளிக்க முன் வந்தாலும் ஆச்சரியமில்லை.

ஏனென்றால், போர்க்குற்றவாளிகளாக உலகத்தின் முன்பாக தாம் தனிமைப்டுத்தப்படுகிறோம் என்று உணரும் போது, இன்னும் பலர் அந்த முடிவுக்கு வரக்கூடும்.