கலைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபையும் ஏற்பட்ட மாற்றங்களும்: ஐந்தாண்டு ஓர் பார்வையில்

Report Print Reeron Reeron in கட்டுரை

கிழக்கில் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி இறுதியாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 14 உறுப்பினர்களை பெற்றிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 உறுப்பினர்களை கொண்டிருந்த ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்து ஆட்சியை அமைத்துக் கொண்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 பேர், ஐக்கிய தேசிய கட்சி 4 பேர் தேசிய சுதந்திர முன்னணி ஒருவர் என்ற எண்ணிக்கையில் ஏனையோர் தேர்வாகியிருந்தனர். மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 37 ஆகும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த நஜீப் ஏ.மஜீத் முதலமைச்சரானார். 5 பேர் கொண்ட அமைச்சரவையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இருவர் உள்ளிட்ட நான்கு முஸ்லிம்களும் ஒரு சிங்களவரும் இடம்பெற்றிருந்தனர்.

இவ்வேளையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமை பொறுப்பில் இருந்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் முன்னாள் முதலமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட இரு தமிழர்கள் தேர்வாகியிருந்தாலும் தமிழர்களுக்கு அதில் இடமளிக்கப்படவில்லை.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார்.

இதனையடுத்து மத்திய அரசில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைப் பொறுப்பும் மைத்திரிபால சிறிசேனவிடம் மாறியது. அதே ஆண்டு ஏப்ரல் மாதம் கிழக்கு மாகாண சபை ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்ததாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மாகாண முதலமைச்சராக ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவானார்.

முதலமைச்சர் உட்பட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த இருவர் ( முஸ்லிம்கள் ) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த இருவர் ( தமிழர்கள் ) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த ஒருவர் ( சிங்களவர்) என அமைச்சரவையில் மாற்றியமைக்கப்பட்டது.

இரு தமிழர்களுக்கு அதில் இடமளிக்கப்பட்ட நிலையில் முஸ்லிம் அமைச்சர்களின் எண்ணிக்கை 2 ஆக குறைந்தது. ஏற்கனவே முதலமைச்சராகவிருந்த நஜீப் ஏ. மஜித் அமைச்சராகவிருந்த எம்.எஸ் உதுமாலெப்பை ஆகியோருக்கு அதில் இடமளிக்கப்படவில்லை.

கிழக்கு மாகாண சபையின் முதலாவது தேர்தலிலே தெரிவாகி முதலாவது பெண் உறுப்பினர் என்ற பெருமையை பெற்றவர் ஆரியவதி கலப்பதி.

கலைக்கப்பட்ட மாகாண சபையின் முதல் பகுதியில் முதலாவது பெண் அவைத் தலைவர் என்ற அடையாளத்தை பெற்றிருந்தார். 2015இல் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது முதலாவது பெண் அமைச்சரானார்.

மாகாண ஆளும் தரப்பில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக எதிர்க்கட்சியிலும் மாற்றம் எற்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அமைச்சர் எம்.எஸ். உதுமா லெப்பை உட்பட சிலர் தனித்து இயங்க முடிவு செய்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டனர்.

எதிர்க்கட்சி தலைவராகவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சி. தண்டாயுதபாணி அமைச்சரான நிலையில் ஏற்கனவே அமைச்சராகவிருந்த எம்.எஸ். உதுமாலெப்பை எதிர்க்கட்சி தலைவரானார்.

2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தலில் தேர்வான உறுப்பினர்களில் 10இற்கும் மேற்பட்டவர்கள் 2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டனர். விமலவீர திஸாநாயக்கா, எம்.ஐ.எம். மன்சூ, தயா கமகே, இம்ரான் மஹ்றூப் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வானர்.

இவர்களில் தயா கமகே அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார். சனிக்கிழமை நள்ளிரவுடன் பதவிக் காலம் முடிவடைந்த கிழக்கு மாகாண சபையின் 86 கூட்டத் தொடர்கள் இதுவரையில் நடைபெற்றுள்ளன.

குறிப்பாக மாதத்தில் இரு நாட்கள் தொடர்ச்சியான அமர்வு என நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டிருந்தாலும் அநேகமாக ஒரு நாளுடன் அமர்வு முடிவடைந்து விடுகின்றது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபையொன்றின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும்.

முதலாவது கூட்டம் நடைபெற்ற நாளிலிருந்து அது கணக்கிடப்படுகின்றது. மாகாண சபையின் முதலாவது கூட்டம் 2012 ஒக்டோபர் முதலாம் திகதி நடைபெற்ற நிலையில் சனிக்கிழமை நள்ளிரவுடன் கிழக்கு மாகாண சபை கலைந்தது.

அடுத்த சபை கூடும் வரை ஆளுநரின் கீழ் நிர்வாகம் இருக்கும். மாகாண சபை கலைந்தாலும் அரசியலமைப்பு 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் அடுத்த சபை அமையும் வரை அவைத் தலைவர் சந்திரதாஸ கலப்பதி மட்டும் தொடர்ந்து பதவியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கிழக்கு மாகாண சபையின் 5 ஆண்டு பதவிக்காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வந்த நிலையில் சபை உறுப்பினர்களில் ஒருவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இரண்டு ஆண்டுகளை சிறையிலே கழித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலே கைதாகி நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சர் என்ற அடையாளத்தை பெற்றுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன், 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 11ஆம் திகதி குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இவர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபரினால் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இவருக்கு மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.

அமர்வு நடைபெறும் நாட்களில் சிறை அதிகாரிகளினால் அழைத்து வரப்படும் இவர் அமர்வு முடிந்த பின்னர் மீண்டும் அழைத்து செல்லப்படுவார்.

இறுதியாக கடந்த திங்கட்கிழமை அமர்வில் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி அமர்வில் கலந்து கொள்ளவில்லை.