என்னை முழு “பூ”வாக மாற்றிய அந்த மாறா புன்னகை!

Report Print Jeslin Jeslin in கட்டுரை

புதிதாய் மொட்டு விட்டு.., அந்த மொட்டின் முதல் இதழ் உருவாக்கத்தில் என்னவென்றே தெரியாத ஒரு புது இடத்தில் அடியெடுத்து வைக்கின்றேன்..! என்னைப்போன்ற பல மொட்டுக்கள் அங்கே தனது அடித்தளத்தை தேடி வந்திருப்பதை முதலில் உணர்கின்றேன் நான்.

அது சரி..! புதிதாய் வந்துவிட்டோம்.., அடுத்து என்ன செய்வது? என்ன செய்யவேண்டும்? யார் என்னை நடத்திச்செல்லப்போவது? தெரியவில்லையே எனக்கு!

இவ்வாறு தோன்றியது எனது முதல் பள்ளி பிரவேசத்தின்போது. சற்று நேரம் அனைவரையும் கூர்ந்து கவனித்தேன்.. என்னைப்போலத்தான் அனைவரும்! எந்த இடத்தில் உள்ளோம் என்பது புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றிருந்தோம். என் நண்பர்கள் சிலர் அழுதே விட்டனர்!

அப்போது நாங்கள் இருந்த அந்த அறைக்குள் எனது தாயின் வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நுழைவதை அவதானித்து விட்டேன்.! முகத்தில் ஒரு அழகிய புன்னகை, கண்களுக்கு அளவான ஒரு கண்ணாடி. யார் அவர்? என்னைப்போலவே எனது நண்பர்களும் குழப்பத்தில்! அவர் யார் என்று தெரியாமல்!

சற்று நேர இடைவெளிக்கு பின்னர் அவர் எங்களுடன் உரையாட ஆரம்பித்தார். அன்று தான் அந்த அற்புத பெண்மனியின்...! மன்னிக்கவும் அந்த அற்புத உறவுடனான எங்களது பயணம் ஆரம்பமானது.

ஆம்! அன்று எனது முதலாம் வகுப்பில் என்னை வழிநடத்த வந்த ஆசிரியைதான் அவர். அன்று அந்த அற்புத உறவுடன் ஆரம்பித்த எனது கல்விப் பயணம்தான் என்னை இந்த வயது வரைக்கும் நிலையான ஒரு தடத்தில் பயணிக்க வைத்துள்ளது.

ஆசிரியர் என்ற அந்த வார்த்தைக்குள்தான் எத்தனை அர்த்தங்கள், உலகில் உள்ள அத்தனை தொழிற்துறைகளிலும் தமது தடங்களைப் பதித்து விடுகின்ற வார்த்தைதான் அது.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று கூறியது யாரோ?? உண்மையில் குரு என்ற வார்த்தையில் மாதா, பிதா, தெய்வம் என்ற அனைத்தையும் காண்கின்றேன் நான்.

எழுத்தறிவித்தவன் இறைவனாவான், எழுத்தை மட்டுமல்ல இந்த உலகிற்கு எனது திறமைகளை அறிவித்தவரும் அவரே.

பாலைவன பசுஞ்சோலைகள் கேள்விப்பட்டதுண்டு. அவ்வாறுதான் நாமும்.. முதலில் அடியெடுத்து வைக்கும் முன்பள்ளியானாலும் சரி, ஆரம்ப பாடசாலையானாலும் சரி.. பாலைவனங்களாகவே அனைவரும் அடியெடுத்து வைக்கின்றோம்..!

எம்முள் சிறு சிறு விதைகளை, பல்துறைசார்ந்த விதைகளை விதைத்து, அதற்கு காலத்திற்கு ஏற்றாற்போல தேவையான பசளைகளையும் இட்டு கரிசனையுடன் வளர்த்து இறுதியில் எம்மை ஒரு பசுஞ்சோலையாகவே மாற்றிவிடுகின்றனர்.

இத்தனை மகத்துவம் பொருந்தியதுதான் இந்த ஆசிரியர் என்ற வார்த்தை. எப்படி அறிந்தோம் வானும், மண்னும்..! எங்கே கண்டோம் சகாராவும், கிளிமாஞ்சாரோவும்..! வாழ்ந்தோமா சோழருடனும், விஜயனுடனும்..?

எனினும் அத்தனையும் இன்று எமக்கு அத்துப்படி. ஏனெனில் அறிவித்தவர் எனது ஆசானாயிற்றே! சந்தேகமின்றி கற்றுவிட்டாயிற்று அனைத்தையும்!

நான் என் நிலையிலிருந்து உயர்ந்துவிட்டேனா? எத்தனை உச்சத்தை அடைந்துவிட்டேன். ஆனால் என்னை உருவாக்கிய எனது ஆசான் இன்னும் என்னைப்போல பலரை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கின்றார்.

சாதனையாளர்கள் பட்டியலில் பல சாதனைகளைப் படைத்தவருக்கு முதலிடம் எனில், பல சாதனையாளர்களையே உருவாக்கிய அந்த உயர்ந்த ஜீவனுக்கு சாதனையாளர்கள் பட்டியலில் அல்ல, அதற்கும் மேலான உயர்ந்த ஒரு இடம் அல்லவா வேண்டும்.

எனினும், அதை எண்ணாது தன்னைத் தாழ்த்தி இன்னும் அத்தனை சாதனையாளர்களை உருவாக்குவதில் முழுமூச்சாய் செயற்படுபவர் எனது ஆசானன்றோ.

தான் கற்றதை மட்டுமல்ல, தனது முழு அனுபவங்களையும் எனக்கு பாடமாகக் கற்பித்தவர். கற்பிப்பதில் மட்டுமா? சோர்வாய் இருக்கும் என் மனநிலை உணர்ந்து செயற்படுவாரல்லவா!

தனது பிள்ளைகள் போல, எனக்கு பாடம் புகட்டியது மட்டுமல்ல, உணவும் புகட்டி அல்லவா கற்பித்தார். எனக்கு ஒரு வயது வந்து பக்குவம் அடைந்த பின்னர், எனது மனநிலைக்கு ஏற்றாற்போல நண்பனாக மாறிவிடும் குணமும் உடையவர்.

இந்நிலையில் ஆசிரியர் தினம் இன்று, அந்த அற்புத உறவுகளை கௌரவிக்கும் தினம் என்று பொது பார்வையில் நோக்கும்போது,

சர்வதேச ரீதியில் ஆசிரியர் தினம் பல நாடுகளிலும் பல்வேறு தினங்களில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

சில முக்கிய நாடுகளை எடுத்து நோக்கும்போது, சீனாவில் ஆசிரியர் தினம் செப்டம்பர் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்தியாவில் செப்டம்பர் 5ஆம் திகதியும், ரஸ்யாவில் ஒக்டோபர் 5ஆம் திகதியும் என அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கையில் இன்றைய தினம், ஒக்டோபர் 6ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது.

கல்வி என்பது குழந்தைகளை, உடல், மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக நெறி.

கல்வியியலாளர்கள் கூற்றின்படி இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது.

அறிவு, திறமை போன்றவற்றையும் தந்து ஒரு புதிய சமூகத்தை உருவாக்கிப் பாண்பாடு, நடத்தை, போன்றவற்றையும் தந்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாகவும் கல்வி மாற்றம் அடையசெய்கிறது.

திறன்கள், தொழில்கள், உயர்தொழில்கள் என்பவற்றோடு, மனம், நெறிமுறை, அழகியல் என்பவை சார்ந்த வளர்ச்சியையும், சமுதாய வளர்ச்சியில் பங்கு பெறச்செய்யும் ஒரு சமூக நெறியே கல்வி.

கல்வி ஒரு மனிதனின் வாழ்க்கை முழுவதும் வருகிறது. ஆனால் குழந்தைப் பருவத்தில் கற்கும்போது முழுமையான பரிணாமம் அடைந்து, அதன் பின்னர் முழுமையான மனிதனாகவும், சமுதாயத்திற்கு உதவிகளை அளிக்கும்படியும் மாற்றம் அடைகின்றனர்.

இந்த மாற்றங்களை விதைக்கும் முக்கிய பணிகளில் ஈடுபடுபவர்களை கௌரவிக்கும் தினம் தான் இன்று.

முன்பள்ளிக் கல்வியில் தொடங்கி, தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, சிறப்புக் கல்வி, தொழிற்கல்வி என அனைத்திலும் உடனிருந்து வழிகாட்டும் அந்த மகத்துவமான மனிதர்களை போற்றுதற்குரிய நாள் இன்று.

நாமும் போற்றுவோம், கண்ணென போற்றுவோம், காலங்கள் தாண்டியும் போற்றுவோம்! அந்த உயரிய மனிதர்களை!

கற்பவர்களின் மனதை மிக நுட்பமாக அறிந்து அதற்கேற்றாற்போல கற்பிப்பவர், தன் திறன் கொண்டு என் திறன் வளர்த்தவர்,

அன்று, முதல் இதழ் உருவாக்கத்தில் உள்நுழைந்த நான் இன்று முழு பூவாக மணக்கின்றேன்.. என்னை முழுமைப்படுத்தியது நிச்சயம், அந்த மாறா புன்னகையுடன், கண்களுக்கு அளவான கண்ணாடியுடன் முதல் நாள் எம்மை வழிநடத்த வந்த எனது ஆசிரியை என்பதில் பெறுமைக்கொள்கின்றேன்.